Home Blog Page 5707

இளைஞர்களே கண்ணியம் காக்க வேண்டும்: ரஜினி காந்த்

சென்னை:
இளைஞர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவ, மாணவிகளுக்கும் இளைஞர்களும், தாய்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்தியது அறவழிப் போராட்டம். இதுவரைக்கும் வரலாறு கண்டறியாதது. அமைதியான, ஒழுக்கமான ஓர் அறவழி ப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது பாராட்டுக்கு உரியது. வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கம், நீதிபதிகள், வக்கில்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பது தான் கண்ணியமான செயலாகும்.

இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் போராட்டத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல் துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல், உடனே அமைதியாக இந்த அறவழி போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும், பணிவுடனும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

 

சென்னையில் போக்குவரத்து முடக்கம்: பஸ் ரயில் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமம்

சென்னை:

சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இதை அடுத்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. மாநகர பஸ்களை பணிமனைகளில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடப்பதால், பேருந்துகள், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மதியத்துக்கு முன்பாக, பள்ளிகள் திடீரென விடுமுறை அறிவித்தன. முன்னதாகவே தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு முற்பகலே பெற்றோருக்கு பள்ளிகளில் இருந்து மெசேஜ் அனுப்பப்பட்டதால் பள்ளிகள் முன் கூட்டம் அதிகரித்தது.
பிற்பகலில் பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதித்ததால், பலரும் சாலைகளில் காத்துக் கிடந்தனர். எங்கும் பேருந்துகள் எதுவும் ஓடாததால் கூட்டம் பலர் நடந்தே செல்வதைக் காண முடிந்தது. இதனால் பணிக்குச் செல்வோர் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் திருவல்லிக்கேணி, பீச் ரோடு, ராயபுரம், உள்ளிட்ட வட சென்னையில் ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு முடங்கியது.

களத்தில் வன்முறை அமைப்புகள்; போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம்: ராகவா லாரன்ஸ்

சென்னை :
மாணவர்கள் நடத்தியவரை போராட்டம் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களுடன் போராடி வந்த லாரன்ஸ் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அப்போது…

‛‛ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் கவர்னர் பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் பெற்ற வெற்றியை கொண்டாடும் நேரமிது . இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும். அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். நாமும் இதனை ஏற்று கொள்ள வேண்டும். எனவே போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள்… என்றார்.

ஆனால் லாரன்ஸின் பேச்சை போராட்டாக்காரர்கள் கேட்க மறுத்துவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ்…

‛‛ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மக்களின் எண்ணம், பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும் என்பதற்காகவே உதவினேன். என்னுடன் சேர்ந்து பலரும் உணவு வழங்கினார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்திய வரை ஜல்லிக்கட்டு தான் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போது வேறு சில விஷயங்களை திணிக்கிறார்கள். போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்” என்றார்.

வன்முறை பயன் தராது: போராட்டக்காரர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை

சென்னை:
வன்முறை பயன் தராது என்று தனது டிவிட்டர் பதிவில் போராட்டக்காரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.

அவரது டிவிட்கள்:

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம்.

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.

வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.

அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை.

யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்

அமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை

 

ஜல்லிக்கட்டு போராட்டம்; வெடித்தது வன்முறை: போலீஸார் தடியடி

சென்னை:

சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் சொல்லி போலீஸார் கெஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால், அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஆத்திரமுற்ற ஒரு கும்பல் ஐஸ்ஹவுஸ், மற்றும் நடேசன் சலை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

போலீஸார் மீது கல், மணல் வீச்சு:
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை விரட்ட வந்த போலீசார் மீது மணல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கையில் லத்தி எதுவும் இன்றி வெறுமனே கைகளால் பிடித்து இழுத்து அப்புறப்படுத்தியபோதும் அவர்களில் ஒரு தரப்பினர் கடல் பகுதிக்குச் சென்று போலீஸாரை மிரட்டினர். அவர்களுக்கு ஆதரவாக மீனவர்களும் கைகோத்தனர். இந்நிலையில், கடற்கரையை நோக்கி வந்த மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கடற்கரை பகுதியில் தங்களை நெருங்கி வந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் மணல் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

மெரினா சாலைகள் மூடல்:
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டியடித்து வரும் போலீஸார் மெரினா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மூடி சீல்வைத்தனர். அங்கே போக்குவரத்து தடுக்கப்பட்டது. இதை அடுத்து, மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட இளைஞர்கள் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சாலைகளில் குவிந்தனர். அவர்கள் மீண்டும் கடற்கரைப் பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து சாலைகளையும் மூடினர். கடற்கரைச் சாலையுடன் இணையும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் போக்குவரத்து நிறுத்தம்
மேலும், ரயில் வழியாக மெரினாவருபவர்களைத் தடுக்க, வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வன்முறை வெறியாட்டம்:
சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். இதனால்அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் 5 முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஐந்து போலீசார் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, கடற்கரைச் சாலை இணைப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால், அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

காரணம் யார்; போலீஸார் விளக்கம்:
இந்நிலையில், போராட்டக் காரர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில், போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக் கல்வீச்சு, கலவரத்துக்கு மாணவர்கள் காரணம் இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்குக் காரணம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

தடியடியை நிறுத்த கோரிக்கை:
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கலைந்து செல்ல அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆதாரங்கள் இல்லாமல், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறியது. இதையடுத்து, வழக்கறிஞர் சங்கர்சுப்பு தனி நீதிபதி மகாதேவன் முன் இப்பிரச்னையை கொண்டு சென்றார். இந்த விவகாரத்தை அவசர வழக்காக ஏற்று, மதியம் 2.15க்கு விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்

மதுரையில் வன்முறை:
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். அங்கு பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டி முடிவு எடுத்தது குறித்து போராட்டக்காரர்களிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்தனர். இதை அடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கினர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்துபவர்களுக்கு போலீசார் இறுதி எச்சரிக்கை விடுத்தனர். 10 மணிக்குள் கலைந்து செல்லாவிட்டால், நீங்கள் கலைக்கப்படுவீர்கள் என எச்சரித்தனர். இருப்பினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அங்கே பெண்கள் அதிக அளவில் கூடியிருந்ததால் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் சில இடங்களில் எல்லை மீறல்கள் இருந்ததால், போலீசார் தடியடி நடத்தினர்.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்

சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்றும், அதற்கான தடை நீக்கப் பட வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை மெரினாவில் இருந்து திங்கள் காலை முதல் அப்புறப்படுத்தினர் போலீஸார்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசின் சார்பில் முன்மொழியப்பட்ட அவசர சட்டம், இன்று சட்டப் பேரவை கூடியதும் நிறைவேற்றப்பட உள்ளதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசு சார்பில் கோரப்பட்டது. இதனை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆமோதித்தனர்.

இதைக் கேட்டு நெல்லையில் மட்டும் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். ஆனால் மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராடி வரும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். வரும் வியாழன் அன்று பாரத குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில்தான் நடைபெறும். எனவே போராட்டக்குழுவினரை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக போலீஸாரால் வெளியேற்றப்பட்டனர்.

இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரைக்கு வந்த மயிலை காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவசர சட்ட முன்வடிவை அளித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய பாலகிருஷ்ணன், போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து அமர்ந்து கலைந்து செல்ல மறுத்தனர். இன்று காலையிலேயே ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தனித்தனியாக இருந்த போராட்டக்காரர்கள் பலரும் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே ஒரே இடத்தில் குவிந்தனர். அனைவரும் மொத்தமாக கூடி நின்று கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து ஒன்றாக அமர்ந்த அனைவரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் அங்கிருந்து தனித் தனிக் குழுவாகப் பிரித்து போலீஸார் அவர்களைக் கலைத்தனர்.

காவல்துறையினர் சிலரை வலுக்கட்டயமாக வெளியேற்றியபோது சிலர் அவர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினர். பலரும் நகர மறுக்கவே அனைவரையும் கைகளால் தள்ளிச் சென்று சாலைப் பகுதியில் விட்டனர் போலீஸார். போராட்டக் களத்தில் இருந்து வெளியேற மறுத்த பெண்கள், குழந்தைகளை பெண் போலீசார் வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர். இதனால் பதற்றம் நிலவியது.

திருமண ஆசை காட்டி உறவு கொண்டால் பெண்ணே பொறுப்பு!: மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு

மும்பை:

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் காதலர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி தன்னை ஆசைக்காட்டி தூண்டி உறவு கொண்டுவிட்டு ஏமாற்றிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி 21 வயது காதலன் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மிருதுளா பக்த்கர் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில்…

திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பதை, உறவுக்கு தூண்டியதாக ஒவ்வொரு பலாத்கார வழக்கிலும் கருத முடியாது. படித்த இளம்பெண் திருமணத்துக்கு முன்பாக பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளித்தால், அவருடைய முடிவுக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.

இந்த சமுதாயம் மாறி வருகிறது. அதேவேளையில் பல நடத்தை நெறிகளை இந்த சமுதாயம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறது. குறிப்பாக திருமணத்தின் போது கற்புடையவளாக இருக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த சமுதாயம் பல நம்பிக்கைகளில் இருந்து விடுபட முயற்சித்தாலும், திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை கண்டிக்கிறது.. என்று கூறி,  குற்றம் சாட்டப்பட்ட காதல இளைஞருக்கு முன்ஜாமீனும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ‘படித்த, வயதுக்கு வந்த பெண்கள் திருமணத்துக்கு முன்பு உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்ற முந்தைய தீர்ப்பையும் நீதிபதி மிருதுளா சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் மாற்றாந்தாய் போக்கில் இழந்த உரிமைகளும்

தமிழகத்தில் பிரச்சனைகள் நூற்றுக்கு மேல் இருக்கும் . குறிப்பாக பலருக்கு இப்பிரச்சினைகளே தெரியவில்லை . இந்த பிரச்சினைகளில் 50க்கு மேலாக பட்டியலிட்டுள்ளேன்.

விவசாயிகள் பிரச்சினை , தமிழகத்தின் முக்கிய நதிநீர் ஆதார பிரச்சினைகள் , தமிழக உரிமைகள் , தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் , மணல்கொள்ளைகள் என பட்டியல் இட்டுள்ளேன் .அதை படித்து விவாதியுங்கள். ஜல்லிக்கட்டோடு இல்லாமல் இந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராடுங்கள்.

குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக் கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பம்….. மக்கள் நிராகரிக்கின்றனர்!
ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!

இளைஞர்களும் மாணவர்களும் சினிமா நடிகர்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் பாலாபிஷேகங்களும் கட் அவுட்டுகளும் மாலைகளும் போட்டு திரிந்தனர். மது, புகை பிடிப்பது, சினிமா மோகம், கிரிக்கெட் மோகம், பான்பராக் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி நாட்டின் உரிமைக்காக மாணவர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போது மாணவர்கள் மத்தியில் ஒரு நேர்வழியில் தங்களுடைய போர்க்குணத்தைக் காட்ட ஆரம்பித்தது நல்ல துவக்கமே. தமிழகத்தின் பண்பாடான ஜல்லிக்கட்டு பிரச்சனை மட்டும் இல்லாமல் வேறு தலையாய பிரச்சனைகளுக்கும் இந்த இளைஞர்கள் போராடினால் தமிழ் கூறும் நல்லுலகம் வளம் பெறும்.

தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வு எட்டப்படாமலும் மத்திய-மாநில அரசுகளின் பாராமுகத்தால் நம்முடைய உரிமைகளும் நம்முடைய நலன்களும் நமக்கான திட்டங்களும் நெடுங்காலமாக கோப்புகளில் டெல்லி பாதுஷாக்களிடம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தூசிபடிந்து தூங்குகின்றன.

என்னென்ன திட்டங்கள்? என்னென்ன உரிமைகள் என்பதை வரிசைப்படுத்தி இன்று போராடும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

இதற்கான முழுமையான தரவுகளும் குறிப்புகளும் என்னுடைய வலைப்பூ தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

1) சேது சமுத்திர திட்டம்- 165 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டுவிட்டது.

2) கடலூர்- நாகை- குளச்சல் துறைமுகத் திட்டங்கள் வெறும் கோரிக்கைகளாகவே உள்ளன.

3) சுமார் 10-க்கும் மேலான மீன்பிடி துறைமுகங்களான வானகிரி, திருக்கடையூர், மாமல்லபுரம், மூக்கையூர், திரிசோபுரம், சிலம்பிமங்கலம், காட்டுப்பள்ளி, பாம்பன் – ராமேஸ்வரம், புன்னக்காயல், மணப்பாடு, முட்டம், கன்னியாகுமரி போன்ற பல மீன்பிடி துறைமுகங்கள் கிடப்பில் உள்ளன.

4) அகல ரயில் பாதை திட்டங்கள் ஆமை வேகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரம்பித்தன. இன்னும் செங்கோட்டை- புனலூர்-கொல்லம் மார்க்கம்; மதுரை- போடிநாயக்கனூர்; திண்டுக்கல்- பழனி வழியாக சபரிமலை செல்லும் மார்க்கமும் நிலுவையிலேயே உள்ளன.

5) விவசாயிகள் இதுவரை துப்பாக்கிச் சூட்டில் 60 பேரும் சமீபத்தில் 2012-ல் இருந்து தற்கொலையாலும் மாரடைப்பாலும் கிட்டத்தட்ட 300 பேர் வரை மரணமடைந்துள்ளனர். இது குறித்து மத்திய- மாநில அரசுகளுக்கு தடுக்கக் கூட மனம் கூட வரவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நலத்திட்டங்கள் எதுவும் செய்வதில்லை. அனைத்து நெல் உற்பத்தி விவசாயிகள், கரும்பு உற்பத்தி விவசாயிகள், நவதானிய உற்பத்தி விவசாயிகள், பணப் பயிர் உற்பத்தி விவசாயிகள், பருத்தி விவசாயிகள், தென்னை விவசாயிகள், குமரி மாவட்ட ரப்பர் தோட்ட விவசாயிகள், தேயிலை தோட்ட விவசாயிகள் என அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்தி பொருளுக்கு நியாயமான லாப விலையை அவர்களே நிர்ணயிக்கக் கூடிய உரிமைகள் வழங்கவும் வேண்டும்.

6) விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி கார்ப்பரேட்டுகள் வசம் வழங்குவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கிறது.

7) இயற்கை விவசாயத்துக்கு முழுமையாக அர்ப்பணித்து குரல் கொடுப்பது.

8) உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடப்பட்டு நைனிடாலில் இந்த திட்டத்தை விரிவுபடுத்திவிட்டனர். இங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று தெருவில் நிற்கின்றனர்.

9) சேலம் இரும்பாலையும் விரிவாக்கம் செய்யாமல் சர்வதேச அளவில் சேலம் இரும்பாலையின் இரும்புகளுக்கு மதிப்பு இருந்தும் உற்பத்தி கூடுதலாக்க மத்திய அரசுக்கு மனம் இல்லாமலே இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் எவர்சில்வர், ஆஸ்திரேலியா சந்தையில் அதிக மதிப்புள்ளது.

10) கூடங்குளம் அணு உலை பிரச்சனை தீராத சிக்கலாக உள்ளது. மக்களை பாதிக்கும் அணுக் கழிவை எங்கே புதைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

11) நோக்கியோ தொழிற்சாலை முற்றிலும் மூடப்பட்டு அங்கும் தொழிலாளர்கள் தெருவில் நிற்கின்றனர்; ஆந்திரா எல்லையில் தடாவில் திறக்கப்பட்டுள்ளது.

12) தேனியில் நியூட்ரினோ திட்டம் மக்களின் விருப்பத்துக்கு மாற்றாக நிறைவேற்ற மத்திய அரசு முயலுகிறது.

13) 40 ஆண்டுகாலத்துக்கு முன்னர் திட்டமிட்டு மரக்காணத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா, பெத்தகஞ்சம் ஒடிஷா எல்லை வரை 420 கி.மீ வரை உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் செயலுக்கு வராமலே இருக்கிறது.

14) தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய நீர்வழிப் போக்குவரத்து நான்கும் நிலுவையிலேயே உள்ளது.

15) நெஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டண கொள்ளையை பொறுக்க முடியவில்லை.

16) தமிழக நீர்வள ஆதாரங்களான குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி நயினார், உள்ளாறு, செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணை திட்டம், முல்லைப் பெரியாறு, கொங்கு மண்டலத்தில் ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு- புன்னம்புழா; சிறுவானி, பம்பாறு, பவானி ஆகிய பல நீர் ஆதார பிரச்சனைகள் கேரளாவோடு பேசித் தீர்க்க முடியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

17) காவேரி- ஒகேனக்கல்- தென்பெண்ணை ஆகிய ஆறுகளின் சிக்கலை கர்நாடகாவுடனும் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆந்திராவுடன் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது.

18) தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் கேரளா அச்சன்கோவில்- பம்பை; தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்கும் திட்டம் 1975-ல் இருந்தே கொள்கை வடிவில் இருக்கிறது; உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் இதற்கான ஒப்புதல் இருந்தும் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. மத்திய அரசும் பாராமுகமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தால் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறும். என்னுடைய வழக்கு முடிந்தும் இதற்கான செயல்பாட்டு சாத்தியக் கூறுகள் கண்முன்னே தெரியவில்லை.

19) தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு
மற்றும்
காவேரி- குண்டாறு- குடகனாறு இணைப்பு ;
பொன்னியாறு- பாலாறு
என 3 ஆற்று இணைப்பு திட்டங்களும் நிதி ஆதாரங்கள் இல்லாமல் நிலுவையில் உள்ளன.

20) நாட்டு விடுதலைக்கு முன் 50,000 ஏரி குளங்கள் இருந்ததாக கணக்கு. இன்றைக்கு அதில் பாதியாக குறைந்து 20,000 எண்ணிக்கையில்தான் உள்ளன. சென்னை, மதுரையைச் சுற்றி இருந்த 600 குளங்கள் காணாமல் போய்விட்டன. ரியல் எஸ்டேட் நடத்தும் கொடியவர்கள் கைவரிசையால் இயற்கையாக அமைந்த நீர் நிலைகள் காணாமல் போனது வேதனையைத் தருகிறது. இதை மீட்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள குளம், ஆறு, நீர்நிலைகளை தூர்வாரி, மதகுகளை சீர்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

21) நமக்கு உரிமையான கச்சத்தீவை இழந்தும் அது குறித்து மத்திய சர்க்கார், வாய்மூடி மெளனியாக இதுவரை இருக்கிறது.

22) மீனவர் பிரச்சனையில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறலை பலமுறை தமிழகம் வலியுறுத்தியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்த அவலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை 1000 மீனவர்களு9க்கு9 மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23) உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.

24) வடமாநில உயர்நீதிமன்றங்களில் இந்தியும் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பதைப் போல சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.

25) அந்தமானில் வாழும் தமிழர்களின் வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. அதை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.

26) மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளான அழகர்கோவில் மலை, சிறுமலை, யானை மலை போன்ற கொள்ளிமலை வரையிலான மலைகளின் சுற்றுச் சூழலையும், வனவளங்களையும், இயற்கை வளங்களையும், விலங்கினத்தையும் காக்க வேண்டும். கஸ்தூரி ரங்கன், காட்கில் அறிக்கையில் சொல்லப்பட்ட நியாயமான சில பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும்.

27) கருவேல மரங்களை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

28) வேலூர் சிறையில் வாடும் ராஜீவ் கொலை தூக்கு தண்டனை கைதிகளை தூக்கு கயிற்றில் இருந்து விடுவிக்க வேண்டும்.

29) நீட் தேர்வு முறை கூடாது என்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.

30) தேனி மாவட்டம் கண்ணகி கோட்டம் முழுமையாக தமிழகத்துக்குச் சொந்தமானது என்ற உறுதியை நிலைநாட்ட வேண்டும்.

31) தென்மாவட்டங்களில் கடற்கரையோ தாதுமணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். குமரிமாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையை புதுப்பிக்க வேண்டும்.

32) மணல் கொள்ளையை அறவே தடுக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் 41 ஆறுகளில் மணலே அள்ள முடியாது. ஆனால் தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் மணல் செல்கிறது. எவ்வளவு ஒரு கேவலமான நிலை? அசைவ ஹோட்டல்களில் ஈரல், கால், தலை என விலைகளைப் போட்டிருப்பது போல கேரளாவில் காவேரி மணல், தாமிரபரணி மணல், வைப்பாறு மணல், தேனி மணல் என்று விலைபட்டியல் போட்டு விற்கிற கேவலமான அவல நிலை இருக்கிறது.

33) மலைகளையும் பூமியையும் பாளம் பாளமாக வெட்டி கிரானைட் கற்களை கொள்ளையடித்துவிட்டனர்.

34) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிட்டும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

35) நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில்நுட்ப மையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

36) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளை திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் இருப்பதை பிரித்து புதியதாக திருநெல்வேலி ரயில்வே கோட்டத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

37) கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த நெசவாலைகள், பனியன் ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அத்தொழிலை சீரமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

38) வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். சொந்த ஊருக்கு விரைவாக வரவேண்டும் என்றால் மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள், பன்னாட்டு விமான நிலையங்களாக மாற்றவும் உரிய விமான சேவைகளை அதிகரிக்கவும் வேண்டும். சேலம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் விமான நிலையங்களை இயங்கக் கூடிய வகையில் நிறுவப்பட வேண்டும்.

39) எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் தாமதம் இல்லாமல் அமைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் ஐஐடி மத்திய பல்கலைக் கழகத்தை தென்மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்லிலோ, திருநெல்வேலியிலோ அமைக்கப்பட வேண்டும்.

40) திருநெல்வேலி அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை 10 ஆண்டுகால மத்திய அரசின் பரிசீலனையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். அந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

41) மதுரை அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் அகழாய்வாராய்ச்சி பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

42) கேரளாவில் அட்டப்பாடி, கர்நாடகாவில் பெங்களூரு, மாண்டியா, கோலார், மும்பை ஆகிய இடங்களில் உள்ள தமிழர்களை பாதுகாக்கும் நிலையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட வேண்டும்.

43) கொங்கு மண்டலத்தை பாதிக்கக் கூடிய கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறவே கைவிட வேண்டும். இம்மாதிரியே ஆந்திரத்தில் இருந்து திருவள்ளூர், மதுராந்தகம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக எரிவாய் குழாய் பதிக்கவும் திட்டங்கள் உள்ளன. கடலூரில் இருந்து மேற்கு திசையை நோக்கியும் இந்த எரிவாயு குழாய் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

44) தஞ்சை டெல்டாவை வஞ்சிக்கும் மீத்தேன் திட்டத்தை முழுமையாக நிறுத்தப்பட்டது என்ற உறுதிமொழியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

45) இலங்கைக்கான இந்திய தூதராக ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும்; இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணையை ஐநா மன்றத்தில் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிலும் தமிழக அரசிலும் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை முன்னெடுக்க வெகுஜன (Refrendum) வாக்கெடுப்பை இலங்கையில் நடத்த வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவத்தை சிங்கள அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழர்களிடம் பறிக்கப்பட்ட விவசாய காணி நிலங்களையும் வீடுகளையும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். புதியதாக எழுதப்படும் இலங்கை அரசியல் சட்டத்தில் சமஷ்டி அமைப்பையும் மத்திய மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், வருவாய், காவல்துறை, மீன்பிடி போன்ற அதிகாரங்கள் முழுமையாக தரப்பட வேண்டும். இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் முதல்வர்கள் அதிகாரமற்ற பொம்மை முதல்வர்களாக காட்சி தருகின்றனர்.

46) இந்தியாவின் வடகிழக்கும் வடமேற்கும் சீனா, பாகிஸ்தான் மூலமாக போர்களை சந்தித்தோம். தீபகற்ப இந்தியா அமைதி மண்டலமாக திகழ்ந்தது. இன்றைய தென்கிழக்கு ஆசிய புவி அரசியலில் இந்து மகாசமுத்திர பிரச்சனைகளால் தெற்கிலும் நமது அமைதி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருக்கிறது. அந்த வகையில் வங்கக் கடலிலும் இந்து மகாசமுத்திரத்திலும் அரபிக் கடலிலும் இந்தியாவின் ஆளுமையை உலக அளவில் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

47) தமிழகத்தில் உள்ள சித்தனவாசல், கழுகுமலை வெட்டுவான் கோவில், மாமல்லபுரம், திண்டுக்கல் மலைக்கோட்டை, யானைமலை சிற்பங்கள் போன்ற பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க உரிய உதவிகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.

48) தமிழகத்தில் விவசாயம், நெசவு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், பூட்டுத் தொழில் போன்றவை சிறு குடிசைத் தொழில்களாக விளங்கின. இவை அனைத்தும் காக்கப்பட வேண்டும்.

49) இந்தியாவின் வரலாற்றை மறு ஆய்வு செய்து தமிழகத்தில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும். பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, விருப்பாட்சி கோபால்நாயக்கர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் என்ற விடுதலைப் போர் அக்கால தளபதிகள் மட்டுமின்றி பண்டைய வரலாற்றில் முதல் சங்கம் மற்றும் கபாடபுர காலத்தில் இருந்து வரலாறுகள் ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும்.

50) தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா இந்த மாநிலங்கள் ஒரு கூட்டமைப்பாக அமைந்து தங்களுக்கான பிரச்சனைகளை முறையாகப் பேசித் தீர்க்கும் வகையில் சட்டப்பூர்வமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

51) வங்கக் கடலில் போக்குவரத்து கப்பல்களை குமரியில் இருந்து நாகப்பட்டினம், சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, அந்தமான், இலங்கை என செல்லக் கூடிய வகையிலான கப்பல் போக்குவரத்தை நவீனப்படுத்தி பயணிகள் பயணத்துக்காக இயக்க வேண்டும்.

52) பொதிகை போன்ற மாநில தொலைக்காட்சிகள் வெகுஜன தொலைக்காட்சிகளாக பார்க்கக் கூடிய அம்சங்கள் இடம்பெறும் வகையில் நவீனப்படுத்த வேண்டும்.

53) மாநில சுயாட்சியை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிடம் நிதி, ராணுவம், வெளிவிவகாரம், உள்துறை, தகவல் தொடர்பு, ரயில்வே, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

நீதிபதி சர்க்காரியா குழு, நீதிபதி பூஞ்ச் குழு, நீதிபதி ராஜமன்னார் குழு, நேரு காலத்தில்அமைக்கப்பட்ட நிர்வாக குழு அளித்த பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு வழங்கக் கூடியஅ திகாரங்களை முறைப்படி வழங்கி சமஷ்டி அமைப்பை உறுதி செய்ய வேண்டும்.

54) தற்போது மோடி அரசு நதிநீர் தீர்ப்பாயத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அது மேலும் பிரச்சனைகளை உருவாக்கும். அப்படி ஒரு அமைப்பு தேவையும் இல்லை.

55) நதிநீர் தீர்ப்புகளை கண்டிப்பான முறையில் உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.

56) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன விவகாரத்தில் உறுதியான ஒரு முடிவை தீர்வாக மத்திய அரசு எடுக்க வேண்டும்; நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பங்கை தமிழகத்துக்கு அதிகரித்து வழங்க வேண்டும்; ராயல்டி தொகையையும் அதிகரித்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
57) கொடைக்கானலில் பெரும் சுற்றுச் சூழலை ஏற்படுத்தியுள்ள பாதரச ஆலையை அறவே மூட வேண்டும்

58) திருவண்ணாமலை கவுந்தி மலை- வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்கவும் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களும் உரிமைகளும் கிடைக்காமல் சுற்றுச் சூழலை பாதித்து மராட்டிய ரத்தனகிரியில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது. கூடங்குளம் அணு ஆலை கூடாது என போராடியும் மேலும் அணு உலைகளை அமைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.

கேரளா பிளிச்சிமீடாவில் இருந்து துரத்தப்பட்ட கோக் ஆலை, திருநெல்வேலி கங்கைகொண்டானில் நிலை கொண்டுவிட்டது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் புற்றுநோயால் மக்கள் மாண்டுபோகின்றனர். தமிழகம் என்ன ஆலைகளின் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடா?

வரலாற்றில் இடம்பெற்ற தானிய களஞ்சியம் தஞ்சையின் பெருமையை மாசுபட வைக்கிற வகையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு தீங்கு நேரும் தொழிற்சாலைகளை அமைத்துக் கொண்டு வருகிறது.

தமிழகத்தின் பிரச்சனைகளாக இப்படி ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இதற்காகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
————————————
கட்டுரையாளர் : -வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

#தமிழகதிட்டங்களும் #தமிழகஉரிமைகளும்

#தமிழகத்தில்கிடப்பில்போட்டதிட்டங்கள்
#தமிழகத்தின்பிரச்சனைகள்
#KSRposting
#KSRadhakirushnanpost

ஜல்லிக்கட்டு; அவசரச் சட்டம்; நீடிக்கும் குழப்பம்!

இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழகமே திரண்டெழுந்த தன்னெழுச்சி போராட்டத்தின் எதிரொலியாக, ஜல்லிக்கட்டுக்கு நடத்துவதற்கு மத்திய அரசின் உதவியோடு, தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள் அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் நாளை தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. முதலமைச்சர் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடை நீக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை முதல்வர் தொடங்கி வைக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ஒரு சில விஷயங்களை எல்லோரும் சிந்தித்து பார்ப்பது நன்மை பயப்பதாக இருக்கும். குறிப்பாக போராட்டக் களத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாகவே சிந்தித்து செயல்பட வேண்டியிருக்கிறது. காரணம், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கிறது. அதாவது தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திலோ, இரு வாரத்திலோ வரும் நிலையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசோ, மாநில அரசோ அவசரச் சட்டம்தான் கொண்டுவர முடியும். அவசரச் சட்டம் போல் 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசோ, மாநில அரசோ நிரந்தரச் சட்டத்தை தந்துவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொங்கலுக்கு முன்பு போராட்டக் களத்திற்கு வந்தபோது என்ன கூறினார்கள் எல்லோரும்? இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதற்கு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கான சாத்தியக் கூறுகள் இரு நாட்களாக தென்பட்ட நிலையில், நேற்றிலிருந்து போராட்டத்தின் நோக்கத்தை மாற்றிவிட்டார்கள். இப்போது என்ன, நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று… அது சாத்தியமா என்றால் இப்போதைக்கு அல்ல. தீர்ப்பு வரவிருக்கிறது. அது எப்படியிருக்குமோ என்று தெரியாது. எனவே நீதிமன்ற நடைமுறைகள் முடியும் வரையில் அறவழியில் போராட்டத்தை தொடர்கிறீர்கள் என்றால் சரிதான்.

அவசரச் சட்டமே, நிரந்தர சட்டம்தான் என்றும், 6 மாதத்திற்குள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு முறைக்க இரு முறை உறுதியாக தெரிவித்திருக்கிறார். எனவே, போராட்டக் களத்தில் இருப்பவர்களின் சக்தி வீணாக கூடாது. அதனால், சிந்தித்து செயல்படுங்கள். நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ளுங்கள். உணர்ச்சிவயத்திற்கு ஆட்பட்டு, வேறு பாதையை நோக்கி பயணிக்காதீர்கள்.

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கூறியபோது:

அவசர சட்டமானது 6 மாத காலத்திற்குள் உறுதியாக நடைமுறையில் இருக்கும். அதற்கு முன் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். வரும் சட்டசபை தொடரில் இதற்குரிய சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டு உரிய சட்டம் கொண்டு வரப்படும். அவசர சட்டம் தொடர்பாக மாநில அரசு எடுக்க வேண்டிய நேரம்தற்போதுதான் வந்துள்ளது. ஜல்லிக்கட்டு தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசர சட்டமே நிரந்தர தீர்வாகும். அறவழியில் போராடிய இளைஞர்கள், பொதுமக்களுக்கு நன்றி. அவசர சட்டம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: