Home Blog Page 5725

கரும்பு கொள்முதல் விலையை அரசு அறிவிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை:
கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவைப் பருவம் தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்டன. சர்க்கரை உற்பத்திக்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான கொள்முதல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை சர்க்கரை ஆலைகள் செயல்படுவது வழக்கம். கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு வாரங்களில் அதற்கான விலை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.  வழக்கம் போலவே நடப்பாண்டிலும் அக்டோபர் மாதம் முதல் படிப்படியாக சர்க்கரை ஆலைகளில் அரவைப் பருவம் தொடங்கி விட்ட நிலையில், கரும்புக்கான விலை இன்னும் உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்காதது தான். அரவைப் பருவம் தொடங்குவதற்கு  முன்பே அக்டோபர் மாதத்தில் கொள்முதல் விலை அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், திசம்பர் மாதமாகியும் கரும்பு விலை அறிவிக்கப்படாததில் இருந்தே அரசு முடங்கிக் கிடப்பதை உணர முடியும்.
2016-17ஆம் ஆண்டிற்கான கரும்பு கொள்முதல் விலையை மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதியே அறிவித்து விட்டது. அத்துடன் தமிழக அரசு ஊக்கத் தொகையை சேர்த்து மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலையுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.650 சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் இது டன்னுக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டில்  பரிந்துரை விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டது. கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக மிகக் குறைந்த அளவிலே உயர்த்தி வரும் நிலையில், அதை ஈடுகட்டும் வகையில்பரிந்துரை விலை  அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசோ சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பரிந்துரை விலையை குறைத்துவிட்டது.
 நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. இத்தகைய சூழலில் மாநில அரசு அதன் பரிந்துரை விலையை உயர்த்தி வழங்கினால் தான் விவசாயிகளின் நலனை பாதுகாக்க முடியும். உத்தரப் பிரதேச அரசு கரும்புக்கான பரிந்துரை விலையாக டன்னுக்கு  ரூ.750 சேர்த்து ரூ.3050 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்பதால், நடப்பு பருவத்திற்கான  தமிழ்நாடு அரசின் பரிந்துரை விலையை நிர்ணயிப்பதற்கு அதை அடிப்படையாக கொள்ளக் கூடாது.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டதற்கு பிறகு சர்க்கரை சந்தை நிலவரம் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகளில் இருந்து ஒரு டன் சர்க்கரை ரூ.21,640 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் படிப்படியாக விலை உயர்ந்து கடந்த வார நிலவரப்படி தமிழக சர்க்கரை ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சர்க்கரையின் விலை டன்னுக்கு ரூ.36,250 ஆக உயர்ந்திருக்கிறது. இது சுமார் 70%  உயர்வாகும். இதனால் சர்க்கரை ஆலைகளுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தில் ஒரு பகுதி  விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.2450 செலவு ஆவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் 50% லாபம் மற்றும் போக்குவரத்து செலவுகள் சேர்த்து  ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4,000 நிர்ணயிக்க வேண்டும்.   சர்க்கரை விலை 70% வரை அதிகரித்திருப்பதாலும், சர்க்கரை தயாரிக்கும்போது கிடைக்கும் துணைப் பொருட்களின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதாலும் இந்த அளவுக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது சாத்தியம் தான். இதை உணர்ந்து  உழவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4000 என்று அரசு அறிவிக்க வேண்டும்.

இரு நாட்களில் வீடு திரும்புவார் கருணாநிதி: மு.க.ஸ்டாலின்

சென்னை:
‛‛தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்,” என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து, மு.க.ஸ்டாலின் கூறியதாவது;

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தேறி வருகிறது. அவர் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க தில்லி சென்றுள்ளார். ‛வர்தா’ புயல் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து, பிரதமரிடம் பன்னீர்செல்வம் பேச வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, கற்பனையாக கூறுவது குறித்தெல்லாம் நான் கருத்து கூற விரும்பவில்லை

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் : சிபிஐ விசாரணை கேட்டு மனு

புது தில்லி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடைபெற்றது
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கம், , குடல்வால், சினைப்பை நர்க்கட்டி, பித்தப்பை கற்கள் அகற்றுதல் ஆகிய நோய்களால் அவதிப்பட்ட நோயாளிகளுக்கு வீடியோ லேப்ரோஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை அளிக்க பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனை மருத்துவர் குணசேகரனை அரசு மருத்துவர்கள் அழைத்திருந்தனர். அதன்படி மரு. குணசேகரன் மற்றும் சுசிலா மருத்துவமனை செவிலியர்கள் நேரடியாக அங்கு சென்று சிறந்த முறையில் லேப்ராஸ்கோபிக் மூலம் அறுவை சிகிச்சை அளித்தனர்
மேலும் அங்கு பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் செயல் விளக்கம் அளித்து லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை பற்றி கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு சிறப்பாக பதிலளித்தார் மருத்துவர் குணசேகரன்.
பின்னர் மருகுணசேகரனுக்கு மகேஸ்வரி, அலெக்ஸ், வினோத், பாண்டி, வரதராஜன், பரிமளா, முரளி, உட்பட மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சித்தி அத்தியா முனவரா மருத்துவர் குணசேகரனுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தும் கவுரவித்தார்

சென்னை அருகே கரை கடக்கிறது வர்தா புயல்!: மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து துண்டிப்பு

சென்னை:

சென்னை அருகே கரையை அடைந்தது வர்தா புயல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சென்னையின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமானம், மற்றும் ரயில் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையைக் கடந்த பின்னர் தென் திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையைக் கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் குறைந்த பின்னரே மின்சாரம் வினியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இது போல், புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 52 இடங்களில் மரங்கள் விழுந்ததால் பல்வேறு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சென்னை சாந்தோம் முதல் தலைமைச்செயலகம் வரை 25 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் சாலையில் மரம் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வர்தா புயல் காரணமாக எண்ணூரில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனையடுத்து பல இடங்களில் மரம் விழுந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் காரணமாக காற்று மற்றும் கனமழையால் சென்னையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘ஜெயலலிதா மகள்’ என்ற குறிப்புடன் சுற்றும் படத்தில் இருப்பவர் யார்?: பாடகி சின்மயி விளக்கம்

ஜெயலலிதாவின் மகள் என்ற பெயரில் ஒரு படம் கடந்த சில நாட்களாக வாட்ஸப்பில் பல எம்.பிக்களை சென்று ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில், இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்ற தகவலுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். இந்நிலையில், ‘இவரை எனக்கு தெரியும். கேரளாவை சேர்ந்தவர்” என தனது0 ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் பாடகி சின்மயி. அவரிடம் இது குறித்துக் கேட்டபோது,

“இந்த உலகத்துல ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா? அப்படித்தான் இவங்களும். இந்தப் படத்துல உள்ளவங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. அவங்க தமிழ்நாட்டுலயே இல்லை. பல வருஷங்களா வெளிநாட்டுல வாழற இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவங்க. படத்துல அந்தப் பெண்கூட இருக்கிறவர் அவங்களோட கணவர் ராமநாதன். எங்கம்மா வயித்துல பிறக்காத பிள்ளை மாதிரி. எனக்கு அண்ணா மாதிரி. அதிர்ந்து பேச மாட்டார். பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி, அவரோட சகோதரர். அமைதியான, அடக்கமான குடும்பம் அவங்களுடையது. எங்களுக்கு ரொம்ப வருஷங்களா நெருக்கமானவங்க. யாரோ பண்ணின குசும்பு வேலை இது. அசப்புல அவங்களை மாதிரி இருக்காங்கன்னு இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்ருக்காங்க. அந்தப் பெண்ணோட பெயரையோ, அவங்க இருக்கிற இடத்தையோகூட நான் சொல்ல விரும்பலை. அப்படிச் சொன்னா அவங்களோட நிம்மதி கெட்டுப் போயிடும். குழந்தைங்களோட சந்தோஷமா, அமைதியா வாழ்ந்திட்டிருக்காங்க. அப்படியே இருக்கட்டும். எங்கயோ, ஏதோ ஒரு கல்யாணத்துல எடுத்த படம் இப்படித் தப்பா பரவி இவ்வளவு தூரம் வந்திருக்கு. முதல் முறை இந்தப் படம் சோஷியல் நெட்வொர்க்ல பரவினதைக் கேள்விப்பட்டே அவங்க குடும்பம் அதிர்ச்சியாயிட்டாங்க. இப்ப மறுபடி யாரோ அதைக் கிளறிவிட்டிருக்காங்க. ரொம்பப் வெறுத்துப் போய், இந்தச் செய்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சாகணும்னுதான் அவங்க சம்மதத்தோட இந்தப் படத்தை ஷேர் பண்ணினேன்.

சேவை மனப்பான்மையிலாகட்டும், சங்கீதத்துலயாகட்டும்… பெரிய பாரம்பரியம் உள்ள குடும்பம். ஆனா கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாத குடும்பம். அவங்களைப் போய் இப்படி வம்புக்கிழுக்கிறது என்ன அட்டூழியம்னு தெரியலை. அவங்க கணவருக்கு நல்ல மனைவியா, குழந்தைகளுக்கு அன்பான அம்மாவா அமைதியா எங்கேயோ ஒரு மூலையில வாழ்ந்திட்டிருக்காங்க. அவங்களை நிம்மதியா வாழ விடுவோமே… ப்ளீஸ்..” என்று கூறினார் சின்மயி!

அவரது பேஸ்புக் பதிவு :

500 வங்கிக் கிளைகளில் உளவு: ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் ஆப்பு!

புதுதில்லி:
சுமார் 500 வங்கிக் கிளைகளில் ஸ்டிங் ஆபரேஷன் எனப்படும் உளவு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த சிடிக்கள் அனைத்தும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிச.10ல் குஜராத் தீஸாவில் அமுல் நிறுவன விழாவில் பேசிய பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்ற விவகாரம் என்பது, நாட்டில் இருந்து ஊழலை ஒட்டுமொத்தமாக வெளியேற்றச் செய்யும் முயற்சிதான். ஊழல்வாதிகளை நிச்சயம் தண்டிப்போம். வங்கி அதிகாரிகள் பலர் சிறைக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தார்கள், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மோடி திரும்பப் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் நாம் நம் வேலையப் பார்ப்போம் என்று பின் வாசல் வழியாக வேலை செய்தார்கள். ஆனால், மோடி அந்தப் பின்வாசலில் கேமரா மூலம் கண்காணிக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் கைதாவார்கள். தவறிழைத்தவர்கள் எவரும் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.” என்று பேசினார் பிரதமர் மோடி.

இதனிடையே ஊழல் வங்கி ஊழியர்களுக்கு கெட்ட காலம் துவங்கியுள்ளது. சுமார் 500 வங்கிக் கிளைகளில் மத்திய அரசு ஸ்டிங் ஆபரேஷன் மூலம், ரகசிய வீடியோ எடுத்துள்ளது; அந்த வீடியோ சி.டி-க்கள் இப்போது நிதி அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர், தரகர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் பழைய நோட்டுக்களை வங்கி ஊழியர்களின் உதவியுடன் எவ்வாறு மாற்றினர் என்பது ஸ்டிங் சி.டி-க்களில் பதிவாகியுள்ளது,.

[embedyt] https://www.youtube.com/watch?v=TQgrBVz_pv4[/embedyt]

நவ.8ம் தேதிக்குப் பிறகான நடவடிக்கைகளில், இது வரை வங்கி ஊழியர்கள் மீதான மென்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. நாட்டில் ஓரளவு பணத்தட்டுப்பாடு தீர்ந்தவுடன், தவறிழைத்த வங்கி அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.

வங்கி ஊழியர்களின் ஊழல் போக்கால்தான் பொது மக்கள் இவ்வளவு அவதிக்குள்ளானார்கள்; பெரும் சிரமங்களைச் சந்தித்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த சிடிக்களில், பொதுமக்கள் பெரும் வரிசையில் வங்கிக்கு வெளியே காத்திருக்கும் நிலையில், வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள், வெவ்வேறு விதமான ஐ.டி.,க்களில் எவ்வாறு பனத்தை கட்டுக் கட்டாக மாற்றினார்கள் என்பது பதிவாகியுள்ளது. இது வங்கி ஊழியர்களிடையே தற்போது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

[embedyt] https://www.youtube.com/watch?v=CpOJqHkFflo[/embedyt]

ரஜினி பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை:
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 66-வது பிறந்த நாளை ஒட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், ‘ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று பிறந்த நாள் காணும் சரத் பவாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும், மிலாது நபி வாழ்த்துகளை இஸ்லாமியர்களுக்கும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

வர்தா புயல்: சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை:

வர்தா புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் ரயில் சேவையில் மாற்றமும், சில ரயில்களின் சேவை தற்காலிகமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் புயல் பழவேற்காடு- கும்மிடிப்பூண்டி இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வர்தா புயல் காரணமாக சென்னையில் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் சூளூர்பேட்டையிலிருந்து புறப்படும் சூளூர்பேட்டை – சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லூரில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் ரயில் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை நேரம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், பிற்பகலில் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை எந்த மாற்றமின்றி, வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சென்னை புறநகர் மின் ரயில்கள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தாற்காலிகமாக தாம்பரம் செல்லும் ரயில் சேவையும் நிறுத்தப் பட்டது.

அஸ்வின்- இந்தியா- வின்

அஸ்வின் அபாரம்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி; தொடரையும் வென்றது!
இந்தியா: 631 (கோலி 235, விஜய் 136, ஜெயந்த் 104)
இங்கிலாந்து: முதல் இன்னிங்க்ஸ் 400 (ஜென்னிங்க்ஸ் 112, பட்லர் 76, மொயின் 50; அஸ்வின் 6-112, ஜடேஜா 4-109)
இரண்டாவது இன்னிங்க்ஸ் 195 (ரூட் 77, பெர்ச்டோ 51, அஸ்வின் 6-55)
இந்தியா ஒரு இன்னிங்ஸ் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி