Home Blog Page 5732

இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களான படம்  ‘முன்னோடி ‘ 

ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும்.
‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற  இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.

 இதை கதை, திரைக்கதை, வசனம்  எழுதி புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார்  இயக்கியுள்ளார். தொழிலதிபரான இவர் தென்காசிக்காரர்..சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும்  பணிபுரியாமல் இயக்குநர் ஆகியிருக்கிறார்.

இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு கதாநாயக நடிகர்கள்  இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர். ‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம்  கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும்  வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்., கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார். பட்த்தின் எடிட்டிங்கை என்.சுதா கவனிக்க, நடனம் அமைத்திருக்கிறார் ஏபி.சந்தோஷ். ஸ்டண்ட் – டேஞ்சர் மணி.

நகைச்சுவை நடிகராக நிரஞ்சன்  என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.

‘முன்னோடி’  படம்  சென்னையில் நடக்கும் கதை. என்றாலும் பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன.

படப்பிடிப்பு 120 நாட்கள் நடை பெற்றுள்ளது. படம் நன்றாக வரவேண்டும் என்று இயக்குநர் உறுதியாக இருந்ததால் செலவைப் பற்றி   கவலைப்படவில்லை.. நல்ல விஷயங்களுக்காக மெனக்கிடுவதில் ஒரு தப்புமில்லை.

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது,

“நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன். இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும்..

இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.

படத்திற்கு இசை பிரபுசங்கர். இவர் குறும்பட உலகில் பிரபலமானவர் மட்டுமல்ல, கலைஞர் டிவியின்’ நாளைய இயக்குரர்களி’ல் டைட்டில் வென்ற இசையமைப்பாளர் .

படத்தில் நான்கு  பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை  95 %  படப்பிடிப்பு முடிந்து விட்டது.

 படத்துக்கு நன்கு முன் தயாரிப்பு செய்து கொண்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று நடித்துள்ளார். படம் முழுக்க வரும் நல்ல பாத்திரம் அவருக்கு.

‘முன்னோடி’ காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் கலந்த முழு நீீள  கமர்ஷியல் படமாக இருந்தாலும் உளவியல் சார்ந்த விஷயங்கள் எந்த இடத்திலும் குறையாமல் இருக்கும்.

படத்தில் காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு ஏற்றும்படி திரைக்கதை இருக்கும்..படத்தில் நான் பார்த்த, கேள்விப்பட்ட அனுபவங்கள் காட்சிகளாகியுள்ளன.

போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.

 இதில் வரும் சண்டைக் காட்சிகள் நிச்சயம் பார்ப்பவர் மனதில் பலநாள் நிற்கும். தொழில் நுட்பரீதியிலும்  பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்கிறார்.

முன்னோடி டிசம்பரில் வெளியிடும் மும்முரத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 யாரிடமும்  உதவி இயக்குநராகப்  பணியாற்றாத இந்தப் படத்தின் இயக்குநர் குமார்,
மணிரத்னம்போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக  எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம்.

இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை: ஷாம் ஆதங்கம்

திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல  திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும்.

அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்து கன்னடத்தில் ஒரு படம் வெளியாகிறது.  ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்பது படத்தின் பெயர்.

இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணி கதாநாயகனான  யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர்  ராதிகா பண்டிட்.

இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில்  எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்து படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார்.

பட அனுபவம் பற்றி ஷாம் பேசத்தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது ,

” நான் ‘6 ‘படம் வெளியான பிறகுதான்  தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன; வருகின்றன.

இப்போது நான் நடித்துள்ள கன்னடப் படம்  ‘ஸ்ட்ரெய்ட் பார்வர்ட்’  தீபாவளியன்று வெளிவருகிறது. கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. தயாரிப்பு கே . மஞ்சு.

இந்த ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ படத்தில் என் பாத்திரம் அப்படி ஒரு அதிரடியாக அசத்தலாக வந்திருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்புல் ரோல் இது தான் என்பேன்.

சமீபத்தில் ‘புறம்போக்கு’ வரை காக்கிச்சட்டை போட்டு போலீஸ் வேடங்களில் தோன்றி வந்த  எனக்கு, இதில் மாறுபட்ட வேடம். இதில் நான் ஒரு கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் என்பது என் பாத்திரத்தின் பெயர். தனியாக எனக்குத் தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும் . ‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.

 இப்படத்துக்காக பெங்களூர், ஹைதராபாத் என்று நடந்த படப்பிடிப்பு வெகு மகிழ்ச்சியாக இருந்தது ” என்று சற்றே நிறுத்தியவர், படத்தின் நாயகன் யஷ் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன்.

பொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல்,உடைகள்,வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாக சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள். ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்கு  படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

தன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய  வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வர வேண்டும் என விரும்பினார். உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.

அது மட்டுமல்ல என் உடைகளை வடிவமைத்ததே அவர் தான். என் சூட் இப்படி இருக்க வேண்டும்., ஜாக்கெட் இப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்தார்.

படம் முழுக்க எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. படப்பிடிப்பில் எனக்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி யஷ் சொல்வார் ஷாம் உங்களுக்கு இன்னமும் சரியான ரோல்  தமிழில் அமையவில்லை ., யாரும் உங்களை  சரியாகப்  பயன்படுத்தவில்லை என்பார் .எனக்கு வேறு மொழிகளில் வந்த “கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் , ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப்படமும் அப்படித்தான் வந்தது.

”இந்தப் படம் தீபாவளிக்கு வருகிறது. நான் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை. எனவே இந்தத் தீபாவளி எனக்கு உற்சாகமான ஒன்றாகியிருக்கிறது.”

என்று கூறுகிற ஷாம், தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விடைபெறும் முன் அனைவருக்கும்  தீபாவளி வாழ்த்துகள் கூறினார்!

நெல்லையில்அதிரடி சோதனை போலி மருத்துவம் செய்த இருவர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியில் நவீன வயக்ரா மருந்து சாப்பிட்டு 4பேர் உயிர் இழந்தனர் இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது

அண்மையில் தென்காசி அருகே அழகப்பப்புரத்தில் நீரிழிவு நோய்க்காக நாட்டு மருந்து சாப்பிட்டதாக 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் அம்மருந்து இளம் வாலிபர்களை குறிவைத்து தயாரிக்கபட்ட நவீன வய்க்ரா எனக் கூறப்படுகிறது
போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கத்தாய் தலைமையில் டாக்டர்கள் கலா, சண்முசுந்தரம், துரைராஜ், துரைப்பாண்டியன், அரிகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாவூர்சத்திரத்தில் சித்த மருத்துவம் செய்து வந்த இடங்களில் அதிரடி சோதனை நடதினர் இதில் பாவூர் சத்திரத்தில் சித்தமருத்துவம் செய்து வந்தத குறும்பலாப்பேரி செல்வராஜ் மகன் பிரபுவை (35) மற்றும் எவ்வித அனுமதி பொறாமல் சித்தா மருத்துகள் விற்பனை செய்துவந்த திருமலாபுரம் அண்ணாத்துரை மகன் கதிரேசன் (32) இருவரையும் கைது செய்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்தவ அதிகாரி மாணிக்கத்தாய் செய்தியளர்களிடம் கூறியதாவது
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சித்த மருத்துவம் மற்றும் நாட்டு வைத்தியம், செய்து வருபவர்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு வருகிறது இதில் பாவூர்சத்திரத்தில் உள்ள நாட்டு மருந்து கடையில் எந்த வித அனுமதி பொறாமல் மருத்துகள் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சுரண்டை ரோட்டில் ஒருவர் முறையாக படிக்காமல் போலி சான்றிதழ்களுடன் சித்தமருத்துவம் செய்து வந்தது குறித்து கண்டுபிடித்தோம். அங்கு காலாவதியான மருந்துகளும் இருந்தன. அத்தோடு சொந்தமாக மருந்துகள் தயார்செய்ததும் தெரியவந்தது. மருத்துவம் சார்ந்த எந்த கல்வியும் கற்கவில்லை அவரிடம் உள்ள சான்றிதழ்களும் போலியானவை என தெரியவந்த்து . இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்தோம். அவர் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்
பாவூர்சத்திரம் காவல் துறையினர் திருமலாபுரம் அண்ணாத்துரை மகன் கதிரேசன் (32) மற்றும் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வருக்காக பால்குடம்,மிருத்யுஞ்சி,ஆயுஷ் ஹோமம்

முதல்வர் பரிபூரண நலம் பெறவேண்டி கீழப்பாவூரில் இருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 1008 பால் குடம் மாவட்ட செய்லாளர் கே.ஆர்.பி,பிரபாகரன் எம்.பி தலைமையில் ,அம்பை எம்.எல்.ஏ.முருகையா பாண்டியன் முன்னிலயில் பெண்கள் எடுத்தன்ர் மேலும் இன்று கீழப்பாவூரில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரநாளில் கீழப்பாவூர் ஒன்றிய அதிமுக சார்பில் மிருத்யுஞ்சி ஹோமம், மற்றும் ஆயுஷ் ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பின்னர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 16 வகையான பூக்களால் அர்ச்சனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, நெல்லைபுறநகர் மாவட்ட செயலாளரும்,எம்.பியுமான கே.ஆர்.பி.பிரபாகரன், மாநிலகூட்டுறவு சங்க துணைத்தலைவர் கண்ணன், கீழப்பாவூர் ஒன்றியசெயலாளர் நடராஜன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சேர்மப்பாண்டி, நெல்லை மண்டல அண்ணா போக்குவரத்து கழக தலைவர் இளஅரசு,உட்பட பலர் கலந்து கொண்டனர்

நானும் தீர்ப்பில் தவறு செய்திருக்கலாம்: மார்க்கண்டேய கட்ஜு

நானும் தீர்ப்பு வழங்குவதில் தவறு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

பேஸ்புக் பக்கத்தில் மார்கண்டேய கட்ஜூ இன்று கூறியிருப்பதாவது:-
“ கேரள நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை மறு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று நான் நம்புகிறேன். அதிகப்படியான பணிச் சுமை காரணமாக இந்த தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் கிடைத்ததும் மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும் தன்னை அவமதிக்கும் நோக்கில் சம்மன் அனுப்பட்டிருக்கலாம் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ள அவர், உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீஸை படித்துப் பார்த்த பிறகு மிகவும் மரியாதைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. எனக்கு உத்தரவு போடப்படவில்லை. வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. எனவே நான் வரும் 11 ஆம் தேதி ஆஜராக முடிவு எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில், பிரபலமான பிரிட்டிஷ் நீதிபதி லார்டு டென்னிங் கூறிய கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ள கட்ஜூ, “ தவறுகளே செய்யாத ஒரு நபராக நீதிபதிகள் பிறக்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். அனைவரும் தவறுகள் செய்வோம். ஆனால், பண்புள்ள ஒருவர் தனது தவறை புரிந்து கொண்டு திருத்தம் செய்ய முற்படுவார்” என்று தெரிவித்தார்.

அரவக்குறிச்சியிலும் போட்டியிடலைன்னா கட்சி காணாமல் போகும்: மதிமுகவில் சலசலப்பு!

சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது என அறிவித்திருப்பது மதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக திமுகவின் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
பாமக, நாம் தமிழர் கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி 3 தொகுதி தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
அரவக்குறிச்சி கலையரசன்
சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மதிமுகவின் ஒன்றிய செயலர் கலையரசன் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். அதிமுகவின் செந்தில் பாலாஜி, திமுகவின் கேசி பழனிச்சாமிக்கு கடும் போட்டியை தரக்கூடியவராக இருப்பார் கலையரசன் என கூறப்பட்டது.
போட்டியிடாதது அதிருப்தி
தற்போது அரவக்குறிச்சி தொகுதியிலும் கூட மக்கள் நலக் கூட்டணி போட்டியிடவில்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருப்பது மதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை மதிமுக நிர்வாகிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் குமுறல்
மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பதால் மதிமுகவை மக்கள் புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள்; அரவக்குறிச்சியில் போட்டியிட தகுதியான வேட்பாளர் இருந்தும் புறக்கணிப்பு தேவையா? பெரியார் தி.க. மாதிரி எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாமலேயே இருந்துவிடலாம் என்றெல்லாம் குமுறி கொட்டி வருகின்றனர்.
காணாமல்தான் போகும்
மக்கள் நலக் கூட்டணியால்தான் மதிமுகவில் இருந்து பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், தூத்துக்குடி ஜோயல், பொருளாளர் மாசிலாமணி, மதுரை டாக்டர் சரவணன் என பலரும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்தும் மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்போம் என அடம்பிடித்தால் மதிமுகவே காணாமல் போய்விடும் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

கந்தசஷ்டி திருவிழா

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

தங்க ரதத்தில் வீதி உலா

முதலாம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

2-ம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

1-ம் திருநாளில் இருந்து 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.

5-ந் தேதி சூரசம்ஹாரம்

6-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி(சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது.

மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

திருக்கல்யாணம்

7-ம் திருநாளான 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது

ட்ரம்பின் மகள் கொண்டாடும் தீபாவளி

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

அவ்வகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோயிலில் தீபாவளியை கொண்டாட உள்ளார். அவர் சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோயிலுக்கு புதன்கிழமை (அக்.,26) செல்லும்போது, அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை.

கடந்த வாரம் குடியரசு இந்து கவுன்சில் சார்பில் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் வங்கதேசத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டார். இந்திய-அமெரிக்க நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் கலந்துகொண்டதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

T.V.S தி. வே. சுந்தரம் அய்யங்கார்

’எலே… தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள்.

ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது.

®1877 மார்ச் 22-ல் டி.வி. சுந்தரம் (சுருக்கமாக டிவிஎஸ்) பிறந்தார். திருச்சூரின் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகளும், திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். அவரின் மனம் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் மையம் கொண்டு இருந்ததே தவிர, பெற்றோர் விரும்பியபடி படித்து வக்கீலாக வேண்டும் என்று நினைக்கவில்லை.

கல்லூரியில் இருந்து வெளியேறி, பிரம்பு, சவுக்கு போன்றவற்றை வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனை செய்யத் தொடங்கினார். பிறகு திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார்.தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்யலானார்.

25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்ததில் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912-ம் ஆண்டு தஞ்சாவூர்- புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம்!

அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்கில்லாமல் இருந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்’ என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் காசுக்கு ‘ரசீது வழங்குவது’ என்னும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் டிவிஎஸ்.எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, ‘குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தப் பேருந்து புறப்படும்’ என்ற நடைமுறையை நாட்டுக்கே டிவிஎஸ்தான் அறிமுகப்படுத்தினார்.

வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாகச் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும் குழியுமான சாலைகளே காரணம் என்பதை மிக தாமதமாகக் கண்டறிந்த அரசாங்கம், பிற்காலத்தில்தான் தரமான தார்ச் சாலையை அமைத்தது. இதனை அப்போதே உணர்ந்திருந்த டிவிஎஸ், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டு, குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.

சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்றுபோயின. இதனைத் தடுக்க ஒரு காந்த வண்டியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டுவிட, டிவிஎஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.

புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாகனங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பாகங்களையும் சிறியஅளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டிவிஎஸ் விற்பனை செய்துவந்தார். புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பலவிழுதுகள் பரப்பி விரிந்து நிற்கும் இன்றைய டிவிஎஸ் ஆலமரத்தின் விதையாகும்.

1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.

✅முனிவருக்கே மணி சொன்ன டிவிஎஸ் பஸ்!

ஒருமுறை திருநெல்வேலி செல்லும் வழியில் தன் பரிவாரங்களுடன் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகா பெரியவர். உறங்கச் செல்லும் முன் அதிகாலை மூன்றரை மணிக்குத் தன்னை எழுப்பிவிடுமாறு, சீடர் நாகராஜனிடம் சொல்லிச் சென்றார். முதல் மூன்று நாட்கள் கடிகாரத்தைப் பார்த்து சரியான நேரத்துக்கு ‘‘ஹர ஹர சங்கர…’’ என்று கோஷமிட்டு எழுப்பிய சீடர், நான்காம் நாள் மெய்மறந்து உறங்கிவிட்டார். ‘‘ஹர ஹர சங்கர…’’ என்ற குரல் கேட்டு சீடர் திடுக்கிட்டு விழித்தால், எதிரே மகா பெரியவர் நிற்கிறார். ‘‘கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடாப்பா…’’ என்று சொல்ல, சீடருக்கு மிகவும் வெட்கமாகப்போய்விட்டதாம். சோதனையாக மறுநாளும் சீடர் உறங்கிவிட, அன்றும் பெரியவாளே அவரை எழுப்பிவிட்டாராம். ‘அதெப்படி எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுகிறார்’ என்று சீடருக்கு எழுந்த சந்தேகத்தை பெரியவாளே தீர்த்து வைத்தாராம்.

‘‘முதல் நாள் நீ எழுப்பி விட்டபோது, மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன். ‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு வந்து தாண்டிப் போறது. இதை வெச்சு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே தானா எந்திருச்சுட்டேன்…’’ என்று ரகசியத்தை உடைத்தாராம் பெரியவாள். டிவிஎஸ் பேருந்துகளின் நேரம் தவறாமைக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா..!

இப்போது போலவே அப்போதும் கார்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ்தான் முன்னணியில் இருந்தது. 1929-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரிப் பாகங்களுக்கும் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதுதான் டிவிஎஸ் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!

முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?
குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.

புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.

இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டிருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!

????நானும் ஒரு தொழிலாளி!

ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.

தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி – சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.

பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.

குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.

டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!
ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.

‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்!
ஐடியாவுக்குப் பரிசு!

‘‘தொழிலாளர்கள் ஸ்க்ரு டிரைவர், ஸ்பேனர் போன்றவற்றை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கையில் ஒட்டியிருக்கும் கிரீஸும், ஆயிலும் துணியில் பட்டு நீக்க முடியாத கறையாக மாறிவிடுகிறது. அதனால் சீருடையில் பாக்கெட்டே தேவையில்லை’’ என்று ஒரு தொழிலாளர் ஆலோசனை சொன்னாராம். பல மீட்டர் துணியையும், சலவைச் செலவையும் மிச்சமாக்கி, உடைகளின் தூய்மையையும் பாதுகாத்த அந்தத் தொழிலாளரின் யோசனைதான் இன்றளவும் டிவிஎஸ்-ஸிலும் மற்ற பெரும்பாலான கம்பெனிகளிலும் நடைமுறையில் இருக்கிறது.

எதுவும் முடியும்!

‘இது என் வேலை இல்லையே..!’ என்று சொல்லாமல், எந்த வேலையைக் கொடுத்தாலும் டிவிஎஸ் தொழிலாளர்கள் செய்வார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 1960-களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையில், ஒருமாதம் செலவழித்துப் போடப்பட்டிருந்த, மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மறுநாள் எப்படி மாநாட்டை நடத்துவது என்று தெரியாமல் ஏற்பாட்டாளர்கள் விழிக்க, டிவிஎஸ் குமாரர் கிருஷ்ணா உதவ முன்வந்தார். ஒரு மாதமாகப் போடப்பட்ட பந்தலை ஒரே இரவில் சரிசெய்து சாதனை படைத்தார்களாம்
டிவிஎஸ் தொழிலாளர்கள்.

மேலும் சம்பவம் ஒன்று… மதுரை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தின் முன் சக்கரம் உள்பக்கமாக அழுந்திக் கொள்ள, விமான நிலையத்தின் இன்ஜினீயர்கள் காலை 8 மணிமுதல்மதியம் 2 மணி வரை போராடிப்பார்த்தும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையாம். இந்தத் தகவல் டிவிஎஸ் நிறுவனத்துக்கு வர, ஊழியர்கள் புறப்பட்டுப் போனார்களாம். ‘நாள்தோறும் விமானத்தோடு புழங்கும் இன்ஜினீயர்களாலேயே முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்’ என்று விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சிலர் இவர்கள் காதுபடவே கருத்துச் சொல்லிஇருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களை முதலில் விமான நிலையத்தின் உள்ளேயே விட மறுத்து விட்டார்களாம். ‘இது வரை விமானத்தை அருகில் சென்று பார்த்ததே இல்லை. ரிப்பேர் செய்யும் சாக்கிலாவது அருகில் சென்று பார்த்து விட்டு வருகிறோமே’ என்று டிவிஎஸ் ஊழியர்கள் சாதுர்யமாகப் பேசி விமானத்துக்கு அருகே சென்று, தங்களை அழைத்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிறார்கள். அந்த அதிகாரி விமானத்தைக் காட்டி பிரச்னையை இவர்களிடம் சொன்னார். பல மணி நேரம் முயன்றும் விமான நிலைய இன்ஜினீயர்களாலேயே சரி செய்ய முடியாத வேலையை விமானிகளே வியக்கும் வண்ணம் பத்தே நிமிடத்தில் சரிசெய்து விட்டார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள். எப்படி?

டிவிஎஸ்-ஸின் தங்குதடையில்லாத சேவைக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. உலகப் போர் முடிந்த சமயத்தில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்களுக்கு ஒரு சொட்டு பெட்ரோல்கூட கிடைக்கவில்லை. இந்தச் சமயத்திலும் தனது பஸ் சர்வீஸை நிறுத்த விரும்பாத டிவிஎஸ், பேருந்துகளில் கரி இன்ஜினைப் பொருத்தி ஓட்டத் தொடங்கினார். இந்த இன்ஜினைத் தயார்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவையாம். கரியை எரிக்கும்போது வெளிப்படும் வெப்ப ஆவி சிலிண்டர்களில் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் பேருந்து ஓட்டப்பட்டது. இதற்காகப் பேருந்து செல்லும் வழியில் ஆங்காங்கே கரி நிரப்பும் இடங்களும் நிறுவப்பட்டன!

சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார்

. தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி. சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது .

வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக் கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார் . ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில்
கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த போது இவரது வயது 78. இவரைப்
பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு
உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல் அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

தக்காளியோதரை! சமையல் குறிப்பு!

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால்,
அது தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?
நேற்று சமையலறைக்குள்…இன்று ‘என்ன சமையலோ?’ என்று பாடியவாறே நுழைந்தேன்.
என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று. ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று. அதுதான்…தக்காளியோதரை!!
நன்கு பழுத்த தக்காளி….நாட்டுத்தக்காளியும்(புளிப்புக்கு) பெங்களூர் தக்காளியுமாக கால் கிலோ.வேகவைத்து தோலுறித்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்
2-ஸ்பூன் விதை தனியா
1 1/2 ஸ்பூன் வெந்தயம் இரண்டும் வெறும் கடாயில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்
காரத்துக்கேற்ப 8 அல்லது 10 காய்ந்த மிளகாய்…2 அல்லது 3-ஆக ஒடித்து வைத்துக்கொள்ளவும்
தாளிக்க – நல்லெண்ணை, வெந்தயம், கடுகு, உளுத்தப்பருப்பு, பெருங்காயம், ஜீரகம், பொட்டுக்கடலை,வேர்கடலை
கறிவேப்பிலை,உப்பு, வெல்லம்
அடுப்பில் கடாய் வைத்து அரைக்கப் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், அரை ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் ஜீகரம், ஒரு ஸ்பூன் கடுகு, ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ரெண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, வேர்கடலை, காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். நன்கு வறு பட்டதும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மல்லி வெந்தயப் பொடியையும் சேர்த்து கொதிக்கவிடவும்.இடையிடையே நல்லெண்ணை விட்டுக்கொள்ளவும். நன்கு கொதித்து நீர் வற்றி எண்ணை வெளிவிடும்போது சிறிது வெல்லம் சேர்த்து இறக்கிவிடவும். தக்காளியோதரை மிக்ஸ் தயார்!!!!
பொலபொலவென வேகவைத்து ஆறவைத்த சாதத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள மிக்ஸை சேர்த்து கிளறி அதோடு மறுபடியும் கடுகு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை வேர்கடலை, சிறிது பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் கொட்டி கலந்தபொடியாக அரிந்த பச்சைக் கொத்தமல்லி தூவினால் சுவையான மணமான தக்காளியோதரை தயார்!!
நல்லாருந்துதுங்க…..நிஜம்மா…சும்மா ஒரே ரூட்டில் போகிறோமே என்று, ‘நாட்டாமை!! ரூட்ட மாத்து!’ ன்னு சொன்னா மாதிரி நான் மாத்தின ரூட்டில் கிடைத்ததுதான் இந்த தக்காளியோதரை!!