Home Blog Page 5759

“மாரியம்மனுக்கு படையல் போடு!”

“மாரியம்மனுக்கு படையல் போடு!”

(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின்
ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை,
மாரியாம்பாவே அறிவாள்!)

13606606_1279763892041220_5583996890754994650_n
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

“உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,
இவனுக்கு, குண்டோதரன் மாதிரி, எத்தனை
சப்பிட்டாலும்,’இன்னும் பசிக்கிறது’ என்கிறான்.
இவனுக்கு சாதம் போட்டு கட்டுப்படியாகவில்லை.
வீட்டில் எப்போதும் ஒரு கற்சட்டி சாதம் தயாராய்
வைத்துக்கொள்ள வேண்டியிருக்கு. பெரியவா
பரமேசுவரன் மாதிரி. இந்தக் குண்டோதரன் 

பசியை தீர்த்து வைக்கணும்…” என்று, நீண்ட 
பிரார்த்தனையுடன் பெரியவர் பாதங்களில்
விழுந்தாள், ஓர் அம்மாள்.

கிராமம்தான் என்றாலும், மற்ற பக்தர்கள்
தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

 
பெரியவா,அடுத்த பக்தரிடம் குசலப்பிரச்னம்
விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால்
குண்டோதரனின் தாயார் சற்று நகர்ந்து நின்றாளே
தவிர பெரியவாளிடமிருந்து பிரசாதம் வாங்கிக்
கொள்ளாமல் போவதாக இல்லை!

சற்றைக்கெல்லாம் பெரியவா அந்த அம்மையாரை
அழைத்தார்கள்.

“உங்க கிராமத்திலே மாரியம்மன் கோயில் இருக்கோ?”

“அம்பாளுக்கு பால் பல்லயம், தயிர் பல்லயம்,
சர்க்கரைப் பொங்கல் பல்லயம் (பல்லயம்-படையல்)

போட்டு நைவேத்தியம் செய்.நெறைய பழங்கள்,
வெற்றிலைப் பாக்கு படைக்கணும்.

“பல்லயம் போட்ட அந்த அன்னங்களை எடுத்துச்
சாப்பிடும்படி பையனிடம் சொல்லு..”

அம்மாளுக்கு ரொம்ப திருப்தி.பல்லயம் போடுவது
என்றால், சமைத்த உணவுப் பண்டங்களை சுவாமி
எதிரில் இலை போட்டு பறிமாறிவிடுவது என்று
தெரிந்துகொண்டாள்.

மாரியம்மன் கோயிலில் அவ்வாறே செய்தாள்.
அம்பாளுக்கு நைவேத்தியம் ஆனபின்,பையனைக்
கூப்பிட்டு, “எல்லா இலையிலேர்ந்தும் உனக்கு
வேண்டிய அளவு எடுத்துச் சாப்பிடு” என்றாள்.

இலைகளின் அருகில் சென்று நோட்டமிட்ட பையன்
அலறிப் புடைத்துக்கொண்டு,
“எனக்கு சாதம்

 வேண்டாம், வேண்டவே வேண்டாம்” என்று 
கூச்சலிட்டுக் கொண்டு வீட்டுக்கு ஓடிப் போய்விட்டான்.

அம்மா வீட்டுக்கு திரும்பி வந்தாள்.
“ஏண்டா பிரசாதம் சாப்பிடலே?”

“பிரசாதமா, அது?…ரத்தமும் மாமிசமுமான்னா
இருந்தது..” என்றான் நெஞ்சு படபடக்க.

பின்னர்,அளவாக மோர் சாதம் மட்டும் சாப்பிட்டான்.
அன்றைய தினம் முழுவதும் வேறு ஆகாரமே
கேட்கவில்லை.

மறுநாள் காலை பையனுடன் வந்தாள் அம்மையார்.
நடந்ததையெல்லாம் சொன்னாள்.

பெரியவா சொன்னார்கள்.

“அவனோட துணிமணி, புஸ்தகம் – நோட்டு,
பேனா – பென்சில், படுக்கை – தலைகாணி
எல்லாத்தையும் ஊருக்கு வெளியே

 தூக்கிப் போட்டுவிடு

“அவனுக்கு மங்கள்ஸ்நானம் செய்வித்து புது டிரஸ்
போடு, மாரியம்மன் கோயில்லே அர்ச்சனை பண்ணு.
அப்புறமா ஆகாரம் கொடு..”

பிள்ளையாண்டான், சமர்த்தாய் கோயிலுக்குப் 

போய் தரிசனம் செய்துவிட்டு வந்தான்.

எல்லாக் குழந்தைகளைப் போல் சாப்பிடத் 

தொடங்கினான் பசி,பசி என்ற நச்சரிப்பு இல்லை.

அன்று மாலையில், பையனை அழைத்துக்கொண்டு
தரிசனத்துக்கு வந்தாள்,அம்மையார். பெரியவா
விபூதிப் பிரசாதம் கொடுத்தார்கள்.

“கூடிய சீக்கிரம், பையனுக்கு உபநயனம் செய்துடு..”

“சரி”என்று ஏற்றுக்கொண்டார், அம்மையார்.

இதில்,யாருக்கும் விளங்காத புதிர் என்னவென்றால்,

பையனுக்கு பசியை உண்டாக்கியது எது?
துர்தேவதை என்றால், அது என்ன?
பல்லயம் போட்ட பிரசாதங்கள் அவனுக்கு மட்டும்
வித்தியாசமாகத் தெரிவானேன்?
அவன் உபயோகித்த பொருள்களையெல்லாம்
வெளியே போட்டுவிடச் சொல்வானேன்?

ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின்
ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை,
மாரியாம்பாவே அறிவாள்!

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா

கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா

கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் காலை புருஷசூக்த ஜெபம் , ஸகஸ்ரகலசம் ,தாரா ஹோமம்,பூர்ணாகுதி மற்றும் வருஷாபிஷேகம் ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் அனுகிரகத்துடனும் ,பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசியுடன் விமானத்திற்கு அபிஷேகம் ,மூலவர் திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் பின்னர் அன்னதானம் நடைபெற்றது
மாலை சகஸ்ரநாம அர்ச்சனை , விசேஷ தீபாராதனை ,சுவாமி திருவீதி உலா,ஆகியவை நடைபெற்றது விழாவினை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பொதுமக்கள் செய்திருந்தனர்

சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம்

சிறுகதையின் தேவை -கல்கியின் விளக்கம்.
 
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்
 
வைஷ்ணவ பரிபாஷை என்று ஒருவிஷயம் உண்டு. அதில் எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொல்லுவார்கள்.
 
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு, “அடே குப்பா நீ உடனேயே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு போய் ‘திருக்குடந்தை நாராயணஸ்வாமி ஐயங்கார் திருக்கோவில் ஆராதனைக்கு போவதற்காக திருக்குளத்திற்கு சென்றபோது திருப்பாசி வழுக்கி விழுந்தார்’ என்று கூறு” என்றார். குப்பனும் ஆகட்டும் சாமி என முண்டாசைத் தலையில் கட்டிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.
 
தான் கூறிய வைஷ்ணவ பரிபாஷையை குப்பன் புரிந்து கொண்டானோ இல்லையோ என மயங்கிய உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் “என்ன குப்பா நான் சொன்னது விளங்கியதா? என்ன சொல்வாய் அங்கே போய்?” என்று கேட்டார். அதற்கு குப்பன் “தெரியாதா சாமி, கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்” என்று சொல்வேன் என்றான்.
 
இதைத்தான் கல்கி சிலாகித்தார். ஒரே நிகழ்ச்சியை ஐயங்கார் சுவாமிகளும் சொன்னார். குப்பனும் சொன்னான். பளீரென நாலே வார்த்தைகளில் கூறிவிட்டான் பாருங்கள். அதுதான் சிறுகதையின் தேவை என்றார் அவர்

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

(பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி,அவற்றை ‘ஸ்வாமிஜிமஹராஜ்’காலைஎழுந்தவுடன் உபயோகித்துக் கொண்டால் தமக்கு பரம பாக்கியம் என்று கூறினார்)
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிக்கும்,ஸ்ரீபெரும்பூதூருக்கும் இடையேயுள்ள
சந்தவேளுரில் அவர் முகாமிட்டிருந்த சமயம்.
பக்கத்து ஊர் மார்வாரி ஒருவர், கூடை கூடையாகவும்
தட்டு தட்டாகவும் மடத்திற்கு வேண்டிய மளிகைச்
சரக்குகள் அனைத்தும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
 
அங்கணம் போதாமல் பரப்பப்பட்டிருந்த அவற்றில்
எங்கோயிருந்த ஒரு தட்டைப் பெரியவாள் குறிப்பிட்டுக் காட்டி அருகே எடுத்துவரச் சொன்னார்.அதில் நன்கு பாக்கிங் செய்த பொட்டலங்கள் இருந்தன.
 
தெரிந்தே அந்த தட்டைக் கொண்டுவரச் சொன்னவர்
தெரியாதவர் போல, ‘அதில் என்ன இருக்கிறது’ என்று
மார்வாரி பக்தரைக் கேட்டார்.
 
பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பி
 கொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த 
ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை ‘ஸ்வாமிஜி மஹராஜ்’ காலை எழுந்தவுடன் உப்யோகித்துக் கொண்டால் தமக்கு பரம பாக்கியம் என்று கூறினார்.
 
“கிரஹசாரம்! இப்படிச் சொல்கிறானே”
என்று மடத்துச் சிப்பந்திகள் பேசிக் கொண்டனர்.
 
அன்புள்ளத்தையே நோக்கும் ஸ்ரீசரணரின் திரு முகத்தில் புன்னகை பொன் பூசியது.

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை”

என்று குறும்பாகச் சொன்னார்.தம்மையே எகத்தாளம்
செய்து கொள்ளும் குறும்புதான்! ஆசாரத்தின் கடும்
காவலர் என்று நாம் அவரைக் கருதினாலும், அவரோ
தாம் அதில் முழு மார்க் வாங்கவில்லை என்றும்,
நாளுக்கு நாள் முந்தைய மார்க்கை விடக் குறைவாகவே வாங்கிக் கொண்டிருப்பதகாவும்தான் சொல்லிக் கொண்டார்.அதனால்தான் ‘இன்னும்’ என்ற அந்த அர்த்தபுஷ்டியுள்ள பதப்பிரயோகம்.
 
“பெரியவா இதெல்லாம் சேத்துக்க மாட்டா,
எங்களையும்..” என்று சிப்பந்தியொருவர் மார்வாரியிடம் தொடங்க, பெரியவாள், சொடக்குப் போட்டு அவரை அடக்கி விட்டு “போய் பாராக்காரனையெல்லாம் அழைச்சுண்டு வா” என்று உத்தரவிட்டார்.
 
ஸ்ரீமடத்தில் ‘பாரா‘ என்ற காவல் செய்யும்
தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டனர்.

“ஸேட்ஜி நெறய்யக் கொண்டு வந்திருக்கார்.

ஒங்களுக்கேதான் எடுத்துக்கோங்கோ!” என்றார்.
 
அவர்கள் பரம சந்தோஷமாக காப்பி, டீ
பொட்டலங்களை அள்ளிக் கொண்டு போனார்கள்.
 
“ஒன்னால் இவாளுக்கு ரொம்ப உபகாரம்” என்று
ஸ்ரீசரணர் ‘ஸேட்ஜி’யைப் பார்த்துச் சொன்னார்.
அதில் அங்கீகார முத்திரை பூர்ணமாகத் தொனித்தது.
 
குற்றம் செய்து விட்டோம் போலிருக்கிறதே என்று
இடையே துவண்டு போன ஸேட்ஜிக்குப்
பரம சந்தோஷம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல்லுக்கு கூடுதல்விலை

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் நெல்லை நேரடியாக விற்பனை செய்வதால் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
இதுகுறித்து பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் கூறியதாவது
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை இடைத்தரகர்கள் இன்றி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் மூலம் விற்பனை செய்து கொடுப்பதால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைகிறது ,இங்கு தென்காசி ,அம்பாசமுத்திரம் ,கல்லிடைகுறிச்சி உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து வாங்கிசெல்கின்றனர் மேலும் சரியான எடை ,அதிகபட்ச விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது மற்றும் விவசாயிகள் நெல்லை இங்குள்ள கிட்டங்கியில் இருப்பு வைத்து அதிக விலை வரும்போது விற்பனை செய்துகொள்ளும் வசதியும் உள்ளது மேலும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 5 சதவிகித பொருளீட்டுக்கடன்களும் வழங்கி வருகிறோம் என்றார்
இதுகுறித்து விவசாயி கருமடையூர் சண்முகையா கூறியதாவது
ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு சென்று விற்றதால் எனக்கு தரகர் கூலி இல்லை நல்ல ரேட் கிடைத்து வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து வாங்குவதால் எனக்கு அதிக லாபம் கிடைகிறது என்றார்

விற்பனைக்குழு உரிமம் இன்றி செய்தால் மீது கடும் நடவடிக்கை

விற்பனைக்குழு உரிமம் இன்றி செயல்படும் அரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பாவூர்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
தமிழ்நாடு விளைபொருள் விற்பனைச் சட்டம் 1987 பிரிவு (1) ன் படி நெல்,பருத்தி,மிளகாய் வத்தல் ,நிலக்கடலை,உளுந்து ,மல்லி,ஆகிய பொருட்களை வியாபாரம் செய்யும் பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் ,அரிசி ஆலைகள் திருநெல்வேலி விற்பனைக்குழுவின் உரிமம் பெற்று வியாபாரம் செய்யவேண்டும் ,உரிமம் பெறாத ,புதுப்பிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் வணிகவரித்துறையில் உரிமம் பெற்ற மேற்கண்ட வியாபாரம் செய்பவர்கள் வணிக வரி உரிமத்துடன் விற்பனைகுழு உரிமமும் அவசியம் பெற வேண்டும்
மேற்கண்ட உரிமம் பெற்றவர்கள் மாதந்திர கணக்குகளை ஒப்படைக்காதவர்கள் கணக்குகளை வரும் ஜூலை 15 ம் தேதிகுள் சமர்பிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் அரசுக்கு வரி இழப்பை ஏற்ப்படுத்தும் வியாபாரிகள் ,அரிசி ஆலைகள் மீது நீதி மன்ற வழக்கு தொடரப்படுவதோடு அவர்களுடைய வருமான வரிகணக்குகள் மற்றும் வணிக வரி கணக்குகள் அத்துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டு கணக்குகள் முடக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீதித்துறை ஊழல்கள்: வழக்கறிஞர் சங்கம் கேள்வி

அன்பார்ந்த பொதுமக்களே!

நீதித்துறை ஊழலுக்கெதிரா நீதித்துறையின் ஒரு அங்கமான வழக்கறிஞர்களே, நீதிபதிகளின் ஊழலைப் பேசுவது ஒருவகையில் ‘பூசாரியே கடவுள் இல்லை’ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும் “உண்மையைச் சொல்வது வழக்கறிஞர்களின் கடமை” என்ற அடிப்படையில் மக்கள் மன்றத்தில் நீதித்துறை தொடர்பான சில கேள்விகளை முன்வைக்கிறோம்.

கடந்த 1947-லிருந்து 2015-வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் ”வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜீ அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.யார் நடவடிக்கை எடுப்பது?

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல்பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசன், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர்.இன்றுவரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன?

கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ”சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு நடந்துவரும்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா,கர்ணன்,தனபாலன்-வேலுமணி(Junior Judge) ஆகியோர் கிரானைட் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததேன்?

தாதுமணல் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி நியமிக்கப்பட்டு விசாரணை முடிந்தநிலையில் விசாரணைக்குழு அறிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா ரத்து செய்த மர்மம் என்ன?

நீதிபதி அருணா ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்புச் சொன்னார்.இது நீதியின் தற்கொலை.போராடும் வழக்கறிஞர்கள் மீது கோபப்படும் நீதிபதிகளே, உங்கள் பதில் என்ன?

தமிழக மக்களின் வேர்வை சிந்திய வரிப்பணம் 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியா கம்பெனி.எட்டப்பன்போல் ஸ்டே குடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன்.இது தேசத் துரோக குற்றமல்லவா?

உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று?

நீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம்- கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார் என்பதால்தானே?

ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் உயர்-உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகில் ரோத்தகி சொன்னாரே! வழக்கம்போல் மவுனம்தான் பதிலா?

சாதாரண மக்களின் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிநிற்க, பி.ஆர்.பி – வைகுண்டராஜன் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளையர்களின் வழக்குகளை மட்டும் நீதிபதிகள் விசாரித்து முடிப்பதேன்?

மூத்த – செல்வாக்கான வழக்கறிஞர்கள் வந்தால் வழக்குகள் முடிக்கப்படுவதும், முகம் தெரியாத இளம் வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஏன்?

சல்மான்கான் போல சாமானிய மக்களுக்கு உடனடி நீதி கிடைக்குமா?

அமித்சா வழக்கில் தீர்ப்புச் சொல்லி – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவி பெறுவது சரியா?

அனைத்துத் துறைகளும் ஊழியர் தேர்வை சட்டப்படி,சரியாக நடத்த வேண்டும் என உத்தரவிடுகிறது சென்னை உயர்நீதிமன்றம்.ஆனால், சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வை வெளியில் சொன்னால் மக்கள் காறித் துப்ப மாட்டார்களா?

வழக்கறிஞர்களுக்கு அடிக்கடி நேர்மையை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமின் வழங்கியது மனுநீதிப்படியா?

சொத்துத் தகராறுக்கு சொந்தத் தம்பி வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் யோக்கியறா?

சட்டமே தெரியாத நீதிபதிகள் கர்ணன், வைத்தியநாதன், ராஜா போன்றவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளானது எப்படி?

நீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர்.தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன?

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்கத் தகுதியானவர்களா?

சட்டத்தை விட, நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராமசுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன?

நீதித்துறை மாண்பைக் கெடுப்பது – நீதிபதிகளின் ஊழல்- பாலியல் குற்றங்கள்-அரசு ஆதரவு தீர்ப்புகளா? வழக்கறிஞர் போராட்டங்களா?

நீதித்துறை ஊழல் தொடர்பாக என்றாவது FULL COURT-ல் விவாதித்துண்டா?

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தால் நீதிபதிகள் பயப்படுவதேன்?

ஒட்டுமொத்தமாக, சாமானிய மக்களுக்கு நீதி வழங்க மறுத்து தோற்றுப் போனது இந்திய நீதித்துறை.மாற்றுக்கருத்துள்ள நீதிபதிகள் ஒரே மேடையில் விவாதிக்க வரலாம்.

மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் நீதித்துறை,தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளுக்கு வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள் என்பதாலும்,நீதிபதிகளின் மேலதிகாரத்தைக் கேள்வி கேட்கிறார்கள் என்பதாலும், எங்களெ ஒடுக்க புதிய சட்டத்த இயற்றி தலைமை நீதிபதி முனைகிறார்.அரசு-காவல்துறையோடு இணைந்து நிற்கிறது.மக்கள் துணையோடு நீதித்துறையின் அடக்குமுறையை வீழ்த்துவோம்! வழக்கு, சிறைக்கு அஞ்சாமல் புதிய சட்டத்தை எதிர்த்து திரும்ப பெரும்வரை தொடர்ந்து போராடுவோம்!
ஹிட்லர் ஆட்சிக்குப் பின் நடந்த விசாரணையில் அரசுடன் சேர்ந்து குற்றம் இழைத்து, மக்களை ஒடுக்கிய நீதிபதிகளும் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நினைவூட்டுகிறோம்!
பாராளுமன்றமே!
சென்னை உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்திடு!

பொதுமக்களே!

நீதிபதிகளின் ஊழல்களைக் கேள்வி கேளுங்கள்! போராடுங்கள்! நாங்கள் கேட்டதற்காக எங்களை ஒடுக்குவதற்காக புதிய சட்டம் இயற்றி உள்ளார்கள்

———————————–
அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு

“விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்”

“விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்”

(கோபப் புயலாய் இருந்த பெரியவா

அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)

புத்தகம்-சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.

ஆசிரியர்——ஸ்ரீ ரா. கணபதி.

(ஒரு மறுபதிவு)

ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, ” நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!” என்றார் ஸ்ரீசரணர்.

‘அடியார்’ என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, ” நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான் பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது.” என்றார்.

அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது?

‘புரு, புரு, புரு’ என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்!

“ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்–ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, ‘ஆபீஸ்’னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?” என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் ‘வேதத்தில் சொல்லியிருக்கா/” என்றோ, ‘எந்த வேதத்தில் சொல்லியிருக்கு’ என்றோ முத்தாய்ப்பு வைத்தார்!

முடிவாக, ” வேதத்துல எங்கேயும் ‘டைரக்’டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு ‘பப்ளிக்’ பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே–ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்–னு ஆகறது. போய்ட்டு வா!” என்றாரே பார்க்கலாம்!

விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்!

கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார்.

வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு ‘தியரி’ இருந்து அதை அப்புறம் காலம் தோறும் ‘அடாப்ட்’ பண்ணிப் புதுப் புது ‘டிஸ்கவரி’ கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது—-என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்:

“இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்–னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை–ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, ‘ரிக்ரியேஷன்’ னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது—எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா–ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு ‘பாலிஸி’யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் ‘ஸ்பிரிட்’ டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]

. சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு—ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி–ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, ‘நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்’னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, ‘இப்படி இருக்கே’ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய ‘டயம்’ ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.

“ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை–ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா?

அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.

அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.

நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா!

உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி!

அருட்செல்வம் சிந்தனைச் செல்வமாகவும், சொற்செல்வமாகவும் அலர்ந்ததற்கு ஓர் அழகான உதாரணம்!

கேரளாவிற்கு நூதன முறையில் தடை செய்ப்பட்ட புகையிலை கடத்த முயற்சி

பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் போதை பொருள் கடத்த முயற்சி

பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே காய்கறி லோடு ஏற்றிவந்த ஆட்டோவை சோதனையிட்டனர் அப்போது காய்கறி மூட்டையில் மறைத்து வைத்து கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தி செல்வது தெரியவந்தது .
திருநெல்வேலி – தென்காசி சாலையில் கே.டி.சி.நகர் அருகேயுள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது ஆலங்குளத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கனி ஏற்றி வந்த ஆட்டோவை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் ஆலங்குளத்தைச் சேர்ந்த ரா.சக்திகணேஷ்(வயது 40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தார் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர்.
அதில் காய் மூட்டைகளின் அடியில் பண்டல்களில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ 1 லட்சம் ஆகும் ,இதையடுத்து ஆட்டோவை பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கீழப்பாவூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜநயினார், செங்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரராஜ், ஆலங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோரிடம் பிடிப்பட்ட ஆட்டோவை பாவூர்சத்திரம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

சபரிமலை குறித்த சர்ச்சைகள்: அய்யப்ப சேவா சமாஜம் திறந்த மடல்

திறந்த மடல்
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.! சுவாமி சரணம் .!!
கடந்த சில மாதங்களாக, சபரிமலையில் இளம் பெண்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்ப்ட்ட வழக்கும் அதனை ஒட்டிய சர்ச்சைகளும் பத்திரிகை மற்றும் டீ வீ க்களில் வந்துகொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். பெண்களுக்கு சபரிமலை செல்ல தடை என்ற வாதமே பொய்யானது. குறிப்பிட்ட வயதுடைய, இன்னும் சொல்லப்போனால் கருத்தரிக்கும் வயதுடைய இளம் பெண்களுக்கு தான் அங்கு பிரவேசிக்க கட்டுப்பாடு உள்ளது. 10 வயதிற்கு முன்னமும் 50 வயதிற்கு பின்னமும் உள்ள பெண்கள் தாராளமாக சபரிமலைக்கு வரலாம், வந்து கொண்டும் இருக்கிறார்கள். அளவுக்கதிகமான கூட்டம் வருவதால் தான் இக்குறிப்பிட்ட பெண்களுக்கு கட்டுப்பாடு என இல்லை. புவியியல் ரீதியாகவும், பல்வேறு பூஜை புனஸ்காரங்கள் மூலம் இறை அலை ரீதியாகவும் சபரிமலை மிகவும் சக்தியுடையது. அப்பேர்ப்பட்ட அவ்விடத்தில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் பிரவேசிக்கும்போது அவர்கள் உடலில் ஏறப்பெடும் மாற்றங்கள், அவர்களுக்கு நன்மையை விட தீமையை அதிகம் ஏற்படுத்தும். தந்திர ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் இதை நன்கறிந்த ஞானிகளான நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆச்சாரமாக அது மாறிவிட்டது. ஹிந்து கோவில்களின் தாத்பரியத்தையும், சிறப்பையும், அக்கோவில்களில் தரிசனம் செய்தால் மனித உடலில் ஏற்படுகின்ற அபாரமான மாற்றங்களையும் அறிவியல் ரீதியாகவோ, நம்பிக்கை ரீதியாகவோ தெரிந்து கொள்ளாத விஷமிகளான மனிதர்களின் விஷமத்தனத்தின் வெளிப்பாடு தான் இவ்வழக்கு என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
இக்கடிதம் மூலம் எனது முயற்சி இதை பற்றி விளக்கி கூறுவதல்ல. மாறாக, விழிப்புணர்வுள்ள அய்யப்ப பக்தர்களாகிய நமது செயல் திட்டம் உங்களிடம் தெரிவிப்பது தான்.
கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ஏற்ப்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் ஆர். எஸ். எஸ், விஸ்வஹிந்து பரிஷத், ஹிந்து ஐக்கியவேதி, ஆலய பாதுகாப்பு சமிதி,மாத்ரு சமிதி, ப்ராமண சமூகம், ஆலங்காடு பேட்டா, ஹரிஜன சமூகம்., ஜோதிடர் அமைப்பு, பாரதீய மஸ்தூர் சஙகம் போன்ற 40 க்கும் மேற்பட்ட ஹிந்து கலாச்சார, ஆன்மீக, சமுதாய அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் பங்கு கொண்டார்கள். ” சபரிமலை ஆச்சார ரக்ஷா வேதி” ( சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு ) என இந்த ஒருங்கிணைந்த சக்திக்கு பெயர் வைத்தோம். அங்கு வந்த யோசனைகளின் அடிப்படையில், ஜூன் 23 -ம் தேதி ஆல்வாய் என்ற ஊரில் அமைந்துள்ள தந்திரவித்யா பீடத்தில் வைத்து, தாந்த்ரீக, வைதீக விஷயங்களில் அபரிமிதமான அறிவுள்ள ஆச்சார்யர்களின் ஒரு நாள் கூட்டம் நடத்தினோம்.

கேரள மாநில ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர், திரு. பி.ஈ.பி.மேனன் துவக்கஉரை நிகழ்த்தினார். பாண்டித்யம் படைத்த ஆச்சார்ய பெருமக்களின் உணர்வு பூர்வமானதும், அறிவு ரீதியானதுமான கருத்துக்கள் பரிமாறப்பட்டது. சீமாஜாகரண் அகில பாரத அமைப்பாளர் திரு.கோபாலகிருஷ்ணன் நிறைவுரை நிகழ்த்தினார்.

” ஹிந்து ஆலய ஆச்சார அனுஷ்டான விஷயங்களில் கருத்து கூறவோ, மாற்றம் கொண்டு வரவோ, எந்த ஒரு நீதிமன்றத்திற்க்கோ,மதசார்ப்பற்ற அரசிற்க்கோ உரிமையும் அதிகாரமும் இல்லை. பக்தர்களும், பக்த்ர்களை கொண்ட அமைப்புகளும் தான் அதை பற்றி கருத்து கூறவேண்டும். அப்படி வரக்கூடிய கருத்துக்களை பரிசீலனை செய்து உரிய பதில் அளிக்கவேண்டிய பொறுப்பு, தந்திரிகளுக்கும், ஆச்சார்ய சபைகளுக்கும் உண்டு. இறுதியாக இறை விருப்பம் அறிய கைதேர்ந்த ஜோதிடர்களின் குழுக்களை அழைத்து தேவ பிரஸ்ஸனம் பார்க்க வேண்டும். இது தான் கேரளாவில் காலம் காலமாக பின்பற்றி வந்த சம்பிரதாயம். மற்ற மாநிலங்களிலுள்ள பூஜை முறைகளில் இருந்து மாறுபட்டது கேரளா கோவில்களில் பின்பற்றும் பூஜை முறை. கேரளாவைசேர்ந்த கோவில்களில் உள்ள பூஜைமுறைகளில் இருந்து கூட மாறுபட்டு சிறப்புடையது சபரிமலை பூஜை முறை. ஆகவே, பல நூற்றாண்டுகளாக பின் பற்றி பாதுகாத்து வருகின்ற அறிவியல் ரீதியில் உள்ள ஆச்சார அனுஷ்டான முறைகளை, வெறும் எழுபது வருஷம் வயதுடைய ஜனநாயகத்தின் பெயரில், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து மாற்ற நினைப்பது தவறு. இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. பக்தர்கள் ஒருங்கிணைந்து இதை எதிர்க்க வேண்டும்.” இது, ஆச்சார்ய சபையின் உறுதியான முடிவு.

அதன்பிறகு, மீண்டும் சபரிமலை ஆச்சார ரக்ஷ வேதி, அடுத்த நாள்-24.06.2016- அன்று கூடியது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா,ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களிலும் ஆச்சார ரக்ஷ வேதி யின் மாநில , மாவட்ட கூட்டம் நடத்தவேண்டும். சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் முயற்சியில், மாநில ஆர். எஸ். எஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ஹிந்துமுன்னணி மாநில பொறுப்பாளர்களிடம் பேசி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கூட்டம் நடத்தி, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர்களின் ஒரு குழுவை நியமிக்க வேண்டும். 5 பெயர் உள்ள அக்குழுவில், ஒருவர் ஒருங்கிணைப்பாளர் ஆகவும், மற்ற 4 பேர்கள்( வெவ்வேறு இயக்கங்களிலிருந்து) துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகவும் இருப்பார்கள். எல்லா அமைப்புகளையும் கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். கூட்டம் நடைபெற்றது பற்றியும், அங்கு எடுக்கப்ப்ட்ட முடிவுகள் பற்றியும் எல்லா பத்திரிகை, டீ வீ க்களுக்கும் தெரியப்பெடுத்தி, செய்தி வர வைக்க வேண்டும்.

செயல் திட்டங்கள் :-
1. , உரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றி, ஹிந்து பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் ஒரு கோடி கையெழுத்து பெற்று, அதை ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைத்தல். (2 தமிழகத்தின் இலக்கு 40 லட்சம் கையெழுத்துக்கள்).
ஜூலை முதல் வாரத்தில் துவங்கி, 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கையெழுத்து துவங்கும் காட்சி, செய்தி ஆகியவை பத்திரிகை டீ வீ க்களில் கொடுக்க வேண்டும்.

ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து 5-ம் தேதிக்குள் மாவட்ட அளவில் பெறப்பட்ட கையெழுத்துக்கள், ஒன்று சேர்த்தி, பண்டிலாக்கி மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். ஒரு பேப்பரில் 30 கையெழுத்து மட்டும் வாங்கவேண்டும். அதற்குரிய படிவம் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் பொறுப்பாளர்கள் கொடுப்பார்கள்.( தமிழ்நாடு இலக்கு 40 லட்சம் எனில், சுமார் ஒரு மாவட்டத்தின் இலக்கு 1.5 லட்சம்.அதாவது ஒரு பேப்பரில் 30 பேர்கள் என கையெழுத்திட்ட 5000 பேப்பர் நமது மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்க வேண்டும்.)

2. நமது மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்பை தொடர்ப்பு கொண்டு, அவர்கள் அவர்களுடைய கூட்டத்தில், சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதை விரும்பவில்லை, அது எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பிறகு, அத்தீர்மானத்தின் நகல் அவர்கள் லெட்டெர்பேடில், பங்கெடுத்த அனைவரும் கையெழுத்து போட்டு 4 பிரதி எடுக்க வேண்டும். ஒரிஜினல் பிரதியை ” THE REGISTRAR,
, SUPREME COURT OF INDIA , TILAK MAARG , NEWDELHI -110201 என்ற முகவரிக்கு ரெஜிஸ்டர் தபால் ஆக அனுப்பி வைக்க வேண்டும். ஒரு பிரதியை அந்த அமைப்பின் கோப்பில் வைத்து, மீதி இரண்டு பிரதிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று மாவட்டத்தில் வைத்து மற்றதை மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

கையெழுத்து படிவமும், பெண்கள் அமைப்பு தீர்மானமும் அனுப்ப வேண்டிய
முகவரி:
வட தமிழ்நாடு
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்,
கேசவர் குடில்,
5. ரெங்கசாயீ தெரு,
பெரம்பூர்,
சென்னை – 600 011
மொபைல்: 7639800140, 9443357170.
தென் தமிழ்நாடு
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்,
91/5 கணபதி வில்லாஸ்,
குளத்துப்பாளையம் ரோடு, பி.கே.புதூர்,
குனியமுத்தூர்,
கோயமுத்தூர் -641 008மொபைல்: 9543180070, 9444240927

இந்த இரண்டு பணியும் உடனே செய்து முடிக்க வேண்டியது.

இதை தவிர, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்க, சபரிமலை பற்றிய ஒரு புத்தகத்தை தயார் செய்கிறோம்.
சபரிமலை பற்றி ஒரு கண்காட்சி டெல்லியில் நடத்த உள்ளோம்.
தேவை ஏற்படின், எல்லா மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளை பங்குபெற வைத்து ஒரு சத்யாகிரஹம் கூட டெல்லியில் நடத்த தீர்மானித்துள்ளோம்.

மேலும் விபரங்கள் அறியவும் கலந்து பேசவும் என்னை தொடர்பு கொள்ளலாம். இரண்டு தமிழ்நாடு பொறுப்பாளர்களின் அலைபேசி எண் கீழே கொடுத்துள்ளோம்.
உத்தர் தமிழ்நாடு :
டீ.வீ.லக்ஷ்மிநாராயணன் ஜீ9543180070
துரைசங்கர் ஜி. 94442 40927.
ஈரோடு பாலுஜி 94879 31450
சிவராமன்,கடலூர்.94435 37588
தக்ஷிண தமிழ்நாடு :
சி. என். பரமசிவன்: 94433 57170
துரைசாமி,ராமநாதபுரம்.9442797564
பி. ஹரி 76398 00140
கணேசன் தேனி : 90250 09676

சுவாமியே சரணமய்யப்பா!!!!
பணிவன்புடன்,
ஈரோடு. என். ராஜன்.0 8086200107, 09443020118,0496 26 86 333
தேசீய பொதுசெயலாளர்,
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்.