மக்களை வாட்டி வதைக்க மோடி அரசு போட்ட மக்கள் விரோத மத்திய பட்ஜெட் : ஜி.ராமகிருஷ்ணன்
நடிகர் குமரிமுத்து மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் குமரிமுத்து நேற்று இரவு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
திரைப்பிரபலங்கள் பலர் இவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சங்கம் குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தன்னுடைய நடிப்பாலும், மறக்கமுடியா தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்தார். அதற்காக மனம் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் அவருடைய உற்றார்க்கும், சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம்…
இந் த நேரத்தில் அவர் சங்கத்திற்கு ஆற்றிய அறும்பணிகளையும் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறுப்பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை சமீபகாலம் வரையிலும் வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
நிறைவுசெய்யமுடியா ஒருவெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகின்ற மலர்வளையமாகும். இப்படிக்கு அவர் பிரிவால் வருந்தியும், நினைவால் நெகிழ்ந்து வாடும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் அங்கத்தினர்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.
உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பு: ராமதாஸ்
சென்னை:
உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பதாகவும், வருமான வரி ஏமாற்றம் அளிப்பதாகவும் பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத்தில் 2016&17 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று தாக்கல் செய்துள்ளார். வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்பது போன்ற சில அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கும் போதிலும், ஒப்பீட்டளவில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மற்றும் ஊரக வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
நாட்டில் சமத்துவத்தையும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண்துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு, 28.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதியை ஏற்படுத்துதல், மொத்தம் 89 பாசனத் திட்டங்களை செயல்படுத்துதல், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 5 லட்சம் பாசனக் குளங்கள், 10 லட்சம் இயற்கை உரக் குழிகள் ஏற்படுத்துதல், பாசனத்திட்டங்களுக்கு நிதிஉதவி செய்வதற்காக நபார்டு வங்கியில் ரூ.20,000 கோடியில் தனி நிதியம் ஏற்படுத்துதல், ஆன்லைன் கொள்முதல் வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை வேளாண்துறை வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும். ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த இவை மட்டும் போதாது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வேளாண் திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படாத நிலையில், புதிய திட்டங்கள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சமூகத் துறைகளுக்கு கடந்த ஆண்டை விட சற்று அதிகமாக ரூ.1,51,581 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இத்துறைகளில் மக்களின் தேவை அதிகமாக உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்ற இந்த நிதி போதுமானதல்ல. ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மருத்துவக் காப்பீடு, முதியோர் இருந்தால் ரூ.30,000 கூடுதல் ஒதுக்கீடு, 3000 குறைந்த விலை மருந்துக்கடைகள் திறப்பு, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதியை ஏற்படுத்துதல், டயாலிசிஸ் கட்டணத்தை குறைக்கும் வகையில் சில வரிச்சலுகைகள் ஆகிய அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் பாராட்டத்தக்கது. இதன் மூலம் ஏழைப் பெண்களின் உடல்நலமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறையில் 20 உயர்கல்வி நிறுவனங்களை உயர்கல்வி நிறுவனங்களாக உயர்த்த நடவடிக்கை, உயர்கல்விக்கு நிதி உதவி வழங்க ரூ.1000 கோடியில் நிதியம் ஆகியவை போதுமானவை அல்ல என்ற போதிலும் நல்ல தொடக்கம் ஆகும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை வளர்க்கும் நோக்குடன் 1500 திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் அமைக்கப்படவிருப்பதும் நல்ல முன்முயற்சி ஆகும். உட்கட்டமைப்பு மேம்பாடு, முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கான வரி மற்றும் வட்டிச் சலுகை ஆகியவற்றுக்கான திட்டங்களும் வரவேற்கத்தக்கவை. புகையிலைப் பொருட்களுக்கான உற்பத்தி வரி 10 விழுக்காட்டிலிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனினும், புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்க இந்நடவடிக்கை முழு அளவில் பயனளிக்காது. இந்த வரி இன்னும் பல மடங்கு உயர்த்தப்பட வேண்டும். மறைக்கப்பட்ட வருவாயை கணக்கில் காட்டி 45% வரி செலுத்தும் திட்டமும் வரவேற்கப்பட வேண்டியதாகும். இதன்மூலம் நாட்டில் கருப்புப் பணம் குறையும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பல வழிகளில் பயனளிக்கும்.
வரி சார்ந்த அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு சில சலுகைகளை அறிவித்து விட்டு, உச்சவரம்பை அதிகரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பணவீக்கமும், அதன்காரணமாக விலைவாசியும் அதிகரித்துவிட்ட நிலையில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது அரசு ஊழியர்கள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரை பாதிக்கும். ரூ.20,670 கோடி அளவுக்கு மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டிருப்பதும் விலைவாசி உயர வழி வகுக்கும். அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவது குறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசு மருத்துவம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் மத்திய பொது நிதி நிலை அறிக்கையில் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது.
மத்திய நிதி நிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகள் சார்ந்த அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கும் போதிலும் இவை வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருந்து விடக் கூடாது. இந்த திட்டங்களை துல்லியமான கால இலக்கு நிர்ணயித்து அரசு நிறைவேற்ற வேண்டும்.
திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி: சரத்குமார்
மதுரை:`
திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமார் பேட்டி அளித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவரிடம் 12 சதவீத வாக்கு வங்கி சமத்துவ மக்கள் கட்சிக்கு உள்ளது என்று நீங்கள் கூறுவது பொய் என எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சரத்குமார் அவருக்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும் திராவிட கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகக்தான் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். தே.மு.தி.க.வுடன் பாரதீய ஜனதா பேசுவதை வரவேற்கிறேன். பா.ம.க. இந்த கூட்டணிக்கு வந்தாலும் சந்தோஷம் தான் என்றும் அவர் கூறினார்.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததைவிட அக்கட்சியில் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டபோது பதில் அளிக்காமல் கோபத்துடன் சரத்குமார் காரில் ஏறி கோவில்பட்டி சென்றார்.
நாட்டை ஆளும் தகுதி யாருக்கு?: ஜெயலலிதா கூறிய குட்டி கதை
நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசு நலத்திட்ட தொடக்க விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறிய குட்டிக் கதை:–
ஒரு ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆள, தகுதியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதற்கென்று சில போட்டிகளை வைத்தார். அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர்.
அந்த இருவரிடமும் ஒரே அளவான தங்க கட்டிகளை கொடுத்து, “இதை நீங்கள் செம்மையாக பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை 3 மாதங்களுக்கு பிறகு அரசவையில் வந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்” என்று கூறினார் அரசர்.
மூன்று மாதங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர். முதல் நபரை பார்த்து தங்கத்தை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்று அரசன் வினவினார்.
தனது மகனையும், மகளையும் அவையின் முன் நிறுத்திய அந்த நபர் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த நகைகளை மகள் அணிந்து கொண்டிருப்பதையும், அழகிய தங்கப்பேழை ஒன்றை மகன் வைத்திருந்ததையும் அரசனுக்கு காட்டினான்.
அவற்றை கண்டு வியந்த அவையினர் அரசர் கொடுத்த தங்கக்கட்டிகளை, இவர் நன்றாக பயன்படுத்தி உள்ளார். எனவே, நாட்டினை நன்றாக ஆள்வார் எனக்கூறினர்.
“உங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டும் தானா?” என அரசன் வினவினார். அதற்கு அந்த நபர் “இல்லை. இல்லை. எனது மற்ற பிள்ளைகளை எல்லாம் நான் தலை முழுகி விட்டேன்” என்று கூறினான்.
சரி. இரண்டாவது நபர் என்ன செய்துள்ளார் என பார்க்கலாம் என்று அரசர் அவனை அழைத்தார். அந்த இரண்டாம் நபர் தன்னுடன் 100 பேரை, அழைத்து வந்திருந்தார்.
“தங்கக்கட்டியை என்ன செய்தீர்கள்? இவர்கள் எல்லாம் யார்?” என்று அரசர் வினவினார். அதற்கு அந்த இரண்டாம் நபர், “இவர்கள் எல்லாம் இந்த ஊரில் ஏழைகளாக இருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த தங்கக்கட்டிகளை இவர்களுக்கு பிரித்துக்கொடுத்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து வியாபாரம் செய்து இவர்கள் இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளனர்” என்று கூறினார்.
தன் நலன், தன் குடும்ப நலன் என்று பார்க்காமல் ஏழை எளியோருக்கு உதவிய இரண்டாம் நபரே நாட்டை ஆளத்தகுதியான நபர் என, அரசரும் அந்த அவையில் இருந்தவர்களும் முடிவு செய்தனர்.
இந்த கதையில் வரும் இரண்டாம் நபரைப்போல தான் எனது தலைமையிலான அரசு, மக்கள் நலத்திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. என்று ஜெயலலிதா கூறினார்.
தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 6.5 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், நேற்று வரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் இதுவரை, 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 இறந்த வாக்காளர்களின் பெயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 58 ஆயிரம் இரட்டைப் பதிவுகள், 7 ஆயிரத்து 500 ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்ட பெயர்கள் உள்ளன. 97 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து, பெயர்களை நீக்க படிவம் 7 சமர்ப்பித்துள்ளனர். இந்த வகையில், 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேர் பெயர்கள் நீக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. படிவம் 7 சமர்ப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், எண்ணிக்கை சற்றே உயரலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்றுடன் முடிகிறது. இறுதியாக அடுத்த சில தினங்களில் நீக்கப்படுவோர் பட்டியலில் உள்ள பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு, துணை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் எனில் ரூ. 3 ஆயிரம் வரிச் சலுகை
புது தில்லி:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ. 3 ஆயிரம் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த வருமான வரி சலுகையால் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர்.
* ரூ. ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி 15 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. எனினும் மாத சம்பளம் பெருபவர்களுக்கான வருமான வரியில் மாற்றம் இல்லை
* வீட்டு வாடகை அலவன்ஸ் பெறாத வாடகைதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ24,000 வரை கிடைத்து வந்த வரிச்சலுகை ரூ60,000 வரை உயர்த்தப்பட்டது.
இவை தவிர முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ50,000 கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வீட்டின் மதிப்பு ரூ50 லட்சத்துக்கும் அதிகமாகாமல் இருந்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
* பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
* வருமான வரி சலுகையால் ரூ5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர்.
* வணிக நிறுவனங்களுக்கான வரி 29% ஆக குறைக்கப்படும்.
* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை -வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ. 24,000 ஆக இருந்தது.
* -ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை.
* -நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.9% ஆக இருக்கும்.
* சில மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் -தொழில் தொடங்குவதை எளிமையாக்க கம்பெனிகள் சட்டம் திருத்தப்படும்.
* உணவு பொருட்களை சந்தைப்படுத்த 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி பீடி தவிர்த்த பிற புகையிலை பொருட்கள் மீது 10 முதல் 15% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை உயரும்.
* கார்கள் விலை உயருகிறது –
– டீசல் கார்களுக்கு 2.5%; சொகுசு கார்களுக்கு 4% வரி உயர்வு
-சிறிய கார்கள் மீது 1% அடிப்படை கட்டமைப்பு செஸ் வரி – ரூ. 10 லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட கார்கள் மீது 1% கூடுதல் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
-டீசல் கார்கள் மீது கூடுதலாக 2.5% அடிப்படை கட்டமைப்பு செஸ் வரி –
*நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ200-ல் இருந்து ரூ400 ஆக உயர்வு
* சிகரெட் விலை உயரும்
பிரதமரை விட சிறந்த தேசபக்தன் நான்: சொல்பவர் அரவிந்த் கேஜ்ரிவால்
புதுதில்லி:
தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டுள்ள தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமரை விட தான் சிறந்த தேசபக்தன் என தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கேஜ்ரிவால்…
“என் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். இதன் காரணமாகவே அவர்களுக்கு( பாரதீய ஜனதா) நான் தேசத்துக்கு எதிரானவனாக பார்க்கப்படுகிறேன். எனது குரலை நசுக்க முடியாது. ஏழைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
மோடிஜியை விட நான் மிகச்சிறந்த தேசபக்தன். நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என கோஷமிட்டவர்களை ஏன் இன்னும் அவர் கைது செய்யவில்லை என நான் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் இது போன்ற கோஷங்களை எழுப்பியவர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள். எனவே இவர்களை கைது செய்தால் மெகபூபா முப்தி கோபம் அடைவார். நமது வீரர்கள் ஒவ்வொரு நாளும் எல்லையில் வீர மரணம் அடைந்து வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்காக தேசவிரோத சக்திகளை மோடி அரசு பாதுகாக்கிறது” என தெரிவித்துள்ளார்.
मोदी जी से बड़ा देशभक्त हूँ।मैं पूछता हूँ-देश की बर्बादी के नारे लगाने वालों को अभी तक मोदी जी ने गिरफ़्तार क्यों नहीं किया?(3/5)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 29, 2016
அப்துல் கலாம் பெயரில் கட்சி துவங்கியதில் குடும்பத்தினர் அதிருப்தி
ராமேஸ்வரம்:
அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சியை அவரது உதவியாளராக இருந்த பொன்ராஜ் துவங்கினார். இதற்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில், இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவிடம் உள்ளது. அதில் வைத்து, அவரது ஆலோசகர் பொன்ராஜ் அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். விஷன் இந்தியா பார்ட்டி’ என்ற புதிய கட்சியின் பெயர்ப் பலகையையும் பொன்ராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து பச்சை, வெள்ளை, நீலம் ஆகிய நிறம் கொண்ட அப்துல்கலாம் உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து கொடி ஏற்றிவைத்த பொன்ராஜ், ஊழலற்ற ஆட்சி அமையவும், அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற இக்கட்சி பாடுபடும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டதற்கு அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
கலாமின் சகோதர் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் கூறுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கலாம். அவரது பெயரில் கட்சி தொடங்கி இருப்பது சங்கடமாக உள்ளது என்றார்.
அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம் கூறியதாவது:–
பொன்ராஜ் கட்சி ஆரம்பிப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் அப்துல்கலாம் குடும்பம் எதுவும் தலையிடவில்லை. ஆனால் அப்துல்கலாமின் பெயர், உருவபடத்தை வைத்து புதிய அரசியல் கட்சி தொடங்கி இருப்பதில் எனது தாத்தாவும், அப்துல்கலாமின் மூத்த சகோதரருமான முகமது முத்துமீரா லெப்பை மரைக்காயருக்கு முழுமையாக உடன்பாடில்லை. அப்துல் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் எப்போதும் அரசியலை விரும்பியது இல்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதில் உடன்பாடில்லை. அப்துல் கலாம் சகோதரரை சந்திக்க பொன்ராஜ் வந்த போது அவர் ஓய்வு எடுப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என தெரிவித்துவிட்டோம். அப்துல் கலாம் பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி இருப்பதற்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் கிடையாது – என்று அவர் கூறினார்.
“அது சுப.வீரபாண்டியனின் சொந்தக் கருத்து”: மு.க. ஸ்டாலின்!
சென்னை:
விஜயகாந்த்க்கு திமுக., காத்திருக்கக் கூடாது என்று சொன்னது சுப.வீ.யின் சொந்தக் கருத்து என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பிறந்தநாளைக் கொண்டாடவில்லையா? என்னும் கேள்விக்கு, ’சர்வாதிகாரமாகவும், ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளியும் இருக்கும் நீதியற்ற ஆட்சியை அப்புறப்படுத்துவதே தனது பிறந்தநாளுக்கான உறுதிமொழி. அதற்காக, கட்சித் தொண்டர்கள் பாடுபடவேண்டும்’ என்று கூறினார்.
திமுக, தனித்தே 200 இடங்களிலும் போட்டியிட வேண்டும்; விஜயகாந்துக்குக் காத்திருக்கக் கூடாது என்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளாரே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ’அது அவருடைய சொந்தக் கருத்து. அவர் திமுக-வின் உறுப்பினரல்லர். தனியாக ஒரு இயக்கத்தை நடத்திவருபவர். அது பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

