Home Blog Page 5818

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் மறைவுக்கு மோடி, சோனியா ஆகியோர் அஞ்சலி

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகருமான பல்ராம் ஜாக்கர், தனது 93-ம் வயதில் புதுடெல்லியில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பல்ராம் ஜாக்கரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சட்டசபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும், மாநில கவர்னராகவும் அவர் பதவிவகித்த காலத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து பொதுவாழ்வில் பணியாற்றிய பல்ராம் ஜாக்கரின் அர்ப்பணிப்பை இந்த நாடும், நாட்டு மக்களும் என்றென்றும் மறக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பல்ராம் ஜாக்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் பாராளுமன்ற செயலகத்தை நவீனப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார்’ என தெரிவித்துள்ளார்.

சரிதா நாயருடன் தொடர்பு வைத்திருந்த பிரமுகர்கள் யார்? யார்? நாளை தெரியும்

கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது.

இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மோசடிக்கு சூத்திர தாரியாக கூறப்படும் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி பல்வேறு திடுக்கிடும் தகவல் களை தெரிவித்து வருகிறார்.

பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தனர். அதற்காக அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். அவர்களின் பேச்சை நம்பி பலரிடம் நான், ஏமாந்தேன். அவர்களை பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். யார்– யார்? என்னை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களை பற்றிய விவரங்களை பலரும் கூடி இருக்கும் இந்த கோர்ட்டில் கூறுவதற்கு தயக்கமாக உள்ளது. ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டால் அந்த தகவல்களை கூற தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொடர்பு வைத்திருந்த பிரமுகர்கள் குறித்த தகவல்கலை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சரிதாநாயருடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். பட்டியலில் யார்–யார்? இடம் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் பரபரப்பை எகிற வைத்துள்ளது.

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் டயர் தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அலறல்

மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பஸ் டயர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் கூச்சல் போட்டனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் பயணிகள் இறங்கி ஓடினர். டிரைவர் சென்று பார்த்தபோது அதிக உராய்வினால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக டயர் தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் பூத்தொடியை எறிந்த பெண் கைது

இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் பூத்தொடியை எறிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

பிப்ரவரி 5-ல் உலக T-20 போட்டிக்கான இந்திய அணி தேர்வு

வங்கதேசத்தில் நடக்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஐசிசி உலக T-20 சாம்பியன்ஷிப் போட்டிக்ளுக்கான் இந்திய அணி வரும் வெள்ளிகிழமை டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தேர்வு குழு தலைவர் சந்தீப் படேல் தலைமையில் இந்த தேர்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை: க. அன்பழகன்

திமுகவில் கருணாநிதியை விட மூத்த தலைவர் க.அன்பழகன். திமுக பொதுக்கூட்டங்களில் திராவிட இயக்க வரலாற்றை பற்றி கூறுவதில் பெருமை பெற்றவர்.

அண்மையில் நடைபெற்ற, திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

நான்தான் சீதை

 

ஒரு பிரபலப் பள்ளியின் வளாகம். யூகேஜியில் இடம் பெற வேண்டி, நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நின்றிருந்தனர். அதில் ஒரு குழந்தை. எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமலேயே எல்லோரையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது. அங்கு வந்த அந்தப் பள்ளியின் முதல்வர் அந்தக் குழந்தையுடன் பேச ஆரம்பித்தார் ஆங்கிலத்தில்தான்!

உன் பெயர் என்ன?’

சரித்ரா....!’

‘ஓ! நல்ல பெயர். சரி இப்போது உனக்கு என்ன தெரியுமோ அதைச்சொல்லு…..!’

‘எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். உங்களுக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லுங்கள்!”

ஐயையோ! இவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கிடைக்காது போலிருக்கிறதே! குழந்தையின் அம்மாவிடத்தில் ஒரு பதட்டம் தென்பட்டது. ‘அவள் வந்து……..!’ என்று ஆரம்பித்த அவரை முதல்வர் நிறுத்தினார். குழந்தையைப் பார்த்து ‘ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லு!’

குழந்தை விடவில்லை: ‘பாட்டா? கதையா?’

‘சரி. கதையே சொல்லு….!’

‘உங்களுக்கு நான் படித்த கதை வேணுமா? இல்லை நான் எழுதின கதை வேணுமா?’

முதல்வருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆயினும் சமாளித்துக் கொண்டு, ‘ஓ! நீ கதை எழுதுவியா?’

‘ஏன் எழுதக் கூடாதா?’

இப்போது சுற்றியிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி! ஆனால் அவள் சொன்ன கதையை யாருமே கேட்டிருக்க மாட்டார்கள்.

 ‘சரி, நீ எழுதின கதையைச் சொல்லு….!’

சரித்ரா ஆரம்பித்தாள்: ‘ராவணன் சீதையைக் கடத்திக்கொண்டு போய் சிறிலங்காவில் வைத்தார்…..’

இந்தக் கதை தானா என்று மனதிற்குள் நினைத்தாலும், முதல்வர் ‘ம்…மேலே சொல்லு…’ என்றார்.

‘ராமன், ஹனுமானின் உதவியைக் கேட்டார். ஹனுமானும் சரி என்று உதவ சம்மதித்தார்……’

‘அப்புறம்?’

‘இப்போ ஹனுமான் தன்னோட நண்பன் ஸ்பைடர்மேனைக் கூப்பிட்டார்….’

இந்த திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை!’

‘எதற்கு?’

‘எதற்குன்னா, இந்தியாவுக்கும், சிறிலங்காவிற்கும் நடுவில் நிறைய மலைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன் இருந்தால் அவரோட கயிற்றைப் பிடித்துக்கொண்டு நாம சுலபமாக அங்க போகலாம்……!’

‘ஆனா ஹனுமானால பறக்க முடியுமே…இல்லையா?’

‘ஆமா. ஆனா அவர் ஒருகையில சஞ்சீவி மலையை வச்சிண்டு இருக்காரே! அதனால அவராலா ரொம்ப வேகமா பறக்க முடியாது….!’

கதையை கேட்டுக் கொண்டிருந்தவர்களின் நடுவில் அமைதி.

சற்றுப் பொறுத்து சரித்ரா கேட்டாள்: ‘நான் கதையை தொடரட்டுமா? வேணாமா?

;சரி, சரி நீ மேலே சொல்லு…..!’

ஹனுமானும் ஸ்பைடர்மேனும் சிறிலங்காவிற்குப் போய் சீதையைக் காப்பாத்தினாங்க. சீதை இருவருக்கும் நன்றி சொன்னாள்’.

‘ஏன்?’

‘உங்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றி சொல்லணும், இல்லையா? அதற்குத்தான்!’

‘……………..!’

‘அப்புறம் சீதா ஹனுமானிடம் ஹல்க்- ஐ  கூப்பிடச் சொன்னாள்’

.எல்லோருடைய வியப்பையும் உணர்ந்தவள் போல அந்தக் குழந்தை சொல்லிற்று: ‘சீதையை பத்திரமா ராமன் கிட்ட அழைத்துக் கொண்டு போக ஹல்க்- ஐ கூப்பிட்டாள் சீதை!’

‘ஹனுமானால் சீதையைத் தூக்கிக்கொண்டு போகமுடியுமே! எதுக்கு ஹல்க்?’

‘ஆமா, ஆனா ஹனுமானோட ஒரு கையில சஞ்சீவி மலை; இன்னொரு கையில் ஸ்பைடர்மேனைப் பிடித்துக் கொண்டிருந்தாரே!’

எல்லோர் முகத்திலும் புன்னகை. ‘எல்லோரும் இந்தியாவுக்கு வரும் வழில என்னோட தோழன் அக்ஷய் –யைப் பார்த்தார்கள்….!’

‘அக்ஷய் எப்படி இங்கு வந்தான்?’

‘இது என்னோட கதை. எனக்கு யாரைப் பிடிக்குமோ அவங்களை கொண்டு வருவேன்!’

முதல்வருக்குக் கோபம் வரவில்லை.மாறாக கதையில் வரப்போகும் அடுத்த திருப்பத்திற்குக் காத்திருந்தார்.

‘எல்லோரும் இந்தியாவிற்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாங்க….!’

குழுமியிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்: ‘வேளச்சேரி பஸ் ஸ்டாப்பிற்கு எதற்கு?’

‘ஏன்னா, அவங்களுக்கு வழி மறந்து போச்சு. ஹல்க்கிற்கு  ஒரு ஐடியா தோணிச்சு அவரு டோராவைக் கூப்பிட்டாரு!’

‘டோரா வந்து சீதையை வேளச்சேரி வீனஸ் காலனிக்கு அழைச்சிகிட்டுப் போனா. கதை அவ்வளவுதான்!’

முகத்தில் பெரிய சிரிப்புடன் குழந்தை கதையை முடித்தது.

முதல்வர் கேட்டார்: ‘ஏன் வீனஸ் காலனி?’

‘ஏன்னா, சீதை அங்கேதான் இருக்கிறாள்….நான் தான் அந்த சீதை!’

முதல்வர் மிகவும் மகிழ்ந்து அந்தக் குழந்தையை அப்படியே கட்டிக்கொண்டார். அந்தக் குழந்தைக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைத்தது. கூடவே ஒரு டோரா பொம்மையும் பரிசாகக் கிடைத்தது.

குழந்தைகள் எப்போதுமே எதிர்பாராத விதத்தில் நம்மை அசத்துபவை. நாம் தான் அவர்களின் கற்பனையை வெட்டி விடுகிறோம். நம் கோணத்திலேயே அவர்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களது கோணத்தில் இந்த உலகத்தைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.

குழந்தைகளுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுப்போம். அவர்களது கனவுகள் எல்லாம் நிஜமாகட்டும்!

காதலித்தால் வேலை இல்லை: பட்டதாரிகளுக்கு சோதனை

‘காதல் திருமணம், விவாகரத்து போன்ற குடும்பப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை’ என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.

காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.

இதன் ஒரு கட்டமாக, குடும்ப பிரச்னைகள் உள்ள பட்டதாரிகள், காதல் திருமணம் செய்தவர்கள், விவாகரத்து செய்த பட்டதாரிகள், கலப்பு திருமணம் செய்தவர்ககளுக்கு, ஆசிரியர் வேலை வழங்கவேண்டாம் என, முடிவெடுத்து உள்ளன.

பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், இந்த முடிவை எடுத்துள்ளதால், காதல் திருமணம் செய்த பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபல கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனத்தின், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கம் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு துவங்கிஉள்ளது.

அதில், வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளில், ‘விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், துணையை பிரிந்து வாழ்பவராகவோ, காதல் திருமணம் செய்தவராகவோ, குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதவராகவோ இருக்கக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணி நீக்கம்:
சென்னை, ராயபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர், அங்கே பணியாற்றிய ஆசிரியையை காதல் திருமணம் செய்தார். அதனால், அவருக்கு, ஆறு மாதமாக சம்பளம் வழங்க மறுத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நீக்கினர். இதை எதிர்த்து நடந்த போராட்டத்துக்கு பின், மீண்டும் அவர் பணியில் சேர்க்கப்பட்டார்.

விசாக நட்சத்திரக் கோயிலில் பிப். 6, 20 தேதிகளில் சனிமகா பிரதோஷ விழா

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சுவாமி கோயிலில் ( விசாக நட்சத்திரக் கோயிலில்), பிப். 6, 20 ஆகிய தேதிகளில் சனிமகா பிரதோஷ விழாவானது மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இக் கோயிலின் ஸ்தலநாதர் பிரளயநாதசுவாமியானவர் ராகுவுக்கு அதிபதியாவார். ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், ஸ்தல நட்சத்திரமானது விசாகம் குருவுக்கு அதிபதியாகும்.
சனிமகாபிரதோஷத்தையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஷ்வரன், பிரளயநாதருக்கு பிப். 6, 20 ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு அர்ச்சனைகளும் செய்யப்படும்.
இத்தைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரதாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
அதையடுத்து சோழவந்தான் தொழிலதிபர் எம். மணி குடும்பத்தார் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ப. லதா, பள்ளித் தாளாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், பிரதோஷ விழாக்குழுவினர், கணக்கர் சி. பூபதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஜீவனாம்ச பணத்தை வீசிச் சென்ற நபரால் சாலையில் பரபரப்பு

சென்னை:

சென்னை பெரம்பூரை சேர்ந்த ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே இருந்த காதல் கசந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனைவியிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் மனைவிக்கு வழங்கவேண்டும் என்று கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் அவ்வாறு பணம் கொடுக்கவில்லை.

இதுகுறித்து அந்தப் பெண்மணி ஒரு மனுவை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜரான கணவரிடம் ஜீவானாம்சம் தொகை ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை மனைவிக்கு வழங்கவேண்டும். அல்லது சிறையில் அடைக்க உத்தரவிடப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை செய்தார். இதையடுத்து முதல் தவணையாக ரூ.60 ஆயிரத்தை வழங்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, நீதிமன்ற அறைக்கு வெளியில் வந்த அந்த நபர், ஜீவனாம்சம் தொகை ரூ.60 ஆயிரத்தை மனைவியின் கையில் கொடுக்காமல், அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு, ‘எடுத்துக் கொள்’ என்று கூறி சென்றுவிட்டார்.

குப்பை தொட்டியில் ரூபாய் நோட்டுக்களை போட்டுச் சென்றதை அங்குள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதேநேரம் கூட்டமும் கூடியது. பின்னர், அங்கிருந்த சிலர் அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.