Home Blog Page 5894

ஆருத்ரா தரிசனம்

”தகதகதக தகவென ஆடவா,சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா,ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும்நாயகனே…”ஆ!………ருத்ரா!!….”ஆருத்ரா”……”ஆ!………ருத்ரா!!”…..ஆருத்ரா
அபிசேகம்:25-12-15 இரவு 10 மணிக்கு ..ஆருத்ரா தரிசனம்:

26-12-15…”திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்”

காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.இங்கு ஊர்த்தவ தாண்டவ நடராஜருக்கு ஆருத்ரா அபிசேகம் 25-12-15 அன்று இரவு 10 மணிக்கு ஆரம்பித்து 26-12-15 அன்று அதிகாலை 5 மணி வரை நடைபெறும்

ஆருத்ரா தரிசனம் 26-12-15 அன்று காலை துவங்கி நடக்கும்.

காளியுடன் நடனம் ஆடிய ஈசனின் நடனத்தின் உச்ச நிலையைக் கண்ட அம்பிகை வியப்புடன்
“ஆ!………ருத்ரா!!….”ஆருத்ரா”……”ஆ!………ருத்ரா!!…என்று கூறி அவரது ஆட்டத்தை வியப்புடன் நோக்கிய வண்ணம் இங்கு நடராஜபெருமானின் அருகில் சமிசீனாம்பிகை என்னும் பெயரில் உள்ளார்..

நடராஜபெருமானின் தூக்கிய திருவடியின் கீழ் காரைக்கால் அம்மையார் பாடிய வண்ணமும், ஈசன் ஆடிய வண்ணமும் இங்கு உள்ளது சிறப்பு..காரைக்கால் அம்மையார் இங்கு நடராஜருக்கு பின்புறம் உள்ள சுவர் எழுப்பிய சன்னிதியில் தற்போதும், சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதனை “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.. திருவள்ளூரில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது;

இது, ரத்தின சபை எனப்படுகிறது. இங்கு மூலவர் சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர்அருள் புரிகிறார். இவரை வணங்கினால் தீர்க்காயுள் கிடைக்கும்.பழையனூர் நீலி அம்மன் இத்தலமே…இங்கு முதலில் ஈசனை வழிபடும் முன்பு குளக்கரையில் உள்ள வடபத்திர காளிஅம்மனை வழிபட்டே ஈசனை வழிபடவேண்டும்..”சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட,அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”..”வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை”.”நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”.

கட்டுரையாக்கம்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்

இன்னொரு பிறவி வேண்டும்

“ஆலால கண்டா…! ஆடலுக்கு தகப்பா…!!வணக்கமுங்க!”.

”ஆருத்ரா அபிசேகம்”:26-12-15…,அதிகாலை 3 மணிக்கு….. ,

“சிதம்பரம் உமைபார்வதி உடனுறை திருமூலநாதர் திருக்கோயில்”…..இங்கு நடராஜ பெருமானின் சிறப்பால் “சிதம்பரம் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் திருக்கோயில்”என்று வழங்கப்படுகிறது..சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் தீட்சிதர்கள்[தில்லைவாழ் அந்தணர்கள்] திருகைலைமலையில் இருந்து ஈசனால் அழைத்து வரப்பட்டவர்கள்..இந்த தீட்சிதர்களில் ஒருவராக இன்றும் நம் ஈசன் இருக்கிறார்.

“தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்”என்கிறார் நம் சுந்தரர். இதனை உணர்ந்து தீட்சிதர்களையும் வணங்கி திருமூலநாதர்,சொர்ணபைரவ்ர் ,நடராஜர் வழிபாடு செய்து அருள் பெறுஓம்…….

சைவத்தில் “கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊரின் பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். பஞ்ச பூதத் தலங்களில் இது ஆகாயத்தலம்…மீண்டும் பிறவி வலையில் சிக்காமல் இருப்பதற்காக இந்தப் பிறவியில் நல்லவனாக வாழ்ந்து,ஈசனின் பெருமை பேசி ,நம் வினைகளை நீக்கி மீண்டும் பிறவா நிலையை நாம் அடையவேண்டும் என்பதற்காக ஈசன் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறான்,அதுவே இப் பிறப்பு . .

சாதாரண பாமர மனிதன் தொடங்கி அருளாளர்கள் வரை மீண்டும் பிறக்க வேண்டாம் என்றே விரும்புகின்றனர்.பிறவியைத் துன்பம் என்றும், நோய் என்றும் வருணிப்பர்.

ஆனால் மீண்டும் பிறக்க விரும்பியவர் ஒருவர் உண்டு. அவர்தாம் நமது வாகீசர் அப்பர் பெருமான். ஈசனுடைய பேரழகைக் காணவும் ,அவனது ஆனந்த நடனத்தை ரசிக்கவும் அவனை அனுபவிக்கவும் வேண்டுமானால்,”மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”என்றார்.

ஆம்!”குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல்மேனியில் பால் வெண்ணீறும்,இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்,மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”என்கிறார் ..

யார் அவர் ?!…

நம் அப்பர் திருநாவுக்கரசர் ……

குனித்த புருவமும் – வளைந்த புருவமும் .,சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,பனித்த சடையும்- (பனி – நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக பூசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் – ஒரு காலைத் தூக்கி தில்லையில் ஆடும் நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் – மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் – பெரிய உலகில்…..

அதாவது சான்றோர்கள்,முனிவர்கள் பொதுவாக மனித பிறவி மீண்டும் வேண்டாம் என்பார்கள்..ஆனால் சிதம்பரத்தில் நடனமிடும் நம் நடேசனின் அழகைக் காண இன்னொரு மனித பிறவியும் வேண்டும் என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர் …

அனைத்து சிவாலயம்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் தினமும் அந்தந்த சிவாலய அர்த்தஜாம பூஜைக்கு பின் சிதம்பரம் நடராஜரிடமே ஒடுங்குகின்றனவாம்.மீண்டும் அதிகாலையில் சிவகலைகள் அனைத்தும் சிதம்பரம் நடராஜரிடம் இருந்து அந்தந்த சிவாலயமூர்த்திகளை சென்றடைகின்றனவாம். சொர்ண பைரவரின் ரிஷிமூலம் சிதம்பரம்.குருநமச்சிவாயருக்கு ம், தீட்சிதர்களுக்கும் தரிசனம் தந்த ஸ்ரீ சொர்ண பைரவரின் திருவடிவம் தில்லை பொன்னம்பலத்தில் சிற்சபையில் கீழ்ப்புறத்தில் இருக்கிறது.திருவிழாக் காலங்களில் இந்த சொர்ணாகர்ஷண பைரவரைக் கனகசபையில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.

ஸ்ரீ சொர்ண பைரவருடைய வழிபாட்டில் சொர்ண லாபமும், பயம் நீங்கியும், சர்வ அட்ட சித்தியும் ஏற்படும், பொன்னும் மணியும் குவியும் என பெரியோர் கூறுவர். சிதம்பரம் நடராஜர் சன்னதி மிக அருகில் உள்ள ஸ்ரீ சொர்ண பைரவர் மந்த்ரம் இதோ :..

“ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிதம்

வேதரூப சாரமேவ ஸம்யுதம் மஷேச்வரம்

ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்தஸ்து தாயினம்

மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே”.

இந்த மந்திரத்தை காலை மாலை தினமும் தீபம் ஏற்றி நடராஜரையும்,சொர்ணபைரவரையும் நினைத்து 108 முறை சொல்லிவர வெகுவிரைவில் பொன்,பொருள் ,செல்வம்,நவமணிகள் ,பணம்குவியும்

“தில்லையம்பல நடராஜா…. செழுமை நாதனே பரமேசா..

.அல்லல் தீர்த்தாடவா வா வா…

அமிழ்தானவா”.

.”சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட,அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”..

“வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை”

.”நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”..கட்டுரையாக்கம்:

–  சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்

ஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :

ஆதிரைத் திருநாளொன்றிற் சங்கரன்
ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யான்
சோதிமானோடு தன்னந்தனியனாய்ச்
சொற்களாடியிருப்ப………

திருவாதிரை என்றதும் பாரதியின் சுயசரிதையில், “ஆதிரைத் திருநாளில் சங்கரனின் ஆலயத்தில், ஒரு மண்டபத்தில், தன்னந்தனியாக ஜோதிமானோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தேன்” என்று எழுதியதை நண்பர் ஒருவர் நியாபகப்படுத்தினார்.

எத்தனையோ விஷயங்களில் பாரதியார் சபிக்கப்பட்டவராக இருந்த போதும்….. இறைவனுடன் ஏகாந்தமாக இருப்பதற்கு அதுவும் ஆதிரை நாளில்……. நிச்சயம் இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர்தான்.

ஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :
*****************************************************
கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.

ஆதி காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.

சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே, தான் உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழை பெய்து விறகுகள் ஈரமாயின; அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தடைந்தார்.

சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதும் அல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார்.

சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கப் படுவதாகச் சொல்லப்படுகின்றது.

– பிரேமா சீதாராமன்

செவ்விதழ் !

என் கண்ணியம்
காணமல் போனது !!!
என் நேர்மை
நிலை தடுமாறி போனது !!!
என் மனிதம்
மடிந்து போனது !!!
என் மனசாட்சி
முறிந்து போனது !!!
உடனே சுவைக்க தூண்டும்
உன் செவ் விதழ்களை
காணும் பொழுதெல்லாம்
சீர் திருத்தவாதியான
என் நிலையும்
சீர் குலைந்து போகிறது !!!

முரண்‬ !

‪#‎முரண்‬
கல்லிற்கு
கற்பூரம் ஏற்றி
படத்திற்கு
தூபம் காட்டி
மரத்திற்கு
மஞ்சள் பூசி
பேசாத தெய்வங்களை
பய பக்தியோடு வணங்குகிறான் !!!
பேசும் தெய்வங்களை
மரியாதை இல்லாமல்
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பிய பக்திமான் !!!

அரசியலும் ! காதலும் !

அன்பே…
யார் வேண்டுமானாலும்
அரசியல் பேசட்டும்
ஆனால்
நீ மட்டும்
அதை பற்றி பேசாதே !!!
பின்
அரசியல் களமும்
காதல் களமாக ஆகிவிடும் !!!

பிறப்பின் கவலை !

தஞ்சை காட்டில்
வரப்பு மேட்டில்
நீ
நடந்து சென்ற பொழுது
உன் காலில் ஒட்டிய
சேற்றை கண்டு
நாற்று கவலை பட்டது !!!
நான் ஏன்
சேற்றாக பிறக்காமல்
நாற்றாக பிறந்தோம் என்று !!!

அழகின் ரகசியம் !

நீ மட்டும் எப்படி
சிற்பத்தை விடவும்
அழகாய் இருக்கிறாய் ? என்றேன்
அதற்கு
அவள் சொன்னாள்
சிற்பத்தை
உளிக் கொண்டுதான் செதுக்குவார்கள்
ஆனால்
என்னை மட்டும்
என் தாய்
அவரின் உதடுகளை கொண்டு செதுக்கினார் என்று !!!

 

தேமுதிக சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் -விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வருகின்ற 29.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கடலூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பலத்த சேதங்களும், உயிரிழப்பும் ஏற்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இயல்புநிலைக்கு திரும்புவதற்கே பல நாட்கள் ஆனது. ஆனால் அதிமுக அரசின் நிவாரண உதவிகள் ஏதும் அந்த மாவட்டத்திற்கு முழுமையாக கிடைத்ததாக தெரியவில்லை. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரோ உணவிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்றும், மீட்புப்பணி செலவுடன் சேர்த்து, மக்களுக்கு நிவாரணம் வழங்காமலேயே 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதென சொல்லியிருப்பது அவசியம் விசாரணை செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.
பெரும்பாலான வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்ததால் ஓட்டுமொத்த உடைமைகளையும் இழந்து, வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்ற மக்களுக்கு, வேட்டி சேலையும், ஐந்து கிலோ அரிசியும் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்ததோடு மட்டுமல்லாமல், அந்த நிலங்கள் மழை வெள்ளத்தால் மணல் மூடி, விவசாயமே செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த விவசாய நிலங்களை சீரமைப்பதற்கே பல ஆயிரங்களை செலவிடவேண்டிய நிலை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க ஒரு ஏக்கருக்கு 5400 ரூபாய் என்ற அளவில் கொடுக்கும் நிவாரணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? மேலும் வேலை இல்லாமல் தொழிலாளர்களும் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீராணம் ஏரி, பெருமாள் ஏரி போன்ற ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்தாததாலும், அதன் கரைகளை உயர்த்தி பலப்படுத்தாததாலும் அதிக அளவில் நீரை தேக்க முடியாமல் ஆறுகளில் திறந்துவிடப்பட்டது. ஆனால் கொள்ளிடம், கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, பெண்ணையாறு போன்ற ஆறுகளில் தடுப்பணை இல்லாததால் பல டி.எம்.சி தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலந்தது. 2004ல் சுனாமி வந்தபோதும், 2012ல் தானே புயல் வந்தபோதும் ஹெலிக்காப்டரில் சுற்றிப்பார்த்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் எப்போதுதான் பாடம் கற்றுக்கொள்வாரோ? சாலை வழியாக காரில் சென்றாவது இதையெல்லாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். கடந்த பத்தாண்டுகளில் ஒன்றுக்கு மூன்று முறை கடலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டும், அதை தடுத்திட தேவையான திட்டங்கள் போடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதுபோன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வருகின்ற 29.12.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில், கடலூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பில் உள்ள முறைகேடுகள், அதில் அதிமுகவினரின் தலையீடுகள் மற்றும் உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்காத அதிமுக அரசை கண்டித்தும், பாதிப்பிற்கு ஏற்றவாறு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும். வேலையிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கிடவேண்டும் என்பதை வலியுறுத்தியும், நடைபெறுகின்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மக்களின் நலனுக்காக நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்