Home Blog Page 5893

காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்

சென்னை:

காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே மிகச் சிறந்த காவல் துறைகளின் ஒன்றான தமிழக காவல் துறைக்கு நவீன கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்புக்கு மிக உயர் அதிர்வெண் அலைவரிசை (வி.எச்.எஃப்.) உள்பட வெவ்வேறு அலைவரிசைகளில் அலைக்கற்றைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர்ந்து எழுப்பப்படும் விவகாரம்: இவை மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறைகள் ஒவ்வொரு ரேடியோ செட்டுக்கும் உரிமக் கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி வந்தன. ஆனால், 2004-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் காவல் துறைக்கும் அலைக்கற்றை கட்டணங்கள் விதிக்கப்பட்டன.

3 மடங்கு கட்டண உயர்வு: இந்தக் கட்டணத்தை, நிலுவைத் தொகை ரூ.73 கோடியுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரி வந்தது. இந்த நிலையில், அலைக்கற்றைக் கட்டணங்களை 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மூன்று மடங்காக மத்திய அரசு உயர்த்தியது.

இப்போது தமிழகத்துக்கு ஆண்டொன்றுக்கு அலைக்கற்றை கட்டணமாக ரூ.13 கோடி செலுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து மாதத்துக்கு 2 சதவீதத்தை தாமதக் கட்டணமாக விதிக்கப்படுகிறது.

இந்த நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரையில் போலீஸாருக்கான வயர்லெஸ் கருவிகளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, மொத்தமாக ரூ.140 கோடியை காவல் துறை செலுத்த வேண்டும் என மத்திய அரசின் வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவிடமிருந்து 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-இல் கடிதம் வந்துள்ளது.

இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக உள்துறைச் செயலர் 4.9.2014-இல் கடிதம் எழுதினார்.

காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வது கடினம்.

கட்டணம் விதிப்பது நியாயமல்ல!

சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், தேசியப் பேரிடர் காலங்களிலும்தான் போலீஸ் ரேடியோ நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமான அலைவரிசைக் கட்டணம் இந்தத் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நவீனமயமாக்கலில் முதலீடு செய்வதைத் தடுக்கும்.

நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பணியில் உள்ள காவல் துறைக்கு, கட்டணம் விதிப்பது நியாயமானதல்ல.

கட்டண விதிப்பு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான நடவடிக்கையாகும். எனவே, மாநிலக் காவல் துறைகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதோடு, தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூ.140 கோடி அலைக்கற்றைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் நள்ளிரவு நிலநடுக்கம்

ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியிருந்தது. இதனால் பாகிஸ்தானி்ன் பெஷாவர் நகரில் பாதிப்பு ஏற்பட்டது. பெஷாவரில் இந்த நிலநடுக்கத்தி்ன் காரணமாக வீடுகள் சேதமடைந்தன.

ஆப்கனிஸ்தானில், நேற்று நள்ளிரவு 11.44-க்கு அந்நாட்டின் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சுமார் ஒரு நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் சுமார் 30 பேர் வரை படுகாயமடைந்துளளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மோடியின் பாகிஸ்தான் பயணம்: காங்கிரஸ் விமர்சனம்

புது தில்லி:
தனது ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் ஆப்கன் சென்ற பிரதமர் மோடி, திடீரென பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போது, அவரது அழைப்பை ஏற்று திடீரென பயணம் மேற்கொண்ட பாரத பிரதமர் மோடியின் செயலை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி, “இந்தச் சந்திப்பு திட்டமிடப்படாதது என்றால், அது முற்றிலும் முட்டாள்தனமான, அபத்தமான ஒன்று. இந்தியாவின் தேசப் பாதுகாப்பில் பிரதமர் தனது சாகச வேலைகளை காட்ட வேண்டாம். அத்தகைய சாகசத்தை நாட்டு மக்களுக்கு செய்து காட்டவே இந்த ‘திடீர்’ பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரவேற்பு

ஸ்ரீநகர்:

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்படாத திடீர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை பிரிவினைவாத தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமரின் லாகூர் பயணம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிவினைவாத தலைவரான சையது ஷா கிலானி… “இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், இரு தலைவர்களின் பேச்சுவார்த்தை முயற்சி வெற்றி பெற்றால், காஷ்மீர் பிரச்சினையை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும்” என்றார்.

புதிய ஹூரியத் அமைப்பின் தலைவர் மிர்வாய்ச் உமர் பரூக், “மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம், சாதகமான நடவடிக்கை. இந்தியா-பாகிஸ்தான் நெருங்கி வரும் எந்த ஒரு வாய்ப்பையும் காஷ்மீர் மக்கள் வரவேற்பார்கள்” என்றார்.

மோடியின் திடீர் விஜயம்: பாகிஸ்தான் வரவேற்பு

புது தில்லி:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணத்தை அந்நாடு வரவேற்றுள்ளது. இது மோடியின் நல்லெண்ண நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, மோடியின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இந்தியா பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடரும் என கூறினார்.

இந்த பயணம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அஜிஸ் சவுத்ரி கூறுகையில், இது மோடியின் நல்லெண்ண நடவடிக்கையாகும். இரு நாட்டு மக்கள் இடையே நேரடியாக தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் ஜனவரியில் இஸ்லாமாபாத்தில் சந்திப்பார்கள். இரு தலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. மோடி, ஷெரீப் இடையே, மனப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது என கூறினார்.

பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் சிறந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் . அண்டை நாடுகளுடன் நலலுறவு அவசியம் என கூறினார்.

நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம்

லாகூர்:

ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா வரும் வழியில், யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சென்றார்.

லாகூர் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்து கட்டித் தழுவி வரவேற்றார். இரு தலைவர்களும் சில நிமிடங்கள் சிரித்து பேசியவாறே நடந்து சென்றனர். தொடர்ந்து பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளை நவாஸ் ஷெரீப் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஜத்தி உம்ரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அங்கு இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பிரதமர் மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் சென்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 6.50 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் இல்லத்தில் இருந்து புறப்பட்ட மோடி ஹெலிகாப்டர் மூலம் லாகூர் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போது, அவரது அழைப்பை ஏற்று திடீரென பாகிஸ்தானுக்கு மோடி பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியை வெளியிட்டார். மேலும், நவாஸ் ஷெரீப்பின் வீட்டில் அவரது பேத்திக்கு நேற்று திருமணம் என்பதால், வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. அதற்கும் வாழ்த்து சொல்லும் விதமாக அவரது திடீர் பயணம் அமைந்தது.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி பாகிஸ்தான் செல்வது இதுதான் முதல் முறை. பிரதமர் மோடியின் இந்த திடீர் பாகிஸ்தான் பயணம் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஜ்பாய் 91 ஆவது பிறந்த நாள்: மோடி நேரில் சென்று வாழ்த்து

புது தில்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி உள்பட கட்சி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் தில்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள வாஜ்பாய் வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரான பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து தில்லி வந்தடைந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னரே தனது இல்லத்துக்குச் சென்றார்.

ஆப்கன் நாடாளுமன்றக் கட்டத்தை திறந்து வைத்த மோடி: ஒரு பகுதிக்கு அடல் பெயர் சூட்டல்

 

காபூல்:

தலிபான் பயங்கரவாதிகளுடன் நடந்த போரால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியுள்ளது. இந்தக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தியா-ரஷ்யா இடையே ஆண்டு தோறும் நடக்கும் கூட்டம் இது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இரு நாடுகள் இடையே ராணுவம், அணு சக்தி, வர்த்தகம், தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இரு நாட்கள் பயணத்தை நிறைவு செய்து கொண்ட பிரதமர் மோடி நேற்று அதிகாலை ஆப்கானிஸ்தான் சென்றார். தலைநகர் காபூலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி பிரதமர் மோடியை வரவேற்றார்.

ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா சார்பில் ரூ710கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. இதன் இரு அவைகளிலும் உள்ள 294 உறுப்பினர்களும் அமரும் வகையில் நவீன கலையம்சத்துடன் உள்ள அரங்கம் இந்தக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர் அறை, மாநாடுகள் அறை, உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.

4 வருடங்களுக்கு முன்பே இந்த கட்டடம் கட்டப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தள்ளிப்போனது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் … ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தருணத்தில் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அனைத்து எம்.பிக்களுடன் இணைந்து இருப்பதை நான் கவுரமாக கருதுகிறேன். ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவாக இருந்தது. அவருடைய பிறந்த நாளில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. இதைவிட மிகச்சிறந்த நாள் வேறொன்றும் இல்லை. நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு வாஜ்பாய் பெயர் சூட்டியிருப்பது உள்ளத்தை தொடுவதாக இருக்கிறது.

இந்தியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் ஒருவருக்கு ஒருவர் எல்லையற்ற அன்பை செலுத்தி வருகிறார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவால் கிராமப்புறங்களில் பள்ளிகள் அமைப்பது நீர் பாசன வசதி, குழந்தைகள் நலம், பெண்களுக்கான வேலை வாய்ப்பு போன்றவை மேம்படும். நமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைப்பது அவசியம். மின் சப்ளை, மின் நிலையங்கள் அமைப்பதன் மூலம் ஆப்கானிஸ்தான் வீடுகளில் வெளிச்சம் கிடைக்கும்… என்று பேசினார்.

இதன் பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கனியுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புக்காக 25 ஹெலிகாப்டர்கள் அளிக்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். எனவே பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பீப்… பீப்… பாடல் விவகாரம் : வீரலட்சுமி பணம் வாங்கிக்கொண்டு சிம்புவை ஆதரிப்பதாக வழக்கறிஞர் குற்றசாட்டு!

 
 
 
தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்ற பெண் சிம்புவின் பீப்… பீப்… பாடலுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஆதரிப்பதாக வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்…
 
தமிழ் இராசேந்திரன் அவரது முகனூல் பக்க பதிவில் கூறியுள்ளதாவது :-
 
விசாரித்த உண்மை…..
 
தமிழர் முன்னேற்ற படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதை கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்..
 
தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டிவந்தேன்.
இப்போது பீப் பாடல் விவகாரத்தில் ,ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக , சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது…
 
சென்ற வாரம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய எமி ஜாக்சனை எந்திரன் 2 படத்திலிருந்து நீக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, அதற்காக இரண்டு பேருந்து வாடகைக்கு எடுக்க வேண்டும்.அதற்காக பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார்.
 
நான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன்.
இதற்கிடையே, அவர் இதே போல கோரிக்கை வைத்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் 10,000 க்கு காசோலை பெற்று, அதை பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாக தெரிந்துவிட்டது.
மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கரந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது..மேலும் அவர் சொன்னபடி முற்றுகையும் நடத்தவில்லை. முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
 
இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கரப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது.
சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது….
இவரிடம் இனி எச்சரிக்கையாக இருங்க மக்கா…..
 
இப்படிக்கு
தமிழ் ராஜேந்திரன்
வழக்கறிஞர்
9789433344 என்று வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் அவரது முகனூல் பக்க பதிவில் கூறியுள்ளார்.
 
சிம்புவின் பீப்… பீப்… பாடலுக்கு ஆ தரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி சமீபத்தில் வெளியிட் கருத்துக்களாவது :-
 
நடிகர் சிம்புவை தமிழக காவல்துறை சிறையில் அடைத்தால் அவர் பிணையில் வெளியே வரும் பொழுது
சிறை வாசலிலேயே தமிழர்முன்னேற்றபடை வரவேற்புகொடுக்கும்.
 
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் ,
 
தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் அவர்களின் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது.
அவர் தமிழன் என்பதாலா?
 
ஒரு வேளை தமிழக காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் பிணையில் வெளியே வரும் பொழுது தமிழர்முன்னேற்றபடை சார்பாக எமது தலைமையில் அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன்.
 
இன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா?ஈழத்தில் இல்லையா?
 
ஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையை கேளுங்கள்.கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளை படியுங்கள்.
 
பெண்களின் கண்ணியத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது! என்று வீரலட்சுமி சமீபத்தில் கருத்து வெளியிட்டது
குறிப்பிடதக்கது.

குளிப்பதை கண்காணிக்க ஒருவர் நியமனம்

தென்காசி:
நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு குளிப்பதாக வாட்சப்பில் வந்த புகாரை அடுத்து தென்காசி கோட்டாச்சித் தலைவர் குற்றாலம் மெயின் அருவியில் இன்று திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது, 25 பேர் ஷாம்பு போட்டு குளிப்பதை அறிந்து அவர்களுக்கு தலா ரூபாய் 100 அபராதம் விதித்தார்.
மேலும் ஷாம்பு, எண்ணெய்க் குளியல் ஆகியவற்றை கண்காணிக்க ஒருவரை நியமனம் செய்யவும் உத்தரவிட்டார்.