Home Blog Page 5943

விமானத்தில் பணிப்பெண்களிடம் குடிபோதையில் ரகளை செய்த வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் கைது

 

சென்னைக்கு கோவையில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு 130 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட தயாரானது.

அப்போது விமானபயணிகளில் 3 பேர் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடம் தகராறு செய்ததாகவும், 3 பேரும் விமான பணிப்பெண்களை செல்போனில் போட்டோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு கூறினர். ஆனால் அதிகாரிகளிடமும் 3 பேரும் தகராறு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆய்வாளர் கோபி மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 3 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), ராஜா (40), சுபாஷ் (32) என்று தெரிய வந்தது.

இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில் சுபாஷ் இந்து மகாசபா இளைஞர் அணி நிர்வாகி ஆவார். செந்தில்குமாரும், ராஜாவும் வழக்கறிஞர்கள்.

இந்த சம்பவத்தால்விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றது.

பஞ்சாங்காத்தில் கூறப்படுவது போல் வரும் நாட்களில் புயல் மழை எதுவும் இல்லை? வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.

குறிப்பாக கடந்த 14 ஆம் தேதி இரவு முதல் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு ஜோதிடர்கள் கடந்த சில தினங்களாக வருகிற 21 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் ஒரு வாரம் கனமழை பெய்யும் என்றும், 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), புயல் பலமாக சென்னையை உலுக்கும் என்றும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த தகவல் வேகமாக வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.

மேலும் நாசா விண்வெளி மையமும், இதேபோல் வருகிற 21, 22 ஆம் தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்றும், இதுவரை இல்லாத அளவில் 250 செ.மீ. மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழையில் இருந்தே மீள முடியாமல் தவிக்கும் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த மக்களிடம் இந்த தகவல்கள் ஒரு விதமான பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம்கூறியதாவது :_

உலக வானிலை வழிகாட்டுதல் படி, செயற்கைக்கோள் தரும் தகவல்களை கொண்டு தான் அவ்வப்போது மழை வருமா? வராதா? என்பதை தெரிவிக்கிறேன். தற்போது வடகிழக்கு பருவமழை காலம். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகம் எப்போதுமே மழை பொழிவை பெறும். அந்த வகையில் தற்போது மழை பெய்துள்ளது. இனியும் மழை வரும்.

ஆனால் வாக்கிய முறை பஞ்சாங்கம், நாசா குறிப்பிடுவது போல் பலத்த மழை வருமா? என்பது குறித்து எனக்கு தெரியாது. வானிலை தகவல்படி, அடுத்தகட்டமாக பலத்த மழையோ, எந்த ஒரு புதிய நிகழ்வோ (புயல்) இல்லை. வாட்ஸ்-அப்பில் வரும் தகவல்கள் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.

தெற்கு ஆந்திரா வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே பகுதியில் நீடிக்கிறது.

மேலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இந்த காரணங்களால், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

புயல் போன்ற நிகழ்வுகள் எதுவும் வரும் நாட்களில் இல்லை. அப்படியே இருந்தாலும், அது நிலநடுக்க கோட்டுக்கு அருகில் இந்திய பெருங்கடல் பகுதியில் தான் நிலவும் என்றார்.

பொதுமக்கள் வானிலை குறித்து தெரிய வேண்டும் என்றால், வானிலை ஆய்வு மைய இணையதளத்துக்கு சென்று பார்க்கலாம். அதில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படி இல்லையென்றால், வானிலை ஆய்வு மையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

 

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென தயாளு அம்மாளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினர் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். தயாளு அம்மாளுக்கு சுவாசாக் கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்சனை இருந்து வருவதாகவும், அவர் பல வருடங்களாக அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது

அவருக்கு மருத்துவர்கள்தீவர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடலின் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி அடுத்து மலேசியா, சிங்கப்பூர் பயணம் செய்ய திட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாள் பயணமாக நாளை மறுநாள் வெளிநாடு செல்லும் மோடி மலேசியாவில் நடைபெற இருக்கும் 13 வது ஆசிய மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார்,ஆசிய நாடுகளுடனான வர்த்தகம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, முறைகேடான குடியேற்றம் போன்றவை குறித்து இந்த மாநாடுகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் மோடிமலேசியாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 23ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து 24ஆம் தேதி இந்திய திரும்புவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்ப்பட்டுள்ளது.

நண்பருக்கு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடி பரிசளித்த கல்லூரி மாணவி

வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை இளம்பெண் ஒருவர் திருடி நண்பருக்கு பரிசளித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் சங்கர், என்பவருடைய மகள் நந்தினி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

சங்கரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் மாயமாகி இருப்பதை கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இருவரும் வீட்டில் தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து மகள் நந்தினியிடம் கூறியதோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது பெற்றோரிடம் கூறியநந்தினி, எனக்கும் எலகங்காவில் தனியார் கல்லூரியில் படித்து வந்த கொடிகேஹள்ளி டாடா நகரை சேர்ந்த ஷாருக் முக்காந்தர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

எனது நண்பர் ஷாருக் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மிக கஷ்டமானநிலையில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார்.

அதனால் வீட்டில் இருந்த தங்க நகை, பணத்தை நான் தான் எடுத்து அவருக்கு பரிசளித்தேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினியின் பெற்றோர் நந்தினி பரிசளித்த நகை, பணத்தை ஷாருக்கிரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என நியூ டவுன் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில்அளித்த புகாரில், நந்தினியின் பெற்றோர் என்னை கடத்தி, 2 நாட்கள் சிறை வைத்து உடல் ரீதியாக தொல்லை தந்தனர்.

மேலும் நகை, பணத்தை திரும்ப கொடுப்பதாக நான் கூறியதை தொடர்ந்து அவர்கள் என்னை விடுவித்தனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

த்ரிஷாவின் முன்னாள் காதலனுக்கு நன்றி கூறிய இயக்குனர்!

ஜெய் சுரபி ஜோடியாக நடிக்க, மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘புகழ்’ நாளுக்கு நாள் புகழ் பெற்றுக் கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளி வந்த இந்த படத்தின் Trailer பார்த்தவர்கள் எல்லோரையும் கவர்ந்து உள்ளது என்பதற்கு வர்த்தக ரீதியாக இந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பே சாட்சி. இந்த வெற்றியை தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினர் படத்துக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணமாக படத்தில் வரும் ஒரு முக்கியமான பாடலை, நாளை நவம்பர் 19 ஆம் தேதி வீடியோவில் வெளி இட உள்ளனர்.

கதைப்படி கதாநாயகன் ஜெய் உடன் அவரது நண்பராக நடிக்கும் ஆர்ஜே பாலாஜி இருவரும் அவர்களது ஏரியாவில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றியும் பெற்று விடுகின்றனர். அந்த வெற்றியை கொண்டாடுவதற்கு பாண்டிச்சேரி செல்கின்றனர். அங்கு அவர்கள் பாடும் பாடல் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறது.பாடலாசிரியர் அண்ணாமலை எழுதிய ‘நாங்க பொடியன்’ என்றுத் துவங்கும் இந்தப் பாடல் இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் மெர்லின் இசையில் தெறிக்கிறது. அனிருத் மற்றும் திவாகர் பாடியுள்ள இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்து இருப்பவர் பாபா பாஸ்கர். ஜெய் இந்த பாடலில் ஆடிய நடனம் படப்பிடிப்பு குழுவினரை அசர வைத்தது. அவ்வளவு வேகம், அவ்வளவு உற்சாகம்.

விரைவில் வெளி வர இருக்கும் ‘புகழ்’ எங்கள் எல்லோருக்கும் புகழ் தரும் படமாக இருக்கும். புகழுக்கு மேலும் புகழ் சேர்த்து இருக்கும் தயாரிப்பாளர்கள்S பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் பிரசாத்துக்கும், radiance மீடியா வருண் மணியன்(த்ரிஷாவின் முன்னாள் காதலன்) அவர்களுக்கும் மிக்க நன்றி எனக் கூறினார் இயக்குனர் மணிமாறன்.

விஜய்யின் வார்த்தைகள் நான் வெற்றி பெற முக்கிய வார்த்தையாக இருக்கும்: திலிப் சுப்புராயன்!

பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் மகிழ்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகி, அடுத்த மாதம் திரைக்கு வெளி வர தயாராக உள்ள ‘அஞ்சல’ படத்தின் ஆடியோ சிடியை இளையதளபதி விஜய் வெளியிட்டு இருப்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம்.

‘இடை விடாமல் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததால் அவரிடம் சிடி வெளி இட முடியுமா என்றுக் கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன்.

சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்றுச் சொல்லி சிடி வெளி இட்டார். இந்தப் படத்தின் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம், அதில் முக்கியமானது அவர் என்னிடம் அன்றுக் கூறிய ஊக்க வார்த்தைகள் தான். இந்த வார்த்தைகள் திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றிப் பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும்’ என்று நம்பிக்கையுடன் கூறினார் திலிப் சுப்புராயன்.

முருகன் கோவிலில் திருகல்யாணம்

பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சுவாமி திருக்கல்யாணம்  நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகாலை பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல் மற்றும்  சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகத்தினருடன் இணைந்து  பக்தர்கள்  செய்திருந்தனர்.

மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை

மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மழை என்பது அழகான வரம். ஆனால், சென்னை நகர மக்களைப் பொறுத்தவரை அதை சாபமாக மாற்றிய பெருமை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையுமே சேரும். ஒரு நாள் மழைக்கே சென்னை சாக்கடையாகி, வாழத் தகுதியற்ற மாநகரமாக மாறுவதற்கு இந்த ஆட்சிகள் ஏற்படுத்திய கட்டமைப்பு குறைபாடுகள் தான் காரணமாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மீட்புப் பணிக்காக இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவர்களும் வரவழைக்கப்பட்டுள்ள போதிலும், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை முழுமையாக மீட்க முடியவில்லை. சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன.

கோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டியவர்கள் வீட்டு மாடியில் நின்றவாறே ஒருவேளை உணவு கிடைக்காதா? என கையேந்தி நிற்கும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை. மாநகரமான சென்னை மா‘நரக’மாக மாறியதற்கு காரணம் யார்?

1971 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24.69 லட்சம் ஆகும். சென்னையின் இப்போதைய மக்கள் தொகை 48.28 லட்சம் ஆகும். சென்னை பெருநகரப் பகுதிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் சென்னையின் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு அடிப்படைக் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டனவா? என்றால் இல்லை என்பது தான் பதில். 1970-ஆம் ஆண்டுகளில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன.

மீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்க்ரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வள்ளுவர் கோட்டம் உட்பட சென்னையின் அடையாளங்களாக பார்க்கப்படும் பல கட்டிடங்கள் ஏரி மற்றும் நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்டவை. சென்னையில் நீர் ஓடும் பாதைகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டன. பொதுவாகவே, வெள்ள நீர் இயல்பாகவும், விரைவாகவும் வழிந்தோடும் நில அமைப்பு சென்னைக்கு உண்டு. கூவம், அடையாறு ஆகிய இரு ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் இயற்கையாக அமைந்திருந்தன.இவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விடும். ஆனால், இப்போது 2 ஆறுகளும் சாக்கடைகளாக மாற்றப்பற்றதுடன், கால்வாய்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இந்த அனைத்து சீர்கேடுகளுக்கும் மூல காரணம் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான். நீர்நிலைகள் அனைத்தையும் வளைத்து மனைகளாக்கி விற்பனை செய்த பாவம் இந்த இரு கட்சிகளையே சாரும். அவ்வகையில் சென்னை இன்று எதிர்கொள்ளும் சீரழிவுகளுக்கு இவை தான் பொறுப்பேற்க வேண்டும். யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே! என்பதைப் போல சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன.

இதைத் தடுக்க எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மழை நீர் வடிந்த இடங்களில் தொற்று நோய்த் தடுப்பு மருந்து தெளிப்பு, வெள்ளம் பாதித்த மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இவை தவிர அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், இவற்றில் இதுவரை எந்த பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதில் இருந்தே ஆட்சியாளர்களின் அலட்சியத்தை தெரிந்து கொள்ளலாம். இனியாவது உறக்கத்தைக் கலைந்து சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது உட்பட அனைத்து வகையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒட்டுமொத்த மாநகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மழை மூலம் கிடைத்த தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரிகள் நிரம்பி வீணாக கடலில் கலந்த தண்ணீரின் அளவு மட்டும் 25 டி.எம்.சி.க்கும் அதிகம் ஆகும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போதெல்லாம் கூடுதல் நீர் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையாகி விட்டது.

இப்போது பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், பூண்டி ஏரியில் இருந்து 2,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவும், பருவமழைகளின் போது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும் கூடுதலாக குறைந்தபட்சம் 10 புதிய ஏரிகளாவது அமைக்கப்பட வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் ஒரு ஏரியைக் கூட புதிதாக அமைக்கவில்லை. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போவதாக கூறி இந்த கட்சிகளின் தொலைநோக்குப்பார்வை இவ்வளவு தான். தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து சுரண்டுவது தான் இந்த இரு கட்சிகளின் நோக்கமாகும். தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் பாதித்தால் ஆட்சியாளர்களை அ.தி.மு.க. விமர்சிப்பதும், அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் வந்தால் ஆட்சியாளர்களை தி.மு.க. விமர்சிப்பதும் மட்டுமே நடக்கும். இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. மழைக் காலங்களில் பொறுப்பற்ற அணுகுமுறையால் ஒரு கட்சி மக்களை பலி கொடுப்பதும், அதை வைத்து இன்னொரு கட்சி அரசியல் செய்வதும் வாடிக்கையாகி வருவதைப் பார்க்கும் போது ‘‘இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?’’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. மாறி மாறி ஆட்சி… மாற்றி மாற்றி ஏமாற்றம் என்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் நாடகம் இனியும் நீடிக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களை மதிக்காத இரு கட்சிகளுக்கும் மறக்க முடியாத தண்டனையை அடுத்த ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் வழங்கப் போவது உறுதி!

பா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்

 

சட்டமன்ற தேர்தலுக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை, வரும், ஜனவரியில் வெளியிடப்படும் என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கரூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு, வெள்ள நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள, 500 கோடி ரூபாய் போதாதது. கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுனாமி, தானே புயல்களால் ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, தி.மு.க.,அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

தேசிய அளவில் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதும், தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. இதற்கு, தி.மு.க. அ.தி.மு.க ஆகிய கட்சிகள்தான் காரணம். மாநில அளவில் மட்டுமல்ல, மாவட்ட அளவிலும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னையில் அம்மா படகு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என, தமிழக அரசுக்கு யோசனையாகவே சொல்கிறேன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால், வழக்கறிஞர்கள் எளிதாக மற்ற நீதிமன்றங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை, உயர்நீதிமன்ற நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, மணல் கொள்ளை குறித்து பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மணல் கொள்ளையை கண்டுகொள்ளவில்லை. பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், தி.மு.க. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்க மாட்டோம். அதை நீதிமன்றங்கள் பார்த்து கொள்ளும். வரும் ஜனவரியில், பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வாஜ்பாய், மன்மோகன்சிங் பிரதமராக, பா.ம.க ஆதரவு அளித்த போது, குறைந்தப்பட்ச செயல் திட்டம் இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வுடன் வைத்தது தொகுதி உடன்பாடு தான். அது முடிந்து விட்டது. பா.ம.க ,வோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சிகள் குறித்து, தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.