Home Blog Page 6004

அக்டோபர் 9ம் தேதி அனுஷ்கா தரும் டபுள் ட்ரீட்

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “இஞ்சி இடுப்பழகி” திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 9-ஆம் மாதம் வெளியாகும் என பிவிபி நிறுவனம் அறிவித்துள்ளது.

நகைச்சுவை கலந்தக் காதல் படமாக உருவாகும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோருடன் சோனல் சௌஹன், பிரகாஷ் ராஜ், பரத், ஊர்வசி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர். பிரகாஷ் கொவிலமுடி இயக்கியிருக்கிறார்.

அக்டோபர் 9ம் தேதிதான் அனுஷ்கா, ராணா, பிரகாஷ் ராஜ், அல்லு அர்ஜூன் மற்றும் பலர் நடித்துள்ள ருத்ராமாதேவி படமும் வெளியாகவிருக்கிப்பது குறிப்பிடதக்கது.

கத்துக்குட்டி படத்தை பாராட்டிய வைகோ, பாரதிராஜா

நரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே  அடுத்த பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு செய்த வைகோ, படத்தைப் பார்வையிட இயக்குநர் பாரதிராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, தோழர் தியாகு, வழக்கறிஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தார்.

படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்வையிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, ”ஒரு படத்தைப் பார்க்க வைகோ அழைக்கிறார் என்றாலே அந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை என்னால் யோசிக்க முடிந்தது. காரணம், வைகோ அந்தளவுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரின் நுணுக்கத்தை விட சிறப்பாகக் கவனிக்கக் கூடியவர். அதனால் ‘கத்துக்குட்டி’ படத்தில் ஏதோவொரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும் என நம்பித்தான் படம் பார்க்க வந்தேன். ஒரு நல்ல விஷயம் அல்ல. பல நல்ல விஷயங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியோடு கலகலப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பி சரவணன்.

குறிப்பாக படத்தில் சூரியின் காமெடி பெரிதாகக் கொண்டாட வைக்கும். நல்ல விஷயங்களை நாடக பாணியில் சொல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லி, பார்ப்பவர் மனதைக் கொக்கிப் போட்டு இழுக்க இந்த இயக்குநர் கற்று வைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கூர்மையாக இருக்கின்றன. தஞ்சை மக்களின் கொண்டாட்டங்களையும் கூடவே அவர்களின் அன்றாடத் துயரங்களையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும். இந்தப் படத்தை ஜெயிக்க வைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை!” என்றார் சிலிர்ப்போடு.

அடுத்து பேசிய வைகோ, ”அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் சாதிக்க முடியாததை ஒரு திரைப்படத்தால் சாதிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தம்பி இரா.சரவணன். கிராமத்து வாழவியலை அவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘கத்துக்குட்டி’ படம். முள்ளி வாய்க்கால் கொடுமைக்குப் பிறகு நான் படம் பார்ப்பதை அடியோடு குறைத்துக் கொண்டேன். ஆனால், ‘கத்துக்குட்டி’ படத்தை சில நாட்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் அடிநாதமான விவசாயப் பிடிப்பான கதையும், திரைக்கதைத் திருப்பங்களும், நுட்பமான வசனங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியமைப்புகளும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரியான கருத்துச் சொல்லும் பாணியும் என்னை இந்தப் படத்தின் பெரிய ரசிகனாக்கிவிட்டன.” எனப் பாராட்டியவர் ஒருகட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டு, ”இந்தப் படத்தை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாற்றி நமக்காக சோறு போடும் விவசாய ஜீவன்களுக்கு நன்றி காட்டுபவர்களாக தமிழக ரசிகர்கள் பெரும்பணி செய்ய வேண்டும்.

‘கத்துக்குட்டி’ படத்தைக் கடைக்கோடி மக்களின் பார்வைக்கும் கொண்டு சென்று மாபெரும் புரட்சியை நாம் நிகழ்த்த வேண்டும். ‘கத்துக்குட்டி’ தரணி போற்றும் தஞ்சை தமிழ் மக்களின் பேரழகான காவியம் என்றால் அதில் கொஞ்சமும் மிகை இல்லை!” என்றார் நெகிழ்ந்துபோய்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ”மக்களின் வலியைப் பேசுகின்ற படங்கள் பெரிதாக ஓடுவது கிடையாது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சொல்லும் விதமாகச் சொன்னால் எதையும் சரியாகச் சொல்லலாம் என நிரூபித்திருக்கிறார் ‘கத்துக்குட்டி’ இயக்குநர். விவசாய மக்களின் துயரங்களை இவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருப்பதும், அதனை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நகைச்சுவையாகச் சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கது. ‘கத்துக்குட்டி’ மக்களுக்கான படம்… மாபெரும் புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்தக்கூடிய படம்!” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ”இந்த ‘கத்துக்குட்டி’ படத்தில் சொல்லப்படாத அரசியல் இல்லை. பேசப்படாத பிரச்னைகள் இல்லை. அலசப்படாத விவாதங்கள் இல்லை. ஆனால், இவ்வளவு விஷயங்களையும் சீரியஸாகச் சொல்லாமல், எப்படி எல்லாவிதத் துயரங்களையும் சிரித்த முகத்தோடு தாங்கிக் கொண்டு விவசாய ஜீவன்கள் இந்த உலகுக்குப் படியளக்கிறார்களோ… அதே பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இன்றைக்கும் கிராமங்களை ஆட்டிப் படைக்கும் சாதியக் கொடூரத்தை அட்மாஸ்பியரில் இருக்கும் ஒரு பாட்டியை வைத்துப் போகிற போக்கில் நெஞ்சைப் பிளந்திருக்கிறார் இயக்குநர் சரவணன். இத்தகைய படைப்புகளை தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும்.” என்றார்.

மகத்தான பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் அக்டோபர் முதல் தேதி திரைக்கு வருகிறது.

கருடசேவை

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்கமணி  சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு  பெருமாளுக்கு  சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரத்தில் கருடசேவை  நடைபெற்றன

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே “

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை
கொடுக்காம போறயே “

( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-2)

மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்

பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே “

பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.

“இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் …”.

ஒரு மூங்கில் தட்டை காண்பித்து “நீ கொண்டு வந்ததை எடுத்துவை” என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கனிதான் கொண்டுவந்திருக்கிறார் என்று மகானுக்கு எப்படித் தெரியும்?

அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .
சங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.

அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவாகிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலையில் உண்மை வெளிவராவிட்டால் வழக்கு : யுவராஜ்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலையில் போலீசாரால் தேடப்படும் யுவராஜ் இன்று காலை பரபரப்பான ஆடியோ ஆதாரத்தை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஆடியோவில் அவர் பேசியதாவது:–

கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைதானது முழுக்க முழுக்க சட்ட விரோதம். இதை டி.எஸ்.பி விஷ்ணுபிரியா ஏற்கவில்லை. மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதையும் அவர் விரும்பவில்லை. இந்த வழக்கில் அவர் பெயரளவுக்குத்தான் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அவரை உண்மையான விசாரணை அதிகாரியாக செயல்பட விடவில்லை. ஆனால் இந்த வழக்கில் உண்மையில் வேறு ஒரு அதிகாரிதான் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை நான் வெளியிடுவேன். .

இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தான் வெளி உலகுக்கும், இந்த நாட்டுக்கும் தெரியும். ஆனால் தர்மபுரி ,சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல். தேனி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து வந்து போலீசார் அடித்து சித்ரவதை செய்த தகவல் வெளியாகவில்லை.

ஒரு கொலை வழக்கு என்றால் அதில் அந்த கொலை வழக்கு மற்றும் அதனை சார்ந்த விஷயங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இதில் எல்லாமே அதிகப்படியான விஷயங்களாக இருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கின் விசாரணை வேறு திசையில் செல்கிறது.

இந்த கொலை வழக்கு எப்.ஐ.ஆர். போடும் வரை நான் இருந்தேன். ஆனால் வழக்கு திசை மாறியதால் நான் தலைமறைவாகிவிட்டேன். தற்போது நான் கேரளாவில் இருக்கிறேன். நான் கோவை கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டு இருந்தேன். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால் அரூரில் 2 பேரை கைது செய்தவுடன் சரண் அடைய மறுத்து விட்டேன்.

மேலும் அந்த பெண் அதிகாரி விஷ்ணுபிரியாவை கைதானவர்கள் முன்னிலையில் உயர் அதிகாரி தரக்குறைவாக பேசியது எல்லோருக்கும் தெரியும். விஷ்ணுபிரியாவை செயல்பட முடியாமல் அவரை தடுத்து வைத்து இருந்தனர்.

மேலும் விஷ்ணு பிரியா கொலை வழக்கில் உண்மை வெளியாகாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன். விஷ்ணுபிரியா கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை சரியான திசையில் போக வில்லை. உயர் அதிகாரி நிர்பந்தம் காரணமாக அவர் நிர்பந்தக்கொலை செய்யப்பட்டார்.

அவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் விஷ்ணுபிரியா வழக்கு வேறு திசையில் செல்கிறது. உயர் அதிகாரியின் நிர்பந்தம் காணமாக அவர் கொலை செய்யப்பட்டார்.

கோகுல்ராஜ் வழக்கை போல் இந்த வழக்கும் வேறு திசையில் பொய் வழக்காக செல்கிறது என யுவராஜ் பேசி உள்ளார்.

மேலும் யுவராஜ் விஷ்ணுபிரியாவுடன் பேசிய பேச்சையும் அதில் வெளியிட்டு உள்ளார். தான் கேரளாவில் இருப்பதாகவும், 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததில் உடன்பாடு இல்லை என்று விஷ்ணுபிரியா கூறி சரண் அடையுமாறு அவர் யுவராஜை கேட்டுக் கொள்ளும் விவரங்களும் அந்த ஆடியோவில் வெளியாகி உள்ளன.

மேலும் பல வழக்கு விவரங்களை யுவராஜ் கூறி இவையெல்லாம் பொய் வழக்கு என்றும், ஒரு அதிகாரி அந்த வழக்குகளை போட வைத்து தன்னை காப்பாற்ற நாடகம் ஆடுவது போல் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதாகவும் கூறி உள்ளார்.

பொய் வழக்கு போட்ட உயர் அதிகாரி விரைவில் ஜெயிலுக்கு போவார் என்றும் யுவராஜ் கூறி உள்ளார். அந்த உயர் அதிகாரி பெயரையும் அவர் அடிக்கடி கூறி அவரை திட்டியும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி உள்ளார். இப்படி அடுக்கடுக்கான தகவல்கள் அடங்கிய ஆடியோவை யுவராஜ் வெளியிட்டுள்ளாதல் தமிழக காவல் துறை வட்டாரங்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.

பால் வியாபாரத்தால் மட்டுமே வருமானம் : மொத்த குடும்ப சொத்து ரூ.61.25 கோடி: முதலமைச்சர் மகன்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்.

ஐதராபாத்தில் உள்ள தெலுங்குதேச கட்சி அலுவலகமான என்.டி.ஆர். பவனில் 5–வது ஆண்டாக நேற்று குடும்ப சொத்து விவரங்களை சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் வெளியிட்டார்.

அதன்படி சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து ரூ.61.25 கோடி என்றும் கடன் ரூ.15.30 கோடி என்றும் கடன் போக எஞ்சிய சொத்து மதிப்பு ரூ.45.95 கோடி என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்து விவரங்களை தனித்தனியாக பட்டியலிட்டு தெரிவித்த லோகேஷ் இதற்கு மேல் எங்களுக்கு சொத்து இருப்பதாக நிரூபித்தால் அதனை அவர்களே எடுத்துக் கொள்ளலாம் என்று சவால் விடுத்தார். மேலும் லோகேஷ் தெரிவித்தது

நாங்கள் ஹெரிட்டேஜ் பால் நிறுவனத்தை 1992–ல் தொடங்கினோம். 7 மாநிலங்களில் ஹெரிட்டேஜ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மொத்த மார்க்கெட் மதிப்பு ரூ.913 கோடி. இதன் 40 சதவீதம் பங்குதாரர்கள் வசம் உள்ளது.

இங்கு பால், காய்கறி விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36 கோடி வருமானம் வருகிறது. இதுவே எங்கள் குடும்ப வருமானம் ஆகும். எங்கள் நிறுவனத்துக்கு அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. மாறாக ஹெரிடேஜ் மூலம் விவசாயிகள்தான் அதிகம் பயன் பெறுகிறார்கள்.

விவசாயிகளுக்கு மட்டும் ரூ.1238 கோடி கொடுத்து உள்ளோம். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் ஹெரிட்டேஜ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டு உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

லோகேஷ் வெளியிட்ட சொத்து விவரப்படி சந்திரபாபு நாயுடு பெயரில் மட்டும் ரூ.42 லட்சம் சொத்து உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது.

கடந்த ஆண்டு 77 லட்சத்துக்கு சொத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு கடந்த ஆண்டு ரூ.31 கோடி சொத்து இருந்தது. அது இந்த ஆண்டு ரூ.33.7 கோடியாக அதிகரித்து உள்ளது.

லோகேஷ் சொத்து மதிப்பு ரூ.7.67 கோடி. அவரது மனைவி பிராமணி சொத்து மதிப்பு ரூ.4.77 கோடி. சந்திர பாபு நாயுடுவின் நிர்மான ஹோல்டிங் பிரைவேட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.37 கோடி என வெளியிட்டார்.

 

ஆபாச வலைத்தளங்கள் அனைத்தும் தடை.?

மத்திய அரசு இந்தியாவில் 847 ஆபாச வலைத்தளங்களை தடைசெய்ய முடிவெடுத்த போது கடும் எதிர்ப்பு காரணமாக திடீரென தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வலைத்தளங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் அனைத்து ஆபாச வலைத்தளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது.

நாட்டில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி கொண்டே வருகின்றன. பாலியல் தொடர்பான ஆபாச வலைத்தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகையை வலைத்தளங்கள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் பக்கம் இளையதலைமுறையினரை ஈர்க்கின்றன.

எனவே அனைத்து ஆபாச வலைத்தளங்கயும் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் சமூகத் தடைகளை குறைத்துவிட்டன: மோடி

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று கலிபோர்னியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் ‘டிஜிட்டல் இந்தியா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ’பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை நமது புதிய சுற்றுப்புறமாக மாறிவிட்டது’ என குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது , ’ஆசிரியர்கள் மற்றும் தாத்தா-பாட்டிகளின் வேலையை கூகுள் குறைத்துவிட்டது. உலகில் சூரியன் மறைவதை பார்க்க கலிபோர்னியா மிகப்பெரிய இடமாகும். ஆனால், இங்குதான் ஒவ்வொரு புதிய ஐடியாக்களும் முதலில் காணப்படுகிறது.

மராட்டியத்தில் விவசாயிகள் வாட்ஸ்-அப் குரூப் மூலம் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டு பலன்பெறுகின்றனர். தொழில் நுட்பம் என்பது அதிகாரம் அளிக்கும் மற்றும் நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளுக்கு இடையிலான பாலம் என்பதை நான் காண்கிறேன்.

மத்தியில் எனது அரசு பதவியேற்றதும், நாங்கள் நரேந்திர மோடி மொபைல் ஆப்-பை தொடங்கினோம். அது நான் மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள உதவுகிறது’

எனது அரசு மத்தியில் பதவியேற்றதும், அதிகாரமளித்தலுக்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்க நாங்கள் இணையம் மற்றும் செல்போன் மூலமாக வறுமைக்கு எதிரான தாக்குதலை தொடங்கினோம்.

அனைத்து விமான நிலையங்கள் மற்றும் 500 ரெயில் நிலையங்களில் நாங்கள் ஒயர்லெஸ் நெட்வோர்க் சேவையை கொடுத்து வருகிறோம். இவ்விவகாரம் தொடர்பாக கூகுளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

சமூக வலைதளங்கள், சமூக தடைகளை குறைத்துவிட்டது. சமூக வலைதளமானது பொதுமக்களை அடையாளத்தின் மூலம் மதிப்பிடாமல் மனிதம் என்ற மதிப்பின் மூலம் இணைக்கிறது. எனவே, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை வயர்லெஸ் நெட்வொர்க்கு மூலம் இணைக்க உள்ளோம் என்று பேசினார்.

 

 

அதிமுக அரசாங்கம் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என கூறியது வேதனை அளிக்கிறது : ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் எழுச்சி பயணத்தில் மதுரையில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தேனி மாவட்டம் புறப்பட்டு சென்றார்.

தேனிக்கு புறப்படும் முன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் எனது எழுச்சி பயணத்தை தடை செய்வதற்காக மதுரைக்குள் நுழைய தடை விதித்தனர். நான் நடைபயிற்சி செய்வதாக இருந்த பூங்காவிற்கும் பூட்டு போடப்பட்டது. எனது பயணத்தை அவர்கள் தடை செய்திருந்தால், தடையை மீறி இந்த பயணத்தை நடத்த வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பல்வேறு தடைகளை மீறி இந்த பயணம் எழுச்சிகரமாக நடந்து கொண்டுள்ளது. தொடர்ந்து பயணம் நடைபெறும். எனது 2ம் கட்ட பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தமிழக அரசு மட்டுமின்றி மதுரை மாநகராட்சியும் குடிநீர், ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை முறையாக வழங்குவதில்லை .

மேலும் இலவச பொருட்கள் எங்களுக்கு வேண்டாம். இலவசங்களை அடகு வைத்து கணவன்மார்கள் மது குடித்து விடுவதால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், பெண்களும் குறைகூறி உள்ளனர்.

சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என பேசி உள்ளது வேதனை அளிக்கிறது.

மதுவிலக்கு கொண்டு வரப்படுமா, வராதா என்பது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்டாலின் கூறினார் .

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதலமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் வீரபத்திரசிங் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர்.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் வீரபத்திரசிங், இவர் மீதும், மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யாசிங் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, டில்லி ஐகோர்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜுன் மாதம் வீரபத்திரசிங் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தி தலைநகர் ஷிம்லாவில் உள்ள முதலமைச்சரின் வீடு, அலுவலங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் நேற்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ. ரெய்டால் முதலமைச்சர்வீரபத்திரசிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.