Home Blog Page 6051

தன் நாட்டுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டியதற்கு மனீஷா கொய்ராலா மோடிக்கு நன்றி

மும்பை: நிலநடுக்கத்தால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ள நேபாள நாட்டுக்கு உடனடியாக உதவிக் கரம் நீட்டி, மீட்புப் பணிகளில் முழு உதவிகளைச் செய்வதற்காக பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த நடிகை மனீஷா கொய்ராலா, முன்னாள் நேபாள பிரதமர் பி.பி. கொய்ராலாவின் பேத்தி. அவர் பின்னாளில் மும்பையிலேயே தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது நாட்டில் ஏற்பட்ட பேரழிவு குறித்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ள அவர், மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவில்… டிவி முன் அமர்ந்து நேபாள செய்தியைப் பார்த்து வருகிறேன். கண்களில் இருந்து நீர் பெருகுகிறது. இந்தியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு நேபாளத்திற்கு உதவி வருகிறது. இதற்காக நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நேபாளத்திற்கு உதவி செய்து வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.  

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 அதிகரித்தது. கிராம் ரூ. 2,528 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 20,224 என்ற அளவிலும் விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு விலை ரூ. 6 அதிகரித்து ரூ. 2,704 என்ற அளவில் விற்பனையானது. சில்லரை வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 38.80 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ. 36,285 என்ற அளவிலும் இருந்தது.

கூட்டுறவு சங்க பால் கொள்முதல் விலையைக் குறைக்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக வைகோ குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் கொள்முதல் விலையைக் குறைக்க வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில், பால் உற்பத்தி ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மொத்தம் 11 ஆயிரத்து 503 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதோடு மகளிருக்கென 1793 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ள 2 இலட்சத்து 11 ஆயிரத்து 742 பால் உற்பத்தியாளர்கள்,பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பால் தேவை நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் ஆகும். இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 25 இலட்சம் லிட்டரும், ஆவின் நிறுவனம் மூலம் 25 இலட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்பட்டு, மக்களின் பால் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. தமிழக அரசு கடந்த 2014 அக்டோபர் மாத்தில் பால் கொள்முதலில், பசும்பால் விலையை ஒரு லிட்டர் ரூ.5 ம், எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ. 4ம் உயர்த்தி, முறையே ரூ. 28 மற்றும் ரூ.35 என பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது பால் கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதல் செய்யும் போது பாலின் தரம், அடர்த்தி நிலையைக் காரணம் காட்டி, அரசு நிர்ணயித்துள்ள விலையில் இரண்டு ரூபாய் குறைத்து வழங்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறியுள்ளனர். கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதலை 10 விழுக்காடு அளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி அறிந்து ஓ.பன்னீர்செல்வம் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக வேளாண்மைத் தொழிலில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், சிமெண்ட் விலை உயர்வு, மணல் விலை உயர்வு போன்ற காரணத்தால் வேலையின்றி தவிக்கும் கட்டுமானப் பணியாளர்களுக்கும், கால்நடை செல்வங்கள்தான் ஆதாரமாக இருக்கின்றன. பால் உற்பத்தி தொழில்தான் ஏழை எளிய மக்களை வாழ வைத்து வருகின்றது. இச்சூழலில் அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலையைக் குறைத்து வழங்குவதும், பால் கொள்முதல் அளவை குறைப்பதற்கு உத்திரவிட்டுள்ளதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளால் மக்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதற்கு கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சாதகமாகக் கருதுகின்ற தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் பால் கொள்முதல் விலையில் மூன்று ரூபாய் குறைத்துவிட்டன. கால்நடைகளுக்கு தீவனங்கள் அளித்து பராமரிக்க முடியாமல் கிராமப்புற மக்கள் திணறிக்கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க. அரசு அறிவித்தபடி கால்நடை தீவனங்கள், பசுந்தாள் தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் உருப்படியாக செயல்படவில்லை. விவசாயிகள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் கால்நடைகளைப் பராமரித்து பால் உற்பத்தி செய்தால், அரசு சார்பில் இயங்கும் பால் கூட்டுறவு மையங்கள் அதை முழுமையாகக் கொள்முதல் செய்ய மறுப்பதும், கொள்முதல் விலையைக் குறைத்துத் தருவதும் முறையற்ற செயல் ஆகும். இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் இந்நிலை தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதுடன், தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் மற்றும் பால் விற்பனை செய்யவும், விலை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதிமுக., அரசு தூக்கி எறியப்படும்; அவதூறு வழக்குகள் தூள் தூளாகும்: ராமதாஸ்

சென்னை: அரசு கம்பிவட தொலைக்காட்சி ஊழலை அவதூறு வழக்கால் மறைக்க முடியாது என்றும், அதிமுக அரசு தூக்கியெறிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும், அவதூறு வழக்குகள் தூள் தூளாகும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைவிரித்தாடும் ஊழல்கள் குறித்தும், இலவசமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் பழிவாங்கப்படுவது குறித்தும் கடந்த 15&ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். நான் குறிப்பிட்டிருந்த உண்மைகள் சுட்டதால் பதறிப்போன அரசு, கம்பிவட நிறுவனத்தின் தலைவர் மூலம் என் மீது இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. ஆனால், தங்களின் எந்தத் தவறையும் யாரும் சுட்டிக்காட்டக் கூடாது என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அரசின் தவறுகளையும், ஊழல்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டும் போது, அவதூறு வழக்கு என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டிப் பணிய வைத்து விடலாம் என்று ஆட்சியாளர்கள் கருதினால் அவர்களுக்கு ஏமாற்றமும், தோல்வியும் தான் மிஞ்சும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கம்பிவடத் தொலைக்காட்சியில் எப்படியெல்லாம் ஊழல் நடக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தேன். இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஊழல் நடைபெறவில்லை என்றால் அதை விசாரணை நடத்தி நிரூபித்திருக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் முன்வராத ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதிலிருந்தே கம்பிவட தொலைக்காட்சி நிறுவன ஊழல்கள் அம்பலமாகிவிடக்கூடாது என்ற அவர்களின் நடுக்கம் தெரிகிறது. ஒரு கம்பிவட இணைப்புக்கு அதிகபட்சமாக ரூ.70 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை அவதூறு வழக்குத் தொடர்ந்த கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரோ அல்லது அவரை இயக்குபவர்களோ ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் யாருக்கு செல்கிறது? தமிழகத்தில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மொத்தம் எத்தனை இணைப்புகள் உள்ளன? என்பது தொடர்பாக ஆட்சியாளர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறுகின்றனர். கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணையதளத்தில் 01.09.2013 நிலவரப்படி 62.17 லட்சம் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 04.07.2014 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியக் கடிதத்தில் 65 லட்சம் இணைப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் 15.07.14 நிலவரப்படி 70.52 லட்சம் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக மக்கள் தொலைக்காட்சி வழக்கில் 07.04.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் 50 லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாகவும், அதன் மூலம் மாதம் ரூ.10 கோடி மட்டுமே வருமானம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது உண்மை? நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களின்படி, தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்பங்கள் கம்பிவட இணைப்புக்கள் பெற்றுள்ள நிலையில், அரசு நிறுவனம் 50 லட்சம் இணைப்புகளை மட்டும் தான் வழங்கியிருக்கிறது என்றால் மீதமுள்ளவற்றை எந்த நிறுவனம் வழங்கியுள்ளது? பிற நிறுவனங்கள் சுமார் 25 லட்சம் இணைப்புகளை மட்டுமே வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், மீதமுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் கணக்கில் காட்டப்படாமல், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் சுரண்டப்படுகிறது என்பதில் என்ன தவறு? தமிழ்நாடு முழுவதும் 800 உள்ளூர் தொலைக்காட்சிகள் அரசு கம்பிவடத்தில் காட்டப்படுவதாக கம்பிவட நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கையில் 706 உள்ளூர் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளூர் தொலைக்காட்சிகள் அரசு கம்பிவடம் மூலம் வழங்கப்படுகின்றன. ஒரு உள்ளூர் தொலைக்காட்சியை ஒளிபரப்ப ரூ.7 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அதில் பாதிக்க்கும் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கணக்கில் காட்டப்படாத உள்ளூர் தொலைக்காட்சிகளிடமிருந்து கிடைக்கும் பணம் யாருக்கு செல்கிறது? வட்டார அளவில் அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவன நிர்வாகத்தில் ஆளுங்கட்சி தலையீடு அதிகமாக உள்ளது. கணக்கில் காட்டப்படாத உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கான கட்டணத்தை இவர்கள் தான் வசூலித்து உரியவர்களிடம் சேர்ப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அரசு தயாரா? கட்டணத் தொலைக்காட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.14 கோடி கட்டணமாக வழங்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி ஆளுங்கட்சித் தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சிக்குத் தான் வழங்கப் படுகிறது. கட்டணத் தொலைக்காட்சிகளில் பலவற்றுக்கு கம்பிவட நிறுவனம் எந்த கட்டணமும் செலுத்துவதில்லை. மாறாக பல கட்டணத் தொலைக்காட்சிகளிடமிருந்து கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்புக் கட்டணம் வசூலிக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஜெயா தொலைக்காட்சிக்கு மட்டும் மக்கள் பணத்தை வாரி வாரி இறைப்பது ஏன்? மேற்கண்ட வினாக்களுக்கு ஆட்சியாளர்களால் பதில் கூற முடியாது. அதனால் தான் அவதூறு வழக்குத் தொடர்கிறார்கள். தொட்டவை அனைத்திலும் ஊழல் செய்யும் அ.தி.மு.க. அரசை மக்கள் தூக்கியெறியும் நாள் தொலைவில் இல்லை. அப்போது இந்த அவதூறு வழக்குகளும் தூள்தூளாகும்.

பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

supreme-court-India புது தில்லி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமனம் செய்தது செல்லாது உச்ச நீதிமன்றம் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு கூறியது. இது தொடர்பாக, பவானி சிங் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக., பொதுச் செயலர் அன்பழகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை விசாரித்தபோது, மாறுபட்ட கருத்துக்களை இரு நீதிபதிகளும் தெரிவித்திருந்தனர். bhavani_singhஇதையடுத்து இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 21ஆம் தேதி இந்த மனு குறித்துக் கூறுகையில், பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது சரியல்ல எனினும், இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தது அதன் அடிப்படையில், இன்று இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்கக்கூடாது: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசு மற்றும் அன்பழகனின் எழுத்துபூர்வ வாதங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரு தரப்பு வாதங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அன்பழகன் தரப்பு, தனது எழுத்துபூர்வ வாதத்தை நாளைக்குள் கர்நாடக உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க தடை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு சதி: அன்பழகன் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் anbazhagan-dmk ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நீதிபதி குமாரசாமி கேட்டிருந்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் உள்ளிட்ட தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளதாக, வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை 90 பக்கங்களுக்குள் நாளை ஏப்.28க்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை அன்பழகன் தரப்பு வழக்குரைஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்குமாறு ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தையும், மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்து எடுக்கும் நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து விட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, இத்தகைய போக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடித நகலை அன்புமணி வெளியிட்டார். அந்தக் கடிதத்தின் விவரம்: பெறுதல்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், தருமபுரி. அன்புடையீர் வணக்கம், நாடாளுமன்ற 16-வது மக்களவைக்கு தமிழகத்தில் 24.04.2014 அன்று நடைபெற்ற பொது தேர்தலில் மிக கடுமையான போட்டிக்கு இடையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த சுமார் 5 இலட்சம் வாக்காளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். நான் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாழும் சுமார் 18 இலட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளேன். Ø கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட சமூக வளர்ச்சி குறியீடுகளில் தமிழக அளவில் தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் 32 வது மாவட்டமாக உள்ளது. Ø தருமபுரி மாவட்டத்தை சார்ந்த சுமார் 3 இலட்சம் பேர் தான் பிறந்த சொந்த மண்ணில் வாழ்வாதாரம் பொய்த்துப்போனதால் வெளி மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி கூலி வேலைக்கு சென்றுள்ளனர். Ø தருமபுரியில் அமையவுள்ள சிப்காட்டிற்கு நிலம் தேர்வு செய்தும் மேற்கொண்டு ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் நடைப்பெறவில்லை. Ø ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டும் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை. வழங்கப்படும் பகுதிகளிலும் குடிநீர் விநியோகமும் சீராக இல்லை. பெரும்பாலான பகுதிகளில் திட்ட நோக்கத்திற்கு முரண்பாடாக சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீருடன் அந்தந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீர் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. Ø விதவை, முதியோர் ஓய்வூதியம் பெற்றுவந்த தகுதியான ஆயிரகணக்கான நபர்களுக்கு தற்போது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. Ø குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல ஆண்டுகளாகியும் இதுவரை குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. Ø நீர்வள ஆதாரங்களை முறையாக திட்டமிட்டு நிறைவேற்றாததால் மழை பெய்தும், மழைநீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் வீணாகிறது. Ø சித்தேரி, சிட்லிங், வத்தல்மலை, கோட்டூர்மலை உள்ளிட்ட மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவது அவசியமாகிறது. இது என்னுடைய கொள்கையாகும். எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும். இதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை உருவாக்கவும், அதற்காக பாடுபடவும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தேன். என்னால் தருமபுரி மாவட்டம் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு வாக்களிக்கப்பட்டது. இந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடும் உண்மையான மக்கள் பிரதிநிதியாக செயலாற்ற விரும்புகிறேன். இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மாவட்ட நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே புரிதலை உருவாக்குவதற்காகவும் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டதே மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவாகும். (District Vigilance & Monitoring Committee) மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் வழிக்காட்டு நெறிமுறைகள் படி நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தலைவராகவும், மாவட்ட ஆட்சி தலைவரான உங்களை செயலாளராகவும் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 06.12.2014 அன்று நடைபெற்ற இக்குழுவின் முதல் கூட்டத்திற்கு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இக்கூட்டத்தில் நீங்கள் பங்கேற்காமல் அமைச்சர் வேறொரு நிகழ்ச்சிக்கு அழைத்ததாக கூறி சென்றுவிட்டீர்கள். நடுவணரசின் மாதிரி கிராம திட்டத்தின் கீழ் மோட்டாங்குறிச்சி ஊராட்சியை நான் தேர்வு செய்தேன். திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படி கடந்த 16.04.2015 அன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமிலும் தாங்கள் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டீர்கள். வெளிமாவட்டத்தை சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் நீங்கள் ஆர்வமுடன் பங்கேற்ப்பதும், தருமபுரி மாவட்ட மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட நான் பங்கேற்கும் மிக முக்கியமான அரசு நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து புறக்கணிப்பதும் வருத்தமளிக்கிறது. அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நீங்கள் தான் தலைவர். உங்கள் தலைமையில் தான் அதிகாரிகள் அனைவரும் இயங்குகின்றனர். நான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவரான நீங்களே புறக்கணிப்பது தவறான முன்னுதாரனமாகிவிடகூடாது. தருமபுரி மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும். இம்மாவட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மக்கள் நல சேவைப்பணியில் எனக்கு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் இப்பணியை என்னுடைய முதன்மை கடமையாக கருதுகிறேன். ஆகவே இனி வரும் காலங்களில் அரசியல் பார்க்காமல் தருமபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி எல்லோரும் சேர்ந்து மக்கள் பணியாற்றுவோம். அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மாவட்டத்தை முன்னேற்ற உங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க அன்புடன் எதிர் பார்கின்றேன். நன்றி, அன்புடன் (மரு. அன்புமணி இராமதாஸ்)

பலத்த மழை: கொல்கத்தா – ராஜஸ்தான் போட்டி ரத்து

ஐபிஎல் சீஸன் 8 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெறுவதாக இருந்த போட்டி பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்று மாலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தது. பிற்பகல் 2 மணியில் இருந்து இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், மைதானத்தில் நீர் தேங்கியது. தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றும், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற இயலவில்லை. இதனால், இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த சீசனில் ரத்தான முதல் போட்டி இதுவே. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

சீர்காழி அருகே காரை வழிமறித்து பெண் பட்டப் பகலில் படுகொலை

murder-sirgaziசீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரில் சென்ற பெண்ணை, காரை வழிமறித்து இறக்கி, பட்டப் பகலில் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணனின் மனைவி வினோதா (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாராய வியாபாரியான ராமுவுக்கு ரூ.90 கோடி சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எழிலரசியை ராமு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், சொத்தின் ஒரு பகுதியை எழிலரசி பெயருக்கு எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் எழிலரசியுடன் ராமு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரைக்கால் பகுதியில் அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் ராமுவை வெட்டிக் கொலை செய்தது. எழிலரசி காயத்துடன் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் வினோதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் தனது குழந்தைகளுடன் சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு தனது தங்கை பிரியாவின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இதனிடையே ராமு கொலை தொடர்பாக வினோதா, அவரது தங்கை கணவர் ஆனந்த், ராமு நண்பர் அய்யப்பன், வைத்தியநாதன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குப் பதிவு செய்த சில மாதங்களிலேயே ராமுவின் நண்பர் அய்யப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழிரலசி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சொத்துக்கள் தொடர்பாக சென்னையில் இருந்து திருமலைராயன்பட்டினம் வந்த வினோதா நேற்று மதியம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சென்ற காரில் வினோதாவின் தங்கை கணவரின் நண்பர் நவநீததிருஷ்ணனும் உடன் சென்றார். அவர்கள் வந்த கார், சீர்காழி புறவழிச்சாலை உப்பனாற்றுப் பாலம் அருகே சென்ற போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கார் வினோதாவின் காரை வழிமறித்தது. கார் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவே, 10 பேர் கொண்ட கும்பல் அந்தக் காரில் இருந்து இறங்கி வினோதா வந்த காரை அடித்து நொறுக்கினர். ஓட்டுநர் மற்றும் காரில் வந்தவரை மிரட்டி, காரில் பின் இருக்கையில் இருந்த வினோதாவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் முகம் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். கொலை செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அவர்கள் வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார், கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப் பட்டிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். அதில், அந்த காரின் நம்பர் பிளேட் போலியானது என்று தெரியவந்தது. வினோதாவின் படுகொலை குறித்து அவரது தங்கை கணவர் ஆனந்த் சீர்காழி போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து எழிலரசியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விவசாய பயிர்க் கடனுக்கு 7 % வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: விவசாய பயிர்க் கடனுக்கு 7 சதவீத வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட அறிக்கை: ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியான செய்தி என்பதைத் தாண்டி நம் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் – தலைகுனிவு என்பதே 120 கோடி மக்களும் வேதனையோடு மனதில் பதிக்க வேண்டிய விஷயம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை தருவது விவசாயம் என்று நாம் பெருமையோடு கொள்ளும் மகிழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று வரும்போது அந்த மகிழ்ச்சியை தற்காலிகமான மகிழ்ச்சியாகத்தான் கருத முடியும். விவசாயியை, சாகுபடி செய்து சாதனை படைப்பவனாக மாற்ற வேண்டிய அரசு, அவன் சாகும்படி செய்வதுதானா சாதனை? வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக மாற்றிய பெருமைக்குரிய தொழில் அதிபர்கள் தங்கள் வசதி வாய்ப்புகளை இம்மியளவும் குறைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சில ஆயிரம் கடன்பட்ட விவசாயிகளை மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்ய வைப்பதா பொருளாதார முன்னேற்றம்?. இத்தகைய நிலையில் ரிசர்வ் வங்கி, 2015-2016 சிறப்பு விவசாய கடன் சலுகை அளித்ததில் விவசாயிகளுக்கு பயிர் கடன் 7 சதவீதம் வட்டியில் வழங்க வேண்டும் என்றும், குறித்த காலக்கெடுவில் கட்டி முடிந்தால் அதில் 3 சதவீதம் சலுகை வழங்கி 4 சதவீதம் வட்டி மட்டும் வசூலிக்கலாம் என்றும் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. இச்சலுகையை 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியோடு முடித்துக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது. பின்னர் இதே சலுகையை ஜூன் இறுதி வரை நீட்டித்துள்ளது. இப்படி அவ்வப்போது நீட்டிக்காமல், விவசாய பயிர்க்கடனுக்கு 7 சதவீதம் வட்டியை உறுதி செய்து அதை ஒழுங்காக கட்டும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் சலுகையை வழங்கி 4 சதவீதம் வட்டியை உறுதி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள இந்த சலுகையை விவசாயிகளுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்ய வேண்டும். பருவ மழைக் குறைபாடுகள், வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி ஏற்படுத்தும் பாதிப்பு, விவசாயத்தில் நிலையற்ற தன்மை, லாபம் என்பது கேள்விக் குறியான நிலை என விவசாயத் தொழிலில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டிய அரசு, விவசாயத்தை மேலும் பலவீனப்படுத்தும் விதமாக விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாரத ரிசர்வ் வங்கி தற்போது அதிகரிக்க இருக்கும் வட்டி விகித உயர்வை திரும்பப்பெற செய்வதோடு மேலும் குறைக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் நலனில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கடுமையாக உழைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

சென்னை; மக்களின் ஆதரவைப் பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…. சென்னையில் மிகச் சிறப்பாக நடை பெற்ற தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமாகா வெற்றிக் கட்சியாக மாற, கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் இரு கண்களாக நினைத்து தொண்டாற்ற வேண்டும். மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைய தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குக்கிராமங்கள் வரை எடுத்துச்சென்று மக்கள் ஆதரவைப் பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் – என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.