கோல்கத்தா காங்கிரஸுடன் இனி கூட்டணியில்லை, ஆனால் பிரச்னை வந்தால் கை கோத்து செயல்படுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சீதாராம் யெச்சூரி முதல் முறையாக மேற்கு வங்கத்துக்கு வந்தார். அப்போது, கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அடிப்படை சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே நேரம் நாடாளுமன்றத்தில் பிரச்னைகளின் அடிப்படையில் காங்கிரசுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு உள்ளது. மோடியின் அரசு இந்துத்வ சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பொருளாதாரக் கொள்கைகளில் தாராளம் காட்டி, மக்கள் விரோதமாக நடந்து கொள்கிறது. எனவே மோடி அரசுக்கு எதிராக போராட விரும்பும் அனைத்து மதசார்பற்ற எதிர்க்கட்சிகளும் எங்களுடன் சேர்ந்து போராடுவதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.. என்று கூறினார்.
பத்மநாமசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டு மூட்டை கண்டுபிடிப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டுகள் அடங்கிய மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே அண்மையில், ரகசிய அறைகளில் அரிய வகை தங்க நகைகள், பொற்குவியல்கள் இருப்பது கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து, இது மேலும் புகழ் பெற்றது. இங்கே அரிய பொக்கிஷங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, கோவிலுக்குள் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் பத்மதீர்த்தக் குளமும், வடக்கு வாசல் பகுதியில் ஸ்ரீபாத குளமும் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்கீழ் இந்தக் குளங்கள் தூர் வாரப்பட்டு குளத்தைத் தூய்மைப் படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஸ்ரீபாத குளத்தில் நேற்று வழக்கம் போல் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது, ஒரு மணி அளவில் ஒரு மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கண்டெடுக்கப்பட்டது. அதனை கோவில் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பார்த்தபோது, வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஐந்து ‘பைப்’ வெடிகுண்டுகள் இருந்தது தெரிந்தது. அவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், ஆய்வுக் கூடத்துக்கு அவற்றை அனுப்பிவைத்தனர். இந்த வெடிகுண்டுகள், நாச வேலை எதற்காகவாவது கொண்டு வரப்பட்டதா? என்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் குளத்தில் போடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தற்போது அதன் வீரியத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் அதில் ஒரு குண்டு வெடித்த நிலையில் கருகியிருந்தது என்றும், ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது, விரைவில் முழு உண்மையும் தெரியும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தன் தலைமையில் பிரதமரைச் சந்திக்க ஆதரவளித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி
சென்னை: தனக்கு ஆதரவளித்து கட்சி உறுப்பினர்களை உடன் அனுப்பி வைக்க சம்மதித்த கட்சிகளுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக., தலைவர் விஜயகாந்த், நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்தார். மேகதாது அணை விவகாரத்தில் பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லப் போவதாகக் கூறினார். அவருடைய அழைப்பை ஏற்று, அவரது தலைமையில், திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்ப அக்கட்சிகளின் தலைவர்கள் சம்மதித்தனர். இதனால், இன்று அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருடன் பிரதமரை சந்தித்து, மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் வேண்டுகோளை விடுக்க உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ‘எனது அழைப்பை ஏற்று குறுகிய காலத்தில் பிரதமரை சந்திக்க பிரதிநிதிகளை அனுப்பி வைத்த கட்சிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.
பசுபதிநாதர் கோவில் அருகே நூற்றுக் கணக்கான உடல்கள் தகனம்
காத்மாண்டு: நேபாளத்தில் பூகம்பத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய போதிய தகன மேடை வசதி இல்லை என்பதால், எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஒட்டுமொத்தமாக உடல்களை தகனம் செய்து வருகின்றனர். நேபாளத்தில் புகழ் பெற்ற பசுபதிநாதர் கோவில் அருகே அமைந்துள்ள தகன மையத்தில் ஏற்பட்டுள்ள கடும் இட நெருக்கடி காரணமாக அந்த தகன மையத்துக்கு வெளியே கிடைத்த இடத்தில் எல்லாம் உரிய இறுதிச் சடங்குகள் கூட முறையாக செய்யப் படாமல், தகனம் செய்து வருகின்றனர். நேற்று அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் தகனம் செய்யப்பட்டன. பல தகன மையங்களில் உடல்களை எரியூட்டுவதற்காக உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவானி சிங் நியமனத்துக்கு எதிரான அன்பழகன் மனு: இன்று தீர்ப்பு
புது தில்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனத்துக்கு எதிராக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பவானி சிங் நியமனம் குறித்த இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று காலை அளிக்க உள்ளது.
நேபாள நிலநடுக்கம்: பலி 2,789 என அறிவிப்பு
காத்மாண்டு; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,789 என்று அரசு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தது. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘பெரியவாளின் ‘யுனீக்’ ஸாமர்த்தியம்”
‘பெரியவாளின் ‘யுனீக்’ ஸாமர்த்தியம்” (அயல் நாட்டுக் குழந்தையின் பாதபூஜை) கட்டுரையாளர்-ரா-கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். “தம்பதியோ (நீலம் ராஜு மகளும் மருமகனும்) உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்;உயிர் காத்த மனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்; அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர்.” (நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி) அப்படித்தான் இப்போது ஸ்ரீ சரணரின் சரணாரவிந்தத்துக்குப் பாதபூஜை செய்யப் புஷ்பங்களும், ஸ்வர்ண புஷ்பங்களும் எடுத்துக் கொண்டுவந்திருக்கின்றனர். பெரியவாளின் ரக்ஷக சக்தியும் ரக்ஷிக்கப்பட்டவர்களின் உத்தம பக்தியும் உடனிருந்தோரை உருக்கி விட்டது. பெரியவாள் மிராகிளில் தமக்கு சம்பந்தமேயில்லாதது போல,ஆனால் மலர்ச்சியுடன் அவர்கள் கூறியதையெல்லாம்கேட்டுக் கொண்டார். பன்னீராகச் சிறிது நேரம்அவர்களிடம் பேசினார். பிறகு பாரிஷதர்களிடம் கூறித் தமது பாதுகைகளைத் தருவித்தார். தம்பதியின் பெண் குழந்தையை அருகழைத்தார்.அதன் பெற்றோர் கொண்டு வந்திருந்த புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் யாவற்றையும் அதன் புஷ்பக் கையாலேயேஎடுத்துப் பாதுகைக்கு அர்ச்சனையாகப் போடச் சொன்னார். குழந்தை ஆசை ஆசையாகப் பாத பூஜை செய்தது.பெற்றோர் ஆனந்தத்துடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஸ்ரீசரணர் அவர்களை நோக்கி, “நீங்கள் இருவரும் சேர்ந்துஇந்தக் குழந்தை. இது பண்ணும் பூஜை நீங்களே செய்வதுதான்!அதோடு உங்கள் கையால் பண்ணுவதை விட இது குட்டிக்கையால் பண்ணும்போது நிறைய அர்ச்சனை, நிறைய நாழிநடக்கும்” என்று முகமெலாம் நகையாகத் தெலுங்குமொழியில் கூறினார். அவர்களது ஆனந்தம் அப்போது ஆராத ஆனந்தமாயிற்று!பூஜை முடிந்தது. ஸ்ரீசரணர் அவர்களை அழைத்துச் சென்று வயிறார போஜனம் செய்விக்குமாறு பாரிஷதர் சிலரிடம் பணித்தார். அவர்கள் சென்றபின் உடனிருந்தோரிடம் சொல்வார்; “இந்தப் புண்ய பாரத தேசத்தில் பிறந்த ஒருவர் அந்நிய தேசம்போய் நம்முடைய ஆசாரங்களில்லாத ஜனங்களுடன் பழகி விட்டுத் திரும்பி வரும்போது அங்கே என்ன அநாசாரம்நடந்திருக்குமோ என்கிறதால் அவர்களை ரொம்பவும் சாஸ்த்ரோக்தமான கர்மாக்களில் அநுமதிப்பதில்லை. அதனால் நீலம் ராஜுவுடைய பெண்-மாப்பிள்ளை பாத பூஜைசெய்கிறதற்கில்லை, சாஸ்த்ரிகளை வைத்துக் கொண்டு ‘ஆசார்ய முகேன’ என்று அவரிடம் அவர்கள் புஷ்பம்முதலானதைக் கொடுத்து அவர் கையால் பூஜை பண்ணியிருக்கலாம்தான்! ஆனால் அவர்களுக்கிருந்த பக்திதாபத்தில், நேரே தாங்கள் பூஜை பண்ணாமல் ஒருத்தர் கையில்கொடுத்துப் பண்ணுவது ரொம்பவும் மனஸுக்கு ஏற்காமலே இருக்கும். அதுவே தங்கள் குழந்தை தங்களுக்காகப் பண்ணுகிறது,அதோடு நான் சொல்லிப் பண்ணுகிறது என்கிறபோது தாங்களே பண்ணுவதை விடவும் அவர்களுக்கு ஸந்துஷ்டியாயிருக்கும். “கடல் கடந்த தோஷம் குழந்தைக்கும் தானே இருக்கிறது என்று தோன்றலாம்.அப்படியில்லை. அது புண்ய பாரத தேசத்திலிருந்துவேறே ஆசாரமுள்ள வெளியிடத்துக்குப் போகவில்லை. இந்தக்குழந்தை பிறந்ததே இங்க்லாண்டில்தான். அங்கே பிறந்த குழந்தைஇந்தப் புண்ய தேசத்துக்கு வந்திருக்கிறது.அதோடு குழந்தைப் பிராயம் என்கிறதாலும் ஒரு பரிசுத்தி. அதனால்தான் சாஸ்த்ரத்துக்கு வித்யாஸமாகவும் பண்ண வேண்டாம்,நல்ல பக்தி மனஸுக்காரர்களின் தாபத்தை சமனம் செய்யாமலும் இருக்க வேண்டாம் என்று அந்தக் குழந்தையை விட்டுப் பாத பூஜை பண்ணச் சொன்னது.” அபிஷேக தீர்த்தத்திற்குப் பதில் இளநீர் (எம்.எஸ்.-சதாசிவம்)கொடுத்த அதே ‘ஸாமர்த்தியம்’ தானே இங்கேயும் பேசுகிறது?மூளையின் ஸாமர்த்தியத்துடன் இதயத்தின் ஒட்டுதலையும்ஒட்டிய இந்த ‘யுனீக்’ ஸாமர்த்தியத்தை என் சொல்ல?
நேபாளம்: மீட்புப் பணியில் களம் இறங்கும் ஆர்.எஸ்.எஸ்
புது தில்லி: அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளில் களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளது. நேபாள அரசுடன் முறைப்படி கலந்தாலோசித்த பின்னர் மீட்புப் பணியில் இறங்கவுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. முன்னதாக, நேபாளம் சென்றடைந்த ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹாஸ்போலே அங்குள்ள இந்து ஸ்வயம்சேவக சங்கத்துடன் இணைந்து மீட்புப் பணி திட்டத்தை வடிவமைத்து வருகின்றார். சேத அளவு, மீட்புப் பணி தேவைப்படும் பகுதி என பார்வையிட்டு அதற்கேற்ப இந்தியாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நேபாளத்துக்கு அனுப்பப்படவுள்ளனர்.
தில்லியைப் பந்தாடிய பெங்களூரு அணி: விக்கெட் இழப்பின்றி வெற்றி
தில்லி: ஐபிஎல் சீஸன் 8 தொடரில், இன்று தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில், தில்லி அணியை விக்கெட் இழப்பின்றி வென்று சாதித்தது பெங்களூர் அணி. முதலில் பேட்செய்த தில்லி அணி, துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது. 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 95 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 33 ரன் எடுத்தார். மயன்க் அகர்வால் 27 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூர் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்லும் விராட் கோலியும் இணைந்து 10.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 99 ரன் சேர்த்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். கெயில் 62 ரன்னும் விராட் கோலி 35 ரன்னும் எடுத்தனர்.
நேபாளத்தில் பூகம்பத்துக்கு 2500 பேர் வரை பலி; மீண்டும் நில அதிர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் சனிக்கிழமை நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2500ஐத் தாண்டியுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்திய அரசு மீட்புப் பணியில் நேபாளத்துக்கு உதவி வருகிறது. இந்நிலையில், இந்த பூகம்பத்தில் 2500 பேர் வரை பலியாகியுள்ளனர். பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் ஏற்பட்டு அந்நாட்டு மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், காத்மாண்டுவை மையமாக வைத்து அங்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவானது.

