சென்னை: மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இன்று காலை விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பிரதமரைச் சந்தித்து நடவடிக்கை கோரப் போவதாக அவர் கூறினார். அந்த சந்திப்பில் ஸ்டாலினும் இருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மேகதாது அணை தொடர்பாக பிரதமரை சந்திக்க செல்லும் விஜயகாந்துடன், கனிமொழி- திருச்சி சிவா ஆகியோர் தி.மு.க, சார்பில் செல்வர் என தெரிவித்தார். மேலும் இந்த பிரச்னையை எடுத்துச் செல்ல வேண்டிய தமிழக அரசு செயலற்றுப் போனது. இதனால் விஜயகாந்தின் இந்த முயற்சியை கருணாநிதி பாராட்டினார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ராய்லட்சுமி – சண்டைக் காட்சியில் காயம்
நடிகை ராய் லட்சுமி, சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தன் டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவருக்கு பலரும் டிவிட்டரில் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
Injured while shooting the action sequence for the show ! intense learnt something that I always wanted to do pic.twitter.com/vSKs3WOzat — RAAI LAXMI (@iamlakshmirai) April 26, 2015
நேபாள துயரத்தில் பங்கெடுத்த இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது: பாரி வேந்தர்
நேபாளத்தில் ஏற்பட்ட துயரம் மிகவும் வருந்தத்தக்கது அதே நேரம் இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பார் வேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது அண்டை நாடான நேபாளம்,இந்தியர்களின் தொன்மையான சுற்றுலாத் தலமாகும். வெறும் சுற்றுலாத்தலம் என்பதோடு மட்டுமல்லாது, ஆன்மீக வழிபாட்டு யாத்திரை மேற்கொள்ளும் பல லட்சம் பக்தர்களின் புனிதத்தலமாகவும் விளங்குகிறது. உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் மலை சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம், இந்தியாவுடன் கலாச்சார பண்பாட்டு உறவினையும் கொண்ட நாடாகும். அந்த நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நம்மையெல்லாம் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. காட்மண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பல நகரங்கள்,கிராமங்கள் என பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த நில அதிர்வில் சிக்கி, குடும்பத்துடன் புதையுண்டு போயிருக்கிறார்கள். யுனெஸ்கோவால் கண்டறியப்பட்டு,பாதுகாக்கப்பட்டுவந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சில கட்டிடங்களும்,கோபுரங்களும்கூட இந்த பூகம்பத்தினால் இடிந்து போயுள்ளன. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள பலபேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரத்தில்,பீகார்,உத்தரப்பிரதேசம்,டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இந்த நில அதிர்வின் மூலம் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குறியதாகும். தகவல் அறிந்ததும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்திற்கு சிறப்பு அதிரடி மீட்புப் படையையும், உயிர் காக்கும் மருந்து, உணவுப் பொருட்கள், ஆடைகள் என அவசரத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும். அதே போல்,பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என கூறி ,அம்மாநில முதல்வருக்கு வாக்களித்துள்ளார். இயற்கையின் கொடுஞ்சீற்றத்தை மனிதனால் வெல்லமுடியாது என்றாலும், நிலைமையின் ஆபத்தை ஓரளவிற்கு தடுக்கமுடியும் என்பதே உண்மை. அந்த வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் இந்திய ஜனநாயக கட்சியும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். – என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஒழுங்காகப் பணி செய்வதில்லை: இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை: ஞாயிற்றுக் கிழமை இன்று காலை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அரசியல் நடவடிக்கைகளால் திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தின் 5 பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகளிடம் பேசி, அவற்றை பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல இருப்பதாகக் கூறி முதலில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு விவகாரங்களின் தமிழக அரசின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்தது பொதுநலம் சார்ந்து அல்ல; சுயநலம் சார்ந்துதான் என்று விஜயகாந்த் குற்றம் சாட்டினார். இதன் பின்னர் விஜயகாந்தின் திடீர் அரசியல் நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய போது, “தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பணியை ஒழுங்காகச் செய்யாத நிலையில், தமிழர்களுக்கான பணிகளை எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் செய்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் துணை நிற்கும். முதல்வர் பன்னீர்செல்வம், மேகதாது அணை பிரச்னையில் அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தமிழர் பிரச்னை தொடர்பாக அவர் மோடியை சந்திக்கவில்லை என்பதால் மற்றவர்களை அழைத்துச் செல்லவில்லை. இந்நிலையில், பன்னர்செல்வம் செய்ய வேண்டிய வேலையை விஜயகாந்த் தற்போது செய்து வருகிறார். பிரதமருடன் பேச அனைத்துக் கட்சியினரையும் அவர் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பில் ஒருவர் விஜயகாந்த்துடன் சென்று, பிரதமர் மோடியை சந்திப்பார் … என்றார்.
மக்கள் முதல்வர்; பினாமி முதல்வர்; தேக்கநிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் மக்கள் முதல்வர் பினாமி முதல்வர் ஆகியோரால் எல்லாவற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னையில் கோபாலபுரத்தில் ஸ்டாலின் வாக்களிக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து, தன் வாக்காளர் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுத்து விட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் வாக்காளர் படிவம் ஆதார் எண் இணைப்பு குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே கொடுப்பதாக தன்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், கர்நாடகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்து மேகதாது விவகாரத்தில் மனு கொடுக்கின்றன. அத்தகைய நிலை தமிழகத்தில் இல்லை. ஆளுங்கட்சியான அதிமுக., எதிர்க்கட்சிகளிடம் எதையும் கேட்பதில்லை, கூட்டம் போடுவதில்லை, எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஒற்றுமை ஏற்படவும் விடுவதில்லை. இத்தகைய தேக்க நிலைக்குக் காரணம் தமிழகத்தில் மக்கள் முதல்வரும் பினாமி முதல்வரும்தான்.. என்று குற்றம் சாட்டினார்.
I visited my election booth at gopalapuram today, checked my name in electoral roll and linked my Aadhaar Number. I… Posted by M. K. Stalin on Saturday, April 25, 2015
அந்த 5 பிரச்னைகள்: குஷ்பு, இளங்கோவன், ப.சிதம்பரத்தை சந்தித்த விஜயகாந்த்
சென்னை: இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும், விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை பிரச்னை உள்ளிட்ட 5 பிரச்னைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினாராம். இந்த சந்திப்பின்போது, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, குஷ்பு, தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். அவர் முன் வைத்த அந்த 5 பிரச்னைகள்: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் மசோதா, கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் பிரச்னை, செம்மரக் கடத்தல் காரணம் கூறி தமிழர்கள் கொல்லப்பட்டது, தமிழக மீனவர்கள் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் நிலை ஆகிய ஐந்து பிரச்னைகளை முன்வைத்து விஜயகாந்த் சந்தித்ததாகக் கூறியிருந்தார். தமிழகத்தில், சட்ட மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தயாராகுமாறு எல்லாக் கட்சிகளுமே இப்போதே தங்கள் அரசியல் நடவடிக்கைகளை துவக்கி விட்டன. மேலும், இப்போதே கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கருணாநிதியை சந்தித்து, கூட்டணிக்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் விஜயகாந்த் என்ற கருத்தும் இல்லாமல் இல்லை. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்த், கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என இப்போதே அரசியல் பேச்சு களை கட்டிவிட்டது.
இணையமும் மக்களின் அடிப்படை உரிமை என்றாகும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: இணையதளமும் மக்களின் அடிப்படை உரிமை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும் நாளினை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இணையதளத்தை தடையில்லாமல் பயன்படுத்துவது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெருவாரியான மக்கள் ட்ராய் அமைப்பிற்கு முறையிட்டுள்ளார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட, அதாவது பத்து லட்சம் இ-மெயில் ட்ராய் அமைப்புக்கு வந்திருக்கிறது என்று தகவல். இந்நிலையில் “இணையதள சமநிலை” பற்றி விவாதிக்க தற்போது தொலை தொடர்புத்துறையும் “பல்நோக்கு ஆலோசனைக்குழு” வின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பொது நலன் சார்ந்து மக்களும், சமூக ஆர்வலர்களும் முன் வைத்த கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றே இதை கருதுகிறேன். இந்த விஷயத்தில் அரசும், தனியார் கம்பெனிகளும் அர்த்தமுள்ள வகையில் இணைந்து பயணிக்க ஒரு வழி காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் இணையதளம் முக்கியப் பங்காற்ற வேண்டும். அந்த நோக்கில், பொருளாதாரப் பயன்களைப் பெறவும், அறிவை பெருக்கிக் கொள்ளவும் முதல் முறையாக இணைய தளம் என்ற மேடை மக்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த இணைய தள சேவையை கிராமப்புறங்கள் அனைத்திற்கும் எடுத்துச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க இவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ள ஜனநாயக நாடுகள் பல இணையதளத்தின் அருமையை உணர்ந்து, அதை பயன்படுத்தி மக்களுக்கு சேவைகளை எப்படி வழங்குவது என்பதில் புதுப்புது முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆகவே, கல்வியிலிருந்து பொறுப்புள்ள நிர்வாகம் வழங்குவது வரை, மக்கள் தங்களுக்கு வேண்டிய சேவையை பெறுவதற்கு இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். இணையதளம் ஏதோ மேல்தட்டு மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல அனைவருக்கும் சொந்தமானது. பல்வேறு உரிமைகள் போல் இணையதளமும் மக்களின் அடிப்படை உரிமை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும் நாளை நான் எதிர்பார்க்கிறேன். இப்போது மத்திய அரசு அமைத்திருக்கும் “பல்நோக்கு ஆலோசனைக் குழு” வின் முடிவிற்காக காத்திருக்கும் அதே நேரத்தில், இணையதள சம நிலையை எந்த விதத்திலும் பாதிக்காமல், மக்கள் தங்கு தடையற்ற இணைய தள சேவையை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.
கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு: விஜயகாந்த் விளக்கம்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை திடீரென சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ”மேகதாது அணை, நிலம் கையகப்படுத்தல் மசோதா, செம்மரக் கடத்தல் என தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம், தமிழக மீனவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை என 5 முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்தேன். மேகதாது விவகாரத்தில் இணைந்து செயல்பட கருணாநிதி உறுதியளித்துள்ளார். மேலும் இந்தப் பிரச்னை தொடர்பாக நாளை பிற்பகல் 12.30க்கு பிரதமரையும் சந்திக்கவுள்ளேன்” என்று கூறினார். கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சந்தித்துப் பேசியபோது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
சிம்புவுக்கு ஜோடி லட்சுமி மேனனா? பரபரப்பு தகவல்
சிம்பு படங்கள் வெளியாகி மூன்று வருடங்கள் ஆக போகிறது. சிம்பு நடித்துள்ள வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்தும் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதை தொடர்ந்து செல்வராகனுடன் ஒரு படம் கிருத்திகா உதயநிதியுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கொண்டே இருக்கிறார் சிம்பு. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்காக லட்சுமி மேனனை அணுகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் அழகான காதல், ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படமாக உருவாக்க இருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல்
சென்னை: நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். திபெத், வங்கதேசம் மற்றும் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகார், மேற்குவங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சோகத்தை பாட்டாளி மக்கள் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. மனிதர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்கும் இயற்கை சில நேரங்களில் அதன் சீற்றத்தை வெளிப்படுத்தி ஒன்றுமறியா அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதை என்னவென்று சொல்வதென தெரியவில்லை. நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய செய்தி கிடைத்ததும் அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய பகுதிகளில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

