Home Blog Page 6173

வெட்டப்பட்ட இலங்கை அதிபரின் சகோதரர் பிரியந்த சிறீசேன மரணம்

priyantha-sirisenaகோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அதிபர் மைதரீபால சிறீசேனவின் சகோதரர் பிரியந்த சிறீசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் ஒரு நபரால் கோடாலியால் வெட்டப்பட்டார் பிரியந்த சிறிசேன. படுகாயமடைந்த அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு நாளைதான் திரும்புகிறார். இதனால் நாளை மறுநாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறீசேனவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்த சிறீசேனவைத் தாக்கிவிட்டு, பின்னர் சரணடைந்த நபரை ஏப்ரல் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் இன்று கூடுகிறது: பூஷண், யாதவ் நீக்கப்படலாம்!

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தில்லி சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்த ஆம் ஆத்மி கட்சியில் இப்போது உட்கட்சிப் பூசல் பூதாகாரமாக வெடித்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்நிலையில், கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம், சனிக்கிழமை இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் , “உள்கட்சி ஜனநாயகம், வெளிப்படையான தன்மை, தொண்டர்களை மதித்தல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி என கருதப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, இன்று பிற கட்சிகளால் கேள்வி கேட்கப்படுகிற நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரசுடன் இணைத்து வைத்து ஆம் ஆத்மியும் பார்க்கப்படுவது வேதனை அளிக்கிறது” என்றனர். மேலும், கட்சிக்கு ரூ.2 கோடி நிதி வந்த விவகாரம் குறித்து லோக்பால் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினோம். காங்கிரஸ் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சி அமைக்க முயற்சித்த பிரச்னை, மதுபானங்கள் பறிமுதல் செய்த பிரச்னை ஆகியவற்றை எழுப்பினோம். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாங்கள் கேஜ்ரிவாலுக்கு எதிரானவர்கள் என்று எங்களைக் கூறுகின்றனர். கட்சி, பழைய பாதைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். பிற கட்சிகளின் பாதையில் ஆம் ஆத்மி செல்லக்கூடாது” என்றனர். கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுவதாகக் கூறிய பிரசாந்த் பூஷண் “நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. அதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்தது. இது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது” என்றார். இவ்வாறு குழப்பமான சூழ்நிலையில் இன்று அக்கட்சியின் தேசியக் கவுன்சில் கூடுகிறது.

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தமிழகத்தில் சனிக்கிழமை இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, அரசியல் கட்சிகள் பலவற்றின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெரும்பாலான இடங்களில் போலீசார பாதுகாப்புக்கு நிற்கின்றனர். தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டாலும், அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் இயங்கின. ரயில்களும், வழக்கம்போல இயங்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கர்நாடகம் செல்லும் அரசு பஸ்களும் தமிழகத்துக்கான கர்நாடக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.

மின் திட்டங்கள் தொடர்பில் காஷ்மீர் பேரவையில் கடும் அமளி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை மின் திட்டங்கள் மாற்றம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவர் தொடங்கியதும், ஆளும் கூட்டணி அரசு அறிவித்த குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஒன்றைக் கூட செயல்படுத்தவில்லை என தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மின்திட்டங்கள் மாற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் அரசு பொய்யான தகவல்களைக் கூறி மக்களை தவறாக வழிநடத்துவதாக, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் அவைத்தலைவர் அவர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். ஆனால், எதிர்க்கட்சியினர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காததால், காவலர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு எம்,.எல்.ஏ. உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை போர்க்களம் போல் காட்சியளித்தது.

66ஏ சட்டப் பிரிவு: நான் மட்டுமே பொறுப்பு அல்ல என்கிறார் ஆ.ராசா

a-raja சென்னை: 66ஏ சட்டப்பிரிவுக்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ பிரிவுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்பு என்றும், தன்னை மட்டுமே பொறுப்பாக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில், இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தச் சட்டம் குறித்து பேசிய முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ், முன்னாள் மத்தியத் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாதான் இந்தப் பிரிவை உருவாக்கியவர் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆ.ராசா, இது போன்ற சட்டங்கள் உருவாகும்போது, அதனை ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவாகத்தான் கருத வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவர் மீது பழி சொல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல; அனைத்து ஆய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகுதான் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது என்று கூறியுள்ளார் ஆ.ராசா. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எந்த ஒரு சட்டமும் அப்போதைய காலகட்ட அவசியம் கருதி இயற்றப்படுவதும் பிறகு திருத்தம் கொண்டுவருவதும், ரத்து செய்யப்படுவதும் கடந்த காலத்திலும் நடந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு: ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் க்ளார்க் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் க்ளார்க் நாளை நடைபெறும் இறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, வெற்றியுடன் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் நாளைய போட்டி அவருக்கு உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கும். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் மைக்கேல் க்ளார்க், முதுகு வலியுடன் நீண்டநாள் போராடி வருகிறார். இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரிலும் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரில் இருந்து விலகிய அவர் அடுத்து நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. பின்னர் உடல் தகுதியை நிரூபித்து, உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றார்.

வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு இ-சேவை மையம் தொடக்கம்

voter-idசென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மையம் செயல்படும். இதனை தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், வருமானவரிச் சான்று, சாதிச் சான்று, பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, நிரந்தர இருப்பிடச் சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று போன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதார் அடையாள அட்டைக்கும் இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வாக்காளர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர் நீக்குதல் போன்ற வாக்காளர் அடையாள அட்டைக்குத் தேவையான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் சேவையும், கூடுதலாக நேற்று முதல் இந்த மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கூடுதல் சேவையை சென்னை மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறிய தகவல்: தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அரசு பொது இ-சேவை மையங்களில், இன்று முதல் வாக்காளர் அடையாள அட்டைக்கு பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் விட்டு போனவர்கள் மீண்டும் விண்ணப்பித்தல் போன்ற சேவைகளுக்கு உரிய படிவங்களை இந்த மையங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக ரசீதுகள் வழங்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அதற்கான தீர்வுகள் எட்டப்படும். சேவைக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் இறுதிப் பட்டியல் 2016 மார்ச் மாதம் வெளியிடப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

“காதில் விழவே இல்லையா”?

“காதில் விழவே இல்லையா”? ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை . திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்த சமயம் , மகானிடம் பெரும் பக்தி , அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் . ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை , எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை , இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகிகொண்டு வர , ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார் , அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும் பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு ” இதனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்” என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா உங்கள் காதில் விழவே இல்லையா , காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது அங்கே சென்று கதவை திறந்தபோது ” கஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம் மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்ட கொடுக்க சொன்னார்” என்றனர் வந்தவர் காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார் , கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தான் தந்தையின் வாயில் ஊற்ற , அவரது மூச்சு திணறல் நின்றது , அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம் மகான் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார் ? “காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?10357599_860696523975514_1831596007967451521_n

ஸ்ரீ ராமன்

‘ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான். சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும். ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான். “ராவணன் ஸீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?” என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள். ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்? வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ‘ராகவா, நீ எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். ‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர ஆனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான். சாக்ஷாத் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு “ராம ராம” என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள். -தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்) , தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 5

“அப்ப என் ஒத்தனைத்தான் பைத்தியக்காரன்னு சொல்லியிருப்பா, திட்றவாளானா திட்டியும் இருப்பா?” என்ற ஸ்ரீசரணர் நியாய தேவதையாகத் தொடர்ந்தார். “எனக்கு வேணுந்தானே? நல்ல பேரோட பெரிசா ஒரு பத்ரிகை நடத்றவா, கதை-கட்டுரை எழுதறவா-ன்னா, அவா நா இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவா-ங்றதுக்காக, நான் பாட்டுக்கு பொறுபில்லாம க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம்னு இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணு சொல்லி அவர் கார்யத்தை கெடுத்து, பேரையும் கெடுக்கப் பாத்தேன்னா பைத்யப் பட்டம், திட்டு எல்லாம் வாங்கத்தானே வேணும்?” ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் அயர்ந்து அமர்ந்திருந்தேன். அந்த பகவான் தாமாகவே குற்றவாளிக் கூண்டில் ஏறித் தம்மீதே குற்றப்பத்ரிகையும் தாக்கல் செய்து கொள்ள என்றுமே தயங்கியது இல்லை. இப்படி, நாம் அவர் குறித்து சொல்லத் தயங்கும் பல விஷயங்கள் அவரே ஒழிவின்றித் தெளிவாகக் கூறி எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இப்போது ஓர் இனிய திருப்பம் ஏற்பட்டது, குற்றப் பத்திரிகையாக மட்டும் முடிந்து விடாமல், அவரே வக்கீலாகி அந்தக் ‘குற்ற’த்துக்கு நியாயம் சொல்லவும் செய்தார்.! “மொதல்ல பெர்மிஷன் குடுத்தப்போ, ‘பல பேருந்தான் எழுதுறா, என்னமோ அவாளுக்கு ஒரு ஆசை; பக்தி! வேண்டாம்-னா வருத்தப்படுவா-ன்னு நானும் தலையாட்டிடறது. பெர்மிஷன்னு கேக்காமயேகூட எழுதறவாளும் இருக்கா. ஸரி-தப்பு நிச்சயம் பண்ணிக்காமயே செல பேர் என்னென்னமோவும் எழுதறா. அப்படியிருக்கச்சே, பொறுப்போட எழுதுறவன் பொறுப்பா நடத்ற பத்ரிகை-ல எழுதணும்னு கேக்றச்சே ஏன் வேண்டாம்-னணும்’னுதான் ஸரி-ன்னேன். “இன்னும் சொல்லனும்னா, நீ எப்டி எழுதறே, பாக்கணும்னு எனக்கே ஒரு குதூஹலம் (ஒரு விதமான ஆர்வ எதிர்பார்ப்பு; curiosity என்பது) கூட இருக்கத்தான் செஞ்சது. “அப்புறம் அது ஞாபகத்துலேந்தே போய்டுத்து அட்வெர்டைஸ்மெண்ட் வந்து பாத்துவிட்டு மறுபடி ஞாபகம் வரத்தான் வந்தது. அப்பவும் ‘லைட்’டா விட்டுட்டேன். மொத வாரம் நீ மொகவுரையா எழுதியிக்கறதைப் பாத்துவிட்டுத்தான் அப்டியே அபிப்ராயம் மாறிடுத்து.” உடல்லெலாம் செவியாக கேட்க ஆரம்பித்தேன். “என் சரித்ரம் வரணும்னு எனக்கு லவலேசங்கூட இல்லே. அப்டி ‘சரித்ரம்’னு எழுதும்படி நான் ஒண்ணும் பண்ணினதா எனக்குத் தெரியலே. ஆனாலும் அப்டி ஒண்ணும் வரணும்னு இருந்தா – இது இது நடக்கணும்-னு இருந்து அப்படியே நடக்றதே, அந்த மாதிரி, இதுவும் இருந்தா – நீ எழுதறது, பூராவா (பூர்ணமாக) இருக்கணும் – “சரிதம்னு எழுதறே, அதுக்கு ‘முற்றும்’ போடுவீயோன்னோ? போட்டுத்தானே ஆகணும்? அப்டின்னா என் சரித்ரத்துக்கு நீ ‘முற்றும்’ போட்டுடுவியாக்கும்!” – பெரிதாகச் சிரித்தார். என்னை அசத்திவிட்டது அந்தக் கேள்வியோ, பதிலோ, எதுவோ ஒன்று! குறுகுறு என்று குறும்பு விநோதம் நயனத்திலும் அதரத்திலும் நடனமிடத்தான் கேட்டாரென்றாலும் குறும்பு விநோதமா அது? அவரது சரித்ரம் என்ற வாழ்க்கை வரலாறு முற்றி முடிவதை அல்லவா சொல்கிறார்.? அதையும் அடக்கியே நான் அவரது முழு வாழ்வு பற்றியும் பூர்த்தியாக- ‘பூராவா’ எழுதவேண்டும் என்றல்லவா சொல்கிறார்? ஆக ‘கல்கி’ ஒரு பிழையும் செய்யவில்லை. பெரியவாளின் ஜீவிதப் பூர்த்திக்குப் பிற்பாடே சரிதம் பிரசுரமாக வேண்டும் என்பது தான் தற்போது தொடரை நிறுத்தச் சொன்னதற்கு காரணம் என்று ஸ்பஷ்டமாயிற்று. நமக்கு அது வருவதில் லவலேசமும் ஈடுபாடில்லை என்று அவர் கூறியதில் எனக்கு எள்ளளவும் ஆச்சர்யமோ, அவநம்பிக்கையோ இல்லை. போதும் போதும் எனுமளவுக்குத் தெரிந்த ‘ட்ரூயிசம்’தான் அது. ஆனால் அத்யாச்சர்யமான விஷயம், ‘இது இது நடக்கணும்னு இருந்து அப்படியே நடப்பதில்’ அவரது பெருவாழ்வைப் பூர்த்திப்படலம் முடிய எழுத வேண்டும் என்றுதான்! ‘நடக்கணும்—னு இருந்—து’ என்ற வார்த்தைகளில் அவர் கொடுத்த நயமான அழுத்தம் எந்த உட்பொருளை எனக்கு உணர்வித்ததோ அதை இங்கே கெட்டி எழுத்தும் தெரிவிக்கமுடியாது! இன்ன நடக்க வேண்டுமென்று பராசக்தியின் சங்கற்பத்தில் இருப்பதைத்தான் அவர் குறிப்பிட்டார் என்பதே என் உறுதியுணர்வு. ‘அந்த மேலிடத்துச் சங்கற்பமாயின் இன்றைக்குத் தொடர் நின்றாலென்ன? என்றைக்கோ அது வரத்தான் செய்யும்’ என்ற எண்ணம் என்னை முற்றிலும் சமனப்படுத்திவிட்டது.! -தொடரும்… ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.