Home Blog Page 6179

சட்டீஸ்கர்: 29 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

ராய்புர், சட்டீஸ்கர் மாநில சட்டமன்றத்தில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை அவைத்தலைவர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சாலைத்தடுப்பில் கார் மோதி பெண் டாக்டர் பலி: 2 பேர் காயம்

சென்னை: விழுப்புரத்தில் நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் டாக்டர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.  திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் மகள் பிரணவப்பிரியா. இவர் மதுராந்தகம் அருகே உள்ள சின்னகேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவஃப் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா தனது தோழிகளான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி, நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் திருமேனி ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். நேற்று காலை திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி உருண்டபடி சாலையின் மறுபக்கத்தில் கவிழ்ந்தது. இதில் டாக்டர் பிரணவப்பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழிகள் பிரீத்தி, திருமேனி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகிலுள்ளோர் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த கிளியனூர் போலீசார் பிரணவப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரணவப்பிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் அச்சிறுப்பாக்கத்தில் மருந்துக் கடை, நகைக் கடை, ஜவுளிக் கடை, மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். பிரணவப்பிரியா இரு தினங்களுக்கு முன்னர்தான் அச்சிறுப்பாக்கத்தில் சொந்தமாக கிளினிக் ஒன்றைத் தொடங்கினாராம்.

கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 4

“சரித்ரம் எழுதிண்டிருக்கியோ?” என்னத்தை எழுதுவது? அதுதான் நிறுத்தச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டாரே! புண்படுத்தியது போதாதென்று புண்ணைக் குத்தியும் பார்க்கிறாரா? – சீ, அப்படி எண்ணுவது மஹா பாபமில்லை? ஆனாலும் ஏன் இப்படிக் கேட்கிறார், புரியவில்லை. “சரித்ரம் எழுதிண்டிருக்கியா-ன்னேன். பதிலைக் காணுமே! காது கேக்கலியா?” என்றவர் சற்று நிறுத்தி “கோவமா?” என்றார். வெட்கம் பிடுங்கித் தின்றது. “வேண்டாம்னுதான் உத்தரவாயிடுத்தே, அதனால எழுதுறதை நிறுத்திட்டேன்” என்றேன். அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்று படுபாதகமான உள்ளெண்ணத்துடன் வந்தவன், ஏனென்று தெரியாமல், நானே அதில் எறியவனாகச் சொன்னேன்! “யார் உத்தரவு போட்டா? – விசித்ரம் to the nth degree – ஆன கேள்வி! எங்கோ ஏதோ பெரிய இசகு-பிசகு நடந்திருக்கிறதோ என்ற குழப்பத்துடன், “பெரியவா அப்டி சொன்னதாத்தானே சாம்பமூர்தி சாஸ்திரிகள் சொன்னார்?” “நீ எழுதவேண்டாம்-னு நான் சொன்னேன்னா அவர் சொன்னார்? அப்டியானா, நான் அவரைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன். ஆனா அவர் ஸரியா சொல்லப்பட்டவர்தான். என் கொனஷ்டை ஓரளவுக்கு நான்னாவே தெரிஞ்சவரானதால நான் சொல்றதை அப்டியே கார்பன் காபியாகச் சொல்றவர்தான். அதனால் அவரை நான் விசாரிக்கிறதுக்கு முந்தி நீயே ஸரியா ஞாபகப்படுத்திண்டு சொல்லு – ‘கல்கி’ல தொடரை நிறுத்தணும்னு உத்தரவு-ன்னாரா? இல்லாட்டா, நீ சரித்ரம் எழுதறதை நிறுத்தணும்-னாரா?” ஆஹா, ஆஹா! அப்படியொரு பாதுபாடா? உற்சாகக் கீற்று உள்ளிருந்து புறப்பட ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ‘ஆம், தொடரை நிறுத்துவது பற்றியே உத்தரவு, நான் எழுதுவது பற்றியல்ல’ என்று புரிந்துகொண்டேன். நான் ஏதோ பிழை செய்தேன் என்பதற்காகத் தடை விதிக்கப்படவில்லை என்பது எனக்கு மிக்க ஆறுதலளித்தது. நான் எழுதத் தடையில்லை என்பது முதலில் உற்சாகம் அளித்தது என்றாலும், அது உடனே தளர்ந்தும் விட்டது. நான் பெரியவாள் சரிதம் எழுதினால் அதைக் ‘கல்கி”யில் வெளியிடாமல் வேறென்ன செய்வது? உலக மவுசில் என்னை ‘ஆளாக்கி விட்ட’ அந்த நிறுவனத்திற்கு நான் அந்நாளில் பட்டிருந்த கடன் என்னை வேறுவிதத்தில் சரிதத்தை விநியோகிப்பது பற்றி எண்ண இயலாதவனாக ஆக்கியிருந்தது. தவிர, நான் எழுதலாம், ஆனால் அந்த ஏட்டில் சரிதை வெளிவருவதற்கே தடை என்றால் அது மட்டும் என்ன பிழை செய்தது? இதையெல்லாம் அவரிடம் கேட்க வாய் வரவில்லை. மீண்டும் ஏமாற்றம் – கோபதாபம் அபச்ருதி கூட்டியது. ஆனாலும் மேற்கொண்டு தொடர்ந்து உரையாடலில் எல்லாக் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது. தொடரை நிறுத்த உத்தரவென்றுதான் சாஸ்திரிகள் தெளிவாகத் தெரிவித்தாரெனக் கூறினேன். “பூர்ணக்கும்பம் பூர்ணமாகவே நீ குடுத்து நானும் வாங்கிண்டு ரொம்பியாச்சு, இப்போதிக்கு இதுவே பூர்ணம்-னு, கொறைப்படாம இரு” என்று அவர் தொடங்க, ஏமாற்ற-கோபங்கள் உள்ளழுகையாக மாறின. (அந்த ஏமாற்ற-கோபங்களையும் உள்ளேயேதானே பதுக்கிக் கொண்டிருந்தேன்?) மெய்யாலுமே ஒரு நிறைவு ஏற்பட்டுவிட்டது. “இப்போதிக்கு” என்று அவர் சொன்னதில் ஓர் உலகமே – அர்த்தமுள்ள, ஆறுதலான ஓர் உலகமே- இருப்பதாக உள்ளுணர்ச்சி புறப்பட்டது. “படிக்கிறவா, பத்ரிகை வித்துக் குடுக்கிறவா-ள்ளாம் இந்த மாதிரி ஆனதுல, ஒன்னைப் பைத்தியக்காரன்-றாளா, (கல்கியின் அந்நாள் அதிபர்) சதாசிவத்தைப் பைத்தியக்காரன்-றாளா, இல்லாட்ட என்னை பைத்தியக்காரன்-றாளா? என்று வழிய வழியச் சிரிப்போடு கேட்டார். “எல்லோருக்கும் ரொம்பவே ஏமாத்தம், வருத்தம்” என்பதற்கு மேல் இதற்கென பதில் சொல்ல? ஸ்வாமிகள் பெர்மிஷன் இல்லமாலே எழுதினியா? போட்டயா?’ ன்னு ஒன்னை அவரைத் திட்றாளோ” திட்ட இடமுண்டுதான். ஆனால் ஆச்சரியமாக, அப்படி ஏதும் நாங்கள் கேள்விப்படவுமில்லை; கடிதமாகவும் வரவில்லை. அதை அவரிடம் சொல்லி, “பெரியவா பெர்மிஷன் இல்லாம நாங்க இப்டி ஒண்ணுல ஏறங்கியிருக்க மாட்டோம்னு பொதுவா ஒரு நல்ல எண்ணம் இருக்காப்ல இருக்கு, அதோட, ஒரு மாஸத்துக்கு முன்னாடிலேந்தே கல்கில அனௌஸ்மென்ட் பண்ணிட்டிருக்கிறோம். வெளி அட்வர்டிஸ்மெண்டும் குடுத்திருக்கோம், அதனால முன்கூட்டியே பெரியவாளுக்கு விஷயம் தெரியாம இருந்திருக்காது-ன்னுதான் எல்லோரும் நெனச்சிருக்க கூடும்” என்றேன். “ஜாக்ரதையா பேசறியே! ‘இருக்காப்ல இருக்கு’, நெனச்சிருக்கக்கூடும்’ – “ மெச்சுதலைக் காட்டும் அழகான சிரிப்பு! வெட்கமாக இருந்தது – பாக்ய உணர்விலேயே! -தொடரும்.. ஸ்ரீ ரா.கணபதி அண்ணா அவர்களின் தொகுப்பில் இருந்து பிரசுரிக்கபட்டுள்ளது.

மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு

புதுடெல்லி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 14வது நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதால் 50 ஆயிரம் கோடி மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், நிதி கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியதில் மாநிலத்துக்கு 50 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் மத்திய அரசு அளித்த நிதி உதவியும் குறைக்பட்டுள்ளது. இதன் காரணமாக பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்ட நிதிச்சுமையை சமாளிக்க இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்” என்று தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தே.ஜ. கூட்டணி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதன்பின்னர் பீகாரில் அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகி, அங்கே அரசியல் குழப்பம் ஏற்பட்டு, மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடியை முதல் முறையாக நிதிஷ் இன்று சந்தித்தார்.

லண்டனில் பசவேஸ்வரர் சிலை; மோடிக்கு அழைப்பு

basaveswara
கன்னடக் கவி பசவேஸ்வரர் (கோப்புப் படம்)
லண்டன்: கர்நாடகாவில் பிறந்த ஜனநாயக சிந்தனையாளரும், மெய்ஞானக் கவிஞருமான பசவேஸ்வரர் (1134-1168) சிலை ஒன்று லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இவர், தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி. கர்நாடகத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞரான இவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று லண்டனின் முன்னாள் மேயர் நீரஜ் பாட்டீல் பெருமுயற்சி எடுத்தார். அவரின் முயற்சியால், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் பசவேஸ்வரருக்கு பிரம்மாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை வரும் ஜுன் அல்லது ஜுலை மாதம் திறக்கப்படவுள்ளது. இந்தச் சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

கங்கையைத் தூய்மைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்: முதல்வர்கள் பங்கேற்பு

ganga-river-project கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கங்கை நதி ஓடும் மாநிலங்களின் முதல்வர்களுடன் கங்கையைத் தூய்மைப் படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர்காண்ட் முதல்வர் ஹரீஷ் ரவாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லை. கங்கா வடிநில வாரியம் சார்பாக நடைபெறும் 6-வது கூட்டம் இது. என்றாலும். இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தலைமை வகித்தார். கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பீகார், ஜார்கண்ட், உத்தர்கண்ட் முதல்வர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, உமா பாரதி, பீரேந்தர் சிங், ஸ்ரீப்ரகாஷ் ஜெய்ஸ்வால், பியூஸ் கோயல், சன்வர்லால் ஜட், நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றி தோல்வி வாழ்க்கையில் ஒரு பகுதி: இந்திய அணிக்கு மோடி ஆறுதல்

  உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரெலிய அணி, இந்திய அணியை 95 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதை அடுத்து தோல்வி சோகத்தில் உள்ள இந்திய அணிக்கு ஆறுதல் கூறும் விதமாக, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். வெற்றி தோல்வி வாழ்க்கையில் ஓர் அங்கம். இந்திய அணி இந்தத் தொடர் முழுவதும் நன்றாகவே விளையாடியது. அவர்களை நினைத்து பெருமைப் படுகிறோம்… என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் வெற்றி பறிபோக 3 காரணங்கள் : அடுக்கினார் சச்சின்

sachin-tendulkar உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற கடைசி அரையிறுதிப் போட்டியில், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் அலசப்பட்டாலும், இந்தியாவின் முன்னாள் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது …. ‘‘இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளாயாடியது. இருப்பினும் இன்றைய போட்டி, மிகவும் கடினமானது. இந்தத் தோல்வியை சகித்துக் கொள்வதும் கஷ்டமானதுதான். ஆனாலும் நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். உங்கள் போட்டியை ரசிகர்கள் மகிழ்ச்சியுடனேயே பார்த்து ரசித்தார்கள். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டீவ் ஸ்மித்தின் சதம், பின்ஞ் கொடுத்த பார்ட்டனர்ஷிப், ஜான்சனின் பினிஷிங் பந்துவீச்சு ஆகியவை இணைந்து இந்தியாவிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டன” என்று சச்சின் கூறியுள்ளார்.  

 

விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் மீண்டும் இணையும் புதுப் படம்!

vijaysethupathi-ramyanambisan விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்த படம் ‘பீட்சா’. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இருவரும் நன்கு நடித்திருந்தனர். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் புது படம் ஒன்றில் இணையவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இப்படம் காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரரின் யதார்த்த கதையாக உருவாக்க இருக்கிறார்கள். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படத்தை வாசன் மூவீஸ் சார்பாக ஷான் சுதர்ஷன் முதல் படமாக இப்படத்தை தயாரிக்கிறார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஹைதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஏமனில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்

ஏமன் நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக, அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக அல்-அரேபியா செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏமன் தலைநகரைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலை தொடங்கியது. ஏமன் தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் மாளிகையை இரண்டாவது முறையாக அவர்கள் நெருங்கிய நிலையில், மாளிகையிலிருந்து அதிபர் மன்சூர் ஹதி புதன்கிழமை வெளியேறினார். துறைமுக நகரான ஏடெனில் இருந்து இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விமானப்படைத் தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக வந்த தகவலை அடுத்து அவர் வெளியேறியுள்ளார். அவர் கடல் வழியாகத் தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.