புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற ஒரு விவாதத்தில் திமுக., அதிமுக உறுப்பினர்களிடையே வாக்கு வாதம் எழுந்தது. மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீத்தேன் எரி வாயு திட்டத்தைக் கண்டித்துப் பேசினார். ஆனால், அவரின் இந்தப் பேச்சு தமிழக அரசுக்கு எதிராக இருந்ததாகக் கூறி அதிமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். தமிழகத்தைச் சேர்ந்த இரு கட்சியினரின் கூச்சல் குழப்பத்தால், அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இந்தியரை ஓடும் ரயில்முன் தள்ளி கொலைசெய்த அமெரிக்கப் பெண்ணுக்கு 25 ஆண்டு சிறை?
வேகமாக வந்த ரயில் முன் இந்தியர் ஒருவரை தள்ளிவிட்டுக் கொலை செய்த அமெரிக்கப் பெண்ணுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 46 வயதான இந்தியர் சுனந்தோ சென், நியூயார்க் அருகில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2012 டிசம்பர் 27 அன்று, சுனந்தோ சென் ரயில் நிலையத்தில் சப் வேயில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது வேகமாக உள்ளே நுழைந்த ரயில் முன்னர் திடீரென ஒரு பெண் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், என்ன நடந்தது என்று தெரியும் முன்னர் தன் உயிரை இழந்தார். அவரை ரயில் முன்னர் தள்ளிக் கொலை செய்த பெண் 33 வயதான எரிகா மெனென்டஸ். இவருக்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களை பிடிக்காதாம். அதனால்தான் அப்படிச் செய்ததாக வாக்குமூலம் அளித்தார். சற்றும் எதிர்பார்க்காத கண நேரத்தில் தான் அவரைப் பிடித்து டிராக்கில் தள்ளிவிட்ட போதிலும், டிராக்கில் விழுந்த அவர், தன்னைக் காத்துக்கொள்ள உடனே முயன்றார் என்று அவர் நீதிபதியிடம் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வருகிறார் குயின்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி க்ரிகோரி லசக். ஏப்ரல் 29ம் தேதி தான் தண்டனை விவரத்தை அறிவிப்பதாகவும், அவருக்கு 22 முதல் 25 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது. குயின்ஸில் வாழ்ந்துவந்த சுனந்தோ சென், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சொந்தமாக பிரிண்டிக் காபியிங் தொழிலைச் செய்து வந்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்: +2 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு
பெங்களூரு: பெங்களூரில், ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட போராட்டத்தால், இன்று நடைபெறவிருந்த ப்ளஸ் 2 கணிதம் மற்றும் புவியியல் தேர்வு மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி, தனது வீட்டில் மர்மமான முறையில் நேற்று தூக்கில் தொங்கினார். இதையடுத்து கோலார் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 28ம் தேதியில் நடத்தப்படும் என்று கார்நாடக மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
கன்னியாஸ்திரி பலாத்காரம், தேவாலய சூறையாடல் சம்பவங்களுக்கு மோடி வருத்தம்
புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் கன்னியாஸ்திரி ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கும் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் நடைபெற்ற தேவாலயம் சூறையாடப்பட்ட சம்பவத்துக்கும் பிரதமர் மோடிஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஹரியானா, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சம்பவங்களின் உண்மை நிலை குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு ரூ.104 குறைவு
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 13 குறைந்து ரூ. 2,450-க்கும் சவரன் ஒன்றின் விலை ரூ.104 குறைந்து ரூ. 19,600க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றி்ன் விலை ரூ. 14 குறைந்து ரூ. 2,610 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசு குறைந்து ரூ. 37.70 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ. 335 குறைந்து ரூ. 35,265 என்ற அளவிலும் விற்பனையாகிறது.
பேச்சுவார்த்தை நடத்தும்போது வேண்டுமென்றே மீனவர்கள் மீது தாக்குதல்: ஜி.கே.வாசன் கண்டனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும்போது, வேண்டுமென்றே மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியது, கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியப் பிரதமரின் இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பது இலங்கை கடற்படையின் அராஜகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும், அட்டூழியம் செய்திருக் கிறார்கள். இதனால் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். படகுகள் சேதமடைந்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டனத்திற்குறியது. ஏனென்றால் இந்தியப் பிரதமர் இலங்கையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போது இலங்கை கடற்படை இது போன்ற தாக்குதலை வேண்டுமென்றே நடத்தியுள்ளது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைத்தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான் ஏற்கனவே கூறியிருந்ததில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இது அவரது அதிகாரவர்க்கத்தைக் காட்டுகிறது. நம் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பயணத்தின் போது இலங்கைப் பிரதமரின் இது போன்ற பேச்சை சுட்டிக்காட்டியதாகவும், அதற்கு இலங்கை வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியிருப்பது ஒரு புறம், மறு புறம் இலங்கைப் பிரதமர் மீண்டும் அதே பேச்சை வெளிப்படுத்தியிருப்பது முரண்பாடாக அமைந்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் கேள்விக்குறியதாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம், மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்பதை உறுதிபடக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசை கடுமையாக கண்டிப்பதோடு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்காமல் இருக்க, இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை நிறுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை பிரச்சனைகளின்றி தொடர மத்திய அரசு வழி வகுத்து தர வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
யுவராஜ் சிங் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத காரணம்: மனம் திறந்தார் தோனி
மெல்பர்ன்: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் பேட்டிங்கில் மட்டுமல்லாது, 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கும் உலகக் கோப்பையை அணி பெற ஒரு காரண நாயகனாவும் ஜொலித்தார். ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதற்கு பதிலளிக்கும் விதமாக, 2011ல் தொடர் நாயகன் விருதை அவர் வென்றபோது, மேற்கொண்ட அதே சூழலும் திட்டமிடலும் இந்த உலகக் கோப்பையில் இல்லை என்று கூறியுள்ளார் தோனி. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சில், திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளால், யுவராஜ் சிங்கின் பந்து வீச்சு பெரிதும் பாதிக்கப்பட்டது என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். 30 யார்ட் உள்ள உள் வட்டச் சுற்றில், 5 ஃபீல்டர்களும், மீதமுள்ள 4 பேர் வெளி வட்டச் சுற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்ற வகையில், ஐசிசி நிர்ணயித்த புதிய விதிமுறைகள், யுவராஜ் போன்ற பகுதி நேர சுழற் பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் தோனி. இவ்வாறு விதிமுறைகளைத் திருத்திய பின் யுவராஜ் சிங் அதிகமாக பந்துவீசவில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த பீல்ட் கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டபோது, அவர் டி-20 ஆட்டங்களில் பந்து வீசியிருந்தாலும், இந்த விதிகள் அவரது பந்துவீச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். விதிகளைத் திருத்தும் முன் சச்சின், சேவாக், யுவராஜ் ஆகியோர் அதிகளவு பந்து வீசினர். அவர்களது பந்துவீச்சை பெரிதும் சார்ந்திருந்தோம். அதேநேரத்தில் அவர்கள் அனைவரும் பகுதிநேர பந்து வீச்சாளர்கள். பேட்டிங் ஆடுகளங்களில் அவர்களால் சிறப்பாக பந்துவீச இயலாது. ஆடுகளம் ஒத்துழைத்தால் சுரேஷ் ரெய்னா நன்கு பந்துவீசுவார். குறிப்பாக, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் சரியான இடத்தில், சரியான வேகத்தில் பந்து வீசுவார். ஷிகர் தவண், ரோஹித் சர்மா கூட பகுதி நேரப் பந்து வீச்சாளர்கள்தான். ஆனால், இடத்தைப் பொறுத்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்வேன். யுவராஜ் ஆரம்பத்தில் 5வது இடத்தில் களமிறங்கினார். அந்த இடத்தில் நன்றாக ஆடியதால் 4ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டார். ஆனால், 2005-க்குப் பிறகு அவர் நான்காவது இடத்திலும் முகமது கைஃப் அல்லது சில சமயங்களில் நானும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினோம். தற்போது ரெய்னா ஐந்தாவது இடத்தில் ஆடி வருகிறார். இது முக்கியமான இடம். ரெய்னாவும், யுவராஜும் வேறு வேறு இடத்தில் களமிறங்கியதால், இருவரையும் ஒப்பிடத் தேவையில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆல் ரவுண்டர்கள் ஜொலிப்பதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீங்கள் சென்ற உலகக் கோப்பையில் விளையாடிய எல்லா ஆல்ரவுண்டர்களையும் ஒப்பிட்டால், (யுவராஜ், பிராவோ) அவர்கள் இந்த உலகக் கோப்பையில் விளையாடவில்லை. மேலும், ஆல் ரவுண்டர்கள் இந்த முறை 30முதல் 35 ஆவது ஓவர்களில் நன்றாக அடித்து விளையாட வாய்ப்பு பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒரு அரை சதத்தை எடுத்து, பந்து வீச்சில் சில விக்கெட்களையும் பெற முடியும். இத்தகைய சூழல் இந்த முறை உலகக் கோப்பையில் கிட்டவில்லை. அவர்களுக்கு பேட்டிங் செய்வதற்கான சரியான சவாலும் அமையவில்லை. பவுலிங் செய்வதிலும் சோபிக்க முடியவில்லை. அதேபோல், எல்லா ஆல்ரவுண்டர்களும் ஜாக் காலிஸ் போல் 3 வதாக களம் இறங்கி பேட்டிங் செய்து ஜொலிக்கவும் இல்லை என்று கூறினார் மகேந்திர சிங் தோனி.
ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் நகரச் செயலர் கொலையில் ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த மாதம் புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் பாஸ்கரன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணையை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால் அரசியல் நெருக்கடியை அடுத்து இந்த விசாரணை, திடீரென சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ற சிபிசிஐடி போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதிய தமிழகம் நகரச் செயலர் பாஸ்கரன் கொலை வழக்கில் சுரேஷுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
பன்றிக்காய்ச்சலுக்கு சென்னையில் 2 வயது சிறுவன் பலி
சென்னை: சென்னையில், பன்றிக் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த முகமது ஜாமில் (2) என்ற சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிறுவனின் கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டார் தெரிவித்தது.
மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்
பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி (36) நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். கோலார் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அவர் தற்போது வணிக வரித் துறையில் கூடுதல் ஆணையராக பெங்களூரில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த மடிவாளா போலீஸார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீட்டைப் பார்வையிட்ட மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, கூடுதல் ஆணையர் ஆலோக்குமார் உள்ளிட்டோர் இது குறித்து விசாரணை நடத்தினர். ரவியின் மர்மமான மரணம் குறித்து மடிவாளா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 36 வயதான அவர் 2009ம் வருட ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி. அப்போது வணிக வரித்துறை கூடுதல் பொறுப்பில் சேர்ந்தார். தற்போது, கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றும் ரவி, முன்னர் மங்களூரில் பணியாற்றியபோது, மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர். அவருக்கு மணல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில், தனது வீட்டில் மதிய உணவுக்குப் பின்னர் தூக்கில் தொங்கியுள்ளார் ரவி. ரவியின் மனைவி வந்து பார்த்தபோது, சிறு துணியில் கழுத்தை இறுக்கி அவர் தூக்கில் தொங்கி இறந்துள்ளது தெரியவந்ததாக விசாரணை நடத்திய எம்.என்.ரெட்டி தெரிவித்தார். இதனிடையே, நேர்மையான அதிகாரியான ரவியின் மரணத்தின் பின்னே உள்ள உண்மையைக் கண்டறியுமாறு கோரி, கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டமும் கடையடைப்பும் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

