தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பைச் சேர்ந்த பாஸ்கர் (28) புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்தார். இவர், பிப்.23ல் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை 24ஆம் தேதிக்கு மாஜிஸ்ட்ரேட் சங்கர் ஒத்தி வைத்தார். பின்னர் சுரேஷ் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுரேஷ் ஆஜர் படுத்தப் படுவதையறிந்த அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.
மவுலிவாக்கம் கட்டட விபத்து வழக்கு: விசாரணை ஆணைய அறிக்கை சட்டசபையில் தாக்கலாகும் என தகவல்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்து குறித்து நடந்து வரும் விசாரணை ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கலாகும் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே பலரது உடல்கள் இருக்கிறது என்றும் இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உட்பட சிலர் ஆஜராகினர். அந்த வாதத்தின்போது, இந்த கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அரசு நியமித்த விசாரணை ஆணையம் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? பொது விவாதம் ஏன் மேற்கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, கடந்த முறை சட்டசபைக் கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடந்தது. அதனால், அந்த அறிக்கை விவாதத்துக்கு வைக்கப்படவில்லை. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ளது. அப்போது ரகுபதி ஆணைய அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என்றார். மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவிக்கையில், கட்டடம் இடிந்து விழுந்ததால், அந்தக் கட்டடத்தில் வீட்டை வாங்க முன்பணம் கொடுத்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கட்டடம் இடிந்து விழுந்த பகுதிக்குள் நுழைய அரசு தடை விதித்துள்ளது. இதற்குக் காரணம், கட்டட இடிபாடுகளுக்கு இடையே மேலும் பல பிணங்கள் உள்ளே உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த தமிழக அரசு அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து, பிணத்தை தேடும் பணியை ரகசியமாகப் பின்பற்றுகிறது என்றார். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
பெண்கள் பாதுகாப்புக்கான இணையதளம் அறிமுகம்
புது தில்லி: பெண்கள், எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்கள் பிரிவு ஆகியோரின் பாதுகாப்புக்காக மத்திய அரசு விரைவில் mysecurity.gov.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் பாதுகாப்புக்கான செயலி இணைய வசதிகளும் இருக்கும். தனிநபர், மாணவர்கள், அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள ஆகியவற்றால் உருவாக்கப்படும் பாதுகாப்புக்கான பிரத்தேயக செயலி இணைண இணைப்பு இதில் சேர்க்கப்படும். இவர்களால் உருவாக்கப்படும் செயலி இணைய இணைப்புகள் தகுதி அடிப்படையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பராதிபாய் சௌத்திரி மக்களவையில் இன்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் பலி
கோவில்பட்டி: தமிழக முதல்வராக் ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என்று வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வரும் நாகராஜன் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது உடலில் பழைய துணிகளைச் சுற்றிக்கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அவர் தனது நண்பர்கள் மற்றும் வீட்டில் சொல்லி வந்தாராம். இதே காரணத்தை முன்னிட்டு அவர் தன் மீது தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரைக் காப்பாற்றி கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துச் செல்வி என்ற மகளும், சேது ரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.
தடைகளை தகர்த்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”. சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனதுஅனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம் படப்பிடிப்பிற்க்குஇடைக்கால தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்ததயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பைதொடர்ந்தனர். இந்நிலையில் எர்ணாகுலம் 2வது கூடதல் நீதிமன்ற அமர்விர்க்கு வந்த இவ்வழக்கில்இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்துதயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார். இதனால் பாபநாசம் படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது. பாபநாசம் படத்தின் இசை மற்றும் பட வெளீயீட்டு தேதி விரைவில்அறிவிக்கப்படுமென தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
என்டிடிவி.,யின் ரூ.900 கோடி வரி ஏய்ப்பு: பெண்களை வைத்து அதிகாரியை மடக்குவதாக அம்பலப்படுத்துகிறார் எஸ்.குருமூர்த்தி

சென்னை:
புது தில்லியில் இருந்து இயங்கி வரும் என்.டி.டி.வி.,யின் வரி ஏய்ப்பு முயற்சிகள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.
அதில், என்.டி.டி.வி., ரூ.900 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப் பட்டதாகவும், அதனை வெளிப்படுத்திய வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவாவை இரு பெண்களை வைத்து என்.டி.டி.வி பொய் பாலியல் புகார் அளித்து மடக்க தொடர்ச்சியாக முயன்று வருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவுகள்…
வருமான வரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இருவர் என்டிடிவி சானலுக்கு, ஆதரவாக அவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சஞ்சய் ஸ்ரீவஸ்தவா மீது அவர்கள் இருவரும் பாலியல் புகார்களைக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் அளித்த பாலியல் புகார்கள் பொய்யானவை என்பது தெரிய வந்துள்ளது. பொய்ப் புகார் அளித்த அவர்கள் அது குறித்து அமைக்கப்பட்ட புலனாய்வு கமிட்டிக்கு முன்னர் ஆஜராகவில்லை.
அந்தக் கமிட்டி, 9.12.2012ல் ஸ்ரீவஸ்தவா மீது கொடுக்கப்பட்ட அந்தப் பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தெரிவித்தது. அவர்கள் குறித்த ஸ்ரீவஸ்தவாவின் கடிதங்கள் பற்றிய விசாரணையில் அவை அவதூறானவை என்பது தெரிந்தது.
அந்தப் பெண்கள் அவருடனோ, அவருக்குக் கீழோ ஒருபோதும் பணியாற்றவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. இதற்காக 5 நபர் கொண்ட கமிட்டி ஸ்ரீவஸ்தவாவை விசாரித்தது. அவர்களில் 4 பேர் பெண்கள். இருப்பினும் அந்த இரண்டு பெண்களும் அரசிலுள்ள முக்கிய நபர்களைச் சந்தித்து ஸ்ரீவஸ்தவா குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.
சிபிடிடி (செண்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்சேஷன்) யில் உள்ள ப.சிதம்பரத்தின் கிடுக்கிகள் அவர்களை ஆதரித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசில் உள்ள ஒரு சில நண்பர்களின் துணையுடன் செயல்படும் என்டிடிவிக்கு எதிராக ஸ்ரீவஸ்தவா ஒற்றை நபராகப் போராடி வருகிறார். என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே அவரை ஆதரிக்கின்றனர்.
என்.டி.டி.வி ரூ.900 கோடி வரி ஏய்ப்பு முறைகேடு மற்றும் நிதி முறைகேடு செய்துள்ளதை ஸ்ரீவஸ்தவா ஆதாரமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஸ்ரீவஸ்தவா தங்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பொது நல மனு கொடுத்தனர். இதில் எங்கே பொது நலன் உள்ளது தெரியவில்லை.
அந்த மனுவை உச்ச நீதிமன்றமும் ஏற்றது. இப்போது, அவர்கள் புதிதாக ஒரு மனு அளித்துள்ளனர். அவர்களின் மதிப்பீட்டு உத்தரவுகள் விலக்கப்பட வேண்டும் என்று. நீதித்துறை வரலாற்றில் இதுவரை, பொது நல மனு மூலம் வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் அதன் சொந்த விதிமுறைகளைக் கொண்டு தனிநபர் நலனுக்கான நிவாரணம் பெறுதல் என்பது நடந்திராதது. இந்த விவகாரத்தில் பெரிய ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன.
உண்மையைச் சொன்னால், அது ஊடக ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் அமைந்துவிடும் என்பதைக் காரணம் காட்டி வாய்மூடியுள்ளன.
NDTV tax fraud: Two lady officials of IT Dept became proxies for NDTV and PC. They charged Sanjay Srivastava with sexual harassment. Read on — S Gurumurthy (@sgurumurthy) March 17, 2015
NDTV tax fraud: the mainline media is silent. They do not want to be blamed for breaking media unity and tell the truth — S Gurumurthy (@sgurumurthy) March 17, 2015
கோவையில் தாய், குழந்தைகளைக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை
கோவை: கோயமுத்தூரில் தாய், மற்றும் அவரது இரு குழந்தைகளைக் கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. கோவை கணபதி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த மருதமாணிக்கத்தின் மனைவி வத்சலாதேவி (28). இவருக்கு மகிலன் (6) மற்றும் 11 மாதக் குழந்தை பிரனீத் ஆகியோர் இருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மருதமாணிக்கம் வீட்டில் இல்லை. அவரது தாயார் கோவிந்தம்மாள் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வத்சலாதேவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். வத்சலா தேவி தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஒர்க்ஸ் ஷாப் ஊழியர் செந்தில்குமார் (32) என்பவர், அவரது வீட்டுக்குள் புகுந்து, வத்சலாதேவியையும் 2 குழந்தைகளையும் கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, குற்றவாளி செந்தில்குமாரைக் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. கோவை அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில், இந்த வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான ஒன்று. இந்த வழக்கின் தீர்ப்பு இனி வருங்காலத்தில் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று நினைக்கத் தோன்ற வேண்டும். கொலையுண்ட பெண்ணின் உடலில் 54 இடங்களில் குத்துப் பட்ட காயம் உள்ளது. எதுவும் அறிந்திராத அப்பாவியான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத 6 வயதுக் குழந்தையின் உடலிலும் 21 இடங்களில் குத்துப் பட்ட காயம் உள்ளது. உலகம் அறியாத இளம் 11 மாதக் குழந்தை உடலில் 11 இடங்களில் குத்துக்காயம் உள்ளது. ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவும் அது நடக்காததால் தன்னை வெளியில் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற பயத்திலும் இந்தக் கொடூரக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. பெண்ணைக் கொன்றதற்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 6 வயதுக் குழந்தையைக் கொன்றதற்காக தூக்குத் தண்டனையும், 11 மாதக் குழந்தையைக் கொன்றதற்காக தூக்கு தண்டனையும், குழந்தைகளிடம் இருந்த நகைகளைத் திருடியதற்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், வீட்டினுள் அத்துமீறிச் சென்றதற்காக ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு வழக்குக்கும் தலா ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறுகிறேன். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும்… என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
: கராச்சி: பாகிஸ்தானில் குற்றவாளிகள் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. இன்று 14 பேர் தூக்கிலிடப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முல்தான் மற்றும் தேரா காஸி கான் சிறைகளில் இருந்த இருவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், 12 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர். பயங்கரவாதம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட இவர்களுக்கான தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். முன்னதாக, பெஷாவரில் ராணுவப் பள்ளி மீது தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 150 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின், தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சுமார் 8 ஆயிரம் பேர் தூக்கு தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். அவர்களில், பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து, தற்போது பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இன்று, பாகிஸ்தானின் ஜனாக், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தான், மயின்வாலி, பைசாலாபாத், குரன்வாலா ஆகிய பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோழியை மணம் செய்து கொள்கிறார் சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா விரைவில் தனது தோழியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மென் சுரேஷ் ரெய்னா. இவர் ஒரு நாள், டி20, ஐ.பி.எல் போட்டிகள் என அனைத்திலும் பேட்டிங்கில் ஜொலிப்பவர். சிக்ஸர்கள் அடித்துக் கலக்குபவர். தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக அடித்து, இந்திய அணியை பல நேரங்களில் வெற்றியடையச் செய்வதவர். இவரும் தோனியும் களத்தில் 5 வது விக்கெட்டுக்கு நின்று விட்டால், நிச்சயம் 80ன் ரன்களாவது ஜோடி சேர்ந்து எடுத்து விடுவார்கள் என்று சொல்லும் வகையில் நடு வரிசையில் நிலைத்து நின்று ஆடக் கூடியவர். அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியிலும் சதமடித்து அசத்தினார். கிரிக்கெட் மைதானத்தில் கலக்கும் சுரேஷ் ரெய்னா வாழ்க்கையில் கலக்கக் காத்திருக்கிறார். சுரெஷ் ரெய்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மணமகள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா சவுத்திரி என்பவர். இவர் சுரேஷின் தோழி. பிரியங்கா சவுத்திரியின் தாயாரும், ரெய்னாவின் தாயாரும் மிக நெருக்கமான உயிர்த் தோழிகள். அந்த வகையில், தன் தோழியின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர் திட்டமிட்டு, ரெய்னாவின் சம்மதத்தையும் பெற்றுவிட்டாராம். இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண விழாவில் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பப் பிரச்னையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொன்ற கணவன்
பண்ருட்டி: குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றார் கணவர். இந்தச் சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி வட்டம் பணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி. இவருக்கும், உமா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதுண்டாம். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் வீரமணி, தன் கையில் வைத்திருந்த பிளேடால் மனைவி உமாவின் கழுத்தை அறுத்தார். ரத்தம் அதிகம் வெளியேறியதால், உமா துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முதல் கட்ட விசாரணையைத் துவக்கினர். மேலும், உமாவின் உடலைக் கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

