மீனவர்களை கொல்வதாக கொக்கரிப்பதா? ரணிலின் பேச்சு ஆபத்தானது: ராமதாஸ்
இந்திய ரூபாய் மதிப்பு 9 காசு உயர்வு
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து ரூ. 62.72 எனற அளவில் இருந்தது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில், இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசு உயர்ந்து ரூ. 62.81 என்ற அளவில் இருந்தது. அமெரிக்க கரன்சி தேவை சரிவடைந்ததே, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தற்கான காரணமாகக் கூறப்பட்டது.
பெண்களின் நிறம் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்காத சரத் யாதவுக்கு ஸ்மிருதி இராணி கண்டனம்
புது தில்லி: தென்னிந்திய பெண்களின் தோல் நிறம் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கப் போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். இதற்கு அவையில் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெண்களின் நிறம் குறித்த சரத்யாதவ் கருத்தில் இருந்து தான் விலகி இருக்க விரும்புவதாகவும், மேலும் அவர் தனது கருத்தை வாபஸ் பெறக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் அதற்கு சரத் யாதவ், நான் பேசியது போன்ற பெண்கள்தான் (கருப்பு நிறம்) இந்தியாவிலும், இந்த உலகத்திலும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்காக ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட தலைவர்கள் போராடினார்கள். எனவே இந்தப் பிரச்னை குறித்து யாருடனும் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவது இல்லை என்றார். அவர் இவ்வாறு தெரிவித்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘‘பெண்களின் தோலின் நிறம் குறித்து இவ்வாறு பேசாதீர்கள். அது தவறான தகவலை தெரிவிப்பதாக அமைந்துவிடும்’’ என்றார். அதற்கு சரத்யாதவ், ‘‘நீங்கள் யார் என்று எனக்கு தெரியும்’’ என்று ஆவேசத்துடன் கூறினார். இதை அடுத்து அவைத்தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு, இந்த பிரச்னை குறித்து மேலும் விவாதிக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தில்லி மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை நடந்த காப்பீட்டு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், இந்தியர்கள் வெள்ளைத் தோல் மீது மோகம் கொண்டவர்கள் என்றும், திருமணத்துக்காக வெள்ளைத்தோல் கொண்ட பெண்களையே தேடுவதாகவும் கூறினார். அத்துடன், தென்னிந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள், நாட்டியத் திறமை கொண்டவர்கள் என்ற போதிலும் சிவந்த நிறமாகப் படைக்கப்படவில்லை என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தான் கூறிய அனைத்தும் நகைச்சுவைக்காக கூறப்பட்டவை என்று சரத்யாதவ் விளக்கம் அளித்தார். இருந்தபோதும் சரத்யாதவின் பேச்சு பின்னர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
புதுச்சேரியில் வணிகர்கள் கடையடைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து, புதுச்சேரி வணிகர்களில் ஒரு பகுதியினர் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தி அருகின்றனர். இதனால், நகரில் பெரும்பாலான கடைகள் மூட்பட்டிருந்தன.
வாடகை செலுத்த கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரி சகாயம் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அலுவலகத்தின் முன்பு வாடகை செலுத்த கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ் மகளிருக்கான பூமாலை வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கே மொத்தம் 32 கடைகள் உள்ளன. இந்த வளாகப் பராமரிப்புப் பணிகளை அவ்வப்போது ஒவ்வொரு துறையினரிடமும் மாற்றிக் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது 2014–ம் ஆண்டு முதல் அந்த வணிக வளாகப் பராமரிப்புப் பணிகள், விக்கிரமங்கலம் ஊராட்சி கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் வாடகைக்கு இருப்பவர்கள் ஒரு வருடமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் வாடகை மற்றும் மின்கட்டணத்தை 15 நாட்களுக்குள் செலுத்தும்படி அவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அந்த வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த வளாகத்தின் எண் 12 முதல் 14 வரை உள்ள அறைகளில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கும் வாடகை வசூல் குறித்த நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மின்னல் வேகத்தில் பரவியதை அடுத்து, அந்த நோட்டீஸ் பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டது.
2 மணிக்குள் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தில்லியைச் சேர்ந்த சுரேந்தர் சர்மா என்பவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் உடனடியாக ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மதியம் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. முன்னதாக, அவர் நீதிமன்றம் ஆஜராகுமாறு கூறியும், ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மனிஷ் சிஷோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோரும் மதியம் 2 மணிக்குள் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஜராகாமல் இருப்பதற்கான எந்த விதக் காரணத்தையும் கூற வேண்டாம் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.
பெண் போலீசுடன் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையர், பெண் போலீஸ் இடமாற்றம்
சென்னை: சென்னையில் பெண் போலீசுடன் உதவி ஆணையர் செல்போனில் ஆபாசமாக உரையாடிய விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருமே பணியிட மாற்றம்ம் செய்யப்படுள்ளனர். அந்த உரையாடலில் இருந்த பெண் போலீஸ் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை போலீஸாரிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரம் குறித்து வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அந்த உதவி ஆணையர், அவர் பணியாற்றிய இடத்தில் இருந்து மாற்றப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரையும் ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். இருப்பினும், அவரிடம் உயர் அதிகாரிகள், நண்பர்கள் இந்தப் பேச்சு குறித்து விசாரித்தபோது, செல்போனில் பேசியது நான் அல்ல என்று அவர் மறுத்துள்ளார். தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவோ, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவோ, உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் இதுவரை புகார் மனு எதுவும் கொடுக்கவில்லை. இருபினும், நேற்று சிவசேனா கட்சி சார்பில், உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.
டிராபிக் ராமசாமியை கைது செய்த ஆய்வாளர் அதிரடி மாற்றம்
சென்னை: டிராபிக் ராமசாமியை கைது செய்த வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவர், திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர் அழகப்பா சாலையில் காரில் சென்றபோது, அங்கு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக டிராபிக் ராமசாமி சாலையை மறித்தபடி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்ததாராம். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறி டிராபிக் ராமசாமியை சாலையின் ஓரத்தில் நின்று பேட்டியளிக்குமாறு வீரமணி கூறியதாகவும், அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, டிராபிக் ராமசாமி தனது காரை சேதப்படுத்தி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி புகார் செய்தார். அவரது புகார் மனுவை ஏற்று, வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த டிராபிக் ராமசாமியைக் கைது செய்தார். 80 வயது கடந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி விஷயத்தில் அதிகாலை கைது செய்து அழைத்து வரும் அளவுக்கு மிகப் பெரும் குற்றப் பதிவாக இதைக் கருதிய ஆய்வாளர் பிரபுவுக்கு சமுக ஊடகங்களிலும் அரசியல் மட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனிடையே டிராபிக் ராமசாமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வேப்பேரி காவல் அலுவலகத்துக்குச் சென்ற லாரி உரிமையாளர்கள் சிலர், டிராபிக் ராமசாமி கைது விவகாரத்தில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பூச்செண்டுடன் வந்து ஆய்வாளர் பிரபுவுக்கு பாராட்டு தெரிவிக்க முயன்றனர். இத்தகைய சூழ்நிலையில், வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்
தமிழ்த் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த அமீர்ஜான், பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை,சிவா,தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சிகிச்சை முடிந்து தில்லி புறப்பட்டார் கேஜ்ரிவால்
பெங்களூரு: உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு வந்திருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளது. தொடர் இருமலும் குணமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரை நோய் மற்றும் தொடர் இருமல் காரணமாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிரமப்பட்டு வந்தார். பின்னர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் கடந்த 5-ந்தேதி தில்லியில் இருந்து பெங்களூரு வந்தார். அங்கே ஜிண்டால் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. யோகா, சுவாச பயிற்சி, கட்டுப்பாடான உணவு வகைகள், மூலிகை சாறு என இயற்கை முறையில் 12 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவருடைய உடல்நலம் சீரானதை அடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டு சென்றார்.

