Home Blog Page 6227

இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: அமைச்சரவை ஒப்புதலுக்கு ராஜபட்ச கட்சி எதிர்ப்பு

srilanka-government கொழும்பு; இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, * அதிகாரமிக்க அதிபர் ஆட்சிக்கு பதிலாக நாடாளுமன்றத்திற்கு கூட்டுப் பொறுப்புள்ள ஆட்சிமுறை அமலுக்கு வரும். * அதிபரின் பதவிக் காலமும் 6 வருடத்தில் இருந்து 5 வருடமாகக் குறைக்கப்படும். * அதிபர் பதவியில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்ற பழைய விதி மீண்டும் அமல் செய்யப் படும். * மக்கள் பிரதிநிதிகள் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நியமிக்கப்படுவதற்கு பதிலாக இனி நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்படுவர். அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த மாற்றங்கள் அடங்கிய சட்டத் திருத்தம் அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கப் போவதாக முன்னாள் அதிபர் ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது: படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

engalukku-veru-kilaikal-kidaiyathu சென்னை: பாரதி மோகன் இயக்கத்தில் ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் விக்ரம்சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரக்ஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். மற்றும் நிழல்கள்ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ்வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி,பிளாரன்ட் பெராரா, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி, மதுரை புலி, காளிச்சரண், ஸ்டன்ட் சர்வியானந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – லால்பாபு / இசை – தாஜ்நூர் பாடல்கள் – நா.முத்துகுமார், யுகபாரதி கலை – ராம் / ஸ்டன்ட் – ஜாக்குவார் தங்கம் எடிட்டிங் – ராஜ்கீர்த்தி தயாரிப்பு நிர்வாகம் – சாமிநாதன், காளீஸ்வரன் தயாரிப்பு – ராமாபுரம் ராஜேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரதிமோகன். இயக்குனரிடம் படம் பற்றி கேட்டோம்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்திற்காக அமைச்சர் காத்துவாயனாக நடிக்கும் மனோபாலா ஏழை திருமணங்களை நடத்தி வைகிறார். மனோபாலா நடத்தி வைக்கும் திருமண ஜோடிகளில் அப்புகுட்டி – வர்ஷா ஜோடியும் ஒன்று. அமைச்சர் தடபுடலாகத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அப்புகுட்டி – வர்ஷா கழுத்தில் தாலிகட்ட அதை பார்த்த சிங்கம்புலி அதிர்ச்சி அடைகிறார். ஏன்? எதற்கு என்பதற்கான விளக்கம் திரையில் என்றார் இயக்குனர் பாரதிமோகன்.

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: விசாரணை ஆக.3 க்கு ஒத்திவைப்பு

புது தில்லி:Maran-brothers ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணை வரும் ஆக. 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் முன்ஜாமின் கேட்டு மார்ச் 2-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுவை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதன்படி, இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது என்று சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தொழிலதிபர்கள் ரால்ஃப் மார்ஷல், அனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்ப முடியவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்ப சிபிஐ-க்கு காலஅவகாசம் வழங்கிய தில்லி சிபிஐ நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வரதட்சிணை சட்டத் திருத்த முடிவுக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் எதிர்ப்பு

புது தில்லி: வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது…. தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது. இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன். தில்லியில் 1980 களில், வரதட்சிணை கொடுமை காரணமாக தொடர்ந்து புதுமணப்பெண்கள் உயிரிழந்தனர். இதை அடுத்து, தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தில் 498ஏ பிரிவு சேர்க்கப்பட்டது.

பழிவாங்கும் பெண்கள்: வரதட்சிணை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

indian-government புது தில்லி: பெண்கள் வரதட்சிணை தடுப்புச் சட்டத்தை பழிவாங்கும் வகையில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரதட்சிணை கொடுமையை சமரசத்துக்குள்பட்ட குற்றமாக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில், கணவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண் அல்லது அவரது குடும்பத்தினர் வரதட்சிணை கொடுமை தொடர்பாக புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்படுவதில்லை. இருதரப்பினரும் சமரசம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படவில்லை. இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமிழைக்காதவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படக்கூடும். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக இந்தச் சட்டத்தை பெண்கள், தங்களது கணவர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு செய்துள்ள பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்தது… இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும். தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்ஃப்ராஸ் அடித்த முதல் செஞ்சுரி: காலிறுதியில் பாகிஸ்தான்!

sarfraz-ahmed-pakistanஅடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த லீக் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அசத்தலான சதமடித்து பாகிஸ்தானை காலிறுதிக்குள் கொண்டு சென்றுள்ளார். 11 ஆவது உலகக் கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி 237 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், 27 வயதாகும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் தனது அதிரடி ஆட்டம் மூலம் 101 ரன்களை விளாசி பாகிஸ்தானை காலிறுதிக்கு முன்னேற்றினார். உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பதிவு செய்த முதல் சதம் இது. இந்த சதத்துக்குப் பின்னர் பேட்டியளித்த கேப்டன் மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் இந்த முறை நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டதாகக் கூறினார். கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் இவர்தான்.

டிராபிக் ராமசாமி கொடுத்த புகார்: ‘அடையாளம் தெரியாத நபர்’ மீது வழக்கு பதிவு

traffic-ramasamy சென்னை: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் டிராபிக் ராமசாமி கொடுத்த புகார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர் அழகப்பா சாலையில் காரில் சென்றபோது, அங்கு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக டிராபிக் ராமசாமி சாலையை மறித்தபடி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்ததாராம். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறி டிராபிக் ராமசாமியை சாலையின் ஓரத்தில் நின்று பேட்டியளிக்குமாறு வீரமணி கூறியதாகவும், அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, டிராபிக் ராமசாமி தனது காரை சேதப்படுத்தி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி புகார் செய்தார். இதேபோல, டிராபிக் ராமசாமியும் புகார் அளித்தார். வீரமணி அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் செய்து டிராபிக் ராமசாமியை வியாழக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதுபோல், ராமசாமி அளித்த புகாரின் பேரிலும் சட்டவிரோதமாக கூடியதாகவும், தாக்கியதாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கில் அடையாளம் தெரியாத நபரே, டிராபிக் ராமசாமியிடம் தகராறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே வேப்பேரி காவல் அலுவலகத்துக்கு நேற்று சென்ற லாரி உரிமையாளர்கள் சிலர், டிராபிக் ராமசாமி கைது விவகாரத்தில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பூச்செண்டுடன் வந்தது குறிபிடத் தக்கது.

வன்முறையில் ஈடுபட்ட கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: பட்ஜெட் தாக்கலின் போது, கேரள சட்டப் பேரவையில் வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்ச் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கேரள சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கே.எம் மாணி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, பேரவைத் தலைவரின் இருக்கை, கணினி, ஒலிப்பெருக்கி உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. எம்.எல்.ஏக்கள் அடிதடி ரகளையில் இறங்கினர். இந்நிலையில், சட்டப்பேரவை வன்முறைகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பப் போவதாக, கேரள ஆளுநர் பி.சதாசிவம் சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சதாசிவம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவைச் செயலரின் புகாரின் பேரில் வன்முறையில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோ ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: பார்வையற்றோரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றோர்களில் சுமார் 20 சதவீதம் பார்வையற்றோர் இந்தியாவில் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் ஆயிரம் பேருக்கு நான்கு பேர் பார்வையற்றோராக இருக்கின்றனர். எனவே அரசு – திட்டங்களை வகுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காலங்களில் பார்வையற்றோர் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, பார்வையற்றோர் இல்லாத நிலையை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். பார்வையற்றோருக்கு மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் :- பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக குறுந்தகடு இயக்கிகள், பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல்; பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் உயர் கல்வி பயில உதவி; பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவி தொகை; பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி; பார்வையற்றோருக்கு ஆரம்ப நிலை பயிற்சி மையம்; பார்வையற்றோருக்கான தொழிற் பயிற்சி (ஆண்கள்); பார்வையற்றோருக்கு ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு; பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகை; பிரெய்லி கைக் கடிகாரங்கள்; பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல்; – போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் அவர்களுக்கு தங்கு, தடையின்றி, முழுமையாக, உரிய நேரத்தில் அரசு வழங்கினால் தான் அதன் முழுப் பயனை அவர்கள் அடைவார்கள். மேலும் பார்வையற்றோர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பார்வையற்றோர் தங்களது 9 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி போராடி வருகிறார்கள். குறிப்பாக பார்வையற்றோருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்புத் தேர்வு நடத்தவும்; பார்வையற்றோர் பள்ளிகளில் பூர்த்தி செய்யாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்; அரசு பணியிடங்களில் அவர்களுக்கு உரிய சலுகைகள், முன்னுரிமைகள், இட ஒதுக்கீடுகள் வழங்கவும்; வேலையற்ற பார்வையற்றோருக்கு நிவாரண உதவித் தொகை முழுமையாக, கால தாமதமின்றி வழங்கவும் – போன்ற தங்களது பல்வேறு உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். காவல்துறை அவர்களது போராட்டத்தை தடுத்து நிறுத்த, அவர்களை தள்ளியும், இழுத்தும் அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரியில் படிக்கின்ற பார்வையற்ற மாணவர்களையும் மற்றும் பட்டதாரிகளையும் மாநில அரசு பொறுப்போடு அழைத்து, மனிதாபமான அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதனடிப்படையில் பார்வையற்றோர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு சிறப்புக் கவனம் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

சிங்கப்பூர்; பப்புவா நியூ கினியா மற்றும் நியூ பிரிட்டன் ஆகிய தீவுகளில் திங்கள் கிழமை இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூ பிரிட்டன் தீவின் வடகிழக்குப் பகுதியில் ராபௌல் நகரின் வடமேற்கே 9 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அது தெரிவித்துள்ளது.