லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த 37 வயது இந்திய மாணவி ஒருவர் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அல்பேனி என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரந்தீர் கவுர் (37). இவர் சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்தார். இவர் மார்ச் 8ம் தேதி மதியம் எல் சாப்ரண்ட் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை ரந்தீர் கவுர் கல்லூரிக்கு வராததால் அவருடன் படித்தவர்கள் அவரின் உறவினருக்கு போன் செய்து கேட்டுள்ளனர். இதை அடுத்து, அவரது உறவினர், மாலை 4 மணி அளவில் ரந்தீர் கவுரின் கெய்ன்ஸ் அவின்யு அபார்ட்மெண்ட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் சுடப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரந்தீரின் வீட்டுப் பகுதியில் கடந்த 8ம் தேதி யாரெனும் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரந்தீர் கவுர் வரும் 2016ஆம் ஆண்டு, சர்வதேச பல் மருத்துவ படிப்பை நிறைவு செய்ய வேண்டுமாம். கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கொலையே நடக்காமல் இருந்த அல்பேனி பகுதியில் ரந்தீர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரந்தீரின் வீட்டுக் கதவை உடைத்து யாரும் நுழையவில்லை. அவரது உடைமைகள் அவரது வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ரந்தீரின் 1999 மாடல் டொயோடோ கார், கவுர் வீட்டின் வாசலில் பூட்டப்பட்டு பார்க் செய்யப்பட்டுக் கிடந்தது. ஒரு வாரமாக நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின்பும், இதுவரை கொலையாளிகள் எவரும் கைது செய்யப்பட வில்லை.
அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவி தலையில் சுடப்பட்டுக் கொலை
சிறு கழிக்காதீர்; மீறினால் உங்களை ஈரமாக்கி விடுவோம்: ஜெர்மன் நகரில் ‘விநோத பெயிண்ட்’!
பெர்லின் ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் அது மீண்டும் அவர்களையே நனைத்துவிடும் அளவுக்கு சிறுநீரை தெளிக்கச் செய்து விடும் வகையில் சுவரில் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள் நாற்றம் இன்றி நிம்மதியாக உலவுகின்றனராம். ஜெர்மனியில் குடிகாரர்கள் குடித்துவிட்டு போகிற போக்கில் பொது இடங்களில் சுவர்களை நனைத்து நாற்றமெடுக்கச் செய்து விடுகின்றனர். இதனால் வெறுத்துப் போன ஜெர்மனியின் ஹம்பர்க் நகர் செண்ட் பாலி மக்கள் ஒரு விநோத வழிமுறையைக் கையாண்டுள்ளனர். செண்ட் பாலியின் அனைத்து சுவர்களிலும் விநோத பெயிண்ட் ஒன்றைப் பூசினர். இந்தப் பெயிண்டானது தண்ணீர் பட்டால் எதிர்த்திசையில் அதை திருப்பி அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டது. அங்குள்ள ஒரு விடுதியில் முதலில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இப்போது பரவி விட்டது. விடுதியின் அருகில் உள்ள சுவர்களில், ஓர் எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர். அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்’ என எழுதப்பட்டுள்ளது. இதே பெயிண்டை அந்த விடுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் தங்கள் சுவர்களில் அடித்துள்ளனர்.இந்தத் தொழில் நுட்ப பெயிண்டை அமெரிக்க நிறுவனம் கடந்த 2012–ம் ஆண்டு கண்டு பிடித்ததாம். https://www.youtube.com/watch?v=uoN5EteWCH8
பெண் போலீஸிடம் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையரின் குரல் மாதிரி பதிவு செய்ய முடிவு
சென்னை: சென்னையில் உதவி ஆணையர் பெண் போலீஸ் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசிய ஒலிப் பதிவில், இருவரும் தங்களின் பெயர்களை அதில் தெரிவிக்கவில்லை. எனினும், தனது ‘வாட்ஸ்அப்புக்கு அந்தப் பெண்ணின் போட்டோவை அனுப்புமாறு கூறி, அவரது செல் போன் எண்ணைக் கொடுத்து பதிவு செய்யச் சொல்கிறார். இந்த செல்போன் எண்ணைக் கூறுவது மட்டும் சட்டபூர்வ மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், அந்த உதவி ஆணையரை பேசச் சொல்லி, குரல் மாதிரி எடுத்து உறுதி செய்ய போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. . சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்தில் இந்த குரல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வாட்ஸ் அப்பில் உலவும் உதவி ஆணையரின் பேச்சு…
ராகுலை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு
புது தில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை உளவு பார்ப்பதாகவும் விளக்கம் தரக் கோரியும் காங்கிரஸார் இன்று நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். பின்னர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அண்மையில், ராகுல் காந்தியின் தில்லி துக்ளக் சாலையில் உள்ள அலுவலகத்தில் போலீசார் சென்று ராகுல் இருப்பிடம், நிலை குறித்து விசாரித்துள்ளனர். இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராகுலை உளவு பார்ப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், மத்திய அரசைக் கண்டித்து நாடெங்கும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராகுல் காந்தி குறித்த விசாரணை சர்ச்சை இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பப் பட்டது. முன்னதாக மாநிலங்களவையில் இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. பகல் 11 மணிக்கு அவை கூடியதும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த விவகாரத்தை எழுப்பி, இது, ஜனநாயகத்துக்கு எதிரானது. ஒருபோதும் ஏற்க இயலாது. இதுபற்றி இந்த அவையில் விவாதிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முக்கிய தலைவர்கள் குறித்து போலீசார் தகவல்கள் சேகரிப்பது புதிய நடைமுறை அல்ல. 1957-ல் இருந்தே இத்தகைய விசாரணை நடைமுறையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே இந்த விஷயத்தை பெரிதாக்கி ஆதாயம் தேட முயல்கிறது. தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பி விடாதீர்கள் என்றார். மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேச அவைத்தலைவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசைக் குறை கூறி கோஷமிட்டு, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல் மக்களவையிலும் இந்தப் பிரச்னையை காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினர். ராகுல் குறித்து விசாரித்தது ஏன் என்பதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, ’தில்லி போலீசார் நடத்திய விசாரணை வழக்கமான ஒன்றுதான். மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை’ என்று கூறினார். ஏற்கெனவே இது குறித்த விவகாரம் எழுந்தபோது, இதே பதிலைத்தான் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று துவங்கின. தேர்வு முடிவுகள் வரும் மே மாத முதல் வாரத்தில் வெளியாகிறது. ப்ளஸ் 2 தேர்வுகள், கடந்த 5–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 31–ந்தேதி வரை நடக்கும் இந்தத் தேர்வை சுமார் 8,45,000 மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்கள் மற்றும் சில பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நாளை மறுநாள் (புதன்கிழமை) கணிதத் தேர்வு நடக்கிறது. தேர்வுகளில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் தடுக்க அரசு தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கி விட்டன. தமிழகம் முழுவதும் 63 கல்வி மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. முதலில் தமிழ் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் காப்பு மையத்தில் இருந்து கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியே எடுக்கப்பட்டன. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் கவனமாகவும், தவறுகளுக்கு இடம் அளிக்காத வகையில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 10ந்தேதிக்குள் வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் மே 9ந்தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டும் அதே போல வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகரிக சமுதாயத்தில் கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் கண்டிக்கத்தக்கது: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர்
நாகபுரி: ஒரு நாகரிக சமுதாயத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் போன்ற செயல்களுக்கு இடமில்லை, அதை ஆர்.எஸ்.எஸ். வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் சிந்தனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டனத்துக்கு உரியவை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி சமுதாயத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார் சுரேஷ் பையாஜி ஜோஷி. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு, அங்கே உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதில்லை. பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக் குடும்பங்கள் இந்தியாவுக்கு தப்பி வந்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகின்றன. அவர்கள், இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பசுக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், ஹரியானா மாநில பாஜக அரசு, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் தடை விதிக்க வேண்டும். பசுவதைத் தடைச் சட்டம் பேச்சளவில் இருந்தால் மட்டும் போதாது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார் சுரேஷ் பையாஜி ஜோஷி.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டம்: கைவிடவில்லை என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலர்
நாகபுரி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் சிந்தனைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக உள்ளது. இருந்த போதிலும், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை மெதுவாக நடைபெறுகிறது. இதை விரைவுபடுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக போராட்டம் எதுவும் நடத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விடவில்லை என்று கூறியுள்ளார்.
பெண் போலீஸுடன் ஆபாச பேச்சு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்?
சென்னை; சென்னை மாநகர போலீஸ் உதவி ஆணையர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாகப் பேசிய விவகாரத்தில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாட்ஸ்அப்பில் அவர்களின் உரையாடல் ஒலிப்பதிவு வைரலாகப் பரவி வருகிறது. அதில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரின் செல்போன்களுக்கும் வைரலாகப் பரவிவிட்டது. இந்நிலையில், உதவி ஆணையரின் ஆபாசப் பேச்சு குறித்து விசாரணை நடத்த போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து வட சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில் தொடர்புடைய உதவி ஆணையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது விசாரணை முடிவில் அவர் பணியிடை நீக்கம் செய்யப் படக்கூடும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆபாச உரையாடலில் சிக்கி இருக்கும் உதவி ஆணையர் 1987–ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர். வேலூரைச் சேர்ந்த இவர், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் காவல் நிலையங்களில் ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிலும் வேலை செய்துள்ளார். தற்போது உதவி ஆணையராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்த ஆபாசப் பேச்சு தொடர்பாக குறிப்பிட நபர் மீது பெண் போலீஸ் இதுவரை புகார் அளிக்கவில்லை. ஆனால், அவர் புகார் அளிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
சதுரன் படத்தில் மூடர்கூடம் ராஜாஜி நாயகனாக அறிமுகம்
மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிகிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் K.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகிறார். மற்றும் முன்டாசுப்பட்டி காளிவெங்கட், கயல் தேவராஜ், இயக்குனர் ராஜீஸ்வரன், ஆகியயோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவு மோனிக்குமார்.ஜி இவர் ஹாலிவுட் படங்களான ஸ்லம்டாக் மில்லியனர், மரியான், கோஸ்ட் புரோடோகால் உள்ளிட்ட படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்திற்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைதிருக்கிறார். படத்தொகுப்பு- சுரேஷ்அர்ஸ் வசனம் – ஜி.ராதாகிருஷ்ணன். இவர் விஷால் நடித்த ஆம்பள படத்திற்கு வசனம் எழுதியவர். பாடல்கள் – யுகபாரதி, முத்தமிழ் / நடனம் – தீனா, நந்தா ஸ்டன்ட் – கே.கணேஷ்குமார் -(எங்கேயும்எப்போதும் கலை – பழனிவேல் நிர்வாக தயாரிப்பு – அண்ணாமலை இப்படத்தில் சென்னை ஆட்டோக்காரனாக நாயகன், ஜனனி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் மனதில் இடம்பெற முயற்சிக்கும் வேலையில், உதவும் மனப்பான்மை கொண்ட நாயகன் சட்ட விரோத கும்பலின் சதியில் தானாக மாட்டிக் கொள்ள, அதனால் தன்னுடைய நண்பர்களுக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து காப்பாற்ற போராடும் திகில் நிறைந்த பொழுது போக்கான படம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளில் சென்னையின் இருண்ட பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக அமையும் இந்த சதுரன்.
2012ல் குஜராத்தில் வென்றபோதே பிரதமர் வேட்பாளராவேன் என நம்பினேன்: மோடி
புது தில்லி: 2012ல் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற போதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவனாக முன்னிறுத்தப் படுவேன் என நான் நம்பினேன் என்று கூறியுள்ளார் நரேந்திர மோடி. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரிடம் ஊடக ஆலோசகராகப் பணியாற்றியவர் லான்ஸ் பிரைஸ். இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ‘மோடி விளைவு: இந்தியாவை மாற்ற நரேந்திர மோடியின் பிரசாரம்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், மோடி, பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோரிடம் பேட்டி எடுத்துள்ளார். அவர்களிடம் பேசியபோது பெற்ற தகவல்களை வைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, மோடியின் மனநிலை குறித்து பேட்டியாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மோடி, ‘தேர்தல் முடிவு வெளியான நாள் (16-5-2014) அன்று காலை, நான் டி.வி. எதுவும் பார்க்கவில்லை. ஒரு தனி அறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். 12 மணிக்குப் பிறகே தொலைபேசி அழைப்புகளையும் எடுத்தேன். அவ்வாறு நான் முதலில் ஏற்றுக்கொண்ட தொலைபேசி அழைப்பு ராஜ்நாத் சிங்கிடமிருந்து வந்தது. அவர் என்னிடம் ஏற்கெனவே எதிர்பார்த்தது போல, நாம் வெற்றி பெறும் நிலையில் உள்ளோம் என்று கூறினார் என்று கூறியுள்ளார் மோடி. நீங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவீர்கள் என்று நினைத்தீர்களா என்று கேட்டதற்கு, கடந்த 2012–ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக நான் இருப்பேன் என்று நம்பினேன் என மோடி கூறியுள்ளார். எனினும் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கட்சியிடம் எப்போதும் நான் கேட்டுக் கொள்ளவில்லை; இந்த நிலையை அடைவேன் என ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

