அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவி தலையில் சுடப்பட்டுக் கொலை

உலகம்

randhir-kaurலாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த 37 வயது இந்திய மாணவி ஒருவர் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அல்பேனி என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரந்தீர் கவுர் (37). இவர் சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்தார். இவர் மார்ச் 8ம் தேதி மதியம் எல் சாப்ரண்ட் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை ரந்தீர் கவுர் கல்லூரிக்கு வராததால் அவருடன் படித்தவர்கள் அவரின் உறவினருக்கு போன் செய்து கேட்டுள்ளனர். இதை அடுத்து, அவரது உறவினர், மாலை 4 மணி அளவில் ரந்தீர் கவுரின் கெய்ன்ஸ் அவின்யு அபார்ட்மெண்ட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் சுடப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரந்தீரின் வீட்டுப் பகுதியில் கடந்த 8ம் தேதி யாரெனும் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரந்தீர் கவுர் வரும் 2016ஆம் ஆண்டு, சர்வதேச பல் மருத்துவ படிப்பை நிறைவு செய்ய வேண்டுமாம். கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கொலையே நடக்காமல் இருந்த அல்பேனி பகுதியில் ரந்தீர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரந்தீரின் வீட்டுக் கதவை உடைத்து யாரும் நுழையவில்லை. அவரது உடைமைகள் அவரது வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ரந்தீரின் 1999 மாடல் டொயோடோ கார், கவுர் வீட்டின் வாசலில் பூட்டப்பட்டு பார்க் செய்யப்பட்டுக் கிடந்தது. ஒரு வாரமாக நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின்பும், இதுவரை கொலையாளிகள் எவரும் கைது செய்யப்பட வில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.