சென்னை: கொலை முயற்சி வழக்கு எனக் கூறி கைது செய்யப்பட்டிருந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிராபிக் ராமசாமியை, திமுக பொருளாளா் “மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி: ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
கேரள சட்டமன்ற கலாட்டா: ஹார்ட் அட்டாக்கில் தொண்டர் பலி
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று வரலாறு காணாத அளவில் நிகழ்ந்த அடிதடி ரகளையில், வெளியே நின்றிருந்த எல்.டி.எஃப் ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். கேரள சட்டமன்றத்தில் இதுவரை கண்டிராத காட்சிகள் அரங்கேறின. நிதியமைச்சர் கே.எம். மாணி சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர். ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணிக்கும் இடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை தூக்கி விசிறியடிக்கப்பட்டது. நாற்காலிகள் பறந்தன. அவைக்கு உள்ளே அமளி ஏற்பட்டபோது, வெளியே தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இடதுசாரி கூட்டணி ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கடும் அமளிக்கு இடையிலும் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் கே.எம். மாணி.
“காரடையார் நோன்பு 15-03-2015-புதிய தகவல்கள்.
காரடையான் நோன்பு 15-03-2015 ஞாயிறு சுமார் காலை 04-05 முதல் 05-10 வரை. சில புதிய தகவல்கள் (வலை மற்றும் சில புத்தகம்) அன்று முழுவதும் மோர் சாப்பிடக்கூடாது. “ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வர்” சரடு கழுத்தில் கட்டும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்: தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம் ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3 ஸ்லோகத்தின் அர்த்தம்: ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும். கார் அரிசியை மாவாக்கி புதிய துவரம்பருப்புடன் சேர்த்து அடையாகத் தட்டி தெய்வங்களுக்கு நிவேதனம் செய்து நோன்பு செய்யப்படுவதால் காரடையார் நோன்பு என்று இதற்குப் பெயர். பெண்களுக்கும் அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுளையும் அன்பையும் வளர்க்கும் இந்த விரதத்தை முதன் முதலாக செய்து காட்டி, தனது கணவன் ஸத்யவானை யமனிடமிருந்து மீட்டாள் பதிவ்ருதையான ஸாவித்ரீ தேவி. மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்க இருக்கும் நேரத்திற்கு சற்று முன்பாகவே, அதாவது மாசியிலேயே ஸுமங்கலிப் பெண்கள் நியமத்துடன் இருந்து இந்த விரதத்தைச் செய்ய வேண்டும். வீட்டில் தெய்வ ஸந்நதியில் கோலம் போட்டு, விளக்கேற்றி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலை வீதம் எண்ணி நுனி வாழை இலைகளாகக் கோலத்தின் மீது [நுனிப்பகுதி வடக்கு நோக்கி இருக்குமாறு] போட வேண்டும். அந்த இலைகளின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நடுவில் பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையில் நடுப்பகுதியில் இரண்டு வெல்ல அடைகளும்@ வெண்ணெயும் வைக்க வேண்டும். [@ இதை வெல்லக் கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்] குடும்பத்தில் வயதான பெண்களில் ஒருவர் மட்டும், தங்கள் இலையில் மட்டும், அம்மனுக்குக் கட்ட என்று ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் போடப்பட்டுள்ள நுனி இலைகள் 1,3,5,7,9 என ஒற்றைப்படையில் வருமேயானால், ஒரு இலையை அதிகமாகப்போட்டு 2,4,6,8,10 என இரட்டைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு இலைக்கு முன்பாகவும் நின்று கொண்டு ஜலத்தினால் மும்முறை இலையைச்சுற்றி விட்டு, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் உண்டானாலும், ஒருக்காலும் என்னை விட்டு, என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்” என்னும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் தெய்வ ஸந்நதியில் அமர்ந்து கொண்டு, ஒரு சரட்டினை அம்மனுக்குக் கட்டிவிட்டு, மற்றொரு சரட்டினை தோ3ரம் க்3ருஹ்ணாமி ஸுப4கே3 ஸஹாரித்3ரம் த4ராம்யஹம் ப4ர்த்து: ஆயுஷ்ய ஸித்4யர்த்த2ம் ஸுப்ரீதா ப4வ ஸர்வதா3 என்ற ஸ்லோகம் சொல்லியபடி தானும் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அதே போல கட்டி விட வேண்டும். பிறகு அடையில் ஒன்றை தனது கணவருக்கு என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, கணவரிடம் அதைக் கொடுத்து சாப்பிடச்சொல்ல வேண்டும். தானும் மற்றொரு அடையைச் சாப்பிட வேண்டும். தயார் செய்த அடையில் [கொழுக்கட்டைகளில்] இரண்டு அடைகளை [கொழுக்கட்டைகளை] மறுநாள் காலையில் பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும். இவ்விதம் காரடையான் நோன்பைச் செய்வதால், நோன்பு செய்யும் பெண்களுக்கும், அவர்களது கணவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அன்பு பெருகும். பின் குறிப்பு : இந்த வெல்லக்கொழுக்கட்டை மற்றும் உப்புக்கொழுக்கட்டையை புதிதாகச் செய்பவர்கள், அவற்றை எப்படிச்செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை, இதை நன்றாக செய்து அனுபவமுள்ளவர்களிடம், தயவுசெய்து கேட்டுத் தெரிந்து கொண்டு செய்யவும். அப்போது தான் அது பூப்போல மிருதுவாகவும். வாய்க்கு ருசியாகவும், சாப்பிடத் திருப்தியாகவும் அமையும். இல்லாவிட்டால் ஒரேயடியாக ரப்பர் பேப்பர் வெயிட் [RUBBER PAPER WEIGHT] போல கடினமாக அமைந்து விடும். கையினால் புட்டுச் சாப்பிட முடியாமல் காய்ந்து போன கோந்துக்கட்டி போல [GUM] கெட்டியாகி வாய்க்கு ருசிப்படாமல், பற்களில் ஈஷிக்கொண்டு படாதபாடு படுத்திவிடும். ஆசையாக சாப்பிட வாயில் போடும் போது, தப்பித்தவறி காலில் விழுந்து விட்டால் கால் நகத்தையே பெயர்த்து விடும். மறுநாள் பசு மாட்டுக்குக் கொடுக்கும் போது அதுவும் அசை போட்டு சாப்பிட மிகவும் கஷ்டப்படும். அல்லது ’எனக்கு இது வேண்டவே வேண்டாம்’ என மறுத்து விடவும் கூடும். இது நகைச்சுவைக்காக மட்டும் நான் எழுதவில்லை. எந்தத் திண்பண்டங்கள் செய்தாலும் அதை மிகவும் வாய்க்கு ருசியாக, பதமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வண்ணம் செய்ய வேண்டும். அவ்வாறு ருசியாக பதமாக அமையாமல் போய்விட்டால், அதை செய்ய நாம் உபயோகித்த மூலப்பொருட்கள், நம் கஷ்டமான உழைப்பு, பொன்னான நேரம், அதற்கான எரிபொருள் எல்லாமே வீணாகிவிடும் அல்லவா! அதனால் தான் சொல்கிறேன். தயவுசெய்து யாரும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நல்லபடியாக வாய்க்கு ருசியாக, பூப்போல மிருதுவாக கொழுக்கட்டைகள் அமைய என் அன்பான வாழ்த்துகள். தீர்க்க சுமங்கலி பவ !
யோகம் உள்ள மனைவி அமையுமா ?வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா?
கேள்வி :
கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் கடும் அடிதடி, ரகளை: எம்.எல்.ஏ.க்கள் மயக்கம்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் வரலாறு காணாத அடிதடி ரகளை நடைபெற்றது. ரகளைக்கு நடுவே பட்ஜெட் உரையும் வாசிக்கப்பட்டது. கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவர் கே.எம். மாணி நிதியமைச்சராக உள்ளார். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு மதுபான பார்களை மூட உத்தரவிட்ட போது, அவற்றை திறக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி மதுபார் உரிமையாளர்களிடம் மாணி லஞ்சம் பெற்றார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மதுபார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜு ரமேஷ், நிதி மந்திரி மாணிக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால், மாணி பதவி விலக வேண்டுமென எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சட்டசபையில் மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம் என்றும் அறிவித்தனர். இதற்கு உம்மன் சாண்டி கண்டனம் தெரிவித்தார். மாணி மீது எந்த தவறும் இல்லை. அவர் மார்ச் 13-ல் நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றார். இதனால் நேற்று முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. மாணி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கை முன்பு சென்று ஆவேசமாகக் கூச்சலிட்டனர். பின்னர் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளை எடுத்து வீசினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. போராட்டம் காரணமாக சட்டசபை ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பல எம்.எல்.ஏ.க்கள் மாணியை முற்றுகையிட்டு அவர் பட்ஜெட் உரையை படிக்க விடாமல் தடுத்தனர். உடனே அவர் பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்வதாக கூறி மேஜை மீது அதனை வைத்தார். மாணி பட்ஜெட்டை படிக்க விடாமல் தடுத்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் தடுத்தனர். இதனால் சபைக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் அமளி நிலவியது. சபையில் ஏற்பட்ட கைகலப்பில் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சிவன்குட்டி உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்களை சபை காவலர்கள் உடனடியாக வெளியே கொண்டு சென்றனர்.
சட்டசபையில் அமளி நடந்த அதே வேளையில் சபைக்கு வெளியே கூடி நின்ற தொண்டர்கள் சட்டசபையை நோக்கி கற்களை வீசினர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் பலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
தமிழ்நாடு போலீஸ் என்று கூறி பெற்ற பெண்ணை பெங்களூரில் நடுரோட்டில் அடித்து உதைத்தவரால் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தந்தை தன்னை தமிழ்நாடு போலீஸ் என்று கூறியுள்ளார். 50க்கும் மேற்பட்டோர் சுற்றி நின்று இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இந்தப் படங்களை ஒரு பெண் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார் நிவேதிதா. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இது குறித்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெங்களூருவில் நடந்துள்ள இந்தச் சம்ப்வம் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் நிவேதிதா. இந்தப் படங்களைப் பார்த்து பேஸ்புக்கில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருந்தபோது, அந்தப் பெண் பெங்களூருவில் வேலை பார்ப்பவர் என்று தெரிகிறது. அவரை நடு ரோட்டில் அடித்து உதைத்தவர் அவரது தந்தையாகவே இருக்கலாம். பொது மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த நிலையில், தனது பெண்ணை அநாகரிகமாக ரோட்டில் போட்டு அடித்துக் காயப்படுத்தினார். அந்தப் பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். அடித்த அந்த நபர், மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் என்று தெரிகிறது. அவர் அப்படித்தான் கூறியுள்ளார்.. அவருக்கு அருகே இருந்து ஒரு பெண் அமைதியாக எந்த வித சலனமும் இன்றி இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அந்தப் பெண்ணின் தாய் என்று தெரிகிறது. அவர் அங்கே ஆசிரியையாக வேலை பார்க்கிறாராம். கணவருக்கு ஆதரவாக அந்தப் பெண்ணை அவர் தன் பங்குக்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டித் தீர்த்தார். அப்போது, இந்தச் சம்பவத்தை அந்த ரோட்டில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அந்த இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து அவளது தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன். ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார். அதனால், போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளதாகவும் தெரிகிறது. அந்தப் பெண் என்ன சொல்ல வருகிறார் என்பதைக்கூட அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை மதுரைக்கு இழுத்துச் சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால், இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் அவர்.’’ என்று அந்தப் பெண் நிவேதிதா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். போலீசாரோ, இந்த விவகாரத்தில் யாரும் புகார் கொடுக்கவில்லை. அவர்கள் மூவரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டதால் நடவடிக்கை எதுவும் எடுப்பதற்கில்லை என்று தெரிவித்து விட்டனர். இருப்பினும், பெங்களூருவில் நடுரோட்டில் திடீரென ஒருவர் பெண்ணை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூ.190 கோடிக்கு சில்லரை காசுகள் விடப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரிகள்
தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் ரிசர்வ் வங்கி கடந்த 2013-14 நிதி ஆண்டில் 40 கோடி எண்ணிக்கையில் ரூ.136 கோடி மதிப்பில் சில்லரை காசுகளையும், தற்போது(2014-15) 71 கோடி எண்ணிக்கையில் ரூ.190 கோடி மதிப்பில் சில்லரை காசுகளையும் புழக்கத்தில் விட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில்(2015-16) 90 கோடி எண்ணிக்கையில் ரூ.250 கோடி மதிப்பில் சில்லரை காசுகளை புழக்கத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப சில்லரை காசுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் எக்ஸ்சேன்ஜ் மேளா மூலமாகவும் சில்லரை காசுகள் வழங்கப்பட்டு வருகிறது. பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து சில்லரை காசுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று வியாபார சங்கங்களையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே சில்லரை தட்டுப்பாடு என்பது செயற்கையாகவே உருவாக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் சில்லரை காசுகளை கையில் எடுத்து சென்றால், வியாபாரிகள் வலுக்கட்டாயமாக கொடுக்கும் சாக்லெட்டை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. என்று அவர்கள் தெரிவித்தனர்.
ரூ.1 கோடி அடகு நகைகளுடன் கடை உரிமையாளர் தலைமறைவு
மதுரை: ரூ. 1 கோடி அளவுக்கு நகை பணம் வாங்கி மோசடி செய்து, அடகுக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராமன் ( 55) கிடாரிப்பட்டி கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதி மக்கள், பொது நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தனர். சிலர் அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை அடமானமாகக் கொடுத்து பணம் பெற முன்வந்தனர். இதனால் அவர் பலசரக்குக் கடையை அடகுக் கடையாக மாற்றினர். அதை அடகுக் கடையாக மாற்ற அதற்கு முறையான அனுமதியும் பெற்றுள்ளார். இவரிடம் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கண்மாய் தூர்வாரும் பெண்களும் பணத்தை கொடுத்து சேமித்து வந்துள்ளனர் இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ராமனின் உடல்நிலை பாதித்ததாக கூறி அவரது அடகுக் கடை மூடப்பட்டது. அப்போது, மேலூர் நீதிமன்றத்தில் இருந்து கிடாரிப்பட்டியில் சிலருக்கு தபால் வந்துள்ளது. அதில் அடகுக்கடை நடத்திய ராமன் தொழிலில் திவாலானதாக அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இந்தத் தகவல் கிராம மக்களிடையே பரவியதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராமனின் கடை முன் திரண்டனர். ஆனால் கடை மூடப் பட்டிருந்ததால், தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என உணர்ந்தனர். அ.வல்லாளபட்டியில் ராமனின் வீட்டுக்குச் சென்று பார்த்ததில், ராமனின் வீடும் பூட்டப்பட்டிருந்தது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், மொத்தம் தங்க நகைகள் மற்றும் பணத்தை சேர்த்து ரூ.1 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கிராம மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
கிரானைட் ஊழல்: முதலமைச்சர் பதவி விலக பாமக ராமதாஸ் கோரிக்கை
சென்னை: கிரானைட் ஊழல் தொடர்பில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அதன் இடைக்கால அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவையாகும். கிரானைட் கொள்ளை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கை வெளியானதுமே இது குறித்து நடுவண் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் இப்பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக இ.ஆ.ப. அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணையை தொடங்கிய சகாயம் நேற்று இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்,‘‘ விசாரணையில் உதவுவதற்காக நான் கோரிய ஜெயசிங் ஞானதுரை என்ற அதிகாரியை அனுப்பாமல் தமிழக அரசு தாமதம் செய்தது. கடந்த 9ஆம் தேதி தான் அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. விசாரணைக்குழுவின் செலவுக்காக அரசிடமிருந்து பணம் பெறுவதில் பல தடைகள் இருந்தன. இந்த ஊழல் தொடர்பாக 30&க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் நான் பல தகவல்களை கோரியிருந்தேன். ஆனால், அவர்கள் இதுவரை அந்த தகவல்களைத் தர வில்லை. இதனால் விசாரணை மிகவும் தாமதம் ஆனது’’ என்று சகாயம் குற்றஞ்சாற்றியிருந்தார். கிரானைட் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு தமிழக அரசும், அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்,‘‘மதுரை மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் குவாரி உரிமையாளர்கள் கொள்ளையடித்து விட்டனர். அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. இதுகுறித்து விசாரிக்கும் சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். அவ்வாறு முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். உச்சநீதிமன்றம் காட்டிய வழியில் தமிழகத்திலுள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்து விடுவோம்’’ என்று எச்சரித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் தன்மை கொண்ட கிரானைட் ஊழலை மூடி மறைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விடுத்த எச்சரிக்கை சாட்டை அடி ஆகும். கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக இருந்தால், இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ, அதை செய்யாமல் இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே தீவிரம் காட்டி வந்தது. ஒரு கட்டத்தில் தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்ததுடன், ரூ.10,000 அபராதமும் விதித்தது. இதையடுத்து தான் வேறு வழியின்றி சகாயம் குழு விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பிறகும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது, மதுரையில் சகாயம் தங்கியிருந்த இடத்தை காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்தது, அதிகாரிகள் மூலம் சகாயத்தை அவமதித்தது என அரசுத் தரப்பில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதற்கு காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கிரானைட் ஊழல் வெளியானபோது அதற்கெல்லாம் காரணமானவர் என்று கூறி கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் இப்போது அரசின் விருந்தினரைப் போன்று கவனித்துக் கொள்ளப்படுவதற்கும், கிரானைட் கொள்ளை தொடர்பாக அண்மையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில் அவரது பினாமிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மட்டும் கைது செய்யப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும் காரணம் என்ன? என்பதை தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும். அவரைக் காப்பாற்றுவதற்காக கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கிடப்பில் போடவும் தமிழக அரசு தயாராகிவிட்டது. கர்நாடத்தில் 2006 முதல் 2010 வரையிலான 4 ஆண்டுகளில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.16,085 கோடி இழப்பு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா இந்த கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருந்தற்காக பின்னாளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்ட அம்மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கிரானைட் ஊழலுக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆட்சியாளர்களின் செயல் எடியூரப்பா மீதான குற்றச்சாற்றுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. கிரானைட் ஊழல் விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதை சென்னை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ள நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை : நியூஸிலாந்துக்கு 289 ரன் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்
உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வங்க தேச அணி, 288 ரன் எடுத்து, 289 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்த்து. வங்க தேச வீரர் மெஹ்மதுல்லாவின் அசத்தல் சதம் இந்த ரன் குவிப்புக்கு கைகொடுத்தது. ஹாமில்டனில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஆடக் களம் இறங்கினர். தொடக்கத்தில் வங்கதேச அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் தடுமாறியது. இவ்வணி 10 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் இணைந்த சர்க்கர் மற்றும் மெஹ்மதுல்லா ஜோடி சற்று பொறுப்பாக ஆடியது. தொடர்ந்து அசத்திய சர்க்கர் அரைசதத்தை கடந்து 51 ரன்னில் வெளியேறினார். பின் வந்த சாகிப், முஷ்பிகுர் ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மெஹ்மதுல்லா சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் மெஹ்மதுல்லாவின் 2 ஆவது சதம். இறுதியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. மெஹ்மதுல்லா 128 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அடுத்து 289 ரன் வெற்றி இலக்காகக் கொண்டு நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

