Home Blog Page 6285

சிலுவையில் அறைந்து கொண்ட ஹுசைனிக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: சிலுவையில் அறைந்து கொண்ட செயல் என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்று கராத்தே வீரர் ஹுசைனிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கராத்தே வீரர் ஹூசைனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நான் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்காக, நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை மீறி இதுபோன்று உங்களை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்னிடம் காட்டிய கருத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்கு அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புனித ஆன்மா அன்னை தெரசாவை விட்டுவிடுங்கள்: கேஜ்ரிவால்

ஒரு புனித ஆன்மாவான அன்னை தெரசாவை விட்டு விடுங்கள் என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். மதமாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத் கூறியதற்கு பதிலாக அரவிந்த் கேஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “கொல்கத்தாவில், நிர்மல் இருதய ஆசிரமத்தில் நான் அன்னை தெரசாவுடன் சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு புனித ஆன்மா. தயவுகூர்ந்து அவரை விட்டுவிடுங்கள்.” என்று கூறியுள்ளார்.

14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்பு: முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அதன்படி மாநிலங்களின் வளங்களுக்கான அதிகாரப் பகிர்வு உயர்வதாகவும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். மோடி எழுதிய கடிதத்தில்… இந்த அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து, நமது கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் கூட்டாட்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவது உங்களுக்குத் தெரியும். அரசுகள் மீதான அதிக எதிர்பார்ப்பை நம் நாட்டு மக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அதற்காக அவர்கள் காத்திருக்க விரும்பவில்லை. எனவேதான், துவக்கத்திலிருந்தே நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். நம் நாட்டின் பன்முகத் தன்மையைப் பார்க்கும்போது உண்மையான செயல்பாடுள்ள கூட்டாட்சி ஆளுமைதான் இந்த வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதை எமது அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது. வளமான மாநிலங்கள்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என நான் முழுமையாக நம்புகிறேன். நான் முதலமைச்சராக இருந்தபோதுகூட, நாட்டின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளேன். அதனால்தான் இந்த அரசு மாநிலங்களுக்கு அனைத்து வகையிலும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அத்துடன், மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான திட்டங்களை இயற்றி செயல்படுத்த வேண்டும். நிதியைச் செலவிட முன்னெச்சரிக்கையும் கட்டுப்பாடும் இருக்கும் அதேநேரத்தில், அவர்களுக்குத் தேவையான நிதியும் சுதந்திரமாக செயல்பட அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறோம். மேலும், மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் ஒதுக்கப்பட்டுள்ள சமூகங்களும் பின்தங்கிய பகுதிகளும் நாட்டின் வளர்ச்சியோடு ஒன்று சேர முடியாது. இதனை மனதில் கொண்டு, திட்டக் குழுவுக்குப் பதிலாக நிடி ஆயோக் ( नीति आयोग – National Institution for Transforming India Aayog – is a policy think-tank of Government of India) என்பதைக் கொண்டு வந்துள்ளோம். வளர்ச்சி என்ற தேசிய நோக்கத்தை விரைவில் செயல்படுத்த ஒரு பொதுக் கருத்துரு இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய நோக்கமும், திடமான நடவடிக்கையும் நம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைய உதவும். இதற்காகத்தான் 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடியை அளிக்கும் என்றாலும் நாங்கள் அதனை முழுமனதோடு ஒப்புக் கொண்டுள்ளோம். வளங்களுக்கான மாநிலங்களின் அதிகாரப் பகிர்வை 10 சதவிகிதம் அதிகரிக்குமாறு 14-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆணையத்தின் பரிந்துரையைவிட சற்று அதிகம். மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரப் பகிர்வு 2014-15 நிதி ஆண்டைவிட 2015-16 இல் அதிகமாக இருக்கும். இதனால் மத்திய அரசுக்கு குறைவான நிதியே கிடைக்கும். இருந்த போதும் மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை மாநிலங்கள் வடிவமைக்கவும் செயல்படுத்தவும் இது உதவும் என்பதால் இந்த 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளோம். தனது பரிந்துரைகளில், 14-வது நிதி ஆணையம் வருவாய் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கிடும் முறையில் அடிப்படை மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி மாநிலங்களின் வருவாய் செலவினங்கள் திட்டத்துக்கான மத்திய அரசின் உதவி, மாநிலங்களின் வருவாய் சுமையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் அதிகாரப் பகிர்வு ஏற்படுகிறது. 14-வது நிதி ஆணையத்தின் அறிக்கை பத்தி 7.43 இதனை விளக்குகிறது. பெரும்பாலான வளங்கள், வரி அதிகார பகிர்வுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்பது மாநிலங்களின் நோக்கம். மத்திய அரசால் பொறுப்பேற்று நடத்தப்படும் திட்டங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும் என்று பத்தி 8.6, 8.7–ல் 14-வது நிதி ஆணையம் கூறியுள்ளது. அதனால், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதிலிருந்து அதிக்காரப் பகிர்வு கிடைக்கும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. எனவே, வகுக்கப்படக்கூடிய வளங்களின் 42 சதவீதம் அதிகாரப் பகிர்வு இருக்கும். அதனால், 14-வது நிதி ஆணையம் கூறியுள்ளது போல் மாநிலத்தின் அனைத்து வருவாய் செலவினங்களும் அந்த மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வளங்களைக் கொண்டு நிறைவு செய்யப்பட வேண்டும். வறுமையை போக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் உள்ளிட்ட நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படும் சில முக்கியத் துறைகளில் ஓரளவுக்கு மத்திய அரசின் உதவியை தொடர முடிவு செய்துள்ளோம். 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். “அனைவருக்கும் பொருந்தும் ஓர் அளவு” என்ற அணுகுமுறையை மாநிலங்களிடம் திணிப்பதை விட்டு நாங்கள் விலகி உள்ளோம். மாநிலங்கள் இந்தக் கொள்கைக்கு எதிராக பல ஆண்டுகள் குரல் எழுப்பி வந்துள்ளன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நாட்டின் திட்டமிடும் முறையை எமது அரசு பரவலாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி மாநிலங்கள் தேவையான அளவு சுதந்திரமாக திட்டமிடவும் வளர்ச்சியடையவும் அதிக அளவு நிதியைப் பெறுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10% இந்த வகையில் மாநிலங்கள் செலவிட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வளங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட பழைய திட்டங்களின் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை நான் ஆய்வு செய்ய நினைக்கிறேன். மாநிலங்கள் தேவைகளுக்கு ஏற்ப இந்த திட்டங்களையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து செயல்படுத்தவும் அல்லது மாற்றி அமைக்கவும் முழு உரிமை அளிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் மத்திய அரசு குறிப்பாக நிடி ஆயோக் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான உத்திகளைச் செயல்படுத்த யோசனைகள், மதிநுட்பம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கும். ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அதிகாரப் பரவலுக்கான எனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இது அமையும். நாட்டின் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்தவும் ஆலோசனை செய்யவும் மாநிலங்களை ஈடுபடுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசும் மாநில அரசுகளும் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் அதிக அளவு பலன் அளிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. நிடி ஆயோக்கின் செயல்பாட்டுக் குழுவில் அனைத்து மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் சம அளவு பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்புடனான கூட்டாட்சி முறையின் மூலம் விரைவான வளர்ச்சியை எட்டுவதே நமது நோக்கம். நமது வளங்கள் வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மின்சார வசதி, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், குடிநீர், வீட்டுவசதி ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. இது நமது நாட்டில் இதற்கு முன் எப்போதும் நடைபெறவில்லை. மேலும், பல மாநிலங்களுக்கு பயனளிக்கும் வகையில் கனிமங்கள் மீதான ஆதாய வருவாய் விகிதத்தை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளோம். தற்போது நிலக்கரி கனிமங்கள் மீது நடைபெறும் ஏலம் வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது. இதன் மூலம் கனிமங்களும் நிலக்கரி வளங்களும் உள்ள மாநிலங்களுக்கு அதிகப்படியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் அதிகப்படியான கனிம வளங்களைக் கொண்டிருந்த போதும் குறைவான வளர்ச்சியே அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் இவை சம அளவை எட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது. வளங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது தற்போது பிரச்சனை இல்லை. நமது கொள்கைகளையும் திறமையையும் செயல்படுத்துவதை இது நோக்கமாக கொண்டது. பணம் மத்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ கூட இருக்கலாம். அது நாட்டிற்காக எவ்வாறு எதற்காக செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். நமது கவனம், ஏழைகள், விவசாயிகள், சாதாரண மனிதன், பெண்கள், இளையோர் மீது இருக்க வேண்டும். இவர்களின் முழுத்திறனையும் பயன்படுத்தி நமது நோக்கத்தை எட்டுவதையே சவாலாக இருக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சி திட்டத்தின் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தியாவைக் குறித்து மிகப் பெரிய நம்பிக்கை உள்ளதையும் இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் கொண்டுள்ளதையும் நான் பல நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். இந்தியாவின் வளர்ச்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இது மத்திய அரசுக்கான வாய்ப்பு அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வாய்ப்பு. நமது நாட்டின் அற்புதமான வளர்ச்சியை எட்டுவதே நமது நோக்கம். நாடும் உங்கள் மாநிலமும் எதிர் கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் உங்களின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருக்க வேண்டும். இதற்காக நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் முன்னுரிமைத் திட்டங்களையும் வளங்களையும் இதற்காக செயல்படுத்துவதற்கு திட்டமிட முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் முறையான மதிப்பீடு செய்து நாம் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் நானும் உங்களுடன் இனணந்து பணியாற்றுவேன். பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கான வரையறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். இதை நோக்கிய பாதையில் நாம் இணைந்து செயல்படுவோம். இது குறித்த ஆலோசனைகளை பெறுவதற்கு எந்த நேரத்திலும் நான் தயாராக இருக்கிறேன் இவ்வாறு பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா சொத்துக் குவித்ததற்கு ஆதாரம் என்ன?: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி

பெங்களூர்: ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்று வழக்கறிஞர் பவானி சிங்கிடம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வாதங்கள் முடிவடைந்து விட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய 6 தனியார் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. அந்நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த 3 நாட்களாக வாதிட்டனர். இந்த வாதத்தின் போது, வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா ரூ.66 கோடி குவித்ததாகக் கணக்கிட்டது எப்படி? இந்த அளவுக்கு சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன, அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு மதிப்பீடு செய்த சொத்து மதிப்பீடு பட்டியல் எங்கே? என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பவானி சிங், சாட்சிகளின் அடிப்படையிலும், குறிப்பிட்ட ஆவணங்களின் படியும் சொத்துக்களை மதிப்பீடு செய்தோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்களின் மதிப்பீடு பட்டியலை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். அப்போது நீதிபதி, சொத்துக்களை மதிப்பீடு செய்தற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையெனில் நானே மதிப்பீடு செய்வேன் என்று அரசு வழக்கறிஞர் மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் 73 ரன்களில் வெற்றி

கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 15 வது லீக் சுற்று ஆட்டத்தில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது.. அணியின் நட்சத்திர வீரர்கள் கிறிஸ் கெய்ல் (215), சாமுவேல்ஸ் (133) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்தது. இதை அடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கியது ஜிம்பாப்வே அணி. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், போட்டி 48 ஓவராகக் குறைக்கப் பட்டது. இதை அடுத்து, ஜிம்பாப்வே அணி 48 ஓவரில் 363 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் ரன் வேகத்துக்கு ஏற்ப விக்கெட்டும் வேகமாக விழுந்து வந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 44.3 ஓவரில் 289 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வேயை 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இரட்டை சதம் அடித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கடையநல்லூர் : ஜெயலலிதா பிறந்த நாள் விழா நெல்லை மாவட்டத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட அதிமுகவினர் செய்திருந்தனர். கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட நகரங்களில் ஜெயலலிதா பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞர் மர்மச்சாவு

senkottai-1   செங்கோட்டை அருகேயுள்ளது பண்பொழி மேட்டுத்தெரு பகுதியை சார்ந்தவர் நாகூர்கனி,ஜீனத் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் காதர் முகைதீன் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.வெளிநாட்டிலிருந்து 2 மாத விடுமுறையில் வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தீடிரென காதர் முகைதீன் இறந்துள்ளார்.உடனே அவனது பெற்றோர் தனது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக ஜமாஅத் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.அதனைத்தொடர்ந்து இறந்த காதர்முகைதீனை பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.இந்நிலையில் காதர் முகைதீன் சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறைக்கும்,வருவாய் துறைக்கும் புகார்கள் சென்றன.இதனைத்தொடர்ந்து விசாரணையில் இறங்கினர்.காதர் முகைதீன் உடலை மீண்டும் எடுத்து பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் செல்வகுமார் தலைமையில் செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம் முன்னிலையில் காதர் முகைதீன் உடலை மீண்டும் எடுத்து பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.இதன்காரணமாக அந்தப் பகுதியில் பரப்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது.போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரபல சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி மரணம் திரையுலக பிரமுகர்கள், பொது மக்கள் அஞ்சலி

சென்னை பிரபல சினிமா இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னையில் இன்று திங்கள் கிழமை மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. கடந்த 1972 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்’ மனிதரில் இத்தனை நிறங்கள ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்மயுத்தம் படத்தை இயக்கியவர் இவரே. ராஜேஷ்-லட்சுமி நடித்த ‘சிறை,’ தாலிதானம், மற்றும் தவம், மனக்கணக்கு, சந்தோஷ கனவுகள், கூட்டுப்புழுக்கள், வரம், பத்தினி பெண் உள்பட 27 படங்களை இயக்கி உள்ளார். பத்தினி பெண் என்ற பட த்தில் சிறந்த திரைப்படம் மற்றும் திரைக்கதை வசனத்திற்கு இவருக்கு 2 மாநில விருது கிடைத்தது. சர்க்கரை நோயால் பாதிகப்பட்ட இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதற்காக, ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மாலை சக்தி மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கம் சாய்நகரில் உள்ள வீ ட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த இயக்குனர் ஆர்.சி.சக்திக்கு லட்சுமி என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், சாந்தி, மகேஸ்வரி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி. நாடக கலைஞராக வாழ்க்கையை துவங்கியவர் சினிமாவில் காலடி பதிக்க தொடங்கினார். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை போரூர் மின்சார மயானத்தில் ஆர்.சி.சக்தியின் உடல் தகனம் செயப்பட உள்ளது.

இலங்கை அதிபர் சிறீசேனாவை கொல்ல முயற்சி?: அதிர்ச்சித் தகவல்!

maithripala-sirisena கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழா அணிவகுப்பின்போது இலங்கை அதிபர் சிறீசேனாவைக் கொல்ல சதி நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த சுதந்திர தினவிழாவின் போது அதிபர் சிறீசேனவை கொல்ல முயற்சி நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி இலங்கை ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் அதிபர் உள்பட அமைச்சர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த அதிர்ச்சி தகவல் அரசுக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே குண்டு துளைக்காத மேலாடையை அதிபர் மைத்ரிபால சிறீசேன, விழாவின்போது அணிந்திருந்ததாக இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 1981ம் ஆண்டு எகிப்து அதிபர் அன்வர் சதாத், அணிவகுப்பு மரியாதையில் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற தாக்குதலை இலங்கை அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை, தாக்குதலில் இருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு துறைச் செயலாளர் பஸ்நாயக அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், யாரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளது. தாக்குதலை நடத்த திட்டமிட்டது யார் என்ற தகவல்கள் தெரிவிக்கப் படவில்லை. முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சொந்த ஊரான வீரக்கெட்டியவில், இந்த முறை சுதந்திர தின விழாவை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் இதை சிறீசேன மாற்றினார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்சவை, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறீசேன வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் தேர்தலின் போதே ராணுவத்தைப் பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க ராஜபட்ச சதி செய்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை அடுத்து, ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக சதி உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜன.9ஆம் தேதி புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேன பொறுப்பேற்றார். இதன் பின்னர், ராஜபட்ச ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள், வெள்ளை வேன் கொலைகள் உள்ளிட்டவை குறித்து விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ராஜபட்ச மகன்கள், அவரது தம்பிகள், குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர் என்பது குறிப்பிடத் தக்கது.

அமைச்சராக குஷ்பு: ஈ.வி.கே.எஸ் குறித்து தமிழிசை கிண்டல்

tamilisai-soundararajan சென்னை: தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது குஷ்பு நிச்சயம் அமைச்சர் ஆவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேலியாகக் கருத்து கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் பேசி இருப்பதைக் கேட்டால் நகைச்சுவையாக உள்ளது. நடக்காத ஒன்றைப் பற்றி இளங்கோவன் யதார்த்தமாகப் பேசி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.