Home Blog Page 6284

ஊழல் வழக்கு: உள்துறை வேண்டுகோள்படி ம.பி. ஆளுநர் ராஜினாமா

ram-naresh-yadav மத்தியப் பிரதேசத்தில் வனக் காவலர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்வுக்கு நேரடியாக தொடர்பு உள்ளதாக அதிர்ச்த்சி தகவலை வெளியிட்டது சிறப்பு அதிரடிப் படை. பின்னர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்யப்பட்டது இந்நிலையில் ராம்நரேஷ் யாதவை ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து ராம்நரேஷ் யாதவ் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். மோசடி வழக்கில் சிக்கிய முதல் ஆளுநரான ராம் நரேஷ் யாதவ் தற்போது பதவி விலகிவிட்டதால் அவர் மீது சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழி ஏற்பட்டுள்ளது. எனில், அவர் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. முன்னர் வந்த செய்தி: ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு

நெல்லையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை; பதற்றம் போலீஸ் குவிப்பு

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் பொன்னையா (வயது 26). ஆட்டோ டிரைவர். இன்று புதன் கிழமை  காலை நெல்லை வடக்கு பைபாஸ் ரோடு தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோவில் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து பொன்னையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. . இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பொன்னையா கொலை செய்யப்பட்டதை கண்டித்து அவரது உறவினர்கள் தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்கள், லாரி ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்கப்பட்டது. பதற்றம் ஏற்பட்டதால் தச்சநல்லூர் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது. கொலையாளிகளை பிடிக்க தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு

ram-naresh-yadavபுது தில்லி: ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வனக் காப்பாளர் பணி நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரிய ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் அரசியல்வாதிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை தொடர்பு படுத்தப் பட்டுள்ளனர். இந்த ஊழலில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு தொடர்பு இருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆளுனரின் சிறப்பு தனி அதிகாரி தனராஜ் யாதவ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அம்மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவ் (வயது 86) மீது நேற்று ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 5 பேரை வனக் காப்பாளர்களாக நியமிக்க பரிந்துரை செய்தார், நேர்மைக்கு மாறாக அவர்கள் தேர்வெழுதி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயமான மலேசிய விமானம்: அண்டார்டிகாவுக்கு ஒருவர் திருப்பியதாக தகவல்!

Malaysia-Airlinesகோலாலம்பூர்: கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை ஒரு நபர் அண்டார்டிகாவுக்கு திருப்பியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் 2014 மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்.370 போயிங் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மேலும், அதில் இருந்த பயணிகளும் என்ன ஆனார்கள் என்பது சுமார் ஓர் ஆண்டு கடக்கும் நிலையிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், விமான பயணிகளின் உறவினர்களை சமாதானப் படுத்தவும், உலகுக்கு தகவலைத் தெரிவிக்கவும் மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியானதாகவும் மலேசிய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், ஒரு புறம் அந்த விமானத்தை தேடும் பணியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மாயமான மலேசிய விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகாவை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார். இந்த விமானம் குறித்து ரஷ்யாவில் இருந்து வெளிவரும் ’மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், இந்த விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் தற்போது பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வேறொரு தகவல் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாகக் கூறுகிறது. அந்தத் தகவலின் படி, அமெரிக்க–தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சியின்போது அது சுட்டு வீழ்த்தப்பட்டதாம். இன்னொரு தகவல், அமெரிக்கா தனது விமானப் படைத் தளமான டிகோ கார்சியோவில் அந்த மலேசிய விமானத்தை கட்டாயப்படுத்தி தரை இறக்கியதாம். ஆனால், ஆதாரமற்றது என்று இந்தத் தகவலை மலேசியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. மலேசியாவுக்கான அமெரிக்க செய்தித் தொடர்பாளர் இது குறித்துக் கூறுகையில், ‘‘ஊகத்தின் அடிப்படையிலான இந்தத் தகவலில் எந்த உண்மையும் கிடையாது. எம்.எச்.370 விமானம் மாலத்தீவு அருகிலோ, டிகோ கார்சியா தீவின் அருகிலோ பறந்ததாக எந்தத் தகவலும் இல்லை’’ என்று மறுத்தார். முன்னதாக, மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு மாயமான மலேசிய விமானம் குறித்து தெரியும் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் யாரோ எதையோ மறைக்கிறார்கள். ஏனெனில் இதுபோன்று வெளியில் எந்த சத்தமுமின்றி திரைமறைவு வேலைகளைச் செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும் என்று வலைத்தளம் ஒன்றில் அவர் கூறியிருந்தார். மார்ச் 8 நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விமானம் காணாமல் போய் ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரையிலான வரலாற்றில், எந்தவொரு விமானமும் சிறிதளவு பாகம் கூடக் கிடைக்காமல் முற்றிலும் இவ்வாறு காணாமல் போய் தகவல் கிடைக்காமல் இருந்ததில்லை. அதுபோல், காணாமல் போனதாக அறிவிக்கப் பட்ட ஒரு விமானத்தைத் தேட இதுவரை ஒரு வருடத்துக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டதுமில்லை. இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க 144 தடையுத்தரவு: குஜராத்தில் நடவடிக்கை

symptoms_of_swine_flu குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 237 பேர் பலியானதைத் தொடர்ந்து, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்கவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் இந்தத் தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகின்றது என்றாலும், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்நோய் கடும் பாதிப்பை ஏற்டுத்தியுள்ளது. இந்தக் காய்ச்சலால் நாடு முழுவதும் 875 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அம் மாநில அமைச்சர் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தலைவருக்கும் இந்நோய் அறிகுறிகள் கண்டறியப் பட்டுள்ளதாம். குஜராத்த்தில் இந்நோய்க்கு இது வரை 231 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆமதாபாத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் பலர் ஒன்றுகூடும் வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. பல பேர் ஒன்றுகூடும் இடங்களில் இருந்துதான், வாய் மற்றும் மூக்கு வழியாக இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அசந்து தூங்கியதால் ஆபத்து: நகை திருட்டு

குமந்தாபுரம் கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரத்தில் வீட்டை திறந்து வைத்து விட்டு அசந்து தூங்கியதால் மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி விட்டாராம். புதன்கிழமை காலை எழுந்து பார்த்த பொழுது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 100 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

பிரசவம் முடிந்து துப்புரவுத் தொழிலாளி போட்ட தையல்!

புவனேசுவரம்: ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் குஜாங் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இருப்பினும் அவருக்கு சிறிய அளவில் தையல் போட வேண்டியிருந்தது. சிகிச்சை அளித்த மருத்துவர் அந்தப் பெண்ணுக்கு தையல் போடுவதற்கு முன்பே சென்று விட்டார். இதையடுத்து அங்கே பணியாற்றும் துப்புரவு தொழிலாளியும், மருத்துவ உதவியாளர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு தையல் போட்டுள்ளனர். இதுபற்றி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் அளித்த புகாரின் பேரில் பெண்ணை பரிசோதித்த மருத்துவ அதிகாரி, பெண்ணுக்கு துப்புரவுத் தொழிலாளி தையல் போட்டது உண்மை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அந்தப் பெண் அவர் நலமாக உள்ளார், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி அருகே அதிமுக., பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழி: ஒருவர் கொலை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரில் அ.தி.மு.க., பிரமுகர் அய்யப்பன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழிக்குப் பழி வாங்கும் விதமாக காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகே தனது மனைவியின் கண் முன்னர் சிவபெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி அருகே தெற்கு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக., பிரமுகர் அய்யப்பன் இரு தினங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற போது, அவரது மைத்துனர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் இதற்கு பழிக்குப் பழியாக நேற்று காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் பகுதியில் பத்திரம் எழுதும் கடை வைத்திருந்த கீரனூர் வீரசடச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள்(45) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் தனது மனைவி கலைச்செல்வியுடன் நேற்று காலை 10 மணிக்கு கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் கலைச்செல்வி முன்பாக சிவபெருமாளை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. உயிருக்குப் போராடிய சிவபெருமாள் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காயல்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அய்யப்பன் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததால் சிவபெருமாளை கொலை செய்ததாக தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இரட்டை சதத்தை ட்விட்டர் ரசிகர்களுக்கு சமர்ப்பித்தார் கிறிஸ் கெய்ல்

Chris Gayle கான்பெர்ரா: ஜிம்பாப்வேக்கு எதிராக தாம் அடித்த இரட்டை சதத்தை, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தம்மை ஊக்குவித்த ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். முன்னர், கிறிஸ் கெய்ல் ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார்; அவர் ஓய்வு பெறலாம் – என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் விமர்சித்து எழுதியிருந்தார். இதனை மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் சர்ச்சை வெடித்தது. இருப்பினும் பின்னர் அதற்காக கேமரூன் மன்னிப்பு கேட்டார். இந்த நிகழ்வுக்கு அடுத்த 2 வது நாளில் கிறிஸ் கெய்ல் தனது மட்டையால் பதிலடி கொடுத்தார். உலகக் கோப்பையில் இதுவரை 366 போட்டிகள் நடந்துள்ளன. அதில் ‘முதல் இரட்டை செஞ்சுரி நாயகன்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கெய்ல். இந்த சாதனைகுப் பின் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது, சரிவர ரன் எடுக்காததால் எனக்கு நிறைய நெருக்கடி உருவானது. ‘நீங்கள் நிறைய ரன்கள் குவித்து ஜொலிக்க வேண்டும், உங்களால் முடியும்’ என்று ‘டுவிட்டர்’ வலைத் தளத்திலும், செல்போனிலும் ஏராளமான தகவல்கள் ரசிகர்கள் மூலம் எனக்கு வந்தன. ரோகித் சர்மா இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த போதும், நீங்களும் இதே போன்று சாதிக்க வேண்டும் என்று ட்விட்டரில் வேண்டுகோள் குவிந்தன. நான் களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இத்தனை பேர் வேண்டுகோள் விடுத்திருப்பது இதுவே முதல் முறை. இப்படிப்பட்ட நெருக்கடியை நான் எனது வாழ்க்கையில் சந்தித்ததில்லை. இதுவே எனக்கு உத்வேகம் அளித்தது. இந்தியாவின் ஷேவாக் உள்ளிட்டோர் நான் மிகப் பெரிய ரன்கள் குவிப்பேன் என்று எதிர்பார்த்தனர். அதை நிறைவேற்ற எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு உரிய நாளாக அமைந்தது. இப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு இன்னிங்சை கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் நான் தடுமாறினேன். முதல் பந்தே என்னை அச்சுறுத்தியது. எல்.பி.டபிள்யூ. அப்பீல் கேட்ட போது பதற்றமடைந்தேன். நடுவர் அவுட் இல்லை என்று கூறிய பிறகே நிம்மதி அடைந்தேன். அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

  • என்றார் அவர்.

காங்கிரஸ் எம்.பி.யின் அலட்சியத்தால் ஏர் இந்தியா விமானம் 45 நிமிடம் தாமதம்!

புது தில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், ‘ஏர் இந்தியா’ விமானம் 45 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி, தில்லியிலிருந்து ஐதராபாத் செல்வதற்காக, ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். நேற்று இரவு 7:00 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், ரேணுகா சவுத்ரி வராததால் புறப்படத் தாமதமானது. விமான நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அவர் பெயரைச் சொல்லி பல முறை அழைத்தும் அவர் வரவில்லை. வெகுநேரம் இவ்வாறு காத்திருந்ததால், விமானத்தில் பயணம் செய்ய அமர்ந்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ஒருவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்த போது, ரேணுகா சவுத்ரி ஏற்கெனவே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். அவரின் உடைமைகளும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் வெளியே ஷாப்பிங் செய்யச் சென்றுவிட்டார். அவரின் உடைமைகள் ஏற்கெனவே ஏற்றப்பட்டு விட்டதால், வேறுவழியின்றி, ரேணுகா சவுத்ரி வரும் வரை விமானத்தை இயக்க முடியாமல் போனது. இதனால், விமானம் புறப்படுவதில் 45 நிமிட கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது என்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரேணுகா சவுத்ரி மறுத்துள்ளார்.