Home Blog Page 6283

சேலம் அருகே அரசு பஸ்ஸில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

சேலம்: சேலம் அருகே அரசு பஸ்ஸில் திடீரென தீ பிடித்தது. சமயோஜித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை 4.10க்கு மதுரைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 38 பேர் இருந்தனர். பஸ் மாலை 4.40க்கு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் வீராசாமிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்சில் டீசலுடன் கலந்து ஏதோ எரியும் வாசனை வந்துள்ளது. அந்தப் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை இருப்பதால் அந்த துர்நாற்றமாக இருக்கலாம் என அனைவரும் நினைத்தனர். ஆனால், சந்தேகம் அடைந்த நடத்துனர் முருகேசன் ஓட்டுநர் குப்புசாமியிடம் தெரிவித்து பஸ்சை நிறுத்தச் சொன்னார். உடனடியாக பஸ்சை ஓரமாக நிறுத்தி இறங்கிப் பார்த்தனர். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் பகுதியில் வயர் ஒன்று தீப்பொறி பட்டு கரும்புகை வெளியேறத் தொடங்கியது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப் பட்டனர். அந்த நிலையிலேயே பஸ் மளமளவென எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப் பின்னர், தீ எரிவது கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் பஸ் முழுமையாக எரிந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே: தர்மேந்திர பிரதான்

dharmendra-pradhan புதுதில்லி: கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே கிடைத்தது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதில், அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியை சேமிக்கவே உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இது குறித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரன் பிரதான்… “கச்சா எண்ணைய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்குதான் அளிக்கப்பட்டது. வளர்ச்சிப் பணிகளுக்காக நிதித் துறைக்கு சேமிக்க வேண்டிய கடமை உள்ளது; எனவே தான் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்து

சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக, ‘கபசுர குடிநீர்’ அருந்தலாம்’ என தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ‘டெங்குக் காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவதைப் போல் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த மருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் என்பது வைரஸ் நோய். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக இருக்க வேண்டும். தனி அறையில் இருப்பது நல்லது. தமிழகத்தில், பரவலாக பன்றி காய்ச்சல் இல்லை என்றாலும், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே வருவோருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளதாம். அவர்களுக்கு, ‘கபசுர குடிநீர்’ இங்கே வழங்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர் கஷாயம்’ தயாரிக்க, ‘கபசுர கஷாய’ சூரண பொடியை 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை சுண்டக் காய்ச்சிய பின், அதை வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த வேண்டும். இந்த கபசுர கஷாய சூரணம் ஒரு பாக்கெட் ரூ.80க்கு விற்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர்’ கஷாயம் சூரணத்தில், நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என 11 வகையான மூலிகைகள் உள்ளன. தலைமைச் செயலக வளாகத்தில், தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்படுகிறது. முகாமில், ‘நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர்’ வழங்கப்படுகிறது. தொற்றா நோய்களான ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றுக்கும் இங்கே மருந்து வழங்கப்படுகிறது. இத்தகைய நோய்கள் நம்மை அணுகா வண்ணம் பாதுகாக்க, பொது ஆலோசனை வழங்கப்படுகிறது. வாத நோய்கள், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நோய்களுக்கு வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் தலா ஒரு மூலிகைக் கன்று இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் நடைபெறும், பத்து நாட்களும், தூதுவளை சூப், இதய நோய்க்கான சூப் தினமும் வழங்கப்படுகிறது. மொத்தம், 30 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

கோவையில் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு

கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொடியேற்றி மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் ராஜா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. வரும் பிப். 28ம் தேதி வரை நடைபெறாவிருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் 600 பிரதிநிதிகள் வரை பங்கேற்றுள்ளனர்.

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு

தில்லியில் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா வெளியிட்டார். முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தில்லியில் போட்டியிட்டபோது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மின்சாரக் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 % பேர் பயன் அடைவார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணிக்கு 211 ரன் இலக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஏ பிரிவு 17 வது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணியும் ஆப்கனிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 210 ரன் எடுத்து, ஆப்கனுக்கு 211 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முன்னதாக ஆப்கன் அணி டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணியில், துவக்க வீரர் மெக்லெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கார்டினரும் 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் கோட்சர் 25 ரன்னும் மகென் 31, மொம்சென் 23, பெரிங்டன் 25, ஹக் 31, எவன்ஸ் 28 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன் எடுத்தது. இதை அடுத்து களம் இறங்கிய ஆப்கன் அணி, அதிரடியாக ஆட்டத்தைத் துவக்கியது. அந்த அணி 7ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறது.

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’ (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்246400_479182102136836_1433845875_n

 
(முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக)
(இதன் பின் பகுதி அதி ஸ்வாரஸ்யம்) ஒரு பிரம்மசாரி பிக்ஷையில் ஏதோ ஒரு கீரையைப்
பக்குவம் செய்து வைத்திருந்தான்.நல்ல கீரையாக
இருந்ததால் சற்று அதிக அளவிலேயே வைத்திருந்தான்,
 
பெரியவாள் அவ்வளவையும் அமுது செய்திருக்கிறார்கள்
இதைப் பார்த்துச் சந்தோஷித்த பிரம்மசாரிக்கு ‘அபிமானம்’
வந்து விட்டது. மறுநாளும் அதை நிறையத் தயாரித்து
பிக்ஷையில் சேர்த்திருந்தான்.அன்றும் அதனைப் 
பெரியவாள் உட்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாளும்
கீரை தொடர்ந்தது. அன்று பெரியவாள் பிக்ஷை
முடித்தபின்,”மூன்று நாளாகக் கீரை” என்றார்கள்.
 
பெரியவாள் ஷொட்டுக் கொடுப்பதாக மகிழ்ந்தான்
பிரம்மசாரி.”பெரியவா ருசிச்சுச் சாப்பிடறதாகத்
தெரிஞ்சதாலேதான் இன்னிக்கும் பண்ணினேன்”
என்று சொல்லிவிட்டான்.
 
அதில் பிடித்த அனர்த்தம்தான் இந்தக் கடும் உபவாஸம்!
 
(கட்டுரையே கடும் உபவாஸத்தை தொடர்ந்து நடக்கும்
சம்பவம்-முன் பகுதி நான் டைப் பண்ணவில்லை)
 
அறியாத்தனத்தால் செய்த காரியத்துக்காக அழுத
பிரம்மசாரியிடம் ஸி.எஸ்.வி, “சரி, இங்கே அழறதை
ரெண்டு பேருமாப் போய் பெரியவாகிட்டேயே அழுது
உபவாஸத்தை முடிக்கச் சொல்லி முறையிடுவோம்” என்றார்.
 
ஆனால் பெரியவாள் இவர்களை அழவிடவில்லை.
பிரம்மசாரியிடம் அன்பு மயமாகச் சொன்னார்;
“உங்கிட்ட என்ன தப்பப்பா? உங்கிட்ட கோவிச்சுண்டு
நான் உபவாஸம் இல்லை. எனக்கு ஜிஹ்வா சாபல்யம்
(நாவுச் சபலம்) போகலை என்கிற மாதிரி நான் 
நடந்துண்டா, அதுக்கு என்னை நானே தண்டிச்சுக்கத்தானே
வேணும்?”
 
மானேஜரைப் பார்த்துச் சொன்னார்;
 
“இந்த மாதிரி நான் ஒரு ஷாக்-ட்ரீட்மென்ட் தராட்டா, இவன் நித்யமும் இந்தக் கீரைக்காக யாரிடமாவது சொல்லி
ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கும். பக்தாளும் சந்தோஷமாப்
போட்டி போட்டுண்டு கொண்டு வந்து கொடுப்பா. ஆனா, வேறே தினுசான ஜனங்களும் இருக்கத்தானே
 செய்வா? அவா இதைக் கேள்விப்பட்டுட்டு,
“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’னு
சொல்லுவா.
 
என்னை யார் திட்டினாலும்,கொட்டினாலும் பரவாயில்லை.
என்னைத் திட்டறவா ‘சங்கராச்சார்யார்’-ங்கிற பேரைச்
சொல்லி-ன்னா திட்டுவா? என்னாலே பகவத்பாதாள் பேருக்குத்
திட்டு கிடைக்கிற மாதிரி ஆக்கலாமா?”

“காட்டமும் கருணையும்”

10482143_599228513527816_46027082804070919_n“காட்டமும் கருணையும்” (இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (கட்டுரையில் ஒரு பகுதி) “எங்கே, அந்த பெல்காம்….இருக்கானா?” என்கிறது நெய்-மிளகாய்க் குரல். மிளகாயை விட்டு விட்டு!. “இதோ இருக்கேன்” என்று தண்டம் ஸமர்ப்பிக்கிறார் பெல்காம்…. . “நான் இந்த மஹாராஷ்ட்வாவிலே சுத்த ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?” மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே வர்ஷிப்பதாக உணர்ந்த பெல்காம்….தான் அடிக்கடி பெரியவாள் தர்ஸனத்துக்கு வந்திருப்பதை இன்று அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் உற்ற பெருமிதம். அவர் ‘இத்தனாம் தடவை’ என்று சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது. “ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை வர முடியறது?” “எனக்கு ரயில்வே உத்யோகமோல்லியோ? ‘பாஸ்’லே வரேன். ” ஓஹோ! ஸரி! உன் பாஸை இங்கே வை” என்று தமக்கு முன் தரையைத் தட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர். பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார். இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின் திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச் அந்த ரயில்வே பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது. பெரியவர் பாஸை உன்னிப்பாகக் கவனிக்கிறார். பேசத் தொடங்குகிறார். நெய்யிலே மிளகாய் வறுபடுகிறது. “பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே. எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ் இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு உண்டுன்னு. இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக் கணக்கா ஒரு கையெழுத்துக்கூட காணும்! நீ என்ன பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக் கொண்டு போய் ‘ஸரன்டர்’ பண்ணணும். இனிமேல் உன் கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே என்னைப் பாக்க வரணும்.!” ஹர ஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார். இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச் சேர்ந்த சிஷ்ய பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன் வருகிறார். இதற்குப் பதினோராண்டுகளுக்கு முன் முனிவர் ஸ்ரீ மடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து பணக்காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று இவர் நன்கு அறிந்தவர்தான்.ஆயினும் பெரியவாளின் திருவுளக்கருத்தின்படியே செலவழிக்கப்பட வேண்டுமென்று அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே இந்த ஆயிரத்தைச் செலுத்துகிறார். பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா? “எங்கே பெல்காம்…….?” என்கிறார். திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர். நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது! பெல்காமில்……நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத் திட்டங்களைப் பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார் பெரியவர். இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது. அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப் பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது. “பணத்தை எப்படிக் கொண்டுபோவே?” “பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் பெல்காம்… பொறுப்புணர்ச்சியின் நிறைவுடனும் அபார உலகியல் அறிவுடனும் முனிவர் சொல்கிறார்; “அதெல்லாம் ஸரியில்லை. தொலைஞ்சு போச்சுன்னா நீயோ அவனோ (கொடுத்தவரோ) ஜவாப் இல்லை. நான்தான் ஜவாப். (கொடுத்த பிரமுகரைப் பார்த்து) நீ இந்தத் தொகைக்கு அவன் பேரிலே ‘டிராஃப்ட்’ வாங்கிக் குடுத்துடு.” அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன, ஸமயோசிதம் என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும் இப்படி அற்புத முன்னுதாரணம் தருவதே முனிவரின் இயல்பாயிருக்கிறது.

குறைவான மதிப்பெண்: பெற்றோர் திட்டியதால் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை: குறைவான மதிப்பெண் பெற்று படிப்பில் பின் தங்கியதாக பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை மந்தைவெளி 2–வது டிரஸ்ட் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவர் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கரோலின் (13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றதால் கரோலினை பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சக மாணவி பலாத்காரம்: அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது

rape-victim நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அபய் பந்த் (18). தில்லியைச் சேர்ந்த இந்தியரான இவர் தனது சக மாணவியின் அறைக்கு அதிகாலை நேரத்தில் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் பேரில், பல்கலைக்கழக போலீசார் அபய் பந்த் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். ஆஸ்வேகோ டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அந்தப் பல்கலைக்கழக விதிப்படி, பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் மாணவர் ஒருவர் மீது எழுந்தால், அவர் மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். எனவே அபய் பந்த் தொடர்ந்து, நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.