சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று திடீரென விமானத்தில் டயர் வெடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகள் உயிர் தப்பினர். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதை அடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். டயர் வெடித்ததை அடுத்து, விமானி சமார்த்தியமாகச் செயலபட்டார், அதனால் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர் என்றும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமான டயர் வெடித்தது: பயணிகள் உயிர் தப்பினர்
விறுவிறுப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டத்தில், இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய ஏ பிரிவு 17 வது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணியும் ஆப்கனிஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 210 ரன் எடுத்து, ஆப்கனுக்கு 211 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முன்னதாக ஆப்கன் அணி டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணியில், துவக்க வீரர் மெக்லெட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கார்டினரும் 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் கோட்சர் 25 ரன்னும் மகென் 31, மொம்சென் 23, பெரிங்டன் 25, ஹக் 31, எவன்ஸ் 28 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன் எடுத்தது. இதை அடுத்து களம் இறங்கிய ஆப்கன் அணி, அதிரடியாக ஆட்டத்தைத் துவக்கியது. அந்த அணி துவக்கத்தில் விரைவாக ரன் சேர்த்து அதிரடியாக விளையாடிய போதும், பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்தது. துவக்க வீரர் ஜாவேத் அஹ்மதி 51 ரன் சேர்த்தார். நடு வரிசையில் சமியுல்லா ஷென்வாரி 96 ரன் சேர்த்தார். இருவரின் அதிரடியில் அணி வெற்றிக்கான ரன்னை சேர்த்தது. கடைசியில் மனம் தளராமல் ஹமித் ஹசன் 15 ரன்னும், ஷபூர் 12 ரன்னும் சேர்த்து வெற்றிக்கு உறுதி செய்தனர். 49.3 ஓவர் இறுதியில் ஆப்கன் அணி 9 விக்கெட் இழந்து, 211 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது.
ஈரோடு அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் பலி?: உறவினர்கள் சாலைமறியல்
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரகாஷ் (வயது-26). இவருக்கும், இந்துமதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை வங்கி வேலைக்காக வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பிரகாஷ் முத்துக்கவுண்டன்பாளையம் பிரிவு சுற்றுப்பாதை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில், லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். பின்னர் அவரே ஒரு ஆட்டோ பிடித்து ஏறி, ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அதன் பின்னர் தன் குடும்பத்துக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தனியார் மருத்துவமனையில் பிரகாஷின் உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கூறியுள்ளனர். அதற்காக, ரூ.3 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளனர். உறவினர்களும் உடனடியாக ரூ.1.5 லட்சம் பணத்தைச் செலுத்தினர். அறுவை சிகிச்சையை முடித்ததும், “மயக்கம் தெளிய இன்னும் இரண்டு நாளாகும். பிரகாஷ் நன்றாக உள்ளார்’ என உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரகாஷ் இதய நோயால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீஸார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரகாஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட நால்வர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தை உள்பட நான்கு பேர் பலியானார்கள். கரூர் மாவட்டம், வாங்கல்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார், மாதுலட்சுமி, ரத்தினம், விஜயகுமார் (37), மனோஜ்ராஜ் (35), ஆதர்ஷ் (6), லாவண்யா (ஒன்றரை வயதுக் குழந்தை) ஆகியோர் நேற்று முன் தினம் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றனர். தரிசனம் முடிந்து நேற்று மதியம் திருச்செந்தூரில் இருந்து கரூருக்குத் திரும்பினர். அவர்கள், திண்டுக்கல் – கரூர் 4 வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி பகுதியில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடத்தொடங்கியது. பின்னர், சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பங்கள் மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மாது லட்சுமி, ரத்தினம், உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனோஜ்ராஜ், விஜயகுமார், ஆதர்ஷ், லாவண்யா ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் வழியில் ஒன்றரை வயதுக் குழந்தை லாவண்யா உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
15 நாளில் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர்: ஜி.கே.வாசன்
கடந்த 15 நாட்களில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக த.மா.கா. விளங்குகிறது என்று பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். சட்டக் கல்லூரியை இடம் மாற்றக்கூடாது, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாணவரணி-இளைஞரணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர்கோட்டம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது ஜி.கே.வாசன் பேசியது… தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் காமராஜர் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான். இது நமக்கு பெருமை. இன்றைக்கும் மாணவர்களுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது. அந்த வகையில் மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக நாம் திகழ்கிறோம். கடந்த 15 நாட்களில் 35 ஆயிரம் மாணவர்கள் நம்முடைய கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். மாணவர்கள் இந்தியாவின் தூண்கள். மாணவர்களாலே மாற்றத்தை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. இதனால் மாணவர்களின் தொடர் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வி, கட்டமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் சீராக்கி கொடுக்க வேண்டும். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, வனக்கல்லூரி மாணவர்கள் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்த்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க கூடாது. என்றார் அவர்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மனு
ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் வாதாடி வரும் பவானி சிங்கை நீக்கிவிட்டு, வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பழகன் தாக்கல் செய்த இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வன்கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்: ராம.கோபாலன்
மக்களவையில் அமளி: ஒத்திவைப்பு
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது.
தாக்கலாகிறது 2015-2016க்கான ரயில்வே பட்ஜெட்
தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்முறையாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் தாக்கல் செய்யவிருக்கும் முதல் ரயில்வே பட்ஜெட் இது. 2015-2016 நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது ரயில்வே பட்ஜெட் என்றாலும் இது முதலாவது முழு நடப்பு நிதியாண்டு பட்ஜெட். இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பயணிகள் ரயில் கட்டணத்தை 14 சதவீதமாகவும், சரக்குக் கட்டணத்தை 6.5 சதவீதமாகவும் மத்திய பாஜக அரசு உயர்த்தியது. தற்போது டீசல் விலை கணிசமாகக் குறைந்துவிட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், கட்டணத்தைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி ஆட்சியில் மத வன்முறை அதிகரித்துவிட்டதாம்: சொல்வது அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
லண்டன்: மோடி பிரதமரான பின்னர் இந்தியாவில் மத ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. 2015-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கடுமையாக விமர்சித்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில் மத வன்முறை அதிகரித்துள்ளது. அதன் நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மத ரீதியான மோதல் இந்து முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக எழுந்துள்ள புகார்களை அது சுட்டிக்காட்டியுள்ளது. மக்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

