புதுதில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க் கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்னை குறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘நான் எப்போதுமே சரியான தகவல்களைக் கூறுகிறேன். அதுதான் எனக்கு பிரச்னையாக உள்ளது. நான் எந்த சூழ்நிலையிலும், எதிர்கட்சிகள் குறித்து தவறான, அவதூறான கருத்துக்களை கூறவில்லை,’ என்று விளக்கமளித்தார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது, பின்னர், மீண்டும் பகல் 11:45 மணிக்குத் துவங்கியது. அப்போது, வெங்கய்ய நாயுடு, ‘நான் எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தனிப்பட்ட நபர்களையோ குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாக அரசியல் நிலை குறித்துதான் பேசினேன்…” என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, மக்களவையில் வழக்கமான நடவடிக்கைகள் துவங்கின.
கழிப்பறை வசதி: சாவி ரயில் நிலைய அதிகாரியிடம் இருந்தால்…?
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் 2015-2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தார். அப்போது, 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான உதவி எண் 138 என்று அறிவித்த அமைச்சர், ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள தனித்துறை அமைக்கப்படும் என்றும், 650 ரயில் நிலையங்களில் பசுமைக் கழிப்பறைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே கழிவறைகள் பயோ-டாய்லட்டுகளாக மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ரயில் நிலையங்களில் தூய்மைக்கான முன்னெடுப்புகள் மிகவும் அத்தியாவசியம்தான் என்றாலும், ரயில்வே நிலையங்களில் செயல்படும் கழிப்பறைகளைப் பூட்டி சாவிகளை ரயில் நிலைய அதிகாரிகள் வைத்திருந்தால், அவற்றின் பயன்பாடு பயணிகளுக்கு எப்படி உடனே சாத்தியமாகும் என்பது கேள்விக் குறிதான். தற்போதைய நடைமுறை அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றப்பட்டு, கொள்கை அளவிலான பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்தத் திட்டம் வந்தால் மட்டுமே அமைச்சரின் அறிவிப்பு பயன் தரும்.
அமைச்சர் அறிவித்தபடி ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்குமா?
நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்த 2015-2016ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வழக்கம்போல், ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இது கடந்த ரயில்வே பட்ஜெட்ட்களிலும் அறிவிக்கப்பட்டு அவ்வப்போது துவங்கப்பட்டதுதான். இன்று பெரும்பாலான ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா என்றால் இல்லை என்றே கூறலாம். மிகப் பெரிய ரயில் நிலையங்கள் அல்லாத ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு, அவை பயணிகளால் பயன்படுத்தப் படாத நிலையிலேயே உள்ளன. இதற்குக் காரணமாகக் கூறப்படும் ஒரே காரணம், தண்ணீர் பாட்டில்கள் வியாபாரம் கெட்டுப் போவது என்கின்றனர் ரயில் நிலையங்களில் இருப்பவர்கள். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சரியாக வேலை செய்தால், பயணிகள் தங்களிடம் குடிநீர் பாட்டில்களை வாங்க மாட்டார்கள் என்ற காரணத்தால், ரயில் நிலையங்களில் கடைகளை வைத்திருப்போரே குடிநீர் இயந்திரங்களை உடைத்து விடுவதாக பலர் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும், அவற்றின் மூலம் மிகக் குறைந்த விலையில் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப் போகத்தான் தெரியும். காரணம், இயந்திரங்களை வைத்தால் மட்டும் போதாது, அதன் பாதுகாப்பை ரயில் நிலைய அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்பதே!
ரயில்வே பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் சுரேஷ் பிரபு
புது தில்லி 2015-2016ஆம் ஆண்டுக்கான தனது ரயில்வே நிதி நிலை அறிக்கையினை இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. 12 மணிக்குத் துவங்கிய அவர் உரை பிற்பகல் 1.15 வரை நீடித்தது. இந்த ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லை, கட்டணம் உயர்வில்லை, ஆய்வுகள் முடிந்த பின்பே புதிய ரயில்கள் குறித்து அறிவிப்பு; 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட் முன்பதிவு, 800 கி.மீ. தொலைவுக்கு மீட்டர் கேஜ் பாதைகள் அகல ரயில்பாதைகளாக மாற்றம் என பல்வேறு அறிவிப்புகள் இருந்தன. பின்னர் 1.15க்கு தனது உரையை சுரேஷ் பிரபு நிறைவு செய்தார்.
கட்டணம் உயர்வில்லை; 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம்: ரயில்வே பட்ஜெட் தாக்கல்
புது தில்லி: ரயில் கட்டணங்கள் உயர்வில்லை; தற்போது 60 நாட்களாக இருக்கும் முன்பதிவு இனி 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு என்ற நிலை என இன்று தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். 2015 – 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்து வருகிறார். இதில், புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரை நிகழ்த்தி வருகிறார். நவீன இந்தியாவில் ரயில்வே ஒரு தனிப்பட்ட ஒருங்கிணைப்பு நிர்வாகம் எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து இந்தியர்களுக்காகவும் வளமான தேசம் குறித்து கனவு காணும் பிரதமர் மோடிக்கு நன்றி எனக் கூறி உரையைத் துவக்கினார். இந்திய ரயில்வேயில் முதலீட்டுச் சூழலில் நீட்டிப்பு தன்மை அவசியம் என்றும், வருங்காலத் தலைமுறையினர் நல்வாழ்வு பெற வேண்டும் என்றும், ரயில்வே நீண்ட குறைவான முதலீடு சுழற்சி காரணமாக பாதிக்கபட்டு உள்ளது; இது நீண்ட சரிவை ஏற்படுத்தியதாகவும் கூறினார் அமைச்சர். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: ரயில்வேயின் 492 பிரிவுகள் 100 சதவீத வேகத்துடன் இயங்குகிறது. 228 பிரிவுகள் 80 -100 % வேகத்தில் இயங்குகிறது. அடுத்த 5 வருடங்களில் திறன் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் இருப்புப் பாதை 1.38 லட்சம் கிலோ மீட்டரில் 10 சதவீதம் விரிவு படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வேயில் 8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் ரயில்வேயை மேம்படுத்த 4 திட்டங்கள் உள்ளன. நாட்டின் சமூக – பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வேத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்; ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன. ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள் அதிகம் தேவை. சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை. பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை; அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள். கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்; 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம். பசுமை கழிவறைகள்; ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம். 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.; 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்; 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள். நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138 மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்
ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சிப் பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து தொடரும் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் பாஸ்கர்(28) கடந்த 22–ந்தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக் குளத் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு சேதுராமன் மகன் பாதாளம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாஸ்கர் படுகொலையைக் கண்டித்தும், முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆழ்வார்திருநகரியில் நேற்று விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், இதே போல் மள்ளர் கழகத்தினரும் தென்திருப்பேரை பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதனிடையே ஆழ்வார்திருநகரியில் இருந்து காடுவெட்டி வழியாக ஆயத்தூர் செல்லும் சாலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் முட்செடிகளை வைத்து சாலையை மறித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து சென்று முட்செடிகளை அகற்றினர். இதனால், நேற்றிரவு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வல்லநாடு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4–வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை “குடிமகன்” என விமர்சிப்பதா?: கருணாநிதி கண்டன அறிக்கை
சென்னை: சட்டப் பேரவையில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை “குடிமகன்” என்று விமர்சிப்பதா என திமுக தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘அதிமுக ஆட்சியில் மரபுகள் அனைத்தையும் கைவிட்டு, எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டப்பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுகின்றனர். அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தை “குடிமகன்” என்று பேரவையில் விமர்சனம் செய்கின்றனர். அதை எதிர்த்துக் கருத்துக் கூற, அந்தக் கட்சியின் சார்பில் எழுந்தால், ஜனநாயக ரீதியாக அனுமதி அளிக்காமல் அவையில் இருந்து காவலர்கள் மூலம் வெளியேற்றுகின்றனர். பின்னர், அந்தக் காவலர்களில் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து, அவரிடமே புகார் மனு எழுதி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கைது செய்ய முற்படுகின்றனர். இவை அனைத்தும் சரியான நடைமுறைகள் இல்லை. நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு செயலுக்கு, உரிமைக் குழு நடவடிக்கை, காவல்துறை நடவடிக்கை எனப் பலமுனை நடவடிக்கை இயற்கை நீதிக்கு ஏற்றதுதானா என்பதை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சமாகும். ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு என்ன செய்தோம் என்பதற்கான விளம்பர உரையாக இருக்கிறது என்று குறிப்பிட்டேன். இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில்தான் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தந்த பதில் உரையும் இருந்தது. கடந்த ஆண்டில் செய்ததையே குறிப்பிட்டவர், இந்த ஆண்டு செய்யப்போவதைப் பற்றிக் குறிப்பிடவில்லை – என்று கூறியுள்ளார்.
கோடையிலும் குளிக்கலாம்
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆண்டுக்கு சுமார் ஐம்பது இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத்தளம் குற்றாலம்.அருவிகளின் நகரமான இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும்.சீசன் முடிந்து ஆறு மாதங்கள் கழிந்தப்பின்பும் தற்ப்போதும் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது.தற்போது தினமும் காலையில் ஒன்பது மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக குடிநீர் வினியோகத்திற்கு செல்லும் நீர் அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றி விடப்பட்டு பின்னர் குடிநீருக்கு திருப்பி விடப்படுகிறது.இதனால் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று நம்பி வரும் சுற்றுலாப் பயணிகள் காலையில் குளிக்கும் வண்ணம் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.
எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறாகக் கூறவில்லை: வெங்கய்ய நாயுடு விளக்கம்
புது தில்லி: இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அமைச்சர் வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சிகளை அவதூறாகக் கூறியதாக அவை குற்றம் சாட்டின. இதனால், அவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்னை குறித்து வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘நான் எப்போதுமே சரியான தகவல்களைக் கூறுகிறேன். அதுதான் எனக்கு பிரச்னையாக உள்ளது. நான் எந்த சூழ்நிலையிலும், எதிர்கட்சிகள் குறித்து தவறான, அவதூறான கருத்துக்களை கூறவில்லை,’ என்று விளக்கமளித்தார். இதன் பின்னர் அவை நடவடிக்கைகள் துவங்கின.
ஓயாத ‘லிங்கா’ சர்ச்சை: ராக்லைன் வெங்கடேஷுக்கு எஸ்.ஸ்ரீதர் கண்டனம்
லிங்கா பட சர்ச்சையில் ஓயாத ஒன்றாக, இப்போது ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…. ‘லிங்கா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோருடன் ‘லிங்கா’ திரைப்பட வினியோகஸ்தர்கள் பிப்ரவரி 19ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினர். மொத்த நஷ்டத்தில் 8 கோடி ரூபாய் நஷ்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், மீதியைத் தாருங்கள் என்று வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருடன் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு ஏற்பாடு செய்வதாக சரத்குமார் உறுதியளித்தார். சுமூகமான சூழலில் இப்பிரச்சனை கையாளப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ராக்லைன் வெங்கடேஷ் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ‘லிங்கா’ படத்தின் 9 வினியோகஸ்தர்களுக்கு எதிராகவும், தமிழகத்தில் இருக்கும் தமிழ், ஆங்கில நாளிதழ், வார இதழ், மாத இதழ், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவை ‘லிங்கா’ படம் சம்பந்தமாக செய்திகளை வெளியிடக் கூடாது என நீதிமன்ற தடை உத்தரவை பெற்றார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். படம் வெளிவருவதற்கு முன்பு ஊடகங்களை தங்களுடைய பட பிரமோஷனிற்காக பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் தரப்பு படம் வெற்றி, தோல்வி சம்பந்தமாக வரும் எதிர்மறையான செய்திகளை ஜனநாயக அடிப்படையில் சந்திக்க வேண்டுமே தவிர, சர்வாதிகார அடிப்படையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் மீடியாக்களுக்கு எதிரான நிலையை எடுப்பது வருத்தத்திற்குரியதும், ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அல்ல. இது போன்ற ஒரு தடை உத்தரவை ரஜினிகாந்திற்குத் தெரியாமல் ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்றே கருதுகிறேன். எனவே, இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகிய இருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த 60 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் ‘லிங்கா’ பட வினியோகஸ்தர் நஷ்ட ஈட்டுப் பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ஆர்.எம்.அண்ணாமலை, தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பு தலைவரான ஆர்.ராமசுப்பு என்கிற பாலாஜி ஆகியோர் தலையிட வேண்டுகிறேன். சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருச்சி நகரம், ஆகிய பகுதிகளில் தற்போது விகிதாச்சாரா அடிப்டையிலேயே படங்கள் திரையிடப்படுகிறது. இதே போன்று தமிழ்நாடு முழுமையும் விகிதாச்சார அடிப்படையிலேயே இனி வரும் காலங்களில் புதிய படங்களைத் திரையிட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், வினியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்க உள்ளது. இதன் மூலம் நடிகர்களுடைய சம்பளத்தையும், தயாரிப்புச் செலவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். தொடர்ச்சியாக நஷ்டப்பட்டு வரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் கஷ்டம் போக்கப்படும். ‘லிங்கா’ படம் திரையிட்டதின் மூலம் தாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தங்களை நம்பி அட்வான்ஸ் கொடுத்த திரையரங்குகளும், எம்ஜி அடிப்படையில் பணத்தைச் செலுத்திய திரையரங்குகளும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களது பணத்தைத் திருப்பி வாங்கித் தருவதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வரும் ‘லிங்கா’ பட வினியோகஸ்தர்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
- என்று கூறியுள்ளார்.

