Home Blog Page 6280

ரயில்வே பட்ஜெட் யோசனைகள்: அமைச்சர் சுரேஷ் பிரபு

suresh_prabhu புதுதில்லி: ஒன்பது முக்கிய கூறுகள் ரயில்வே பட்ஜெட்: 2015-16ஐ மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த ரயில்வே பட்ஜெட் ஒன்பது முக்கிய கூறுகளைக்கொண்டது அவை என்று தெரிவித்துள்ளார்.

  1. மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தின் முதன்மைக் கூறாக இந்திய ரயில்வே உருவெடுக்கும்
  2. பெரியளவிலான முதலீடுகளிக்கு ஆதாரங்களைத் திரட்டுதல்
  3. கனரக தொலைதூர பாதையில் உள்ள நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள்,  ரயில்களை விரிவுபடுத்துதல் – ரயில்பாதை மாற்றம், இரு வழிப்பாதை/மூன்று வழிப் பாதை, மின்மயமாக்கல்ஆகியவற்றிற்கு முக்கியத்துவம்
  4. திட்டங்களை விரைவாக முடித்தல்
  5. பயணிகளுக்கான  வசதிகள்
  6. பாதுகாப்பு
  7. வெளிப்படைத்தன்மை, அமைப்பு முறையில் மேம்பாடு
  8. மக்கள் விரும்பும் போக்குவரத்தாக ரயில்வே
  9. நிலைத்தன்மை

இந்திய பொருளாதாரத்தை இயக்கும் முக்கிய சக்தியாக இந்திய ரயில்வே துறை இருக்கும் வகையில் பல்வேறு யோசனைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் முதலீட்டிற்கான நிதி ஆதாரங்களை திரட்டுதல், போக்குவரத்து அதிகமுள்ள தடங்களில் நெரிசலைக் குறைத்தல்,  பயணிகளுக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல். இரயில்வேயை பொதுமக்கள் பெரிதும் விரும்பும் போக்குவரத்து வசதியாக மேம்படுத்துதல் ஆகியவை இந்த பட்ஜெட்டின் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களாகும். இன்று மக்களவையில் பட்ஜெட்டை சமர்பித்து பேசிய திரு. சுரேஷ் பிராபாகர் பிரபு எல்லா முக்கிய முன்நடவடிக்கைகள் இயக்க ரீதியில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்திய ரயில்வேயை அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றியமைக்கும் வகையில் நான்கு குறிக்கோள்களை இந்த பட்ஜெட் நிர்ணயித்துள்ளது. பயணிகளின் அனுபவத்தில் குறிப்பிடதக்க மேம்பாடு பயணத்திற்கு ரயில்வேயை பாதுகாப்பான போக்குவரத்து சாதனமாக மாற்றி அமைத்தல். கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துதல், ரயில்வேயை தற்சார்பு அமைப்பாக மாற்றுதல் ஆகியவை இந்த குறிக்கோள்களாகும். இந்த குறிக்கோளை எட்டும் வகையில் இந்த பட்ஜெட் 5 வழிமுறைகளை தெரிவித்துள்ளது. இடைக்கால திட்டம், 2030ம் ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம், 5 ஆண்டுகால செயல்திட்டம் ஆகிவை இதில் அடங்கும். நீண்டகால அடிப்படையில் நிதி ஆதாரம் மற்றும் வெளிநாட்டு தொழிநுட்பத்திற்கு உதவும் வகையில் சம்மந்தப்பட்ட துறையினருடன் ஒத்துழைப்பு, இறுதிகட்ட செயல்பாட்டில் மேம்பாடு, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ரயில் நிலையக் கட்டமைப்பில் மேம்பாடு போன்றவற்றிலும் இது கவனம் செலுத்துகிறது. கூடுதல் நிதி ஆதாரத்திற்கும் வகைசெய்யப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2015-2016ம் ஆண்டில் செயல்திறன் விகிதம் 88.5 சதவீதத்தை எட்டும்வகையில் மேலாண்மை நடைமுறைகள் மேம்படுத்தபடுவதுடன். மனித ஆற்றலும் திறன்பட பயன்படுத்தப்படும். இந்த இலக்கிற்கு உதவும் வகையில் விரைவாக முடிவெடுத்தல், பொறுப்பேற்கும் தன்மையை அதிகரித்தல், மேம்பட்ட நிர்வாக தகவல் அமைப்பு, மனித ஆற்றலை மேம்படுத்துவதுடன் பயிற்சி அளிக்க வகை செய்தல் போன்றவை செயல்படுத்தப்படும். ரயில் பயணத்தை மகிழ்ச்சி மிக்க அனுபவமாக செய்யும் வகையில் தூய்மைக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் தனித்துறை ஒன்று ஏற்படுத்தப்படும். மேலும் 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்புகளை கணிணி வழியாக பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும். 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் 138 எண் உள்ள தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிப்பதற்கு கட்டணமில்லாத வகையில் 182 எண்ணுள்ள தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். பயணச்சீட்டை எளிதாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை 5 நிமிடங்களில் பெறுவதற்கான வசதி, சில்லறை பெறுவதற்கான இயந்திரம், மாற்று திறனாளிகள் சலுகை கட்டணத்தில் கணிணிவழியாக பயணச்சீட்டுகளை பெறுதல், ஆகியவை இதில் அடங்கும். ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளில் சேர்த்தல், ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை பெறுதல் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும். விரும்பிய உணவை தெரிவு செய்து பெறுவதற்கு கணிணிவழி வசதியை ஏற்படுத்த இந்த பட்ஜெட் யோசனை தெரிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கட்டை முன்பதிவு செய்யும்போது உணவிற்கும் பதிவு செய்யும் வசதி, தரமான உணவை வழங்கம் வகையில் தெரிவுசெய்யப்பட்ட கோட்டங்களில் பிரபல முகமைகளின் சமையல் அறை கூடங்கள், குடிநீர் விநியோக இயந்திர வசதி ஆகியவை இதில் அடங்கும். பயணிகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வகையில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இயந்திர வசதி அளிக்கப்படும். 2000 ரயில் நிலயங்களில் பொதுவான மையங்களின் வழியாக நிர்வகிக்கப்படும் ஒளிகாட்சி கட்டமைப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும். ரயில்களின் புறப்பாடு வருகை குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். மகளிர் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் சில குறிப்பிட்ட முக்கிய தட ரயில் பெட்டிகளிலும் புறநகர ரயில்களிலும் மகளிர் பெட்டிகளிலும் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும். சில குறிப்பிட்ட சதாப்தி ரயில்களில் பொழுது போக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொபைல் போன்களை “சார்ஜ்” செய்யும் வசதி பொதுப் பெட்டிகளிலும் ஏற்படுத்தப்படும். படுக்கை வசதி பெட்டிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். கூடுதலாக 200 ரயில் நிலையங்கள் மாதிரி நிலையங்களாக மேம்படுத்தப்படும். பி-பிரிவு ரயில் நிலையங்களில் “வை-பை” சேவை அறிமுகப்படுத்தப்படும். ரயில் நிலையங்களில் தாமே நேரடியாக பயன்படுத்தும் “லாக்கர்” வசதி ஏற்படுத்தப்படும். குறிப்பிடப்பட்ட ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும்.  மேலும், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் உயர் அடுக்குகளுக்கு செல்ல பயணிகளுக்கு வசதியான வகையில் ஏணிப்படிகளை அமைக்னுமாறு  தேசிய வடிவமைப்பு துறை கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு கீழ் நிலை படுக்கை வசதி அளிக்கப்படும். மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கீழ் நிலை அடுக்குகளை வழங்க உதவி அளிக்குமாறு டிக்கெட் பரிசோதனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். பெட்டிகளின் நடுப்பகுதி மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் ஒதுக்கப்படும். நகரும் படிகட்டுகள், உயர் தூக்கிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் “பிரய்லி” வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தப்படும் வகையில் நுழைவாயில்கள் அகலமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும். பயணிகளுக்கான வசதிகனை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய மேம்பாடு கொள்கையையை முழுவதும் மாற்றி அமைக்க ரயில்வே உத்தேசித்துள்ளது. வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்த நடைமுறைகள் எளிமை படுத்தப்படுகிறன. பெரிய நகரங்களில் 10 சுற்றுப்புற ரயில் முனையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது புறநகர் பகுதி பயணிகளுக்கு சேவை அளிக்கவும் நகரின் நெரிசலை குறைக்கவும் உதவும். 9400 கி.மீ தொலைவு பாதைகளை இரட்டை வழி/ மூன்று வழி / நான்கு வழி பாதைகளாக மாற்றும் 77 திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மின்வழி தடங்கள் அமைக்கும் பணியும் இதில் சேரும். ரூ.96,182 கோடி செலவிலான இத்திட்ட  பணிகளின் பயன்கள் அநேகமாக எல்லா மாநிலங்களுக்கும் கிடைக்கும். ரூ.2,374 கோடி மதிப்பீட்டிலான போக்குவரத்து வசதி பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மின்சார வழிதடங்களை அமைக்கும் பணியை விரைவுபடுத்தும் வகையில் 2015-16ம் ஆண்டில் 6,608 கி.மீ தொலைவு வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இது சென்ற ஆண்டு ஒதுக்கீட்டைவிட 1,330 சதவீதம் அதிகமாகும். 9 ரயில் தடங்களில் ஓடும் ரயில்களின் வேகம் 110 லிருந்து 160 கி.மீட்டராகவும் 130 லிருந்து 200 கி.மீட்டராகவும் அதிகரிக்கப்படும். இதனால் தில்லி-கொல்கத்தா, தில்லி-மும்பை போன்ற பெருநகரங்களுக்கு இடையே ஒர் இரவில் பயணத்தை மேற்கொள்ள முடியும். இதைபோன்று சரக்கு ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. பாதுகாப்பிற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் விபத்து அதிகமாக நடைபெறக் கூடிய இடங்களை கருத்தில் கொண்டு செயல்திட்டம் ஒன்று வரையப்படும். 970 ரயில்வே மேம்பாலங்களும் கீழ் பாலங்களும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரூ,6,581 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டங்களின் பயனாக 3,438 கடப்பு சாலைகள் அகற்றப்படும். இது சென்ற ஆண்டு ஒத்துக்கீட்டைவிட 2,600 சதவீதம் கூடுதல் ஆகும். ரயில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அமைப்பு, மோதல் தடுப்பு அமைப்பும், சில தெரிவு செய்யப்பட்ட தடங்களில் விரைவாக அமைக்கப்படும். “காயகல்ப்” என்ற மேம்பாட்டு குழு ஒன்று அமைப்பதற்கும் இந்த பட்ஜெட் யோசனை தெரிவித்துள்ளது.  ரயில்வேகளில் நவீன உத்திகளை அறிமுகப்படுத்துவதற்கும் வர்த்தகத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இந்த குழு அமைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப உத்திகளை பெறும் வகையில் தொழில்நுட்ப இணையம் ஒன்றையும் ரயில்வே நிர்வாகம் அமைக்கிறது. அடிப்படை ஆய்வு பணிக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பல்கலைகழங்களில் 4 ஆராய்ச்சி மையங்களை அமைக்க ரயில்வே உத்தேசித்துள்ளது. மேலும், வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ரயில்வே தொழில்நுட்பத்திற்காக மாளவியா இருக்கை ஒன்று ஏற்படுத்தப்படும். வெளிநாட்டு ரயில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கும் நிலங்களை கையகப்படுத்துவற்கும் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கும் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும் மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதிய பாதைகளை அமைக்கும் பணிகளுக்கு உதவும் வகையில் பெரிய பொதுத்துறை வாடிக்கையாளர்களுடன் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும். துறைமுகங்களின் ஒத்துழைப்புடன் கடலோர பகுதிகளை இணைக்கும் யோசனைகளை செயல்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வார்தா- நாக்பூர் முன்றாவது தடம், காசிபேட் – விஜயவாடா மூன்றாவது தடம், பத்ரக்-நர்குண்டி மூன்றாவது தடம், புஜ்-நலியா இருப்புபாதை மாற்றம் போன்ற பணிகள் ரூ.2,500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இந்திய ரயில்வேகள் சுற்றுச்சூழலுக்கு இயைந்ததாக இருக்கும் வகையில் 100 புறநகர் ரயில்கள் இரண்டு எரிபொருட்களை கொண்டு இயக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும். அழுத்தப்பட்ட இயற்கை வாயு, டீசல் ஆகிய இரண்டு எரிபொருளைக் கொண்டு இவை இயக்கப்படும். சர்வதேச நியதிகளுக்கு ஏற்ற வகையில் இஞ்சின்களின் ஒலித்திறன் இருக்கும். வனவிலங்ககளின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்படும். 2015-16ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் மதிப்பீடு: திட்ட ஒதுக்கீடு ரூ. 1,00,011 கோடி. இது 2014-15ம் ஆண்டின் மறு மதிப்பீடை விட 52% கூடுதலாகும். இந்த திட்ட மதிப்பீட்டில் 41.6% மத்திய அரசிடம் இருந்து பெறப்படும். 17.8% உள் ஆதாரங்களிடமிருந்து திரட்டப்படும். ரயில் பாதைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, மோதல் தவிர்ப்பு முறை குறிப்பிட்ட ரயில் பாதைகளில் ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை முறை, ரயில்கள் மோதல் தவிர்ப்பு முறைகளை அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனை விரைவில் செயபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகளில் தீ பிடிப்பதைத் தடுக்கவும், விபத்துக்களின்போது ரயில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று மோதுவதை தடுக்கவும் புதிய முறைகளை கண்டுபிடிக்குமாறு ஆராய்ச்சி,வடிவமைப்பு மற்றும் தர நிலைகள் அமைப்பிணை கேட்டுக்கொள்ளப்பட்டது. ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குளாகும் சம்பவங்களைத் தடுப்பதற்காக  முதன்மை பாதைகளைப் புதுப்பிக்கும் அதேநேரம் கனமான தண்டவாளங்கள் கொண்ட நவீன பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறந்த வெல்டிங் தொழில்நுட்பங்களும் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், தண்டவாளங்களைச் சோதனை செய்ய அனலாக் இயந்திரங்களுக்கு பதிலாக மிகவும் நம்பகமான டிஜிட்டல் வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.   செய்தி: பிஐபி

ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்: தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை: ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மக்களின் பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சியாக, வசதியாக, பாதுகாப்பாக, சுகாதாரமாக பயணம் செய்ய வேண்டும் என்பதை இந்த பட்ஜெட் உறுதி முன்பதிவுக்கு 120 நாட்கள், முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது இரயில்; நிலையங்களிலும் சுத்தமான கழிப்பறை என்று வசதிகளை மேம்படுத்தப்பட்டிருப்பது அசதியுடன் பயணம் செய்பவர்கள் வசதியுடன் பயணம் செய்யட்டும் என்ற நல்லுள்ளத்தோடு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காற்று வருகிறதோ இல்லையோ, துர்நூற்றம் வீசுகிறது என்ற நிலையிலே இன்று கழிப்பறைகள், இரயில்பயணத்தில் அயற்சி வருகிறதோ சிறுநீர் அழற்சி வரும்படியே கழிப்பறைகள் இருந்ததை இன்று மாற்றி ‘டீழை வுழடைநவ’ வசதிகள் என்பது வசதிக்காக மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்காகவும் செய்திருக்கும் ஏற்பாடுகள் பாராட்டத்தக்கது. அதேபோல் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பாக பெண்கள், பெரியோர் பயணம் பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இரட்டை வழிப்பாதையில் தூரம் அதிகரித்திருக்கிறது. இரயில் பயணத்தின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறைந்திருப்பது இன்றைய அவசர உலகில் அவசியமாகிறது. நாகர்கோவில் கடற்கரை பாதை வழியாக இணைப்பது மகிழ்ச்சி. 8.50 இலட்சம் கோடி முதலீடு என்பது காங்கிரஸ் அரசால் கடன் சுமையால் அமுக்கப்பட்டிருந்த துறைக்கு ஆறுதல். கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதும் ஆறுதல். விவசாயிகளுக்கு உதவும்படி சரக்கு வசதிகள் வரவேற்கத்தக்கது. இன்று இது இளைஞர்களின் உலகம் அவர்களுக்கு உதவுமாறு இணையதள வசதி இணையற்ற புதிய திட்டங்கள் இல்லை என்ற விமர்சனம் தேவையற்றது. காங்கிரஸ் அரசு போல் நடைமுறைப்படுத்தமுடியாததை அறிவித்துவிட்டு கிடப்பில் போடுவதை விட, செய்ய முடிவதை ஆராய்ந்து சொல்வது நலம் என்ற வகையில் புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்கப்படும் என்பது அறிவுப்பூர்வமான அறிவிப்பு, அறிவியல் பூர்வமான சிந்தனை. – என்று கூறியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இன்று தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகள்: முன்னேற்றத்திற்கான, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, பயணிகள் வசதியை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது. சாமான்ய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு வேகம், அளவு, சேவை மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கொண்ட பட்ஜெட். இந்திய ரயில்வேயின் சரித்திரத்தில், இது ஒரு திருப்பு முனை பட்ஜெட். முதன் முறையாக, தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் நவீனப்படுத்துதல் ஆகியவற்றை அடக்கிய பட்ஜெட் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வங்கதேசத்துடனான போட்டி: இலங்கை அணி 92 ரன்னில் வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஏ பிரிவு லீக் சுற்று 18வது போட்டியில், வங்கதேசத்துடன் மோதிய இலங்கை அணி, 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி, பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர் திரிமன்னே 52 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் தில்ஷன் 161 ரன்னும், சங்ககரா 105 ரன்னும் எடுத்து, ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவர்கள் இருவரும் அணியின் ஸ்கோர் 332ஐ தொட உதவினர். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி, 1 விக்கெட் இழப்புக்கு 332 ரன் எடுத்தது. 333 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வங்க தேச அணியில் சபிர் ரஹ்மான் மட்டும் 53 ரன் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ரன்களே எடுத்தனர். பின் வரிசையில் வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழக்க, 47 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.

வீர சாவர்க்கருக்கு மோடி மரியாதை

வீர சாவர்க்கரின் புண்ணிய திதி நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.  

ஆய்வுக்குப் பிறகே புதிய ரயில்கள் அறிவிப்பு: சுரேஷ் பிரபு விளக்கம்

இன்று தாக்கல் செய்யப் பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆய்வுக்குப் பிறகே அறிவிப்பு என்று கூறினார். 2015-16-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் அறிவிப்பு இல்லாதது குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் கூறியபோது, “புதுப்பிக்கப்பட்டு வரும் ரயில்வே இருப்புப் பாதைப் பணிகள் நிறைவு பெற்றால்தான் புதிய ரயில்களை இயக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள முடியும். ரயில்வே இருப்புப் பாதை அதிகளவில் பயன்படுத்தப்படுவது, புதிய இருப்புப் பாதைகளில் பணிகள் தேக்கமடைந்துள்ளது, வேகக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஆகியன புதிய ரயில்களை அறிவிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்த ஆய்வு முடிந்த பிறகு நடப்பு கூட்டத் தொடரிலேயே புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

4 பேரை திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றி, 5-வது திருமணத்துக்கு முயன்ற பெண் கைது!

indu arrest - 2026

சென்னை:

நான்கு இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தைப் பறித்துக் கொண்டு பின்னர் கழற்றிவிட்டு ஏமாற்றிய பெண், 4வது கணவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை பி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கட்டிட காண்டிராக்டர் சீனிவாசன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘கோவையைச் சேர்ந்த காயத்ரி என்ற பி.எஸ்.சி. பட்டதாரி பெண்ணை கடந்த 2014 நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு அவளது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் இருந்து நகை பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டு, பின்னர் என்னை மணந்து கொண்டது எனக்குத் தெரியவந்தது. தற்போது 5–வதாக இன்னொரு இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்து வருகிறாள். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி, வழக்குப் பதிவு செய்து காயத்ரியைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது. அவள், இணைய தளங்களில் வரன் தேடி வசதியான இளைஞர்களைத் தனது வலையில் வீழ்த்தி அவர்களைத் திருமணம் செய்துகொண்டு, நகை பணத்தை அபகரித்த பிறகு அவர்களைக் கழற்றி விடுவதும் தெரியவந்தது.

இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயர்களில் மாற்றி மோசடி செய்திருக்கிறாள்.

காயத்ரி 2010–ம் ஆண்டு நரசிம்மராவ் என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்திருக்கிறாள். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தைப் பறித்துவிட்டு விவாகரத்து பெற்றுவிட்டாள்.

பின்னர் 2012–ம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்திருக்கிறாள். இவரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் பெற்று விட்டு, விவாகரத்து வழக்கினைத் தொடர்ந்திருக்கிறாள். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் 2013–ம் ஆண்டு கோவில் பூசாரி ராஜகோபால் என்பவரைத் திருமணம் செய்ய முயன்று, ரூ.1 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகையை அபகரித்திருக்கிறாள். இதன் பிறகு காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தியிருக்கிறாள். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாகக் கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றைப் பெற்றிருக்கிறாள். மேலும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி அனுபவித்திருக்கிறாள்.

அதன் பிறகு அம்பத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை தனது திருமண வலையில் வீழ்த்தியிருக்கிறாள். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது. இதை அறிந்த சீனிவாசன் திருமங்கலம் போலீசில் புகார் செய்ததால், விசாரணை செய்த போலீஸார் தற்போது காயத்ரியை கைது செய்துள்ளனர்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முனைப்பு

இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இலங்கை அரசு முனைப்புக் காட்டி வருகிறது. 19–வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆளும் கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுராகுமார திசநாயகே செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, இலங்கையில் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளில் அதிபர் மைத்ரீபால சிறீசேனா தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் 19–வது இலங்கை அரசமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் வசம் குவிந்துள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு வலிமை சேர்க்கும் பிரிவுகள் இந்த சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றுள்ளன. அதிகார வர்க்கத்தின் தலையீடின்றி சுதந்திரமாக செயல்படும் வகையில் ஆணையங்களை அனுமதிக்கவும் இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும். இந்த சட்டத் திருத்த மசோதா அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்ட மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது – என்று அவர் கூறியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கும் திட்டமில்லை: மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 370- ஐ நீக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்று மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது. மாநிலங்களவையில், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கும் நோக்கம் அரசுக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பிரதீபாய் சௌத்ரி, “ மத்திய அரசிடம் தற்போது அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணக்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. இந்த சட்டப் பிரிவு மூலம் மத்திய நாடாளுமன்றம் ஜம்மு காஷ்மீர் அரசின் இசைவுடன் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைப் பெறுகிறது’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க எச்1பி விசா வைத்திருந்தால் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி கிடைக்கும்!

US-H-1B அமெரிக்காவில் உள்ள எச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். காரணம் எச்-1பி விசா வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. அமெரிக்காவில், இப்போதுள்ள சட்டத்தின்படி எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைவர் (கணவர் அல்லது மனைவி) வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்த மாற்றம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் வரப் பிரசாதம்தான். இந்தப் புதிய முறைப்படி முதல் ஆண்டில் பணி செய்ய அனுமதி கேட்டு 1,79,600 பேர் விண்ணப்பம் செய்ய தகுதி பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் 55 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் (கணவன் அல்லது மனைவி) வேலை அடிப்படையில் நிரந்தரமாகத் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று வேலை விசா வழங்கப்படும். வரும் மே 26-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இந்த ‘ஐ-765 விண்ணப்பம்’ யுஎஸ்சிஐஎஸ் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் துணைவருக்கு வேலை அனுமதி அட்டை (எச்-4) வழங்கப்படும். அதன்பிறகு அவர்கள் அமெரிக்காவில் பணி புரியலாம்” என்று கூறப்பட்டுள்ளது.