சென்னை: பட்ஜெட் தாக்கலாகும் நேரத்தில் பெட்ரோலியத் துறை ஆவணங்கள் கசிந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியோ, தொடர்புடைய துறை அமைச்சர்களோ பதவி விலகுவார்களா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ரகசிய ஆவணங்களை திருடியதில் டில்லி போலீசாரால் 7 பேர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களிடமிருந்து இரண்டு கோணிப்பை நிறைய ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தகைய ஆவணங்கள் பெட்ரோலியத்துறை, நிலக்கரித்துறை, எரிசக்தித்துறை, நிதி அமைச்சகம் போன்ற மிக முக்கியமான துறைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம், வரிவிதிப்பு, இறக்குமதி கொள்கை உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு, நகல் எடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் மூலம் விற்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் பெட்ரோலியத்துறை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர் வெளியேறிய பிறகு, மாலை நேரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டபிறகு இந்த திருட்டை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். இத்தகைய ஆவணங்கள் மூலம் அரசின் கொள்கை முடிவுகளை முன்கூட்டியே அறிந்து, அதன்மூலம் தங்களது நிறுவன செயல்பாட்டை வகுத்துக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை ஆதாயமாக பெறும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன. இதனடிப்படையில் தான் பங்கு சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகள் பலமடங்கு கூடி கோடிக்கணக்கான ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்கள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அலுவலகத்திலிருந்து திருடப்பட்டிருப்பது நம்மை மேலும் பலமடங்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. பட்ஜெட் ஆவணங்களைக் கூட காப்பாற்ற முடியாத அவலநிலையில் தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அத்தோடு நில்லாமல் பிரதமர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றும், நிருவேந்திர மிஸ்ரா எழுதிய கடிதமும் களவு போய் கைது செய்யப்பட்டவர்களிடம் சிக்கியிருக்கிறது. இத்தகைய ஆவண திருட்டுகளில் பிரதமர் அலுவலகத்தை கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் விட்டு வைக்கவில்லை. இதைவிட நிர்வாகச் சீர்கேட்டிற்கு வேறு சான்று தேவையில்லை. இதுதான் பிரதமரின் நல்லாட்சிக்கு இலக்கணமா ? பிரதமர் மோடி தான் இதற்கு விளக்கம் மத்திய அரசின் ஆவணங்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்நிலை ஊழியர்களின் பின்னணி என்ன ? இவர்களுக்கு பின்னாலே மூளையாக இருந்து செயல்பட்ட மூத்த அதிகாரிகள் யார் ? இதில் பெரும் பலனை அடையும் கார்ப்பரேட் நிறுவனத்தின் பெயரை பகிரங்கமாக வெளியே சொல்ல மோடி அரசுக்கு என்ன தயக்கம் ? சம்மந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கு ‘மிகமிக” நெருக்கமானது என்பதுதான் மூடி மறைப்பதற்கு காரணமா ? எய்தவனை விட்டுவிட்டு, அம்பை நோகுவது ஏனோ ? இந்தியா முழுவதும் அலுவலகங்கள் உள்ள நிலக்கரித் துறையில் கோப்புகளை காணவில்லை என்பதற்காக அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை பதவி விலகச் சொன்னவர்கள் பா.ஜ.க.வினர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இன்று மத்திய அரசின் ரகசிய ஆவணங்கள் முக்கியத் துறைகளில் திருடப்பட்டு, குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதில் பிடிபட்டுள்ள நிலையில் ஏற்கனவே கூறியதற்கு முன்மாதிரியாக விளங்க பிரதமர் மோடி பதவி விலகுவாரா ? குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களாவது பதவி விலகுவார்களா ?
பெட்ரோலியத் துறை ஆவணங்கள் கசிந்த விவகாரம்: மோடி பதவி விலகுவாரா என ஈ.வி.கே.எஸ் கேள்வி
தவறான மின்கொள்கையால் தமிழகம் கடன்சுமை மாநிலமாக மாறிவிடும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும் என்றும், தவறான மின்கொள்கையால் தமிழகம் கடன் சுமை மாநிலம் ஆகிவிடும் என்றும் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கணேஷ் குமார், தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி ஆகியோர் தெரிவித்தக் கருத்துக்களுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு 22,440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க தமது அரசு வகை செய்திருப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பை கேட்கும் போது இனிப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்துமே கடந்த காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரால் கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் தான். அந்த விவரங்களை புள்ளி மாறாமல் இப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்திருக்கிறார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 4640 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவை எதுவுமே அ.தி.மு.க. அரசால் செயல்படுத்தப் பட்டவை அல்ல. முந்தைய ஆட்சியிலும், மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயனாகத் தான் இந்த கூடுதல் மின்சாரம் கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் 2513 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருப்பதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். இதற்கும் காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அல்ல என்பதே உண்மை. மீதமுள்ள 8880 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையங்களை அமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும்? என்பதை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தால் கூற முடியாது. அவர் பட்டியலிட்டுள்ள திட்டங்களில் பெரும்பாலானவை 2010 ஆம் ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு மேலாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே தான் கிடக்கின்றன. அழும் குழந்தைக்கு வாழைப்பழத்தைக் காட்டி அமைதிப்படுத்துவதைப் போல தமிழகத்தில் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்களை சமாதானப்படுத்துவதற்காக இத்தகைய புள்ளிவிவரங்களை அ.தி.மு.க. அரசு கூறிவருகிறது. பெரிய அளவில் மின்திட்டங்களைஅறிவிப்பதில் பெருமைப் பட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. அரசு, அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் 05.09.2011 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,‘‘அடுத்த 5 ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்படும்’’ என்று அறிவித்தார். ஜெயலலிதா கூறிய காலக்கெடு இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் ஜெயலலிதாவின் அறிவிப்பு நிச்சயமாக நிறைவேற்றப்படாது. ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் வழியில் இத்தகைய வெற்று புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதற்கு முயன்றுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா வெளியிட்ட சூரிய ஒளி மின்னுற்பத்திக் கொள்கையில், ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை 2000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கொள்கையே குப்பையில் போடப்பட்டது தான் மிச்சம். அதன்பிறகு சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை தருவதாக அரசு அறிவித்ததால் அதை நம்பி 2064 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்துத் தருவதற்கு 70 தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், இதற்கான ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டுமானால், ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 லட்சம் வீதம் கையூட்டு தர வேண்டும் என ஆளுங்கட்சித் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதால், பல தனியார் நிறுவனங்கள் தமிழகஅரசிடம் செலுத்திய வைப்பீட்டுத் தொகையைக் கூட திரும்பப்பெறாமல் விலகி விட்டன என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கு அவசியமான மின்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூட அ.தி.மு.க. அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றப்போவதாக ஒருபக்கம் கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் மற்றொரு புறம் தனியாரிடமிருந்து 3330 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்காக நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நாம் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பது மின்மிகையா? அல்லது மற்ற மாநிலங்களிலிருந்து நாம் மின்சாரத்தை வாங்குவது மின்மிகையா? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும். இதையெல்லாம் விட தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தி முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ள கருத்துக்கள் தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். 3330 மெகாவாட் மின்சாரத்தை தயாரிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த ரூ.22,000 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும், அதனால் தான் மின்திட்டங்களைச் செயல்படுத்தாமல் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கம் அபத்தத்தின் உச்சம் ஆகும். தமிழ்நாட்டின் மின்தேவையை சமாளிப்பதற்காக 2013-14 ஆம் ஆண்டில் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்த தொகை ரூ.30,529 கோடி ஆகும். இதைக் கருத்தில் கொண்டால், இரு ஆண்டுகளுக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்க செலவிடப்படும் தொகையை மின்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டால் 9,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற முடியும். ஆனால், தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை ‘‘ வாடகை சோபா 20 ரூபா விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா’’ என்ற வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதென்பது ஊழலுக்குத் தான் வழி வகுக்குமே தவிர, வளர்ச்சிக்கு துணை செய்யாது . இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறாது…. கடன்சுமை மாநிலமாகத் தான் மாறும் என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்; கிடப்பில் போடப்பட்டுள்ள மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி தமிழகத்தின் மின்வெட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளை வானொலியில் ‘மன் கி பாத்’: மோடி உற்சாகம்
நாளை வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி தனது மனதோடு பேசுகிறேன் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். இந்த முறை அவரது உரையின் தலைப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் விதத்தில் அமைந்திருக்கும். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டுள்ளார் மோடி.
Am happy that students, parents & teachers are sharing insightful thoughts for this Sunday’s ‘Mann Ki Baat’ programme https://t.co/hxxnlOQPzN — Narendra Modi (@narendramodi) February 20, 2015
பாகிஸ்தான் தோற்று வாட்ஸ்-அப் கணிப்பை வெற்று வதந்தி ஆக்கியுள்ளது!
உலகக் கோப்பை போட்டிகள் குறித்து நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி வெளியானது. அது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளதில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே நடந்துள்ளது. எனவே இந்தக் கருத்து கணிப்பில் இருப்பது போல் போட்டி முடிவுகள் அனைத்தும் அமைந்தால் அது, ஐ.சி.சி.க்கு மிகப் பெரிய தலைவலியாகவே அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப் பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் தோற்று, பாகிஸ்தான் அணி ஐ.சி.சி.க்கு உருவாகவுள்ள தலைவலியை போக்கி விட்டது. வாட்ஸ்-அப் செய்தி வெறும் வதந்திதான் என்பதை அது நிரூபித்துவிட்டது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் என்றும், மேற்கு இந்தியத் தீவுகள் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், படுதோல்வி அடைந்து பாகிஸ்தான் அதனை பொய்யாக்கிவிட்டது. முன்னதாக, நேற்று வெளியான வாட்ஸ் அப் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணி தனது முதல் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது. பிறகு நாளை ஞாயிறு தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்ஸ்-அப்பில் வதந்தி உலா வருகிறது. அதில், இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. மேட்ஸ் ஃபிக்ஸிங் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் சரி, முன்னாள் சாம்பியன்களுக்கும் சரி.. இந்த உலகக் கோப்பை கிடைக்காது. தென் ஆப்பிரிக்கா அணிதான் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு நாளைய போட்டியில் இந்தியா தோற்குமாம். ஜிம்பாப்வே அணியும் இந்திய அணியைத் தோற்கடிக்குமாம். இவ்வாறு அடுத்து நடைபெறும்அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவை அது வெளியிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்று மோதும் என்றும், அதில், தென்ஆப்பிரிக்கா வெல்லும் என்றும் வதந்தி பரவியது.
சொத்துக் குவிப்பு வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் மேல்முறையீடு
புது தில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகிறது. நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் பவானி சிங் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராக முடியாது என்றும், அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் அவரை இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்குரைஞராகத் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும் கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11–ந்தேதி தள்ளுபடி செய்தது. அதுபோல், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் வாதாட, வழக்குரைஞர் பவானி சிங் அரசுத் தரப்பு வழக்குரைஞராகத் தொடர அனுதிக்கக் கூடாது என்று ஒரு மனுவும், ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஒரு மனுவும் அன்பாகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அன்பழகன், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.
பாகிஸ்தான் அணி படுதோல்வி: 150 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி
உலகக் கோப்பை போட்டிகளின் பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில், இன்று க்றிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியில், துவக்கத்திலேயே அந்த அணியின் அதிரடி வீரர் கெயில் 5 ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் 4 ரன்களே எடுத்தார். பின்னர் ஸ்மித்தும் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். ப்ராவோ, சாமுவல்ஸ், ராம்தின், சிம்மன்ஸ் என நடுவரிசை உறுதியாக நின்று விளையாடினர். ப்ராவோ 49, சாமுவல்ஸ் 38, ராம்தின் 51, சிம்மன்ஸ் 50, சமி 30 என எடுத்து ஆட்டமிழந்தனர். ரஸல் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் அதிரடி காட்டி 42 ரன் குவித்து அணியின் எண்ணிக்கை 310 ரன்னை எட்ட உதவினார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் 23 ரன் உதிரியாகத் தரப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதில் 14 பந்துகள் வைட்கள். பின்னர் பாகிஸ்தான் அணி 311 ரன்னை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடத் துவங்கியது. ஆனால், துவக்கமே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. நஸிர், யூனுஸ் கான், ஹரிஸ் சொஹெய்ல் மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அஹ்மத் ஷேஹாத் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிஸ்பா உல் ஹக் 7 ரன்னில் ஆட்டம் இழக்க, அந்த அணி ஒரு ரன்னில் 4 விக்கெட் இழந்தும், 25 ரன்னில் 5 விக்கெட் இழந்தும் தடுமாறியது. ஆனால் பின்னர் வந்ஹ்ட ஷோஹெப் மசூத் 50 ரன்னும், உமர் அக்மல் 59 ரன்னும் எடுத்து மோசமான ரன் தோல்வியில் இருந்து பாகிஸ்தான் அணியை மீட்டனர். பின்னர் வந்த ஷாகித் அப்ரிடி 26 பந்தில் 28 ரன் எடுத்தார். வஹாப் 3 ரன்னும், சொஹெல் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் எடுத்து படுதோல்வியை சந்தித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர், ரஸல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: தொடர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி
புது தில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தூர்தர்ஷன் தொடர்ந்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. எனவே, தூர்தர்ஷன் மூலம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வழியே ரசிகர்கள் இந்த உலகக் கோப்பை போட்டிகளை தடையின்றிப் பார்க்க வழி ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ, இஎஸ்பிஎன், ஸ்டார் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கினைத் தொடர்ந்திருந்தன. அதில், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை நாங்கள் பிரசார் பாரதிக்கு வழங்க வேண்டியுள்ளது. ஆனால், அக்காட்சிகளை தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு பிரசார் பாரதி அளித்தால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அவற்றை வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தன. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பிரசார் பாரதி வழங்கக் கூடாது என்று கடந்த 4ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரசார் பாரதி மேல் முறையீடு செய்தது. ] இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரஃபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதிகள் வெள்ளிக்கிழமை நேற்று பிறப்பித்த உத்தரவில், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு பிரசார் பாரதி தொடர்ந்து வழங்கலாம். மறு உத்தரவு வரும் வரை தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை மாதம் நடைபெறும்” என்று கூறப்பட்டது. அதாவது, நீதிமன்றம் குறிப்பிட்ட படி, இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும்போது உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் முடிந்து விடும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தூர்தர்ஷனில் உலகக் கோப்பை போட்டிகளை ரசிகர்கள் தடையின்றிப் பார்த்து ரசிக்கலாம்.
5 வருடமாக ராஜபட்சவால் முடியாதது சிறீசேனவால் 2 வாரத்தில் நிறைவேற்றம்: ரணில்
கொழும்பு: 5 வருடங்களில் மகிந்த ராஜபட்ச அரசால் முடியாததை கடந்த 2 வாரங்களில் மைத்ரி சிறீசேன அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க. இங்கே போர் நிறைவடைந்த பின்னரும் முந்தைய அரசினால் 5 வருடங்களாக அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வழங்க முடியாமல் போன பல நிவாரணங்களை தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறீசேனவின் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இரு வாரங்களிலேயே வழங்கியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை அவையில் தெரிவித்தார். மேலும், மகிந்த ராஜபட்ச ஆட்சியில் ஏன் இதனைச் செய்ய முடிந்திருக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இலங்கை நாடாளுமன்றத்தில் 23 (2) ஆம் எண் விதியின் கீழ் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசியபோது, பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்: மு.கருணாநிதி
சென்னை: தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை: முதலமைச்சராக பன்னீர்செல்வம் நடத்தும் ஆட்சியில், ஜெயலலிதாவின் அறிவிப்புகள் காற்றில் பறப்பதாகவும், கோவில் ஊழியர்கள் அது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறதே? ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 110வது விதியின் பெயரால் 12-8-2014 அன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா படித்த அறிக்கையில் தான், “தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் கோவில்களில் பணிபுரியும் 8 ஆயிரத்து 184 பணியாளர்களுக்கு தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணி வரன்முறை செய்யப்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 44 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்” என்று தெரிவித்து, ஐந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. ஜெயலலிதாவின் அறிவிப்பு என்னவாயிற்று? 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட அந்த ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டதா? அவர்களது பணி வரன்முறை செய்யப்பட்டு விட்டதா? அதைக் கேட்டுத்தான் அந்தக் கோவில் ஊழியர்கள் தற்போது போராடுகிறார்கள். ராணிப்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு பத்து பேர் இறந்ததற்கு அரசின் அலட்சியம்தான் காரணம் என்று செய்தி வந்திருக்கிறதே? இந்த விபத்து பற்றி 1-2-2015 அன்றே நான் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். இந்த விபத்து குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து “உண்மை கண்டறியும்” முயற்சியிலே ஈடுபட்டார்கள். அந்தக் குழுவின் தலைவர் கூறும்போது, “வாரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விரிசல் இருந்தும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். அதில் சுத்திகரித்த திடக் கழிவுகளைத்தான் சேமிக்க வேண்டும். சுத்திகரிக்காமல் திரவக் கழிவுகளைத் தொடர்ந்து சேமித்ததால் விபத்து நடந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தொழிலாளர் நல ஆணையமும் செயல்படவில்லை. எனவே தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அரசுத் துறைகள்தான் பலிக்குக் காரணம்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ஒரே நாளில் இரண்டு இடங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகச் செய்தி வந்திருக்கிறதே? “மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை” என்பார்கள்! இலங்கை அதிபர் சிறிசேனா டெல்லி வந்து நம்முடைய பிரதமருடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கிறார். மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஆகியவற்றுக்குப் பிறகு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் இருக்காது என்று நம்பியதற்கு மாறாக இந்த இரண்டு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக இதிலே கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களுக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்பினை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

