புது தில்லி: பொருளாதார மேதை அமர்த்தியா சென் பெயரிலான விருதினைத் தொடர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாளந்தா பல்கலைக் கழக வேந்தர் பதவியில் நீட்டிப்பு கேட்டு அமர்த்தியா சென் பெயரை முன்மொழிந்து பல்கலைக்கழக நிர்வாகம் அனுப்பியிருந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், அதனால் தான் பதவியில் நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதாக தாம் உணர்வதால், தாம் வேந்தர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அமர்த்தியா சென் கடிதம் அனுப்பியிருந்தார். பிரதமர் மோடி குறித்து அதிகம் விமர்சித்தது இதன் காரணமாக இருக்கும் என்று பேசப்பட்ட நிலையில், இதனை மத்திய அரசு மறுத்தது. இருப்பினும், அமர்த்தியா சென் பெயரிலான விருது தொடர்ந்து வழங்கப்பட அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமூக அறிவியல் ஆய்வில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2013ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த விருதுக்காக இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் எவருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. தற்போது அமர்தியா சென் விருது பெறுபவர்களுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் இந்தத் தேர்வு முடிந்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் அறிவித்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா: குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்குவதற்காக, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற ப்ரவாசி பாரதிய திவஸ் (பிபிடி) நிகழ்வின் போதான கூட்டத்தில் இதற்கான யோசனை வடிவு முன்வைக்கப்பட்டது. அதன்படி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை இதற்கான ஒப்புதல் அளித்தது. இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெகுநாள் கோரிக்கையான இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதற்கான பி.ஐ.ஓ. அடையாள அட்டை (PIO) மற்றும் வெளிநாட்டுக்கான இந்தியக் குடியுரிமையான ஓ.சி.ஐ. (OCI) அட்டை ஆகிய இரண்டும் ஒன்றாக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கும் போது இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது நியூயார்க்கில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அதிக பட்சம் 15 ஆண்டு கால விசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியா வரும்போது காவல் நிலையங்களுக்குச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்த 2 விதிமுறைகளும் இனி தளர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன்படி, இந்த விதிமுறைகளை நீக்கி திருத்தப்பட்ட குடியுரிமை அவசரச் சட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்த அவசரச் சட்டதுக்கு மாற்றாக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கௌரவக் கொலைகளைத் தடுக்க வேறு சட்டம் தேவையில்லை: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதைத் தடுக்க வேறு புதிய சட்டங்கள் தேவையில்லை, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, ”சமூக நீதி கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகத்தில் 2 சதவீதம் மட்டுமே ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஹரியாணாவில் 25 சதவீதமும், கேரளத்தில் 19 சதவீதமும் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அந்த 2 சதவீதத் திருமணங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறுகின்றன. 1991 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பெண் சிசுக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததுபோல, கெளரவக் கொலைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்ற வேண்டும்” என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில், குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், ”சாதி, சமயப் பூசல்கள் ஏதுமின்றி அமைதியும், நல்லுறவும் தமிழகத்தில் பேணப்பட்டு வருகிறது. ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருந்த திருவிழாக்கள், முக்கிய நினைவு நாள்கள், குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையே கோயில் வழிபாட்டில் உரிமை கோரும் பிரச்னை, ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததன் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களிலும் காவல் துறையினர் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜாதி மோதல்கள் ஏற்படாமல் தவிர்த்தனர். மாநிலத்தில் உள்ள அனைத்து ஜாதி அமைப்புகள், அதன் தலைவர்கள், ஜாதி பிரச்னைகளைத் தூண்டுவோரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. ஆயுதங்கள், வெடிமருந்துகள் சேகரித்தல் தொடர்பாக நுண்ணறிவுத் தகவல்கள் சேகரித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மேலும், ஜாதி ரீதியான பூசல்கள் ஏற்படும்போதும், இருவேறு சமூகத்தினருக்கும் இடையே காதல் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளின்போதும், காவல் துறையினர் தற்போதுள்ள சட்டங்களின்படி வழக்குப் பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட்டால், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955ன்படியும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு சட்டப்படியான நஷ்ட ஈடும் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால், மாநிலத்தில் கெளரவக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. அவ்வாறு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால், காவல் துறையினர் சட்டப்படி அதற்கு காரணமானவர்கள் மீது தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால், சாதி மோதல்கள், கெளரவக் கொலைகளைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானவையாகும். புதிதாகச் சட்டம் இயற்றுவதற்கான தேவை எழவில்லை” என்றார்.
மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: பேரவையில் அமைச்சர் தங்கமணி
சென்னை: மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசும் போது, காவிரி படுகை பகுதியில் மீத்தேன் எடுப்பதற்காக ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் சாதக- பாதகங்களை அறிவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் நிலையை அறிய விரும்புகிறேன் என்று கேட்டார். இதற்கு பதில் அளித்துப் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி… தமிழக அரசு அமைத்துள்ள குழுவானது, தனது ஆய்வினை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அறிக்கை வரவில்லை. இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் அரசு அனுமதி தராது என்றார்.
நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து விலகல்: அமர்த்தியா சென் கடிதம்
புது தில்லி: நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ள பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் தாம் இரண்டாவது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அமர்த்தியா சென், பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது முதல் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், அமர்த்தியா சென் மீண்டும் பல்கலைக்கழக வேந்தராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமர்த்தியா சென் இரண்டாவது முறையாக மீண்டும் அந்தப் பதவியை வகிப்பதற்காக விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் இந்த விண்ணப்பம் மீது முடிவு எடுக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘‘எனது விண்ணப்பம் மீது முடிவு எடுக்க ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அதில் அவர்கள் காட்டும் ஈடுபாடில் உறுதியின்மை ஆகியவை நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கும், அதன் கல்வி முறைக்கும் உதவாது. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு ஒருமனதாக என்னை பதவியில் தொடரும்படி கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இதன் வேந்தராகத் தொடருவதில் இருந்து நானாகவே விலகிக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மேட்ச் ஃபிக்ஸ்ட்’- இந்தியா தோற்கும்; தென்னாப்பிரிக்கா சாம்பியனாகும்: வாட்ஸ்-அப் வதந்திகள்
மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணி தனது முதல் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வென்றது. பிறகு நாளை ஞாயிறு தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்ஸ்-அப்பில் வதந்தி உலா வருகிறது. அதில், இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டன. மேட்ஸ் ஃபிக்ஸிங் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் சரி, முன்னாள் சாம்பியன்களுக்கும் சரி.. இந்த உலகக் கோப்பை கிடைக்காது. தென் ஆப்பிரிக்கா அணிதான் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு நாளைய போட்டியில் இந்தியா தோற்குமாம். ஜிம்பாப்வே அணியும் இந்திய அணியைத் தோற்கடிக்குமாம். இவ்வாறு அடுத்து நடைபெறும்அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஒரு முடிவை அது வெளியிட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தகுதி பெற்று மோதும் என்றும், அதில், தென்ஆப்பிரிக்கா வெல்லும் என்றும் வதந்தி பரவியது. ஏற்கெனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு இது மிகப் பெரிய சோதனையாகவே பார்க்கப்படுகிறது. இதில் ஒரு சுவாரஸ்யம், இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ள தகவல்களில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே நடந்துள்ளது. எனவே இந்தக் கருத்து கணிப்பில் இருப்பது போல் போட்டி முடிவுகள் அனைத்தும் அமைந்தால் அது, ஐ.சி.சி.க்கு மிகப் பெரிய தலைவலியாகவே அமையும்.
காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர்: கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தல்
விஜயவாடா: காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே பாயகாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்(19)-ணும் அதே பகுதியைச் சேர்ந்த சேசு(21) என்ற இளைஞரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அவ்வாறு காதலியுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்கத்தை சேசு தனது செல்போனில் படம் எடுத்தார். இந்த அந்தரங்க வீடியோக் காட்சியை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தனது நண்பர்களுக்கு சுற்றுக்கு அனுப்பினார். இது அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இந்த வீடியோ குறித்து போலீசில் புகார் செய்ய அந்தப் பெண் தயங்கினார். ஆனால் அகில பாரத மகளிர் அமைப்பு இந்த பிரச்னையை முன்னிறுத்து, அந்த இளைஞரைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்த முன் வந்தது. இது பற்றி போலீசிலும் அந்த அமைப்பினர் புகார் செய்தனர். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். தலைமறைவான இளைஞர் சேசுவைக் கைது செய்ய வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதை அடுத்து போலீஸார் அந்த இளைஞரைத் தேடி வருகின்றனர்.
மோடியின் கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம்: கடைசி நேரத்தில் வாங்கிய குஜராத் வைர வியாபாரி
சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனை குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பாய் பட்டேல் வாங்கியுள்ளார். இதனுடன், பிரதமருக்கு கடந்த 9 மாதங்களில் கிடைத்த பரிசுப் பொருட்களையும் சேர்த்து ஏலமிடும் 3 நாள் நிகழ்ச்சி இன்று நிறைவு பெற்றது. இன்று நடந்த 3 ஆம் நாள் ஏலத்திலும் மோடியின் ‘சூட்’டை ஏலத்தில் எடுக்க அதிக போட்டி காணப்பட்டது. சூரத்தை சேர்ந்த ராஜேஷ் மகேஸ்வரி என்பவர், ரூ.1.25 கோடிக்கு ஏலம் கேட்டார். தொடர்ந்து குஜராத்தின் பவநகரைச் சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான கோமல்காந்த் சர்மா ரூ.1.41 கோடிக்கு ஏலத்தில் கேட்டார். தொடர்ந்து இன்று காலை நடந்த ஏலத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியபாரி லால்ஜி பாய் பட்டேல் ரூ.4 கோடியே 31 லட்சம் கொடுத்து வாங்கினார். இந்த ஏல நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை முழுவதும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படும் என்று சூரத் மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.
கடைசி நேரத்தில் பதவி விலகினார் மாஞ்சி: நிதிஷ் குமார் முதல்வராகிறார்
பாட்னா: பீகார் முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்னர், கடைசி நேரத்தில் பதவி விலகினார். இதனை அடுத்து பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி ஏற்றுக்கொள்கிறார். இவரின் பதவியேற்பு விழா வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கும் நிதிஷ் குமாருக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்கும் நிதிஷ் குமாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள என்று தெரிவித்துள்ளார்.
இந்த்ரேஷ் குமாரிடம் உலோமா பிரமுகர் கேட்ட கேள்விகளுக்கு இராம.கோபாலன் பதில்
சென்னை: உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சன்னி உலோமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகி இந்திரேஷ் குமாரிடம் ஆறு கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு அவர், இது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நான் கருத்து கூறுவதைவிட ஒரு பொதுக் கூட்டத்தின் வாயிலாக எல்லோருக்கும் எனது பதிலை தரத் தயாராக இருக்கிறேன் என்பதை பதிவு செய்துள்ளார். இதனைப் படித்தபோது, நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன் என்ற முறையில் என்னுடைய பதிலை இங்கே பதிவு செய்கிறேன் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் பதிவு செய்துள்ளார். அவரது பதில்கள்:
- இந்தியாவை ஆர்.எஸ்.எஸ். ஒரு ஹிந்து நாடாக கருதுகிறதா?
இது போன்ற கேள்விகளை கேட்பது அவர்கள் தங்களை பெரியவர்களாக நினைத்துக்கொண்டு ஹிந்துக்களை கேள்வி கேட்கிறார்கள். இது அகங்காரத்தின் உச்சக்கட்டம். இந்தியா என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது. அதற்கு முன்னால் இந்த நாட்டுக்கு ஒரு பெயர் இருந்ததல்லவா? அது என்ன? அது தான் பாரதம், ஹிந்துஸ்தானம் என்பது இவர்களுக்கு புரிகிறதா? அல்லது திமிர்த்தனமான மனப்பான்மை காரணமாக அல்லது சிறுபான்மையினருக்கு செல்லம் கொடுத்ததால், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அருவெறுக்ககத்தக்க ஆணவமா? தன்மானம் உள்ள எந்த ஹிந்துவாலும் இந்தக் கேள்வியை சகித்துக்கொள்ள முடியாது.
- இந்தியாவை ஒரு ஹிந்து நாடாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு வடிவத்தை தயாரித்து வைத்திருக்கிறதா?
இந்தக் கேள்வியும் திமிர்த்தனம்தான். ஹிந்து நாடாக மாற்ற தேவையே இல்லை. இது ஏற்கனவே பல்லாயிரம் ஆண்டுகளாக ஹிந்து நாடாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
- ஹிந்து நாடு ஹிந்து மத நூல்களின்படிதான் அமையுமா?
இந்தக் கேள்வியும் எரிச்சல் ஊட்டக்கூடியது. மத நூல்கள்படி இது தர்ம ராஜ்ஜியம். புதிய சித்தாந்தங்கள் எதையும் ஆர்.எஸ்.எஸ். வகுக்கத் தேவையில்லை, பாரதம் எப்பொழுதுமே மதச்சார்பற்ற நாடாகத்தான் இருந்திருக்கிறது. அசோக மன்னர்தான், இந்த நாட்டில் பௌத்த மத கருத்துகளின்படி ஆட்சியை நடத்தினார்.
- மத மாற்றத்தை விரும்புகிறீர்களா?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. இந்த நாட்டில் அனைவரையும் முஸ்லிம்களாக மாற்ற இவர்கள் முயற்சிக்கவோ அல்லது ஆசைப்படவோ இல்லையா?
- ஒவ்வொரு ஹிந்துவுக்கும் இருக்கிற தேசபக்தியைதான் முஸ்லிம்களிடமிருந்தும் ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க்கிறது, விரும்புகிறது.
- ஹிந்து தர்மத்தை மதிக்கிற, பிற மதங்களை வெறுக்காத சமயத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்க்கிறது.
சிறுபான்மையினர் என்றால் யாரிடமும் எந்த கேள்வியையும் கேட்கலாம் என்ற நினைப்பு அதிகார தோரனை இவர்களிடம் இல்லை என்று இவர்கள் கருதுகிறார்களா? பார்சிகளோ, கிறிஸ்தவர்களோ, யூதர்களோ கூட இப்படிப்பட்ட கேள்விகளை கேட்காத போது இவர்கள் கேட்க காரணம் என்ன என்பதை ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினருடன் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரேஷ்ஜி முஸ்லீம் ராஷ்டீரிய மன்ச் என்ற இந்த அமைப்பை நடத்திவருகிறார். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதன் மூலம் ஹிந்துக்கள் மனதில் கசப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்ற நினைப்பு இவர்களுக்கு இருக்குமானால் அதற்கு ஆர்.எஸ்.எஸ். ஒருநாளும் பலியாகாது.

