திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் (கேஏ 51 – 9852) வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. இதில் டிரைவர், கிளீனருடன் 16 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், இரவு 11 மணிக்கு பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்தது. இந்த பஸ்சுக்குள் இருந்த பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து நடந்த இடத்தை பணகுடி போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் பார்வையிட்டு மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
18 பந்தில் அரைசதம்: உலகக் கோப்பையில் மெக்கலம் சாதனை
வெலிங்டன்: உலகக் கோப்பை போட்டியில் அதிவேக அரை சதம் அடித்து, நியூஸிலாந்து கேப்டன் பிரண்ட் மெக்கலம் சாதனை படைத்துள்ளார். அவர் 18 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். உலகக் கோப்பை போட்டியில், இன்று நடைபெற்ற இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், குறைவான ரன்களை எடுத்து இங்கிலாந்து பரிதாப தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்கோர்: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து : 123 / 10 (33.2 ஓவர்) நியூசிலாந்து: 125 / 2 (12.2 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி. (மெக்கலம் 25 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் அதிகபட்சம்) உலகக் கோப்பை போட்டி: ஸ்கோர் கார்ட் / நியூசிலாந்து- இங்கிலாந்து மோதல்
இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்
சென்னை: இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…. தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் இனி மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், இப்போதுள்ள மாணவர்கள் படிப்பை முடித்த பின் இந்த மருத்துவக் கல்லூரிகள் மூடப்படும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இம்முடிவை எதிர்த்து இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் போராடி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையும், காப்பீடும் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இ.எஸ்.ஐ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் 21 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. ஒருசில ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளை மூட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் முடிவு செய்திருக்கிறது. இதனால், அதில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பில் 200 மாணவ, மாணவியரும், மருத்துவ மேற்படிப்பில் 38 பேரும் படித்து வருகின்றனர். இவர்கள் படிப்பை முடிக்கும் வரை மருத்துவக் கல்லூரி தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இவர்கள் பட்டம் பெறும் வாய்ப்பு பாதிக்கப்படாது. ஆனால், இம்மருத்துவக்கல்லூரி மூடப்பட்டால் இவர்களின் பட்டத்திற்கு உள்ள மரியாதை குறைந்து விடும். மேலும், இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதற்கெல்லாம் மேலாக இந்த மருத்துவக் கல்லூரி தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தால் நடத்தப்படும் போதிலும், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்டு இதில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் 65% தமிழக அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. கோவை மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டால் மேலும் 65 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இத்தகைய சூழலில் இந்த கல்லூரிகள் மூடப்பட்டால் 130 மாணவர் சேர்க்கை இடங்களை தமிழ்நாடு இழக்க நேரிடும். மருத்துவக் கல்லூரிகளைத் தொடர்ந்து நடத்த நிதி இல்லை என்று தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் கைவிரித்து விட்ட நிலையில், இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்துவதே சரியானதாக இருக்கும். இதுபற்றி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டே கடிதம் எழுதி ஜனவரி 31&ஆம் தேதிக்குள் முடிவை தெரிவிக்கும்படி கோரியிருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் குறைந்தது 6 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பாடப்பிரிவை படிப்பவர்கள் ஆவர். ஆனால், தமிழகத்தில் அரசு கல்லூரிகள் உள்ள இடங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்கு தனியார் கல்லூரிகள் ஒப்படைக்கும் இடங்களின் எண்ணிக்கை 2,900 மட்டுமே. அதாவது ஒரு மருத்துவ இடத்திற்கு 206 மாணவர்கள் போட்டியிட வேண்டியிருக்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதியுடைய மாணவர்களில் 0.48 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இத்தகைய சூழலில் 130 மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இவைகூட பா.ம.க. போன்ற கட்சிகளின் வலியுறுத்தலால் முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டவை. அவ்வாறு இருக்கும்போது தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தானாக முன்வந்து ஒப்படைக்கும் இரு மருத்துவக் கல்லூரிகளை அரசு ஏற்க மறுப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாக அமையும். எனவே, இல்லாத காரணங்களைக் கூறி தட்டிக்கழிப்பதை விடுத்து இந்த இரு மருத்துவக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
- என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது
சென்னை: சென்னையில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கூலிப்படையினர் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும், அவர்களுக்குள் கொலைகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நடைபெற்ற மோதலில் அண்மையில் 4 பேர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இந்நிலையில், கொலை செய்து விட்டு தலைமறைவான கூலிப்படையினரைப் பிடித்து சிறையில் அடைக்க காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். அதன் படி, காவல் துறையினர் சென்னையில் அதிரடியாக வேட்டை நடத்திவந்தனர். அப்போது ரவுடிகள் சிலர் கள்ளத் துப்பாக்கிகளுடன் சுற்றுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்திய போலீஸார், சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் சரவணன் என்ற தொத்துவாய் சரவணன் (46), விக்டர் (29) இருவரையும் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது 2 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்த இவர்களுக்கு கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ளதாக போலீஸார் கூறினர்.
ஒருதலைக் காதல்: மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்த இளைஞர் ஒருவர், மாணவி தன் காதலை ஏற்க மறுத்ததால், கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகேயுள்ள பெருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகள் விக்டோரியா(18) மன்னார்குடி அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த தனசேகரனின் மகன் தினேஷ் (25) விக்டோரியாவை ஒருதலையாகக் காதலித்து வந்தாராம். வெளிநாட்டில் வேலை செய்துவரும் தினேஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் தினேஷிடம் சிலர் விக்டோரியா வேறு ஒருவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளனர். அதனால் மனம் உடைந்த தினேஷ், விக்டோரியா மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய விக்டோரியாவை, வீட்டுக்கு சுமார் 100 அடி தொலைவில் பின்னால் வந்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் விக்டோரியாவின் உடலைக் கைப்பற்றி, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவான தினேஷை தேடி வருகின்றனர்.
பேஸ்புக்கில் லைக் வாங்கும் ஆசை: ஆமை மீது நின்று படம் எடுத்தவருக்கு கிடைத்தது சிறை
ஐதராபாத்: ஃபேஸ்புக்கில் லைக்குகளை வாங்கும் ஆசையால் ஆமை முதுகில் ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டவருக்கு சிறைத் தண்டனையே பரிசாகக் கிடைத்தது. ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவுக்கு கடந்த மே மாதம் முகமது அப்துல் என்ற பசல் ஷேக் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். அங்குள்ள ராட்சத ஆமையைப் பார்த்தவர், அதன்மீது ஏறி நின்று படம் எடுத்து ‘ஃபேஸ்புக்’கில் வெளியிட்டால் நிறைய ‘லைக்ஸ்’ கிடைக்கும் என ஆசைப்பட்டார். உடனே பாதுகாப்பு வேலியைத் தாண்டினார். ஆமை முதுகில் ஏறி நின்றார். அப்படியே படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அதனை அவர் ஆசைப்பட்ட படியே ‘ஃபேஸ்புக்’கில் வெளியிட்டார். இந்தப் படம் உள்ளூர் தினசரியிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபேஸ்புக்கை கண்டுகொள்ளாமல் விட்டிருந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், நாளிதழில் வெளியான படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து பத்திரிகைச் செய்தியையும், ‘பேஸ்புக்’கில் அவரது பக்கத்தில் புகைப்படத்தையும் பார்த்து உறுதி செய்த போலீசார், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்தனர்.
மார்ச் 13ல் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி
புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் மார்ச்- 13 ஆம் தேதி இலங்கைக்குச் செல்கிறார். இந்தத் தகவலை இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வியாழன் அன்று அறிவித்தார். இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச்15 ஆம் தேதி மோடி இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான இலங்கை செல்லும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். காரணம், 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றபோது, அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பயணத்தின் முடிவில் அரசு ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியின் பின்புறக் கட்டையால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் இந்தியப் பிரதமர்கள் எவரும் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் செல்லவில்லை. ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியப் பிரதமர்கள் சிலர் இலங்கைக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட பயணமாகத்தான் சென்றிருக்கிறார்களே தவிர, அரசு முறைப் பயணமாக அவை அமையவில்லை. குறிப்பாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன. கடந்த 2008-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்துகொண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவிடம் அளித்தார். இருப்பினும், பின்னர் வந்த 2013 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில அரசியல் பிரச்னைகளால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறீசேன, பதவியேற்ற பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது, இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், வரும் மார்ச் 13ம் தேதி மோடி இலங்கை செல்வதாக அவரது பயணத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ‘அல்வா’ கிண்டலுடன் பட்ஜெட் தயாரிப்புப் பணி துவக்கம்!
புது தில்லி: மத்திய பொது பட்ஜெட் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பட்ஜெட் பிரதிகளை எடுக்கும் முன்பாக, வழக்கம் போல் பாரம்பரியமாக நடைபெற்று அரும் ஹல்வா தயாரிக்கும் சடங்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். 2015-16-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஆவணங்களைத் தயாரிக்கும் பணி, அல்வா செய்து வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பட்ஜெட் ஆவண தயாரிக்கும் பணி தொடங்கும் முன்பு அதனைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அல்வா செய்து வழங்கப்படும். இது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய நிகழ்வு. தில்லியில் நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றார். பொதுவாக, இந்த பட்ஜெட் தயாரிப்பின்போது அதில் பங்கேற்கும் அலுவலர்களும் பணியாளர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போனில் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள இயலாது. மின்னஞ்சல்களையோ வேறு தொடர்பு சாதனங்களையோ பயன்படுத்தவும் முடியாது. மத்திய நிதி நிலை அறிக்கையில் உள்ள விவரங்கள் எதுவும் கசிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதற்காகவே அவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள். நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மட்டும் தங்கள் வீட்டுக்குச் சென்று வர அனுமதி உண்டு. தற்போது, பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் முழுமையான பொது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழக ரயில் திட்டங்கள் செயல்படுத்த அமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
புது தில்லி: தமிழக ரயில் திட்டங்களை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரயில்வேத் துறை இணை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தியில்… கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி சுரேஷ் பிரபுவையும், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவையும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான ரயில் திட்டங்கள் குறித்து வலியுறுத்தியதின் தொடர்ச்சியாக நேற்று (19.02.2015) மீண்டும் சுரேஷ் பிரபு மற்றும் மனோஜ் சின்ஹாவை சந்தித்து தமிழகத்திற்கான புதிய ரயில் திட்டங்களை இவ்வாண்டிலேயே செயல்படுத்த வலியுறுத்தினார்.
- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்
சென்னை: இலங்கையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் இதனை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்று பல வாரங்கள் கடந்த பிறகும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. ராணுவத்தை திரும்பப் பெறுவோம் என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளைப் பெற்று மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றார். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த இலங்கை போர்க் குற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த கூட்டத்துக்கு தள்ளிப்போட இலங்கை செய்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த அறிக்கை செப்டம்பர் மாதக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இலங்கைப் பிரச்னையில் முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளையைப் போல தற்போதைய ஆணையர் செயல்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் செல்வாக்கைக் குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொள்ளத் திட்டமிடுகின்றன. ஆனால், தமிழர் நலன்களைப் புறக்கணிக்கும் சிறீசேனாவை இந்தியா ஆதரிப்பது புதிராக உள்ளது. அது இந்துமாக் கடல் பகுதியில் அமெரிக்க ஆதிக்கம் பெருகவே வழிவகுக்கும். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தொடங்கும் முன்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களது நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இலங்கையிடம் இதனை இந்திய அரது வலியுறுத்த வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்களுக்காக தமிழர் நலன்களை பலியிட்டு விடக்கூடாது என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

