Home Blog Page 6294

திருமலை சந்நிதி கதவின் பூட்டு உடைப்பு: மோசமான அறிகுறி என வெடிக்கும் சர்ச்சை

tirupathi-temple-golden-door திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில் உள்ள தங்கக் கதவை கோவில் ஊழியர்கள் சாவி போட்டு வழக்கம்போல் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. இதனால் மூலவரின் அறையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வேறு வழியின்றி, பூட்டை உடைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மூலவரின் தங்கக் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு,, கதவு திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழுமலையான் சந்நிதியில் நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறீசேனா கலந்து கொண்டார். காலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து பின்னர் தேவஸ்தான துணை செயல் அலுவலர் ரமணா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஏழுமலையான் கோவிலில் நேற்று வழக்கம்போல் ஏகாந்தசேவை முடிந்து அதிகாலை கதவு அடைக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 2.15 மணி அளவில் அர்ச்சகர்கள் சுப்ரபாத சேவைக்காக கதவைத் திறக்க முயன்றனர். அப்போது அதன் சாவி உடைந்தது. இருப்பினும் ஊழியர்கள விரைந்து வந்து பூட்டை அறுத்து திறந்தனர். அதன்பிறகு வழக்கம்போல சுப்ரபாத சேவை நடந்தது. சந்நிதி சாவி உடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே, பக்தர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை’ என்றார். ஆனால், இது குறித்து பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். தங்கக் கதவின் பூட்டு இதுவரை இவ்வாறு தகராறு செய்ததில்லை. பூட்டும் இதுவரை உடைக்கப் பட்டதும் இல்லை. எனவே, கதவின் பூட்டுச் சாவி உடைபட்டு மாட்டிக் கொண்டதும், பூட்டு உடைக்கப்பட்டதும் மிக மோசமான அறிகுறி என்றும், அதனால் சந்நிதியில் பரிகாரங்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தற்போது பக்தர்கள் மத்தியிலும் தேவஸ்தான ஊழியர்கள் மத்தியிலும் சர்ச்சை வெடித்துள்ளது.

போர்க்குற்ற வழக்கு: வங்கதேச ஜமாத் இஸ்லாமி கட்சி தலைவருக்கு மரண தண்டனை

டாக்கா: abdus-subhanவங்க தேசத்தில் ஜமாத் இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் அப்துஸ் சுபான் (79). இவர், மார்ச் 25 – 1971ல் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி கிராமத்தினர், சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது போர்க்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, டாக்காவில் உள்ள 2-வது சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயம் 2-ல் ஒபைதுல் ஹஸன் முன்பு வழக்கு நடைபெற்றது. விசாரணை முடிவில், அப்துஸ் சுபான் மீது சுமத்தப்பட்ட 9 குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்த தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இவர், போர்க்குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட 17-வது நபர் ஆவார். இந்நிலையில், சுபான் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்று அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இதனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரக்ள் கூறினர். சுபானுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டு தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், மர்ம நபர்கள் தீர்ப்பாயத்தின் வெளியே 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது வங்கதேச அரசு.

கூகுள் கேப்பிடல் இந்தியாவில் கிளையைத் திறக்கிறது!

google-capital முதல் முறையாக கூகுள் கேப்பிடல் இந்தியாவின் தனது கிளையைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதன் தொழில்நுட்பக் குழுவை மேற்கோள் காட்டி, கூகுள் செய்தித் தொடர்பாளர் இதனை அறிவித்துள்ளார். இந்தியாவை மையமாக வைத்து கூகுள் கேப்பிடல் ஒரு பிரதிநிதியை நியமிக்கவுள்ளது. ஆனால் அவர் எந்த இடத்தில் இருந்து நியமிக்கப் படுவார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. கூகுள் கேபிடலின் பங்குதாரர் டேவிட் லாவ் இது குறித்துத் தெரிவித்த போது, தெற்காசிய நாடுகளில் ஸ்மார்போன்கள் விற்பனை மற்றும் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதனை மையப் படுத்தி அமைப்பது மிகவும் சரியானதாக இருக்கும். கூகுள் கேபிடல் ஏற்கெனவே ரியல் எஸ்டேட் போர்டலான காமன்ஃப்ளோர், இந்திய அமெரிக்க நிறுவனமான ஃப்ரெஷ்டெஸ்க் உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் கூகுள் கேபிடலின் இந்திய கிளை மூலம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

லஞ்சம் பெறுவோர் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்: அறிவித்தார் கேஜ்ரிவால்

புதுதில்லி: லஞ்சம் பெறுவோர் குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்கான தொலைபேசி எண்ணை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் பெறும் தில்லி அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இரண்டாவது முறையாக தில்லி முதல்வர் ஆகியிருக்கும் கேஜ்ரிவால், மீண்டும் ஒரு ஜனதா தர்பாரை நடத்தினார். உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நேற்று இந்த மக்கள் குறை கேட்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சி நடந்தது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரைச் சந்தித்தனர். அப்போது அவர் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். கேஜ்ரிவாலை சந்தித்த பொது மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் வினியோக அதிகாரிகள் மற்றும் தில்லி போலீசார் மீது அதிக அளவில் லஞ்சப் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, லஞ்சம் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய கேஜ்ரிவால், இதற்கு வசதியாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழல் செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி 011–27357169 என்ற எண்ணில் இது குறித்து புகார் செய்யலாம். தகவல் கொடுப்பவரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இஸ்ரேல்: மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயப் புதையல்!

israel_gold_001 இஸ்ரேலை ஒட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயப் புதையலை கடல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்தக் கப்பலில் சுமார் 2,000 தங்க நாணயங்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இஸ்ரேல் நாட்டின் செசரியா என்ற இடத்தில் மிகப் பழைமையான துறைமுகப் பகுதியில் இது கண்டெடுக்கப்பட்டது. இஸ்ரேலில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப் பெரிய அளவிலான தங்க நாணயப் புதையல் இது என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் புதையல்களைத் தேடும் கடல் ஆய்வாளர்கள் குழு ஒன்று மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இந்தத் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் ஒன்பது கிலோ கிராம் எடை கொண்டவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். விலைமதிப்பற்றவை இவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தங்க நாணயங்கள் பாதிமித் கலீபத் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. ஷியா பிரிவு இஸ்லாமியப் பேரரசான பாதிமித் கலீபத் கி.பி. 909 முதல் 1171 வரை மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தது.israel_gold_002 எகிப்தில் இருந்த மத்திய அரசுக்கு நாட்டின் பிற பகுதியில் இருந்து வரிப் பணத்தை ஏற்றிச் சென்றபோது, இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும், அதை அடுத்தே இந்த நாணயங்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் இஸ்ரேலைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் ஹெர்வித் கூறியுள்ளார். அப்படி இல்லை எனில், செசரியா நகர் பாதுகாப்புப் பணியிலிருந்த பாதிமித் படையினருக்கு வழங்க சம்பளமாகக் கொண்டு வந்த நாணயங்களாகவும் இவை இருக்கலாம், அல்லது வர்த்தக கப்பலின் நாணயங்களாகவும் இருக்கலாம் என்றும் ஹெர்வித் இது குறித்துக் கூறியுள்ளார். இருப்பினும், இந்தப் புதையல் அரசின் சொத்தாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தத் தங்கக் காசுப் புதையலைக் கண்டுபிடித்தவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.   [su_youtube url=”https://www.youtube.com/watch?v=Zo-U2IC5PVY”]

பாகிஸ்தான்: போலியோ முகாம் ஊழியர்கள் 4 பேர் கடத்திக் கொலை

polio-afganஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோவினைக் கட்டுப் படுத்துவதற்காக, சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சொட்டு மருந்துகளை வழங்க தலிபான் பயங்கரவாதிகள் தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகள் வழங்குகின்ற போலியோ சொட்டு மருந்தில் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப் பட்டிருப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணத்தால், அங்கே போலியோ சொட்டு மருந்து வழங்க அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களையும் கடத்திச் சென்று கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பலுசிஸ்தானில் உள்ள சோகப் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை போலியோ மருந்து வழங்குவதற்காக ஊழியர்கள் சென்றனர். அவர்கள் 4 பேரை தீவிரவாதிகள் திடீரென கடத்திச் சென்றனர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த ஊழியர்கள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தது தெரியவந்துள்ளது.

பட்டா மாறுதலுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது: வருவாய்த் துறைக்கு உத்தரவு

madurai-branch-high-court மதுரை: பட்டா மாறுதல் பெறுவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. மதுரையைச் சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயலர் ஓ. பரமசிவம் இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. ஓ.பரமசிவம் தாக்கல் செய்த மனுவில்… தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்து உரிமை மாற்றம் தொடர்பாகப் பதிவு செய்யும்போது, நிலத்தை அளவீடு செய்யவும், நிலத்தை வாங்குபவர் பெயரில் பட்டா மாறுதல் செய்யவும் உரிய கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இரு பணிகள் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகும்போது அவற்றுக்குத் தனியாக கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஒரே பணிக்கு 2 முறை கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு, பத்திரப் பதிவுத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டா மாறுதல் பெற வருவாய்த் துறையில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், அசையா சொத்துப் பதிவின்போது நில அளவீடு, பட்டா மாறுதலுக்கு உரிய கட்டணத்தை சார்-பதிவாளர்கள் வசூலித்து விடுவதால், வட்டாட்சியர் அலுவலகங்களில் மீண்டும் அதற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

வாகன காப்பீட்டை ஆயுள்கால காப்பீடாக ஏன் மாற்றக் கூடாது? : உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: வாகனங்களுக்கு ஆயுள் கால சாலை வரி செலுத்துவது போன்று வாகனங்களுக்கான காப்பீட்டை ஆயுள் கால காப்பீடாக ஏன் மாற்றம் செய்யக் கூடாது என மத்திய அரசு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மார்ச் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெகன் என்கிற ஜெகதீசன் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொன்னேரியில் இருந்து தச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில், ஜெகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில், அவர் 65 சதவீதம் மாற்றுத் திறனாளியானார். அதனால், இழப்பீடு கோரி பொன்னேரி வாகன விபத்து காப்பீட்டு தீர்ப்பாயத்தில் ஜெகன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம் ஜெகனுக்கு ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 500 வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மனுவில், விபத்து ஏற்படுத்திய லாரி காப்பீட்டு வளையத்துக்குள் வரவில்லை. அந்த லாரியின் காப்பீடு 2011 நவம்பர் 17-ஆம் தேதியுடன் காலாவதியடைந்து விட்டது. இந்தச் சம்பவம் 2012 ஜனவரியில் நடைபெற்றது. எனவே, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன் பின்னர் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்…. அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், வாகன விபத்துக்கள் அமெரிக்காவை விட அதிகளவு நடைபெறுகின்றன. இந்தியாவில், 2002 முதல் 2013 வரை ஆண்டுக்கு நான்கு லட்சங்களுக்கு மேல் விபத்துகள் நடைபெற்றுள்ளன. ஆண்டுதோறும் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு, படுகாயமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கும் வாகனங்கள் தங்களது வாகன காப்பீட்டை புதுப்பிக்கவில்லை என பெருமளவு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின்படி முறையாக காப்பீடு செய்யாத வாகனங்கள் பொது இடத்தில் இயக்க உரிமை இல்லை. காப்பீடுகளை ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இவ்வாறுதான் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் காப்பீட்டை புதுப்பிக்க தவறுகின்றனர். மேலும், ஒரு வாகனத்தின் காப்பீடு நடப்பில் உள்ளதா அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதை அறிய போலீஸாரிடமோ, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமோ அதற்கேற்ப வசதிகள் இல்லை. புதிய வாகனங்கள் வாங்கும்போது, அதன் உரிமையாளரிடம் ஆயுள் கால சாலை வரி வசூலிப்பது போன்று, வாகனத்துக்கு ஆயுள் கால காப்பீடு வசூலித்தால் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆயுள் கால வாகன காப்பீடு வசூலிப்பது குறித்து காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை அறிய வேண்டும். அதனால், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறது. மேலும், வாகனங்களில் காலாவதியான காப்பீடு, புதுப்பிக்கத் தவறிய வாகனங்கள், விரைவில் காலாவதியாகக் கூடிய வாகனங்கள் ஆகியவற்றின் விவரங்களை சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரி, காவல் துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்ப காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், மத்திய சட்டம், கம்பெனி விவகாரத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய துறைச் செயலர்கள், தமிழக போக்குவரத்துத் துறை செயலர், டி.ஜி.பி. ஆகியோரும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, காப்பீடு புதுப்பிக்கப்படாத வாகனங்களின் எண்ணிக்கை, காப்பீடு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய போலீஸ், போக்குவரத்துத் துறையினரிடம் ஏதாவது வழிகள் உள்ளதா என்பது உள்பட அனைத்து கேள்விகளுக்கும் மார்ச் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பொன்னேரி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறேன் – இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

தேமுதிக.,வினர் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய ஸ்டாலின் கோரிக்கை

Karunanidhi attends a meeting besides his son Stalin at party headquarters in Chennai சென்னை: நடப்பு கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க தேமுதிக., உறுப்பினர்களுக்கு தடை விதித்து பேரவைத் தலைவர் இட்ட உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, தமிழக சட்ட மன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் பங்கேற்க இயலாதபடி, கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்கட்சியின் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்டத் தொடரில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, தே.மு.தி.க., உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு ஆவணங்களைத் தூக்கி வீசியதாகவும, அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் தே.மு.தி.க., உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.

இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

E_V_K_S__Elangovan தூத்துக்குடி: இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உற்சாகமாகக் கூறியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கிப் பேசினார். இந்தக் கூட்டத்தின் பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே இயக்கம் காங்கிரஸ்தான். காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 15 முதல் 16 லட்சம் உறுப்பினர் படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே மிகப் பெரிய ஆதரவு வந்து கொண்டு இருப்பதைப் பார்த்தால், எங்களாலேயே நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பொறுத்தவரை பணம் விளையாடும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் விளையாடும் என்பதை நம்ப முடியவில்லை. உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறியது. ஆனால் அதை ஏற்காமல் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது. இந்தப் போலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டதால் வாக்கு வித்தியாசம் அதிகமாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழ்நாட்டில் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் தனித்தாவது போராடும் என்று கூறினார். இந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சென்னாரெட்டி ஆகியோர் மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.