சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்னை குறித்துப் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் அவைத்தலைவர் அதற்கு அனுமதி மறுத்தார். ஆளுநர் உரை மீது நீங்கள் பேசும்போது, உங்கள் பிரச்னைகள் குறித்துச் சொல்லலாம் என்றார். இதை ஏற்க மறுத்த டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதன் பின்னர் அவை வளாகத்தில் வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 2 பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பேச முற்பட்டேன். நேற்றும் இன்றும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொடுத்து இருந்தேன். இது பற்றிப் பேச வாய்ப்பு கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு
கூட்டத்தொடரில் சஸ்பெண்ட்: தேமுதிக.,வினர் தர்ணா போராட்டம்
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் பங்கேற்க இயலாதபடி, கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்கட்சியின் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்டத் தொடரில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, தே.மு.தி.க., உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு ஆவணங்களைத் தூக்கி வீசியதாகவும, அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் தே.மு.தி.க., உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது. தொடர்புடைய செய்தி: [su_permalink id=”2589″][/su_permalink]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
சென்னை: தங்கம் விலை இன்று சவனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. புதன்கிழமை நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. தங்கம்-வௌ்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,543 என்ற அளவிலும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.20,344 என்ற அளவிலும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.27,200-க்கு விற்பனையானது. வௌ்ளியின் விலையும் சற்று உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.39.90 என்ற அளவிலும், பார் வௌ்ளி கிலோவுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.37,325 என்ற அளவிலும் விற்பனையானது.
ரூ.1 கோடி பரிசு என எஸ்.எம்.எஸ் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி!
கரூர்: கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்பேசியில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வெங்கமேடு சின்னகுளத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (48). இவரது செல்பேசிக்கு கடந்த அக்.14-ஆம் தேதி ஒரு எஸ்,எம்.எஸ் வந்தது. அதனை தில்லியைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் அனுப்பியிருந்தார். அந்த எஸ்.எம்.எஸ்ஸில் கண்ணையனுடைய செல்பேசி எண் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாவும், இதில் அவருக்கு ரூ. 1 கோடி வரை பரிசு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறுவதற்கு முதலில் ரூ.9.26 லட்சம் செலுத்திய பிறகு கூடுதலாக ரூ.5.34 லட்சம் வங்கியில் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி அதற்கான வங்கிக் கணக்கு எண்ணும் அனுப்பப்பட்டிருந்தது. இதை நம்பிய கண்ணையன் கடந்தாண்டு ஆக.17-ஆம் தேதி ரூ.9.26 லட்சத்தை வங்கியில் செலுத்தினார். எனினும், சில மாதங்கள் கழிந்த பிறகும் பரிசுப் பணம் அவருக்கு வரவில்லை. இதையடுத்து, கண்ணையன் பிராங்களினிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு, பணம் வராதது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பிராங்க்ளின், மீதமுள்ள ரூ. 5.34 லட்சத்தை அனுப்பினால்தான் முழுப் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணையன், இது குறித்து கரூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே இதுபோல், பலரிடம் பணம் பெற்று ஒரு கும்பல் ஏமாற்றி வருவது குறித்து போலீஸார் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும், பணம் குறித்த பேராசையில், போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, இதுபோல் பணம் செலுத்து ஏமாந்தவர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே வருகிறது.
உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று (8வது) ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுஏஇ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு அணிகளும் மோதிய போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய யுஏஇ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அன்வர் அதிக பட்சமாக 67 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக குர்ரம் 45 ரன்கள் எடுத்தார். கிருஷ்ண சந்திரன் 34 ரன்களும், ஸ்வனில் படேல் 32 ரன்களும் எடுத்தனர். வெற்றிக்கு 286 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிக்கந்தர் ரசாவும், சகப்வாவும் களமிறங்கினர். ரசா அதிரடியாக விளையாடினார். சகப்வா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 57 பந்துகளில் 50 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே. இந்நிலையில் 13வது ஓவரின் கடைசி பந்தில் ரசா 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மசகட்சா வந்த வேகத்தில் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டெய்லர் அதிரடியாக விளையாடினார். 3வது விக்கெட்டுக்கு டெய்லர் – சகப்வா ஜோடி 47 ரன்கள் சேர்த்தது. சகப்வா 35 ரன்னில் ஆட்டமிழக்க, வில்லியம்ஸ் களமிறங்கினார். அவரின் அதிரடியில் ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 28வது ஓவரில் 47 ரன்னில் டெய்லர் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய மையர் 22 பந்துகளைச் சந்தித்து 9 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் எர்வைன் களமிறங்கினர். இருவரின் அதிரடி ஆட்டத்தில் 38வது ஓவரின் போது 200 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே. 42 பந்தில் 50 ரன்களை குவித்தார் வில்லியம்சன். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்களை குவித்த நிலையில், எர்வைன் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் சிகும்புரா(14 ரன்கள்-அவுட் இல்லை) உடன் இணைந்து, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் 48 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்த நிலையில், 286 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றம்: தொடர் முழுதும் சஸ்பெண்ட்
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இருந்து தே.மு.தி.க., உறுப்பினர்கள் அனைவரும் அவைத்தலைவர் உத்தரவின் பேரில் இன்று வெளியேற்றப்பட்டனர். சட்டப் பேரவையில் இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜ் சிட்டிசன் என்ற வார்த்தையை ‘குடிமகன்’ என்று மொழிபெயர்த்துக் கூறியது தொடர்பாக தே.மு.தி.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவி்த்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவையில் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைத் தலைவர் உத்தரவிட்டார். அதை அடுத்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார். பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு ஆவணங்களைத் தூக்கி வீசியதாகவும, அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் தே.மு.தி.க., உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.
இந்தியர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரியது அமெரிக்கா
அமெரிக்காவில் இந்தியர் சுரேஷ் பாய் படேல் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் பாய் படேல்(57)-இன் மகன், மருமகள், குழந்தை ஆகியோர் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகரில் வசித்து வருகிறார்கள். மகனுக்கும், மருமகளுக்கும் உதவுவதற்காகவும் குழந்தையை கவனிப்பதற்காகவும் சுரேஷ்பாய் படேல் அமெரிக்கா சென்றார். கடந்த 6 ஆம் தேதி சுரேஷ்பாய் படேல் தனது மகன் வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்து சென்றபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் நடமாடுவதாக காவல்துறைக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆங்கிலம் தெரியாத காரணத்தால், அவர் பதில் அளிக்க திணறினார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் சுரேஷ்பாய் படேல் படுகாயம் அடைந்தார். அவரின் கால் எலும்பும் முறிந்தது. இது குறித்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானதுடன், இணையதளத்திலும் வெளியானது. இந்தச் செய்தி இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரியது. இதனிடையே சுரேஷ்பாய் படேல் உடல் நலம் தேறி, மறுவாழ்வு பெற வசதியாக பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது மருத்துவ சிகிச்சைக்காக ஆன்லைன் வழியாக 1 லட்சத்து 87 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரம்) நிதி திரண்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டதால், இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அட்லாண்டாவில் உள்ள இந்திய துணைத்தூதர் அஜித் குமாருக்கு அலபாமா மாகாண கவர்னர் ராபர்ட் பென்ட்லி மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த துயரச் சம்பவத்தில் உங்கள் அரசும், சுரேஷ் பாய் படேலும், அமெரிக்காவில் வசிக்கிற, வேலை பார்க்கிற இந்திய குடிமக்களும் எனது ஆத்மப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேஷ் பாய் படேல் மீது மேடிசன் காவல்துறையினர் அதிக அளவில் பலப்பிரயோகம் செய்து, அதனால் அவர் காயம் அடைந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். படேல் உடல் நிலை தேறி, அவர் கால்கள் முன்பு போல செயல்படுகிற நிலைவரும் என மனதார நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, கடந்த 13ம் தேதி, இந்தியர் சுரேஷ் பாய் படேல் அமெரிக்க காவலரால் தாக்கப்பட்ட விவகாரத்தில், அவரைத் தாக்கிய அமெரிக்க காவலர் பார்க்கர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய எப்.பி.ஐ., அவர் மீதான குற்றத்தை உறுதி செய்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க காவல் துறை அறிவித்த சில மணி நேரங்களில், கடைசியாக வெளியான தகவல் படி, அவர் 1000 டாலர் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்ற இந்திய கடலோர காவற் படை அதிகாரி கருத்தால் சர்ச்சை
புது தில்லி: குஜராத்தை ஒட்டிய, இந்திய கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்று கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 2014ம் வருடம் டிசம்பர் 31-ந்தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கி.மீ., தொலைவில் இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் வந்த கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இந்தச் சம்பவத்தில் அந்தப் படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். இந்தப் படகில் ஊடுருவியவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால், கடலோர காவல்படையினர் படகை துரத்திச் சென்று சுற்றி வளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறினர். அவர்கள் யாரும் சரண் அடையவில்லை என்றும், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் பிடிபடாமல் இருக்க படகில் இருந்தவர்கள் தாங்களாகவே படகை குண்டு வைத்து தகர்த்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் படகில் இருந்த அனைவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் தகவல் வெளியானது. இதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் உறுதி செய்தார். இந்நிலையில், வடமேற்கு கடலோர காவல் படையின் தலைமை அதிகாரியாக இருந்த பி.கே. லோசாலி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மர்ம படகில் இருந்தவர்கள் படகை தாங்களாக தகர்த்துக் கொள்ளவில்லை.. உங்களிடம் ஒன்றைச் சொல்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும். இந்த சம்பவத்தின்போது நான் காந்திநகரில் இருந்தேன். அன்று இரவு பாகிஸ்தான் படகை தகர்க்கும்படி நான் கூறினேன். அவர்களுக்கு நாங்கள் பிரியாணி வழங்க விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று கடலோர காவல்படை எப்படி உறுதி செய்தது? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, பாகிஸ்தான் படகைத் தகர்த்ததை பெரிய பாவமாக பாரிக்கர் கருதுகிறாரா? அல்லது இந்த தேசத்திடம் பொய் கூறியதை பெரிய பாவமாகக் கருதுகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே, லோசாலியின் பேட்டி விவரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையின் துணை பொது இயக்குனர் கே.ஆர். நவ்தியால் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாம் தெரிவித்த கருத்து குறித்தும், பத்திரிகையில் வெளியான தகவலை மறுத்தும் லோசாலி தனக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, தான் பேசியது, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்று பி.கே.லோசாலி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது, “அன்று என்ன நடந்தது என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. எந்த தேசவிரோத சக்தியும் நமது கடல் எல்லைக்குள் நுழைந்துவிடக்கூடாது என்றும் நாம் அவர்களுக்கு பிரியாணி வழங்கப் போவதில்லை எனவும்தான் அந்தப் பேட்டியில் கூறினேன். படகின் மீதான நடவடிக்கை இயல்பாகவே வகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதன் விவரங்கள் (என்னுடன்) பகிர்ந்து கொள்ளப்படவில்லை” என்றார்.
பிஎஸ்என்எல்., இணைப்புகள் முறைகேடு வழக்கு: கைதான மூவருக்கு மார்ச் 4 வரை காவல் நீட்டிப்பு
சென்னை: சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல். அதிநவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கும் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், தொழில்நுட்ப அதிகாரி கே.எஸ்.ரவி, தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் வே.கெளதமன் ஆகியோர் கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களது காவல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த 3 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.கிருஷ்ணமூர்த்தி முன்பு, காவலில் இருந்த மூவரையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நோக்கியா ஆலை மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பதில்
சென்னை: நோக்கியா தொழிற்சாலை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொன்னுபாண்டி பேசும்போது, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் தங்கமணி பேசியபோது, நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் தொடங்கச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்தத் தொழிற்சாலை வேறு எங்கும் சென்றுவிடவில்லை. இந்தியாவில் வேறு எங்கும் தொடங்கும் எண்ணமும் அந்த நிறுவனத்துக்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் முன் தேதியிட்டு வரிகள் விதித்ததன் காரணமாகவே, அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. எனவே, அது தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறோம் என்றார்.

