Home Blog Page 6296

இலங்கை போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க ஐ.நா. காரணமாகிவிடக் கூடாது: ராமதாஸ்

சென்னை: போர்க் குற்றங்களில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க ஐ.நா. காரணமாகி விடக் கூடாது என பாமக நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படாது என ஆணையத்தின் தலைவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை ஒத்துழைக்காத நிலையில், உலகெங்கும் இருந்து ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை வரும் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதைத் தடுக்கும் முயற்சியில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டிருப்பதும், அதற்கு இந்தியாவின் ஆதரவு கோரப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஐ.நா. விசாரணை அறிக்கை மூலம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போர்க் குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் வழங்கிய அறிவுரைகளில் ஒன்றைக்கூட இலங்கை மதிக்கவில்லை. இந்நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை 6 மாதங்களுக்கு ஆணையம் தள்ளி வைத்தது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். இந்த தாமதத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. இலங்கை மீதான போர்க் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டுக்குள் சென்று விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே அறிக்கை தாக்கலை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தில்லி ஆளுநர் பதவிக்கு அடிபோடுகிறாரா சதாசிவம்?

sadhasivan உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் சதாசிவம். அவர் மோடி அரசில் லாபி செய்து, கேரள கவர்னர் ஆனதாக ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் அவரது நியமனத்துக்கு கேரள காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதையும் மீறி அந்த நியமனம் நடந்தது. இத்தகைய சூழ்நிலையில் போன வாரம் தில்லியில் பிஜேபி தலைவர் அமீத் ஷாவின் இல்லத் திருமண விழா நடந்தது. இந்த விழாவில் சதாசிவமும் கலந்து கொண்டார். அப்போது அவர், பாஜக தலைவர்களிடம் தன்னை தில்லி ஆளுநனராகவோ, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராகவோ நியமிக்குமாறு லாபி செய்தாராம். தில்லி ஆங்கில நாளேடு ஒன்று இப்படி எழுதியுள்ளது. அடடே.. அப்படியா?

“வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்த பெரியவா”

1969132_763012707087106_4352134091554339462_n கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

“கண்டிராமாணிக்கம் செட்டியார்” என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். “ஆனந்தம் செட்டியார்” என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு, காஷாயம் கட்டிக்கொண்டு பெரியவரிடம் வந்து விட்டார்.”ஆனந்தம்,ஆனந்தம்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டு பெரியவாளைத் தரிசித்த வண்ணமிருப்பார்.மடம் போகிற இடத்துக்கெல்லாம் தாமும் போய் பெரியவாளுக்குக் கட்டி கட்டியாகச் சாம்பிராணியும்,கர்ப்பூரமும் ஏற்றிக் காட்டிக் கொண்டேயிருப்பார். ஒருநாள் பெரியவாள் அவரிடம் திருவாலங்காட்டுக்குப் போய் இருக்கும்படி ஆக்ஞாபித்தார். ஆனந்தம் செட்டியாரும் அவ்விதமே சென்றார். சிறிது காலத்திலேயே அங்கிருந்து “நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தத்தை”ச் சென்றடைந்து விட்டார். ‘அவரது அந்திம சமயத்தை முன்பே அறிந்த பெரியவாள் அவரைக் குறிப்பாக திருவாலங்காட்டுக்கு அனுப்புவானேன்?” என்றால், “அவர் காரைக்கால் அம்மையார் குலம். காரைக்காலம்மையாருக்குத் திருவாலங்காட்டில்தான் முக்தி” என்கிறார்கள். ஸ்ரீ பெரியவாள், அங்கே அவளது ஜீவ சாந்நித்தியம், தன் குல வழித் தோன்றலிடம் விசேஷமாகச் செயற்பட்டு, அதன் கர்ம பாரத்தைத் தீர்த்து வைத்திருக்குமோ? நாம் வாழ்வதற்குப் பொருத்தமான இடம் பார்க்கிறோம். பெரியவாள் வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்து கொடுக்கிறார்!

“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு

“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்”. தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி) எந்த நாட்டிலும் மதத்திற்குள் அரசாங்கம் நுழையலாம். ஆனால் இங்கே அரசாங்கம் மதத்தில் நுழைய முடியாது. இப்படி ஒரு காரியத்தை வக்கீல்கள் உதவியோடும் ஒரு வைஷ்ணவப் பெரியார் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் என்கிற பிராமணர் உதவியுடனும் மகான் அரசியல் சாசனம் எழுதி முடிக்கும் முன்பே செய்து முடித்தார். ஆஸ்திகப் பெருமக்களோடு பழக்க வழக்கங்களில் அரசாங்கம் தலையிட முடியாதபடி செய்த மகான்தான், நமது காஞ்சி மாமுனிவர். சைனாவில்,ரஷ்யாவில்,அமெரிக்காவில் இதைப் போன்ற ஒரு சட்டம் இல்லை இந்தியாவில் தான் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்திய காண்ஸ்டிடியூஷனில் 26வது ஷரத்தாக மகானின் எண்ணம் இடம் பெற்றது. இந்த தீர்மானத்திற்கு என்ன காரணம்? பிற்காலத்தில் மதவிஷயங்களில் அரசாங்கம் எப்போதுமே தலையிடக்கூடாது என்று மகான் நினைத்தது தான். ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார் மதத்திலும் தலையிடக் கூடாது. 4வது ஷரத்தில் மட்டுமே ” In accordanca With law” என்று இருக்கிறது. முதல் மூன்று ஷரத்துகளுக்கும் “In accordance with law”வை எடுத்து விடச் செய்தவர் காஞ்சி முனிவர். இதனால் இந்து மற்றும் மற்ற மதங்களும்,சர்க்கார் தலையீடு இன்றி காப்பாற்றப்பட்டன. ARTICLE No; 26 Every Religions denomination or any section there Of shall have the right.. (a) To Establish and maintain institution for religions and charitable purposes. (b) To manage its own affairs in Matters of religion. (c) To own and and enquire movable & immovable property and (d) To administrater such property in accordance with law. இதுதான் அந்த 26வது ஷரத்து. “இந்திய கான்ஸ்டிடிஷயூனில் இருக்கிறது. இதை வடிவமைத்துக் கொடுத்தவர் காஞ்சி மகான் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.? “any section there of” என்னும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? எல்லா ஜாதியினரும் இதில் அடங்குகிறார்கள் என்பது தான். இப்படி ஒரு சட்டத்தை பெரியவா வடிவமைத்துக் கொடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் யாருமே அக்கறை கொண்டு இருக்க மாட்டார்கள் என்று இடித்துச் சொல்கிறார், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தனது சரிதையில். “ஒரு கையில் தண்டத்துடனும், இன்னொரு கையில் கமண்டலத்துடனும்,காலில் மரத்தால் ஆன பாதக் குறடுகள் அணிந்து மகான் கம்பீரமாக நடந்து வரும்போது தர்மமே நடந்து வருவது போலிருக்கும்” என்கிறார் அக்னிஹோத்ரம். மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்246400_479182102136836_1433845875_n

மத சண்டைகள் தீர பொது சிவில் சட்டம், ஒரே மாதிரியான குடும்பக் கட்டுப்பாட்டு முறை தேவை: எச்.ராஜா

raja சென்னை: நாட்டில் மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என பா.ஜ.க., தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறினார். சென்னையில் பா.ஜ.க., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… இந்துக்கள் சிறுபான்மையினராகும் அச்சத்தாலேயே தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மத மாற்றத்தை கடுமையாகக் கடைப்பிடிக்கின்றனர். இதனால், இன்னும் 100 ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்றும், அதன் பிறகு காஷ்மீரில் இந்துக்களுக்கு என்ன நடக்கிறதோ? அதுதான் நாடு முழுவதும் நடைபெறும் என்ற அச்ச உணர்வு இந்து இயக்கத் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமும் ஏன் மதமாற்றம் செய்யக்கூடாது என்ற நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. இந்துக்களின் விழாக்களில் யாரையும் மதம் மாறுங்கள் என்றோ, பிற மதத்தை இழிவுபடுத்தியோ கூறுவதில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் தங்களின் பிரார்த்தனைக் கூட்டங்களில் இயேசுவைத் தவிர பிசாசுகளை வணங்காதீர்கள் என்று இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துகின்றனர். பொதுவாக மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்… என்றார் எச்.ராஜா. மேலும், பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, தமிழக அரசு கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசின் இந்தத் தவறான கொள்கையால், கடந்த மே மாதம், மராட்டியம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுபற்றி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, அவரிடமும், தொடர்ந்து கடந்த ஜனவரி 13-ந் தேதி, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதினேன். அதில் பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காட்சிப் பொருள் பட்டியலில் இருந்து எருதின் பெயரை நீக்கி சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… என்றார். அன்புமணியை பாமக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சி அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, டாக்டர் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் பா.ம.க.வின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. அதற்கு பா.ஜ.க., மேலிடம் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார். முன்னதாக, பாமக., தனது தலைமையை பாஜக., ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தது.

சச்சினுடன் சாப்பிடலாம்: கட்டணம்தான் ரூ.1.5 லட்சம்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் அமர்ந்து உணவு sachinஉண்ண ஒரு வி.ஐ.பி. டின்னர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவகம் ஒன்று. வரும் பிப்.26 ஆம் தேதி நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் அவருடன் சுமார் 60 பேர் மட்டுமே அமர்ந்து விருந்து உண்ணலாம் என அந்த உணவகம் அறிவித்துள்ளது. இந்த விருந்துக்கு இன்னும் சில இடங்களே காலியாக உள்ளதாக அறிவித்துள்ள அந்த உணவகம் இதற்கான நுழைவுக் கட்டணம் 1,500-3,000 ஆஸ்திரேலிய டாலர்கள் என நிர்ணயித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் வரை என்பது குறிபிடத் தக்கது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்!

ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் மீ்ண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று, 10-க்கும் மேற்பட்ட மீ்ன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், அதிகாலை நேரத்தி்ல் மீன்பிடித்து விட்டுத் திரும்பும் போது கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற் படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மீனவர்களி்ன் மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இரு தினங்களுக்கு  முன்னர் மீனின் விஷக் கொடுக்கு தாக்கி படகில் மயங்கிக் கிடந்த தமிழக மீனவரை குளுகோஸ் ஏற்றி முதலுதவி செய்து காப்பாற்றி இலங்கைக் கடற்படையினர் திருப்பி அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

கர்நாடகத்தின் புதிய அணை முயற்சியில் உச்ச நீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த நடவடிக்கை: முதல்வர்

காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் விவகாரத்தில், அதற்கு தடை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பார்த்திபன் கேள்விக்கு பதிலளித்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 2 புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் தில்லி சென்று, பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று பார்த்திபன் சட்டமன்றத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசினார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தொடர்பான செய்திகள் வந்த உடனே, பிரதமருக்கு 2014 நவம்பர் 12-ஆம் தேதி கடிதம் ஒன்று எழுதினேன். அதில், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசின் எந்தவொரு பாசனத் திட்டத்துக்கும் மத்திய அரசின் சுற்றுச் சூழல்-வனங்கள் அமைச்சகமும் நீர் ஆதாரத் துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 2014 நவம்பர் 18-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசும் தெரிவித்தது. அதன் பிறகு, 2014 டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைத் தமிழக வழக்குரைஞர்களுடன் ஆலோசித்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

சிறீசேனா வந்தபோது ஏழுமலையான் சந்நிதி சாவி உடைந்தது: அசம்பாவிதம் நேராது என தேவஸ்தானம் விளக்கம்

tirupathi-temple-golden-door திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில் உள்ள தங்கக் கதவை கோவில் ஊழியர்கள் சாவி போட்டு வழக்கம்போல் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. இதனால் மூலவரின் அறையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வேறு வழியின்றி, பூட்டை உடைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மூலவரின் தங்கக் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு,, கதவு திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழுமலையான் சந்நிதியில் நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறீசேனா கலந்து கொண்டார். காலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து பின்னர் தேவஸ்தான துணை செயல் அலுவலர் ரமணா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஏழுமலையான் கோவிலில் நேற்று வழக்கம்போல் ஏகாந்தசேவை முடிந்து அதிகாலை கதவு அடைக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 2.15 மணி அளவில் அர்ச்சகர்கள் சுப்ரபாத சேவைக்காக கதவைத் திறக்க முயன்றனர். அப்போது அதன் சாவி உடைந்தது. இருப்பினும் ஊழியர்கள விரைந்து வந்து பூட்டை அறுத்து திறந்தனர். அதன்பிறகு வழக்கம்போல சுப்ரபாத சேவை நடந்தது. சந்நிதி சாவி உடைந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே, பக்தர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை’ என்றார்.

ராமநாதபுரம்: இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நேற்று நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம், மலப்புரா மாவட்டம், வழியாடு கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் 12 பேர் வேன் ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வந்த வேன், ராமநாதபுரம் அருகே மதுரை – மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அரியமான் கடற்கரைப் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் வேன் ஓட்டுநர் சலீம் (28), உதவி ஓட்டுநர்கள் சமீர் (24), ரியாஸ் (24) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த கட்டடத் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் கவிழ்ந்து விபத்து: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த குளிர்பானம், பால் விற்பனை முகவரான தாமோதரன் என்பவர், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் நயினார்கோவில் அருகே ஏ.பனையூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கார் வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், தாமோதரனின் மனைவி அனுசூயா (60), மகள் பிரியதர்ஷினி (38), உறவினர் கேசவன்(55) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.