சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தவர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை போனது. சென்னை கே.கே. நகர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் -ஸ்ரீவத்சவன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறக் கதவு திறக்கப்பட்டு இருந்ததை அவர் கவனிக்கவில்லை. போட்டி முடிந்த பின்னர் தான் கதவு திறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகுதான் அவருக்கு வீட்டில் நகைகள் கொள்ளை போனது தெரியவந்திருக்கிறது. வீட்டின் முன்பக்க அறையில் ஸ்ரீவத்சன் மெய்மறந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசில் ஸ்ரீவத்சன் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
கிரிக்கெட்டில் முழு கவனம்: வீட்டில் போனது களவு!
மத வன்முறையை என் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: பிரதமர் மோடி
புதுதில்லி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் வன்முறைகள் நடத்தப் படுவதை என் அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறினார் பிரதமர் மோடி. தில்லியில் அண்மைக் காலமாக கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தில்லியில் 5 கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் கிறிஸ்தவ பள்ளியின் மீதும் தாக்குதல் நடந்த விவகாரத்தில் இதுவரை அமைதிகாத்தார் பிரதமர் மோடி. அவரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மோடி, எல்லா மதத்தினருக்கும் சமமான மரியாதையை எனது அரசு கொடுக்கும் என்று உறுதி அளித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “முழு சுதந்திரம் உள்ளது என்ற நம்பிக்கையை எனது அரசு உறுதி செய்யும், எல்லோரும் தங்களது சொந்த மதத்திற்கு திரும்பவோ அல்லது புதிய மதத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது கட்டாயம் இல்லாமல் மதத்தை தேர்வு செய்யவோ மறுக்கப்படாத உரிமை உள்ளது என்பதையும் எனது அரசு உறுதி செய்யும். மைனாரிட்டி அல்லது மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த மத குழுக்கள், வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மற்றவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை எனது அரசு அனுமதிக்காது. அனைத்து மதத்திற்கும் அரசு சமமான மரியாதையை வழங்கும். எந்த ஒரு மதத்திற்கு எதிரான வன்முறையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இதுபோன்ற வன்முறைகளுக்கு பெரிதும் கண்டனம் தெரிவிக்கிறேன். இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக எனது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.” என்றார்.
பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 3 நாட்களில் 100 பேர் பலி; தமிழகத்தில் அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
நாட்டில் பன்றிக் காய்ச்சல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை இந்த வருடத்தில் மட்டும் 585 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 12ம் தேதிக்கு பின்னர் கடந்த 3 நாட்களில் மட்டும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தில்லி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 485 ஆக இருந்தது. கடந்த மூன்று நாட்களில் பாதிப்பு மிகவும் அதிகரித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 585 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,423 ஆக உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முறையே 165, 144, 76, 58 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் 12 பேர் பலியாகியுள்ளனர். தில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சுகாதாரத் துறை செயல்பாடு காரணமாக பாதிப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் பன்றி காய்ச்சல், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்களால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருவது உயர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. நிலையைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை அரசுக்கு உள்ளதால், இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று மாலை 3.30 மணி அளவில் சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.
அமெரிக்கா: கோவில் சுவரில் வெறுப்பை உமிழும் வாசகம் கண்டு இந்துக்கள் அதிர்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவிலின் சுவரில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, கெட் அவுட் – வெளியேறு என்ற வாசகத்தை சிலர் எழுதியுள்ளனர். இத்தகைய வெறுப்பை உமிழும் வாசகத்தால், இந்துக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்துக்களும், இந்தியர்களும் இந்தச் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சியாட்டிலில் உள்ள இந்தக் கோவிலின் சுவரில் எழுதப்பட்ட கெட் அவுட் என்ற வாசகத்தை சில விஷமிகள் வேண்டுமென்றே வெறுப்பை விதைப்பதற்காக எழுதியிருப்பதாகக் கருதப் படுகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவில்களில் இது ஒன்று. இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஸ்னோஹோமிஷ் கவுன்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த வாஷிங்டனைச் சேர்ந்த இந்துக் கோவில்கள் மற்றும் கலாச்சார மையத்தின் அறங்காவலர் குழு தலைவர் நித்யா நிரஞ்சன், ”அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய செயல் விரும்பத்தக்க செயலல்ல. இது நடந்திருக்கக் கூடாது. வெளியேறு என்று யாரும், யாரையும் சொல்ல முடியாது. இது பல்வேறு இனக் குழுக்கள், இடம் பெயர்ந்து வந்தோர் வாழுகின்ற நாடு. இதை யார் செய்தது என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்புகூட இதே போல சிலர் எழுதினர். ஆனால் அப்போது அதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப் படவில்லை. இப்போது செய்திருப்பது யார் என்று தெரியவில்லை” என்றார். 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலின் 2 வது கட்ட கட்டுமானப் பணிகள் அண்மையில் துவங்கின. இந்தச் செயலுக்கு இந்து அமெரிக்க பவுண்டேஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இந்துக் கோவில்கள் அவமதிக்கப்படும் செயல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இந்தியாவில் மதச் சகிப்புத் தன்மை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து கூறியது குறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி : பிரதமர் மோடி வாழ்த்து
புதுதில்லி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். “மகா சிவராத்திரிக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் செய்தி:
महाशिवरात्रि के पावन पर्व पर आप सभी को ढेरो शुभकामनायें । Greetings on Maha Shivratri. — Narendra Modi (@narendramodi) February 17, 2015
மொரீஷியஸ் தீவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம் கோலாகலம்
மொரீஷியஸ்: மொரீஷியஸ் தீவில், மகா சிவராத்திரியையொட்டி பக்தி சிரத்தையுடன் விழா கோலாகலமாகக் கொண்டாட்டப் பட்டது. கிரேட் பஸ்ஸின் பகுதியில் இருக்கும் சிவாலயத்தில் பக்தர்கள் கூடினர். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளான மகா சிவராத்திரி இன்று, பக்தர்கள் புனித நீராடி, நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து சிவ நாமத்தை உச்சரித்து, சிவபெருமானின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். இத்தகைய மகிமை மிகு மகா சிவராத்திரியான இன்று, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவான மொரீஷியஸ் தீவில் இருக்கும் இந்து மக்கள் கிரேட் பசின் பகுதியில் மகா சிவராத்திரியைக் கொண்டாடினர். அங்குள்ள இந்த ஏரிக்கும் இந்தியாவில் இருக்கும் கங்கை ஆற்றுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பப்படுகிறது. கிரேட் பசின் பகுதியில் இருக்கும் உயரமான சிவன் சிலை அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி திருவிழாகாகக் கொண்டாடினர்.
செல்போன் பயன்படுத்திய பெண்களின் கை துண்டிப்பு; ஆண்களுக்கு சவுக்கடி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறி
பாக்தாத்: ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய பெண்கள் 3 பேரில் கைகளைத் துண்டித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அதே நேரம் ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கியுள்ளனர் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர். அதனைத் தனி நாடாக அறிவித்து, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். மேலும், அந்தப் பகுதிகளில் அவர்கள் பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களையும் விதித்துள்ளனர். அதில் முக்கியமான ஒன்று மக்கள் தனிப்பட்ட முறையில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் மொசூல் நகரில் உள்ள அனைத்து செல்போன்களின் நெட்வொர்க்குகளும் முற்றிலுமாக முடக்கப் பட்டு விட்டன. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து எவரேனும் ரகசியமாக செல்போனில் தகவல் கொடுத்து விடலாம் என்ற அச்சம் பயங்கரவாதிகளிடம் நிலவுகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிப்பட்ட நபர்கள் எவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று, அங்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால், அவர்களுக்கு 30 சவுக்கடி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் மொசூல் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதாக ஆண்கள் ஐந்து பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 5 ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப் பட்டது. இதே போல், பொதுமக்கள் முன்னிலையிலேயே 3 பெண்களின் கைகள் வெட்டப்பட்டன. அப்பெண்களும் செல்போன் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது அதிகரிக்கிறது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது அதிகரிக்கிறது, ஆனால் அரசு மவுனம் சாதித்து வருகிறது, மேலும் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது என்று புகார் கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சௌந்தரராஜன். தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சௌந்தர்ராஜன், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரின் அராஜகம் தலைவிரித்தாடியது. ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். பணபலத்தால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் ஆணையமும், ஆளுநரும் இதனை கண்டு கொள்ளவில்லை. தினம் தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறி வருகின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக பாராட்டுப் பத்திரம் வாசிப்பது சரியா? தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலுக்கு ஏராளமானோர் செத்து மடிகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது தொடந்து அதிகரித்து வருகிறது, ஆனால் அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியா–இலங்கை இடையே ஒப்பந்தங்கள்: மோடி–சிறீசேனா முன்னிலையில் கையெழுத்து
பிரதமர் மோடி–சிறீசேனா பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. நேற்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறீசேனாவுக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறீசேனாவை பிரதமர் பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வரவேற்றார். தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு சிறீசேனா தனது மனைவியுடன் தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் சிறீசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மதிய விருந்து அளித்தார். அப்போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து செயல்படுவது, வர்த்தகம், இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள், போருக்கு பின் தமிழர்கள் பகுதியில் இந்தியாவின் உதவியுடன் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குதல், மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில், அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது குறித்த ஒப்பந்தம் முக்கியமானது ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் அணுசக்தி துறை செயலாளர் ரத்தன்குமார் சின்கா, இலங்கை அரசின் சார்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை மந்திரி சம்பிகா ரனவாகா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் அணுசக்தியை அமைதி வழியில் பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்து கொள்வதோடு அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சியும் அளிக்கும். மேலும் கலாசாரம், கல்வி, வேளாண்மை ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. கலாசார ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கலாசார ஆவணங்கள், தொல்லியல், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும். கல்வி துறையிலான ஒப்பந்தம், நாளந்தா பல்கலைக்கழகத்தின் திட்ட பணிகளில் இலங்கை இணைந்து செயல்பட வழிவகை செய்கிறது. வேளாண்மை பொருட்களை பதப்படுத்துதல், தோட்டக்கலை, வேளாண்மை உபகரணங்கள் தொடர்பாக பயிற்சி அளித்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை போக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வேளாண்மை துறையில் கையெழுத்தான ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இலங்கை அதிபர் சிறீசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் 4 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் மாலை இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் இது அவரது முதல் வெளிநாட்டு பயணம் ஆகும். விமானம் மூலம் தில்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இரவில் சிறீசேனா தில்லியில் உள்ள மவுரியா ஓட்டலில் தங்கினார். அவருடன் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் வந்து உள்ளது. சிறீசேனா வருகை குறித்தும், அவருடனான பேச்சு குறித்தும், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அவை….
Wonderful to have President Maithripala Sirisena in India. India-Sri Lanka ties are set to grow further. pic.twitter.com/GlAcErhjQH — Narendra Modi (@narendramodi) February 16, 2015
President Sirisena & I discussed co-operation in several issues including trade, energy, culture & defence. https://t.co/loGf2j7kfw — Narendra Modi (@narendramodi) February 16, 2015
கின்னஸ் சாதனை படைத்த ஹாங்காங் இந்திய யோகா ஆசிரியருக்கு மோடி வாழ்த்து
கின்னஸ் உலக சாதனை படைத்த ஹாங்காங் இந்திய யோகா ஆசிரியர் சி.பி.யோகராஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஹாங்காங்கில் யோகாவை பிரபலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Congrats to Hong Kong based Indian Yoga teacher, Mr. Yogaraj C.P. for creating a Guinness World Record! https://t.co/gsBTcYzZNd — Narendra Modi (@narendramodi) February 17, 2015
I appreciate the Indian Consulate in Hong Kong for their efforts to popularise Yoga & their support to Mr. Yogaraj. — Narendra Modi (@narendramodi) February 17, 2015

