திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். பீடி பண்டல்களின் லேபிள்களில் 85 சதவீதம் கேன்சர் நோயால் பாதித்தவர்களின் படம் போடவேண்டும். பீடி தயார் செய்த 2 மாதத்திற்குள் விற்பனை செய்யவேண்டும். பீடி சில்லறை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை வாபஸ் பெறக்கோரி திருநெல்வேலியில் சிஐடியு, ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளனம் துணை தலைவர் ராஜாங்கம் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
பொருட்காட்சி வளாகத்தில் உத்ஸவர் புறப்பாடு நடத்தலாமா?
சென்னை பொருட்காட்சி வளாகத்தில், பல்வேறு ஆலயங்களில் இருந்தும் உத்ஸவர் புறப்பாடு நடத்த, அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சென்னை தீவுத்திடல் வளாகத்தில், 41வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பிலும், மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள் சார்பிலும், அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வகையில், இந்துசமய அறநிலையத் துறை சார்பில், பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு கோவில்களின் மாதிரிகள், பிரமாண்டமான சுவாமி படங்கள், சிலைகள் போன்றவை வைக்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்த அரங்கில் சுவாமி புறப்பாடு, இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சுவாமி புறப்பாடு: இது தொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி பிறப்பித்த உத்தரவு: பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள, அறநிலையத் துறை அரங்கை சிறப்பாக்கும் வகையில், விடுமுறை நாட்களில் சுவாமி புறப்பாடு நடத்தப்படும். ஜன., 18, 25, பிப்., 1, 8, 15, 22, மார்ச், 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில், பொருட்காட்சி வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடத்தப்படும். இதற்கு, தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோவில், காளிகாம்பாள் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், முண்டகக் கண்ணியம்மன், மாதவ பெருமாள், கந்தசுவாமி கோவில், ராயப்பேட்டை சித்தி புத்தி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 11 கோவில்களின் சுவாமிகள் புறப்பாடு நடத்த, ஒத்துழைப்பு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாதவ பெருமாள்: இதன்படி, நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை மாதவ பெருமாள் கோவில் உற்சவர், கோவிலில் இருந்து வாகனத்தில் தீவுத்திடலில் உள்ள பொருட்காட்சி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, புறப்பாடு நடத்தப்பட்டது. பொருட்காட்சி வளாகத்தில், கிழக்கில் உள்ள பிரதான வாயிலில் இருந்து, மேற்கில் உள்ள விழா மேடை வரை, சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்; அப்போது பக்தர்களுக்கு, கல்கண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதிருப்தி: கோவில் உற்சவரை, வேறு ஒரு இடத்தில் புறப்பாடு நடத்துவதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன. இதுகுறித்து, ஆலய வழிபடுவோர்
சங்கத்தின் செயல் தலைவர், டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: பொருட்காட்சி வளாகத்தில், அறநிலையத் துறை சார்பில் அரங்கு அமைத்து, திட்டங்களை விளக்குவது சரி. அதற்காக, உற்சவரை கொண்டு சென்று புறப்பாடு நடத்துவது, அதிருப்தி அளிப்பதாக அமைந்துள்ளது. கோவில்களில், எந்த இடத்தில் இருந்து, எந்தெந்த பகுதி வழியாக உற்சவர் புறப்பாடு, ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதற்கு, ஆகம அடிப்படையிலான விதிகள் உள்ளன. கோவிலுக்கு தொடர்பில்லாத ஒரு பகுதிக்கு, உற்சவரை கொண்டு சென்று புறப்பாடு நடத்துவது, ஆகம விரோத செயலாகும். இத்தகைய செயல்களில் ஈடுபட, அறநிலையத் துறையினருக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
செய்தி மூலம்: தினமலர்
பாடம் நடத்தாத ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளி முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 34 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காளிராஜ் என்ற ஆசிரியர் கடந்த 6 மாதத்திற்கு முன் இப்பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். அவர் வந்த பிறகு மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி தலைமையாசிரியர் கோவில்பட்டி உதவி தொடக்க கல்வி அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடைத் தேர்தல்: திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு 13ம் தேதி விடுமுறை
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு வரும் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அத்தொகுதிக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் ஓட்டுப்போட ஏதுவாக ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். மேலும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஓட்டுரிமை பெற்று தொகுதிக்கு வெளியே நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணைய பதவி எண்ணிக்கையை சீரமைக்க வேண்டும்: அமைச்சர் சோனோவால்
புதுதில்லி: இந்திய விளையாட்டு ஆணையத்தின் செயல்பாட்டை சீர்படுத்த இந்த ஆணையத்தில் உள்ள பதவி எண்ணிக்கையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் 80 மையங்களில் போதுமான அதிகாரிகளும் பயிற்சியாளர்களும் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆணையத்தில் உள்ள பதவி எண்ணிக்கையை உடனடியாக சீரமைக்குமாறு விளையாட்டு துறை செயலருக்கு அமைச்சர் சோனோவால் உத்தரவிட்டுள்ளார். இதன் படி நாடு முழுவதும் குறைந்தது ஒன்பது வட்டார மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்கள் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையங்கள் சிறப்பாக செயல்பட உதவும்.
முதல்வராக நிதிஷ் குமாரின் மறு தேர்வு சட்ட விரோதம்: பாட்னா உயர் நீதிமன்றம்
பாட்னா : பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு அவர் தேர்வு செய்யப் பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், எம்.எல்.ஏ.,க்களை அவர் சந்தித்ததும் முறைகேடானது எனவும் அது தெரிவித்துள்ளது.
பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்: நினைவுகூர்ந்தார் பிரதமர் மோடி
புதுதில்லி: பண்டிட் தீனதயாள் உபாத்யாய நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். “பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவு நாளில் நான் அவரை நினைவுகூர்கிறேன். ஒருங்கிணைந்த மனித நேயம் குறித்த அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.” என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Remembering Pandit Deendayal Upadhyaya on his Punya Tithi. His ideals of Antyodaya & Integral Humanism remain a guiding force for us. — Narendra Modi (@narendramodi) February 11, 2015
ஜெயலலிதா வழக்கு: பவானி சிங் வாதாட எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன் மனு தள்ளுபடி
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் வாதாட எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, தி.மு.க.,வின் அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்தது. பவானிசிங் அரசு வழக்கறிஞராக தொடர்வதற்கு கர்நாடக அரசின் மறு உத்தரவு தேவையில்லை என்றும், பவானிசிங் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டால், வழக்கின் இறுதிவரை அவரே அரசு வழக்கறிஞராக ஆஜராகலாம் என்றும் அது கருத்து தெரிவித்துள்ளது.


