சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்தவுகள் குறித்து மாணவர்கள் ஆலோசனை பெறுவதற்காக அவசர அழைப்பு எண் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. மாண்வர்களுக்கு உதவும் வகையிலும், வழிகாட்டும் வகையிலும் 104 என்ற அவசர அழைப்பு சேவை எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சோனியாவுடன் லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு
புதுதில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப் பேசினார். தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியான நிலையிலும், பீகார் அரசியலில் நிலவும் குழப்ப நிலை குறித்தும் விவாதிப்பதற்காக அவர் சோனியாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, நிதிஷ் குமார் தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பீகார் அரசியல் நிலவரம் குறித்து லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதிக் கட்டப் பரபரப்பு
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை பிரசாரம் ஓய்வதையொட்டி வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் அலுவலர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு: “ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வரும் 13ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு முன்பாக உள்ள 48 மணி நேரம் என்பது இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் 13 ஆம் தேதி மாலை 6 மணி வரை. இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பேரணிகள் பொதுக் கூட்டங்கள் போன்ற எந்தவிதமான பிரசாரமும் செய்யக் கூடாது. மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்கு வெளியே இருந்து பிரசாரத்திற்காக அழைத்து வரப்பட்டவர்களும், தொகுதியில் வாக்காளர்களாக இல்லாத அனைத்துக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்களும் தொகுதியிலிருந்து உடனடியாக வெளியே செல்ல வேண்டும். ஏற்கேனவே பிரசார காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 6 மணியுடன் தானாகவே ரத்தாகிவிடும். வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்துவதற்கு வேட்பாளருக்கு ஒரு வாகனமும், அவரது தேர்தல் முகவருக்கு ஒரு வாகனமும், அவரது தொண்டர்களுக்கு ஒரு வாகனமும் ஆக மொத்தம் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்கான வாகன அனுமதியை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனியாக பெற வேண்டும்” – இவ்வாறு அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் 322 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இடைத். தேர்தலில் 29 பேர் போட்டியிடுகின்றனர். எனவே, இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் “நோட்டோ” வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்கள் அனைத்தும் “சீல்” வைக்கப்பட்டு திருச்சி சாராநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். வரும் 16 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.
ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு
சிட்னி: போலீஸாரின் தேடுதல் வேட்டையில், ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டத்துக்கு தயாராக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஒரு ஓட்டலுக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவரை சுட்டுக் கொன்றனர். 17 பேரை 16 மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்தனர். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒமர் அல்–குடோபி (24), முகமது கியாத் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்க கொடி, பெரிய கத்தி, வீடியோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்ததன் மூலம் பெரிய தீவிரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனியார் மயத்தைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.யும், தேசிய விமான நிலைய ஊழியர்கள் ஆணைய ஒருங்கிணைப்பாளருமான சௌகத் ராய் தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊழியர்கள் சங்க தலைவர் சந்தானம், செயலாளர் ஜார்ஜ் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களின் போராட்டத்தால் விமான நிலைய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் திடீர் மாற்றம்: புதிய அதிகாரி டி.ஜி.வினய்
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் மனோகரன் மாற்றப்பட்டு புதிய தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டி.ஜி. வினய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான வினய் சென்னை மாநகராட்சியின் வருவாய் நிதிப்பிரிவு ஆணையராகத் பணியாற்றி வந்தார். ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அவர் இன்று பொறுப்பேற்கிறார். தேர்தல் அதிகாரியாக இருந்த மனோகரன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதன் காரணமாக, ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தும் அதிகாரி பொறுப்பிலிருந்து மனோகரன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் வினய் நேற்று இரவு புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸின் 63 வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு: ராகுல் அதிர்ச்சி
புதுதில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. 70 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறும் அளவுக்கு ஓட்டுகள் பெற்றனர். 63 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜய் மக்கான், கிரண் வாலியா, யோகானந்த் சாஸ்திரி, ஹாரூப் யூசுப் போன்ற முன்னணி தலைவர்களும் டெபாசிட் இழந்தனர். 2013–ல் தில்லி சட்ட மன்ற தேர்தலில் 24.55 சதவீத ஓட்டுகளை பெற்று 8 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸுக்கு தற்போது 14.85 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. காங்கிரஸின் ஓட்டுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றுவிட்டது. இந்த வரலாறு காணாத தோல்வியாலும், ஒட்டுகள் கணிசமாகக் குறைந்ததாலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இதுகுறித்து ஊடகங்களிலோ சமூக இணைய தளத்திலோ தனது கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவு
புதுதில்லி: அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி
தில்லி சட்டசபைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்தக் கட்சிக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை. இதேபோல் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. தில்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி 1.4 சதவீத ஓட்டுகளையே பெற்று இருக்கிறது. தேசியக் கட்சி அந்தஸ்தை ஒரு மாநிலக் கட்சி பெறவேண்டும் என்றால் அந்த கட்சி 4 அல்லது அதற்கும் கூடுதலான மாநிலங்களில் போட்டியிட்டு 6 சதவீத ஓட்டுகளையோ, அல்லது 2 தொகுதிகளையோ கைப்பற்றி இருக்கவேண்டும். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தகுதிகளைப் பெறவில்லை. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இந்தப் பிரச்னை நிலுவையில் உள்ளது. எனவே இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் முழுமை பெற்றுவிடும்“ என்று தெரிவித்தனர்.
பா.ஜ.க. தோல்விக்கு பேடி அல்ல; மோடியே காரணம்: அன்னா ஹசாரே
ராலேகான் ஸித்தி: தில்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்; கிரண் பேடி அல்ல என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே சாடியுள்ளார். தில்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து தெரிவித்த போது, நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று நரேந்திர மோடி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. நரேந்திர மோடி மீதான மக்கள் நம்பிக்கை அழிந்து போய்விட்டது பாரதிய ஜனதாவின் தோல்விக்கு கிரண்பேடி காரணம் அல்ல.. கிரண்பேடி பாரதிய ஜனதாவில் இணைந்தது தவறு. நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அன்னா ஹசாரே கூறினார்.

