Home Blog Page 6310

வளர்ச்சிக்கு துணையாக இருப்பதாக கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தில்லி: தில்லி சட்டசபைச் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், தில்லியின் வளர்ச்சிப் பணிகளில் தாம் முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்துள்ளார்.  

பிரணாப், மோடி, ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார் கேஜ்ரிவால்.. பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறார்!

தில்லி: தில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்தரி மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்திக்க உள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க அனுமதி கோரியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். இந்நிலையில், சட்டசபை கட்சி தலைவர் மற்றும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய தில்லி போலீஸ் கமாண்டோக்கள் 12 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் கேஜ்ரிவால்: தமிழிசை சௌந்தர்ராஜன்

tamilisai-soundararajan திருச்சி: நிறைவேற்ற முடியாத அளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து அரவிந்த் கேஜ்ரிவால் தில்லியில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வி தொடர்பாக திருச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… தில்லியில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டதும் கட்சியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் பதவியில் இருந்தபோது நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக செயல்பட்டார். கேஜ்ரிவால் மக்களிடம் தவறான வாக்குறுதிளை அளித்து வெற்றி பெற்றுள்ளார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து வருகிறது. 8 மாதங்களில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி. மோடிக்கு இன்னும் நல்ல இமேஜ் உள்ளது. ‘‘ஜன்தன் யோஜனா” திட்டத்தில் நாடு முழுவதும் 11 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் வரம்பு மீறி செயல்படக்கூடாது என்று மோடி பலமுறை அறிவுறுத்தி உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா: சோனியாவிடம் கடிதம் கொடுக்கிறார் அஜய் மக்கான்

புதுதில்லி: தில்லி தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட அஜய் மக்கான், தேர்தலில் ஏற்படட் படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான ராஜினாமாக் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்துக் கொடுக்க உள்ளார் அஜய் மக்கான். தில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை தொகையைப் பறிகொடுத்துள்ளனர். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபைத் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அந்தக் கட்சியின் 70 வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறுகிற அளவுக்கு கவுரவமான எண்ணிக்கையில் ஓட்டுகளைப் பெற்றனர். 63 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜி மகள் உட்பட 63 காங்கிரஸ் வேட்பாளர்களின் டெபாசிட் காலி

தில்லி: தில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை தொகையைப் பறிகொடுத்துள்ளனர். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபைத் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அந்தக் கட்சியின் 70 வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறுகிற அளவுக்கு கவுரவமான எண்ணிக்கையில் ஓட்டுகளைப் பெற்றனர். 63 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

கேஜ்ரிவால் சொன்னது போல் “பயப்படும் அளவுக்கான பெரும்பான்மை”!

dhinasari_edit தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்துப் பார்க்கும்போது, “நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்கு தில்லிவாசிகள் கொடுத்துவிட்டனர்” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது உண்மையாகவே கருத இடம் உண்டு. ஜனநாயகம் என்பது, நம் நாட்டில் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொடுக்கும் விதத்தில் அமைந்து விடுவதுண்டு. 70க்கு 67 இடங்களில் வெற்றி என்பது எதிர்க்கட்சிக்கே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காத கண்மூடித்தனமான முழுப் பெருப்பான்மை என்பது உண்மை. இவ்வாறு எதிர்க்கட்சியினருக்கே இடமளிக்காத பெரும்பான்மையைப் பெற்ற மாநிலங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற்றதில்லை. அங்கே ஊழல்களும் முறைகேடுகளும் மலிந்திருப்பதையே பார்த்திருக்கிறோம். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெரிக்கும் ஆளும்கட்சியின் அசுர பலம், வளர்ச்சிக்கான சாத்தியத்தை அந்த மாநிலங்களுக்கு வழங்கிவிடாது. இதற்கு தமிழகமே சிறந்த உதாரணம். அதே நேரம் முன்னர் அமைந்த தில்லி அரசு போல், தொங்கு சட்டசபையாக அமைந்து, அரசே சரியாக நடத்த விடாமல் போவதும் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தில் ஒன்றாகிவிட்டதைக் கண்டிருக்கிறோம். “தனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்த தில்லி மக்களுக்கு நான் ஒரு உண்மையான முதலமைச்சராக இருப்பேன்” என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது நன்றி அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். இந்தத் தேர்தலில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூட, பொய்யாகி விட்டன. ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று பெரும்பான்மை பெறும் என்று சொன்னதையும் பொய்யாக்கி, அதற்கும் மேலாக தில்லிவாசிகள் 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சிக்குக் கொடுத்துள்ளனர். 70 இடங்களைக் கொண்ட தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும், பா.ஜ.க 3 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாத நாடாளுமன்ற வெற்றிக்குப் பின்னர், பா.ஜ.க தனது தொடர் வெற்றியை அடுத்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பெற்று வெற்றிக் களிப்பில் இருந்தது. இனி தங்கள் கட்சியே பெரும்பான்மை பெறும் என்ற மனோபாவத்தில் இருந்த பாஜகவுக்கு தில்லி சட்டமன்றத் தேர்தல் ஒரு பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். சென்ற முறை, தேர்தலில் முதல் முறையாகத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியை சரியான முறையில் கையாளத் தெரியாத ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை சரியாகத் தக்க வைக்கும் என்று நம்பலாம். தங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த முறை அக்கட்சி வீணடிக்காது என்றும் நம்ப அக்கட்சியின் கடந்த கால கசப்பு நிகழ்வுகள் காரணமாக அமையலாம். தில்லி சட்டமன்றத் தேர்தலில் சொல்லும்படியாக அமைந்த ஒரு விஷயம், ஆம் ஆத்மி கட்சியினரின் முன்கூட்டியே அமைந்த முன் தயாரிப்புதான். நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்விக்குப் பின்னர், தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து, முன் தயாரிப்பில் இருந்தனர் ஆம் ஆத்மி கட்சியினர். பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு முன்பாகவே தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, தங்கள் உத்தியான மக்களுடன் நேருக்கு நேர் சந்திப்பு மூலம், தில்லி வாசிகளுடனான தங்கள் உறவைப் புதுப்பித்தனர். தான் முன்னர் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, மக்கள் வழங்கிய வாய்ப்பினைக் கோட்டை விட்டதற்காக அழுது புலம்பி ஒரு தோற்றத்தை அரவிந்த் கேஜ்ரிவால் உண்டாக்கிக் கொண்டார். செல்லும் இடங்களில் முட்டை வீச்சும், அவதூறுப் பேச்சுமாக, அவருக்கு இருந்த தனியாள் என்ற பரிதாபத்தை மக்களிடம் மேலும் பெருகச் செய்தார். வலிமையானவனை எதிர்த்து வலுவற்றவன் முன் நிற்பதால் கிடைக்கும் அனுதாபத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் கேஜ்ரிவால். அவரது இந்தச் செயல்கள் அவரை உண்மையான ‘ஆம் ஆத்மி’ ஆக்கி விட்டது. மக்கள் தங்கள் மீது வைத்திருந்த அனுதாப அலையைத் தக்க வைத்துக் கொண்டு, எளிமையானவர்கள் என்ற எண்ணத்தை உறுதிப் படுத்திய அதே வேளையில், பாஜக., மீதான ஆடம்பர எண்ணத்தையும் மக்களிடம் வெளிப்படுத்துவதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். மோடி, தனது பெயர் வைத்து தைக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்தார் என்ற செய்தியை மக்கள் மனதில் வலுவாக்கிய அதே வேளையில், தலையைச் சுற்றி மப்ளர் அணிந்து, மற்ற சாதாரண மக்களைப் போல், தானும் ஓர் எளிய மனிதன் என்ற தோற்றத்தை வலுவாக்கி விட்டார் கேஜ்ரிவால். பாஜகவுக்கு கிரண் பேடியின் வரவு, கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை முன்னிலும் இல்லாத அளவுக்கு பெரிதாக்கி தூபம் போட வைத்துவிட்டது. தேர்தலுக்கு முன்னர் வரை எதிர் முகாமில் இருந்து விமர்சனம் செய்தவர், தேர்தலுக்காக கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுவார் என்றால், கட்சியில் உழைத்த உண்மையான தொண்டர்களுக்கு என்ன மதிப்பு என்ற எண்ணத்தை கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியிருப்பது உண்மை. என்னதான், ராஜ்நாத் சிங்கும், அமித் ஷாவும் இது மாயை, பொய் என்று எடுத்துச் சொன்னாலும், தேர்தல் முடிவுகள் இப்போது அந்த எண்ணத்தை தெளிவாக்கிக் காட்டிவிட்டன. முதல் முறை பதவி ஏற்றபோது எதற்கெடுத்தாலும் தர்ணா, போராட்டம் என்று தெருவில் இறங்கிய கேஜ்ரிவால், இந்த முறை தனக்கு எதிராக தானே போராட்டம் நடத்துவது போன்ற செயல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தில்லி மக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டும். இன்னும் 5 வருடங்கள் உள்ளன. இந்த 5 வருடங்களும் எப்படி இருக்கப் போகிறதோ அதைப் பொறுத்துதான் அடுத்தமுறை ஆம் ஆத்மியின் தலையெழுத்தும் அமையும். நிச்சயமாக, கேஜ்ரிவால் சொன்னதைப் போல, இந்த வெற்றி ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, அனைத்துக்குக் கட்சிகளுக்குமே.. ஏன் ஜனநாயகத்துக்கே அச்சம் தரக் கூடிய வெற்றிதான் !

சினிமா ஆசை காட்டி சென்னை சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய சினிமா பிரமுகர் கைது

molestationசென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை சினிமா ஆசைகாட்டி பலாத்காரம் செய்து, பின்னர் பாலியல் தொழிலில் தள்ளியதாக சினிமா பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தச் சிறுமியை ரூ.1½ லட்சத்திற்கு விலை பேசி விற்றதாக, அவரது தாயாரும் கைது செய்யப்பட்டார். சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில், குழந்தைகள் நல கமிட்டி சார்பில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரண் சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கையும் தம்பியும் உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டாராம். சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன் அவரது தாயார் சேர்ந்து வாழ்ந்துள்ளார். 9-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அவரை சினிமாவில் நடிக்க வைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரைப் பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் இயக்கி வெளியிட்டிருப்பதாகவும், தனது புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும்கூறினார். இதற்காக ரூ.1½ லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாகத் தெரிகிறது. கடந்த 1 ஆண்டாக சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பல முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி உள்ளனர். இந்நிலையில், செந்தமிழ்அரசைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மாறு வேடத்தில் சென்று, தரகர் ராஜேஸ்வரி உதவியுடன், செந்தமிழ்அரசை சந்தித்தனர். சிறுமியிடம் உல்லாசமாக இருக்க, அவர் ரூ.1½ லட்சம் பணம் கேட்டுள்ளார். இதை அடுத்து, போலீசார், செந்தமிழ்அரசைக் கைது செய்தனர். மேலும், தரகர் ராஜேஸ்வரியும், சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதான செந்தமிழ்அரசு கும்பகோணத்தைச் சேர்ந்தவர்; சென்னை போரூரில் வசித்து வந்தார். அவர் இயக்கிய படங்கள் குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்றும், இவர் படம் எதையும் இயக்காமல் தவறான தகவல்களைக் கூறியிருக்கலாம் என்றும் தெரிகிறது.

தில்லியில் நடந்தது பீகாரிலும் நடக்கும்: நிதிஷ்குமார்

nithish-kumar பாட்னா: ”தில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்து கணிப்பாகும். இதே போன்ற ஒரு முடிவையே பீகாரில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும், பா.ஜ.க, சந்திக்கும்,” என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ்குமார் கூறியுள்ளார். தில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, தில்லி தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்துக் கணிப்புதான். பா.ஜ.க,வின் ஒன்பது மாத ஆட்சியில், மோடிக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை. அதுவே, இந்தத் தோல்விக்குக் காரணம். ‘கறுப்பு பண மீட்பு, விவசாயிகளுக்கு போனஸ், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என, பல வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி வழங்கினார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பீகாரில், வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க,வின் அடுத்த இலக்கு இந்த மாநிலம்தான். இங்கும் தில்லியில் சந்தித்தது போன்ற தோல்வியை அந்தக் கட்சி சந்திக்கும் என்று கூறினார்.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் கடிதம்

maithripala-sirisena புதுதில்லி: ‘இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களுமே பெறுவதற்கும், இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்யும்’ என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள சிறீசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து, பிரணாப் முகர்ஜி கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். இந்தியாவுக்கு வரும்படியும், அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, வரும் 15ம் தேதி சிறீசேன இந்தியா வருகிறார். இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரணாப் முகர்ஜிக்கு நன்றி தெரிவித்து, சிறீசேன எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு மட்டுமல்ல; அண்டை நாடும்கூட! இரு நாடுகளும் கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தொடர்பு உடையவை. இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கும், இதன் மூலம், உறவில் ஒரு புதிய உச்சத்தை எட்டுவதற்கும் இலங்கை தொடர்ந்து முயற்சி செய்யும். இந்த உறவால் ஏற்படும் பலன்களை, இரு நாட்டு மக்களும் பெறுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: புகார்கள் வந்ததால் உதவி ஆணையர் மாற்றம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் புகார்கள் வந்ததை அடுத்து, உதவி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உதவி காவல் ஆணையராக மாதவனை நியமிக்கப்பட்டார். இதற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் புதன்கிழமை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையராக இருந்த மாதவனை ஸ்ரீரங்கம் உதவி காவல் ஆணையராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த சில நாட்களாக ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அ.தி.மு.க தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உதவி காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.