ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இங்கே நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீரங்கம் தேர்தலில் யாராவது கள்ள ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம். 741 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாளை பயன்படுத்தப்பட உள்ளது. தமிழக போலீசார் 2 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
பீகார் அரசியல் குழப்பம்: காரணம் யார்?
அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்ததால், அந்த கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார். புதிய முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சி பதவியேற்றார். இந்த நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல் – மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் நிதிஷ் குமாருக்கும், மாஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஜிதன் ராம் மாஞ்சி அறிவித்ததால், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் மாஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய முதல்– மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்தும் மாஞ்சி நீக்கப்பட்டார். இதனிடையே பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார், தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தார். ஆனால் ஆளுநர் திரிபாதி அதை ஏற்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார். இதனால் நிதிஷ் குமார் தன்னை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களை தில்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். பீகாரில் குதிரை பேரம் நடப்பதை தடுக்க உடனே ஆளுனர் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் அதை கேட்டுக் கொண்டாரே தவிர எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் நிதிஷ் குமாரை புதிய முதல்வராக பேரவைத் தலைவர் ஏற்றது செல்லாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் அறிவித்தது. இவை எல்லாம் நிதிஷ்குமார் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஆளுநர் திரிபாதி தொடங்கினார். பீகார் சட்டசபை வரும் 20–ந்தேதி கூடும்போது, முதல்–மந்திரி மாஞ்சி தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பீகார் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓரிரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே பீகார் சட்டப் பேரவையில் நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டப் பேரவையில் தற்போது 233 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாஞ்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். இந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மாஞ்சிக்கு கிடைக்குமா? என்பது இதுவரை உறுதியாகவில்லை. ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் மொத்தம் உள்ள 111 எம்.எல்.ஏ.க்களில் மாஞ்சிக்கு 14 எம்.எல்.ஏ.க் கள் ஆதரவே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே 87 எம்.எல்.ஏ.க்களைத் தன் வசம் வைத்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி ஆதரவு கொடுத்தால்தான் மாஞ்சி முதலமைச்சர் பதவியில் நீடிக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால் பாரதீய ஜனதாக் கட்சி 20–ந்தேதி பலப்பரீட்சை நடக்கும் போதுதான் தன் முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது. ஒரு வேளை மாஞ்சியை பாரதீய ஜனதாக் கட்சி ஆதரித்தாலும் 117 எம்.எல்.ஏ.க்கள் பலத்தைப் பெற மேலும் சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும். தற்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும், காங்கிரசும் நிதிஷ்குமாருக்கே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளன. இருப்பினும் லாலு கட்சியில் ஒரு சாரார் மாஞ்சிக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் லாலு பிரசாத் யாதவிடம், நவம்பர் மாதம் தேர்தலை சந்திக்க வேண்டியதிருப்பதால் நிதிஷ் குமாருக்கு பதில் மாஞ்சியை ஆதரிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். எனவே 20–ந்தேதி பலப்பரீட்சை நடக்கும் போது லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருசாரார் மாஞ்சிக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. பொதுவாக சட்டப் பேரவையில் பலப் பரீட்சை நடத்தப்படும் போது ரகசிய வாக்கெடுப்பு முறையை கையாள்வர். சில சமயம் குரல் ஓட்டெடுப்பு. இவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதுண்டு. மாஞ்சி குரல் வாக்கு அல்லது ரகசிய வாக்களிப்பு முறை இரண்டில் ஏதாவது ஒன்றின் மூலம் நடத்தலாம் என்று ஆளுநர் திரிபாதி அறிவுறுத்தியுள்ளாராம். இந்த இரண்டில், ஜிதன் ராம் மாஞ்சி குரல் வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கலாம். தற்போதைய பீகார் அவைத் தலைவர் நிதிஷ்குமாரின் ஆதரவாளர். அவர் பலப் பரீட்சை நடத்தப் படும் நாள் அன்று எவ்வாறு நடந்து கொள்வார் என்பது தெரியாது. மிகுந்த எதிர்பார்ப்பு இப்போது அவர் மீது ஏற்பட்டுள்ளது உண்மை. எல்லாமே அரசியல் என்றான பின்னர், நாம் தார்மீக நெறிமுறைகளை எப்படி எவ்வாறு அனைவரிடமும் எதிர்பார்ப்பது? இவ்வாறு கருதக் காரணம் இல்லாமல் இல்லை… நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நின்று, மக்களால் முதல்வராக முதலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவர் முதல்வர் பதவியில் இருந்த போது, பீகாருக்காக என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து செய்தாரோ… அவ்வாறன்றி, என்ன செய்யக் கூடாதோ அதையும் செய்துவிட்டார். அதற்கான முதல் காரணம் – அவர் மனத்தில் ஏற்பட்ட பொறாமை உணர்வு. மோடியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்ட பொறாமை உணர்வு. எப்போது ஒருவரின் மனத்தில் பொறாமை உணர்வு தலை தூக்குகிறதோ, அவர் தன் மீது நம்பிக்கை இல்லாதவர் என்றாகிவிடுகிறது. அவ்வாறு அவர் கொண்ட பொறாமை உணர்வில், பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த போது, 17 ஆண்டுகால நெடுநாள் கூட்டணியை விட்டுத் தான் கழன்று கொள்ள முதல் ஆளாக நின்றார் நிதிஷ் குமார். அவர் செய்த முதல் தவறு அது. ஆனால், அவரது தவறே மோடிக்கு பீகாரில் பெரும் ஆதரவையும் பெற்றுத் தந்தது என்று தோன்றுகிறது. மகாபாரதம் ஒரு காட்சியைக் காட்டும். போர்க் களத்தில் சக்கரவியூகத்துள் மாட்டிக் கொண்ட அபிமன்யு, சிறுவனான ஒரு வீரன். ஆனால், அவனைச் சுற்றி நின்ற மகா வீரர்கள், பெரும் போர்த் தந்திரம் கொண்டவர்கள், ஆதரவற்ற நிலையில் நின்றவனை கூட்டத்தோடு கூட்டமாக வலுவாக நின்று எதிர்த்து அதர்மமான முறையில் கொன்று தீர்த்தனர். இதுவே, அபிமன்யு மீது மேலும் பரிதாப உணர்வு வரக் காரணமாயிற்று. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளால் பெருவாரியாக ஒதுக்கப்பட்ட மோடியும், தற்போதைய தில்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வென்றதும், சாதாரண மக்களிடம் ஏற்பட்ட இந்தப் பரிதாப உணர்வினால்தான்! நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.ஜனதாக் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தானே முன்வந்து வலிய ராஜினாமா செய்தது, நிதிஷின் அடுத்த தவறு. அதன் பின்னரும், தன் பினாமியாக இருத்தும் வகையில், தன் ஆதரவாளர் ஜிதன் ராம் மாஞ்சியை பொம்மையாக நினைத்து முதல்வர் நாற்காலியில் அமரவைத்து, அவர் வாய் மூடி தன் புகழையே பாடிக் கொண்டிருப்பார் என்று நினைத்து செயல்பட்டது நிதிஷின் அடுத்த தவறு. ஒரு பொறுப்புக்கு வந்துவிட்டால், எந்த ஒரு சுயமரியாதை உள்ளவருமே, அந்தப் பொறுப்புக்கு ஏற்றபடி தனது திறமையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வெளிக்காட்டவே முனைவார்கள். ஜிதன் ராம் மாஞ்சியும் அப்படித்தான் செய்தார். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, தான் ஒரு தலித் என்பதால்தான் தான் சென்று வந்தபின்னர் கோயிலைக் கழுவி விட்டார்கள் என்று முன்னர் நடந்த கதையைச் சொல்லி அனுதாபத்தைத் தேடிக் கொண்டார். அரசியல்தான் என்று வந்தபின்னர், தனக்கென ஒரு பாதையையும் தனக்கென ஒரு ஆதரவாளர் கூட்டத்தையும் அவர் வளர்த்துக் கொள்ள முற்பட்டதில் எந்தத் தவறும் இல்லைதான். சொல்லப் போனால், பீகார் அரசியல் தமிழக அரசியலை விட சுயமரியாதை மிக்க அரசியல் என்பதை வெளிக்காட்டிவிட்டது. ஆனால், தமிழகத்திலோ இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டும், சுயமரியாதை பற்றிப் பேசும் திராவிடக் கட்சிகள்தான், அதை முழுவதுமாக இழந்து, கட்சியின் ஒற்றை நபருக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு முதுகு வளைந்து கூனிக் கிடப்பது. அந்த அளவில், ஜிதன் ராம் மாஞ்சியின் சுயமரியாதையும் முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே! இங்கே நிதிஷ் குமார் தனது சுயநல புத்தியையே காட்டிக் கொண்டிருக்கிறார். மாஞ்சியை நிதிஷ் முதல்வராக்கினார் என்றால், அவர் நிதிஷுக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டுமா என்ன? மாஞ்சி தனக்கென ஓர் ஆதரவு அடித்தளம் அமைத்துக் கொள்ளக்கூடாதா என்ன? சொல்லப் போனால், நாம் முன்னரே கூறியது போல், அடுக்கடுக்கான தவறுகளைப் புரிந்தவர் நிதிஷ் குமார். பாஜகவுடன் ஆதரவைத் துண்டித்தது, தோல்விக்குப் பொறுப்பேற்று தாமே ராஜினாமா செய்தது, தன்னை முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த பீகார் மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாமே அவரது ஆணவத்தையே காட்டுகிறது. அதை விட மோசமாக, பல்லாண்டுகள் தன் அரசியல் எதிரியாக களத்தில் இருந்த லாலு பிரசாத் யாதவுடன் கைகோத்து, களம் கண்டது. ஆனால், இதே நிதிஷ் குமார்தான், பீகார் மக்களால் நம்பிக்கை மிக்க மாமனிதராகத் தெரிந்தார். பீகாரில் இரண்டாவது முறையாக தொடர்ந்து மக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதே, அதுவும் மிகச் சிறந்த ஆதரவு சதவீதத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட போதே… அவரது செல்வாக்கு அப்போது வெளித் தெரிந்தது. ஆக, மற்ற எல்லாவற்றையும் விட இன்றைய பீகாரின் அரசியல் குழப்பத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது – ஜிதன் ராம் மாஞ்சியோ, பாஜகவோ, மோடியோ, ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சியினரோ.. ஏன் நிதிஷோ கூட அல்ல… ஒன்றே ஒன்றுதான்! அது – நிதிஷ் குமாருக்கு திடீரென முளைத்துவிட்ட அந்தப் பொறாமை குணமே!
நல்ல தூக்கம் எவ்வளவு மணி நேரம்?: வயது வாரியாக ஆய்வு
நாம் சரியாகத் தூங்கவில்லை என்றால், நான் போதுமான அளவு தூங்கவில்லை என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். அப்படி என்றால், போதிய அளவு என்பதை நாமே தீர்மானிக்கிறோமா? நமக்கே, அந்தப் போதிய அளவு என்பதன் விளிம்பு நிலை தெரிகிறதோ? அது என்ன அது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கான விடையாக அறிவியல் அறிஞர்கள் பல சோதனை முடிவுகளை வைத்து விடை கண்டுள்ளனர். அது – தூக்கத்துக்கும் வயதுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான்! “உங்கள் வயது என்ன என்பதில்தான் தூக்கத்துக்கான போதிய அளவு என்பதன் சூட்சுமம் இருக்கிறது” என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது / காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும் சூரிய வெளிச்சம் போன்றவையும் உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் என்கிறது இந்த ஆய்வு. தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்தத் தூக்கத்துக்கான தேவைகளைப் புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது. [su_heading size=”20″ margin=”30″]வயதும் தூக்கமும்! [/su_heading] 3 மாதம் வரையிலான குழந்தைகள் : புதிதாகப் பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14 லிருந்து 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஆனால் 11 லிருந்து 13 மணி நேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் பிறந்த குழந்தைகளைத் தூங்க விடக் கூடாது. 4-முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகள்: தினசரி 12 லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால்கூடப் போதுமானது. ஆனால் 18 மணி நேரத்துக்கு மேல் தூங்கக் கூடாது. 1 லிருந்து 2 வயது வரையிலான குழந்தைகள்: தினமும் 11 லிருந்து 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9 லிருந்து 16 மணி நேரம் வரை தூங்கலாம். 3 லிருந்து 5 வயது வரையிலான சிறார்கள்: தினமும் 10 லிருந்து 13 மணி நேரம் தூங்க வேண்டும், ஆனால் 8 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது. 6 லிருந்து 13 வயது வரையிலான சிறார்கள்: 9 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை தினமும் தூங்க வேண்டும். தினமும் 7 மணி நேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணி நேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல. 14 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள்: 8 லிருந்து 10 மணி நேரம் வரை தூங்கலாம். இந்த வயதுச் சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணி நேரங்களுக்கு குறைவாகவோ தூங்குவது தவறு என்று எச்சரிக்கப்படுகிறது. 18 லிருந்து 25 வயது வரையிலான இளைஞர்கள்: தினமும் 7 லிருந்து 9 மணி நேரம் வரை தூங்கலாம். ஆனால் தூக்கம் 6 மணி நேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரத்துக்கு அதிகமாகவோ போகக்கூடாது. 26 லிருந்து 64 வயது வரையிலானவர்கள்: தினமும் 7 லிருந்து 9 மணி நேரம் வரை தூங்கலாம். ஆனால் தூக்கம் 6 மணி நேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரத்துக்கு அதிகமாகவோ போகக்கூடாது. 65 வயது, அதற்கு மேற்பட்டவர்கள்: ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7 லிருந்து 8 மணி நேரம் வரை, ஆனால் 5 மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணி நேரத்துக்கு மேலாகவோ போகக்கூடாது. [su_heading size=”20″ margin=”30″]நல்ல தூக்கத்துக்கான பரிந்துரைகள்: [/su_heading] தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். முதலில், தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும், இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கொள்ள வேண்டும். 1) தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமைய வேண்டும், வார இறுதி நாட்களில் கூட!. 2) படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள். 3) தினசரி உடற்பயிற்சி 4) படுக்கையறையில், சரியான வெப்ப நிலை, ஒலி மற்றும் ஒளி அளவு 5) வசதியான படுக்கை மற்றும் தலையணைகள். 6) மது மற்றும் காபி போன்ற தூக்கத்தைத் திருடும் பொருள்களை தவிர்ப்பது 7) மின்னணு கருவிகள் (கைபேசி, ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகும் முன்னர் அணைத்து வைக்கப்படவேண்டும்
பீகார் சட்டப் பேரவையில் 20-ந்தேதி ஜிதன் ராம் மாஞ்சிக்கு பலப்பரீட்சை
பாட்னா: அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்ததால், அந்த கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகினார். புதிய முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான ஜிதன் ராம் மாஞ்சி பதவியேற்றார். இந்த நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல் – மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் நிதிஷ் குமாருக்கும், மாஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஜிதன் ராம் மாஞ்சி அறிவித்ததால், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் மாஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய முதல்– மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்தும் மாஞ்சி நீக்கப்பட்டார். இதனிடையே பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ்குமார், தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தார். ஆனால் ஆளுநர் திரிபாதி அதை ஏற்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார். இதனால் நிதிஷ் குமார் தன்னை ஆதரிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களை தில்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். பீகாரில் குதிரை பேரம் நடப்பதை தடுக்க உடனே ஆளுனர் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் அதை கேட்டுக் கொண்டாரே தவிர எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் நிதிஷ் குமாரை புதிய முதல்வராக பேரவைத் தலைவர் ஏற்றது செல்லாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் அறிவித்தது. இவை எல்லாம் நிதிஷ்குமார் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஆளுநர் திரிபாதி தொடங்கினார். பீகார் சட்டசபை வரும் 20–ந்தேதி கூடும்போது, முதல்–மந்திரி மாஞ்சி தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பீகார் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஓரிரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே பீகார் சட்டப் பேரவையில் நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்காக ஏன் வாதிடுகிறீர்கள்? இளவரசிக்காக மட்டும் வாதாடுங்கள்’: நீதிபதி கண்டிப்பு
பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையின்போது, இளவரசி சார்பாக வாதிடுவதைவிடுத்து ஜெயலலிதா சார்பாக வாதிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று இளவரசி வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கண்டிப்பு தெரிவித்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையிலான பெஞ்சில் நடந்து வருகிறது. ஏ-1 குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் ஏ-2 குற்றவாளியான சசிகலா ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இளவரசி தரப்பு வாதம் இருதினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இளவரசி சார்பாக, வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டு வருகிறார். இவர் பெரும்பாலும், சொத்துக் குவிப்பு வழக்கிற்கு ஆதாரம் இல்லை, ஜெயலலிதாவுக்கு தொடர்பு இல்லை என்பது போன்ற வாதங்களை முன்வைத்து வந்தார். இந்நிலையில், நீதிபதி குமாரசாமி இன்று பொறுமை இழந்து வழக்கறிஞரிடம் கடிந்து கொண்டார். நீதிபதி கூறுகையில், “ஊழல் வழக்குகளில் எதை ஆதாரமாக கொண்டு வாதிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஆதாரமே இல்லாமல் ஊழல் வழக்கை பதிவு செய்ய முடியுமா? அப்படியே பதிவு செய்தாலும், அதுதான் 18 வருட காலம் நடைபெற முடியுமா? உங்கள் கட்சிக்காரர் மீது கூட்டு சதி செய்ததாகவும், குற்றத்திற்கு தூண்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள். அதைவிடுத்து, ஜெயலலிதா சார்பில் வாதிடுவது ஏன்? நீங்கள் இளவரசி தரப்புக்கு மட்டும் வாதிடுங்கள். வழக்கில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளவரிடமிருந்து, 2வது மற்றும் 3வது எதிரிகளின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த வங்கி பண பரிமாற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் தாருங்கள். அதைவிடுத்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்… என்றார்.
ஆர்ய சமாஜ நிறுவுனர் தயானந்த சரஸ்வதியின் 191-வது பிறந்த நாள்: நினைவு கூர்ந்த மோடி
ஆர்ய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் 191–வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘சமுதாய மறுமலர்ச்சிக்கும் கல்விக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆற்றியுள்ள பங்கு மகத்தானது’’ என்று புகழாரம் சூட்டி நினைவு கூர்ந்துள்ளார்.
स्वामी दयानंद सरस्वती जी की जयंती पर शत् शत् नमन। Tributes to the great Swami Dayananda Saraswati ji on his birth anniversary. — Narendra Modi (@narendramodi) February 12, 2015
Dayananda Saraswati ji made a remarkable contribution to education. His emphasis on social reform made him a personality ahead of his time. — Narendra Modi (@narendramodi) February 12, 2015
காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விமானிகள் இருவர் பலி
ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீர் பகுதியில் நேற்றிரவு ராணுவ ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் பலியாயினர். இந்திய ராணுவத்தில் தரைப் படை, விமானப் படை மற்றும் கப்பல் படைக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் துருவ் என்று அழைக்கப்படும் இலகு ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்திய ராணுவத்தில் 130 துருவ் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வடக்கு காஷ்மீரில் பந்திப்பூர் பகுதியில் நேற்று மாலை ரோந்துப் பணிக்காக விமானிகள் இருவருடன் துருவ் ஹெலிகாப்டர் கிளம்பியது. இரவு 7 மணி அளவில் மானஸ்பால் பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு அந்த ஹெலிகாப்டர் சென்று சேரவேண்டும். ஆனால், அது குர்ஷு காட்டுப் பகுதியில் சபாபோரா மலை உச்சியில் இரவு 7.45 மணி அளவில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான லெப்டினன்ட் கலோனல் மற்றும் மேஜர் ஜெனரல் உடல்களை இன்று காலை மீட்டனர்.
தனது பெயரில் கோயில் : மோடி அதிர்ச்சி
புது தில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அருகே அவரது ஆதரவாளர்கள் கட்டியிருக்கும் கோயில் வரும் ஞாயிறன்று திறக்கப்படவுள்ள நிலையில், இந்த முயற்சி குறித்து மோடி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சி குறித்து தனது ட்விட்டர் கணக்கில் கருத்து தெரிவித்திருக்கும் மோடி, இது அதிர்ச்சி அளிக்கிறது, இது இந்தியாவின் பெரும் பாரம்பர்யங்களுக்கு எதிரானது” என்று கூறி இந்த முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தனது ஆதரவாளர்களைக் கோரியிருக்கிறார். ராஜ்கோட் அருகே உள்ள கோத்தாரியா என்ற கிராமத்தில் மோடி ஆதரவாளர்கள் சுமார் 350 பேர் இந்தக் கோயில் கட்ட பொதுமக்களிடம் நன்கொடை வசூலில் இறங்கியதாகவும், ஏற்கனவே கட்டப்பட்ட இந்தக் கோயிலில் மோடியின் புகைப்படங்களை வைத்து வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. இப்போது சுமார் 1.70 லட்ச ரூபாய் செலவில் மோடியின் உருவச்சிலை ஒன்று வார்க்கப்பட்டு அந்தக் கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. நம் நாட்டில், அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல… நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கூட அவர்களது சிலையை வைத்து கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு அவரது ஆதரவாளர்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள்.
Have seen the news about a Temple being built in my name. I was appalled. This is shocking & against India’s great traditions. — Narendra Modi (@narendramodi) February 12, 2015
Building such Temples is not what our culture teaches us. Personally, it made me very sad. Would urge those doing it not to do it. — Narendra Modi (@narendramodi) February 12, 2015
If you have time & resources, please devote the same towards fulfilling our dream of a Clean India. — Narendra Modi (@narendramodi) February 12, 2015
இலங்கையிலிருந்து படகுகளை திரும்பக் கொண்டுவரும் செலவு: தமிழக அரசு ஏற்பதாக அறிவிப்பு
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்காக இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றத்தில் இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், விடுவிக்கப்படும் படகுகளை பொறுப்பேற்பதற்காக, ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்துறை ஆய்வாளர் ஆகியோர் படகு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களுடன் இலங்கைக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் 81 மீன்பிடிப் படகுகளும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து இப்படகுகளை தமிழகத்திற்கு கொண்டுவர ஏதுவாக சுமார் 150 மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுக்கள் மீட்புப் படகுகளுடன் இந்திய அரசின் அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மீட்புக் குழுக்கள் 81 படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை நீக்கி, இந்திய கடலோர காவல்படை உதவியுடன் தமிழகம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இந்த மீட்புக் குழு மற்றும் மீட்புப் படகுகள் இலங்கைக்குச் சென்று அங்குள்ள 81 மீன்பிடிப் படகுகளை தமிழகம் கொண்டு வருவதற்கான எரியெண்ணெய், உணவு மற்றும் பழுது நீக்க செலவு ஆகிய அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும் என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞரை நியமித்து வாதாடுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: நடவடிக்கை கோரி ஆணையரிடம் தேமுதிக புகார்
சென்னை: தேமுதிக தலைவரான விஜயகாந்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் சிலர் பரப்புவதாக தேமுதிகவினர் மற்றும் அக்கட்சி வழக்குரைஞர் அணியினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆணையரைச் சந்தித்து புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளனர். அதில், “தேமுதிக தலைவர் விஜயகாந்தினை பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். அவர் பற்றிய அவதூறான கருத்துக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு அவருடைய மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். முக்கியமாக, மேட்டுப்பாளையம் அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.கே. சந்தானம், அதிமுக நிர்வாகி குடந்தை முத்து ஆகியோர் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றனர். இதில் மேட்டுப்பாளையம் நிர்வாகி சந்தானம் மீது, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார்கள் அளிக்கப்பட்டு அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள தரக்குறைவான கேலிச்சித்திரங்கள், மற்றும் விமர்சனங்களில் சிலவற்றை தங்களின் பார்வைக்காகவும், தகவலுக்காகவும், இத்துடன் இணைத்துள்ளோம். இது போன்ற விஷமத்தனமான கேலிச்சித்திரங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், மற்றும் அபிமானிகளின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரக்குறைவாகவும், வக்கிரமனதுடனும், அரசியல் காழ்புணர்ச்சியுடனும், தேமுதிக கட்சித்தலைவரும், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சிப்பது எந்தவகையிலும் ஏற்க முடியாத செயலாகும். மேலும் தற்பொழுது முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் உள்ள தரைக் குறைவான படங்கள், விமர்சனங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தலைவர் விஜயகாந்தை உண்மைக்கு புறம்பாகவும், சமுகத்தில் அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கேலிச்சித்திரங்கள், படங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் வெளியிடுபவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

