
அகண்ட பாரத தேசம் மதக் கலவரங்களால் துண்டாடப்பட்ட போது தேச பக்தர்கள் மனம் வருந்தினர். ஆனால் ‘மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்று உளறிய செக்யூலர் வாதிகளுக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை. தேசத்தின் புராதனமான ஹிந்து தர்மம் இந்த பிரிவினையால் இடிபாடுகளுக்கு ஆளாகி நாசம் அடைந்தாலும் அவர்களுக்கு துளியும் அக்கறை இல்லாமல் இருந்தது.
தம் ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்கு பகைநாட்டைக் கூட மதக் கண்ணோட்டத்தோடு பார்த்து அவர்களுக்கு அனுகூலமாகவும் நம் தேசத்திற்கு எதிராகவும் பலவித பிரச்சினைகளை வளர்த்து பெரிதாக்கி வந்தார்கள்.
நம் நாட்டை நாமே துண்டாக்கி எதிரி நாட்டை உருவாக்கிகொண்ட நிலை பாரத தேசத்திற்கு ஏற்பட்டது. வெளிநாட்டு அரசாட்சி விலகியபின் வந்த முதல் தேசிய ஆட்சியாளர்கள் துண்டான பாகத்தை அப்படியே விட்டுவைக்காமல் நம் நாட்டின் தலையிடமான காஷ்மீரை விவாதத்திற்கு உரியதாக மாற்றி எதிரி நாட்டின் கைப்பிடிக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு செய்தார்கள்.

பூமியின் சொர்க்கம் என்றும் புராதன பாரத தேசத்தின் ஞானபூமி என்றும் போற்றப்பட்ட காஷ்மீர் நம் நாட்டிற்கு உட்பட்ட பாகம் என்ற உண்மையை பாரத மக்களே மறக்கும்படி செய்தார்கள். ‘காஷ்மீர் பிரிந்து போனால் நஷ்டம் என்ன?’ என்ற தோரணையில் கூட பேசினார்கள்.
பாரத தேசத்தின் சமதர்ம வாழ்க்கையோட்டத்தில் சேரவிடாமல் பிரத்தியேகமாக விதித்த சட்டப் பிரிவுகள் அனைத்தும் காஷ்மீரை அக்னி குண்டமாக மாற்றி மத ஹிம்சைகளுக்கு மேடையாக உருவாக்கின. தீவிரவாத சக்திகளுக்கு அடைக்கலமாகச் செய்தன.
இது அநியாயம் என்று தெரிந்தும் திருத்தம் செய்து நியாயம் கிடைக்கச் செய்யும் தலைவர்களோ மேதாவிகளோ இல்லாமல் போனார்கள்.
இந்தப் பின்னணியில் அண்மையில் அத்தகைய அர்த்தமற்ற சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே பாரத தேசம் என்று தெளிவுபடுத்திய அரசாங்கத்தின் தீர்மானம் போற்றுதற்குரியது. இது யூகிக்க முடியாத பரிணாமமாகத் தோன்றினாலும் இதன் பின்னால் பல்லாண்டு கால வேதனையும் சாதனையும் சோதனையும் உள்ளன. பல தேச பக்தர்களின் மனக்கவலை தவமாக மாறி இன்று அது பலனளித்துள்ளது.
எதிரி நாடு இந்த முடிவை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் துடிதுடிப்பது புரிகிறது. ஏனென்றால் அது பாரத நாட்டிற்கு எதிரியானதால். ஆனால் நம் நாட்டிலேயே சிலர் இந்த முடிவில் தவறு காண்கிறார்கள் என்றால் அவர்களை தேசத்துரோகிகள் என்று கூறுவதற்கு பின்வாங்கத் தேவையில்லை.

எது எப்படியானாலும் அந்த எதிரிகள் மற்றும் இந்த துரோகிகளின் குரலை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வெளிநாட்டு அரசுகள் கூட இவர்களின் கோஷங்களை அர்த்தமற்றவையாகவே பார்க்கின்றன.
பாரத தேச வரலாற்றில் இது ஒரு சிறந்த திருப்பம். இந்த அகண்டமான சமதர்ம வழிமுறையில் மதத் தொடர்பான அம்சங்கள் இல்லை. ஆனால் 370, 35ஏ சட்டப்பிரிவு பற்றி எதுவுமே அறியாத சாதாரண மக்களுக்கு அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன? அவற்றை நீக்கும் இந்த நவீன வழிமுறையால் ஏற்படும் பலன்கள் என்ன? என்பது புரிவது கொஞ்சம் சிரமமே!
அவற்றைப் பற்றி தெளிவாக விவரிப்பதில் ஊடகங்கள் வெற்றி பெற்றன என்று கூறுவதற்கில்லை. நிறைய பேர், மைனாரிட்டி மதங்களுக்கு ஏதோ கெடுதல் நிகழ்ந்து விட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் அதில் மதம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

காஷ்மீரில் உள்ள அனைத்து மத மக்களும் சமதர்ம பாரத தேசத்தை சேர்ந்தவர்களே என்ற விசாலமான மனப்பான்மை இதன் மூலம் ஏற்படுகிறது. நாட்டின் சமதர்மம் காப்பாற்றப்படுகிறது. அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் தேசப் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை இது.
ஆர்டிகிள் 370 என்பது ஒரு தனிமனிதனின் ஒருதலைப்பட்சமான முடிவு என்று கூறி டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை என்பதை அரசியலமைப்பின் வரலாறு தெரிவிக்கிறது.

பல யுகங்களாக அற்புதமான கலாச்சார பாரம்பரியமும் ஞானச் செல்வமும் கொண்ட காஷ்மீர், பிரிவினை அடைந்த எதிரி நாட்டின் பிடிக்குள் சிக்கி முழுமையாக நலிவடைந்தது. பாகிஸ்தானின் உள்ளேயே பல ஆலயங்களும் கல்விக்கூடங்களும் புராதன வரலாற்றுப் பெருமை மிகு கட்டடங்களும் துவம்சம் செய்யப்பட்டன. அங்கு அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதற்கு மாறியவர்கள்… இவர்களைத் தவிர பிறருக்கு வாழ்வே கேள்விக் குறியான சூழ்நிலை நிலவியது. ஓட்டு வங்கி அரசியலுக்கு இவை பற்றிய கவலையில்லை. அதனால் அவர்கள் கடைபிடித்த உதாசீனம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.
பாரத தேசம் கர்வம் கொள்ளத் தக்க அழகான காஷ்மீர், ரத்தக் கட்டியாகவும் சிதிலமடைந்த மாளிகையாகவும் மாறியது.
தற்போதைய அரசு கொண்டு வந்த நிர்ணயம் மீண்டும் காஷ்மீரின் பழைய சௌந்தர்யத்தை துளிர்க்கச் செய்யும் வசந்த காலம் போல் வருகை தந்துள்ளது. கனமான புராதன காஷ்மீரின் வரலாறு திடமான வரலாற்று ஆதாரங்களோடு புஷ்டியாக கிடைக்கிறது. துவம்சம் அடைந்து அழிந்து போனவை அதிகம். இருந்தாலும் இன்னும் மிகுந்துள்ள சில ஆதாரங்கள் காஷ்மீரின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
இந்தச் சிறப்பை காப்பாற்றியபடியே புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்றால் எதிரி நாடுகளுக்கு அனுகூலமாக உள்ள சட்டப் பிரிவை ரத்து செய்வது ஒன்று தான் சரியான தீர்வு. மிகவும் புத்திகூர்மையோடு நடந்துகொண்ட அரசாங்கத்தைப் பாராட்டவேண்டியது பண்பாடு உள்ளவர்களின் கடமை. நாடும் அரசும் செய்த நல்ல செயலை அரசியல் கட்சிகள் மதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது மூர்க்கத்தனம்.
இது அரசாங்க செயலாக்கத்தின் கச்சிதமான பணிக்குச் சான்று! நாட்டு மக்களாக இதனை வரவேற்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தேச நலனை விரும்பும் இயல்பு கொண்ட சில ஊடகங்களும் பொதுமக்களும் பாரபட்சமின்றி இதனை வரவேற்று மகிழ்ந்தார்கள். நல்லதுதான்!

சாமானியர்களுக்குக் கூட புரியும்படி அன்றைய காஷ்மீரின் வரலாற்றையும் நாகரீகத்தின் வைபவங்களையும் எடுத்துக்கூறி பிரிவினைக்குப் பின் அரசாங்கக் கட்டமைப்புக் காலத்தில் தீர்க்கதரிசனமற்ற சிலர் செய்த சட்டப்பிரிவின் பின்னால் உள்ள சதி, அதனால் விளைந்த விபரீத பரிணாமங்கள் போன்றவற்றை மக்கள் அனைவருக்கும் சமூக ஊடகங்கள் மூலம் தெரியச் செய்ய வேண்டிய கடமை அறிஞர்களுக்கு உள்ளது.
அவற்றை அறிந்து கொண்டு முழுமையான பாரத தேசத்தின் நிறைவுக்கு மகிழ்பவர்களே உண்மையான பாரத நாட்டு மக்கள். புரிதல் இல்லாதவர்களும் சுயநலவாதிகளும் எதிரிகளும் பொய்களைப் பரப்பாமலும் ஆபத்துக்களை விளைவிக்காமலும் மிக கவனமாக மக்களும் அரசாங்கமும் காத்து வர வேண்டும்.
தெய்வ அருளும் மகரிஷிகளின் ஆசிகளும் காஷ்மீருக்கும் நாடு முழுமைக்கும் ராணுவத்திற்கும் கிடைக்கவேண்டும்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
ருஷிபீடம் தெலுகு மாத இதழ் செப்டம்பர் 2019 தலையங்கத்தின் தமிழ் வடிவம்



