
தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் என அனைத்து திருத்தங்களும் நடைபெற உள்ளது.
தற்போது இதனை nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யும் வகையில், செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருந்தார்.
தற்போது இதுபற்றி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,” சென்னையைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை முதல் தேர்தல் ஆணையத்தின் புதிய செயலியான NVSP App மூலம் தங்கள் வாக்காளர் அட்டைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இந்த செயலியில், வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்து, பின்னர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு திருத்தம் செய்யலாம்.

கள ஆய்வில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அக்டோபர் 15-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நவம்பர் 2, 3, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது ” என்று கூறியுள்ளார்.



