
கோவையில் கூட்டாகப் பேருந்துகளில் ஏறி சில்லறைக் காசை சுண்டிவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் கும்பலின் தலைவன் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பிரபு நகரைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் அபினவ், தனது பட்டறையில் தயாரிக்கும் நகைகளை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் தன்னிடம் வேலை செய்யும் 60 வயதான ரவிச்சந்திரனிடம் நகைகளைக் கொடுத்து சேலத்திலுள்ள நகைக்கடைகளுக்கு வழங்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். அங்குள்ள நகைக்கடைகளுக்கு கொடுத்தது போக மீதமிருந்த 116 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு ரவிச்சந்திரன் கோவை திரும்பியுள்ளார்.
தனியார் பேருந்தில் வந்துகொண்டிருந்த ரவிச்சந்திரன் பீளமேடு அருகே வந்து பார்த்த போது பையில் இருந்த நகைகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் பயணித்த தனியார் பேருந்தில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நூதன திருட்டில் ஒரு கும்பல் ஈடுபட்டது அம்பலமானது.
5 பேர் கொண்ட அந்த கும்பல் பேருந்தில் ஏறி பெரியவருக்கு பக்கத்திலும் பின்னாலும் என அமர்ந்துள்ளது. அவர்களில் ஒருவன் ஒரு ரூபாய் நாணயத்தை பெரியவர் அமர்ந்திருக்கும் இருக்கை அருகே சுண்டிவிடுகிறான்.

பின்னர் அந்த நாணயத்தை கீழே தேடுவதுபோல் அவன் தேடிக்கொண்டிருக்க, ரவிச்சந்திரனை நெருக்கியவாறு அமர்ந்திருப்பவன், அவருக்குத் தெரியாமல் அவரது பையில் இருந்து நகைகளை எடுத்துக்கொள்கிறான்.
நகைகளை எடுத்துக்கொண்ட பின் மற்றவர்களை அவன் உசுப்பிவிட, 5 பேரும் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கிவிடுகின்றனர்.
இந்தக் காட்சிக்ளை அடிப்படையாக வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், முக்கிய குற்றவாளியும் கும்பலின் தலைவனுமான மலைச்சாமி என்பவனை கைது செய்தனர்.
அடுத்தடுத்து வீரபாண்டி, சீனிவாச பாண்டியன் ஆகியோர் கைதாகினர். மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். நகைகளை கட்டிகளாக மாற்றி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்தபோது போலீசாரிடம் மலைச்சாமி சிக்கியுள்ளான். மலைச்சாமியிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில் மலைச்சாமி மீது பல்வேறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் அவன் ஏற்கனவே இருமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சியில் தென்படும் கொள்ளையர்கள் அத்தனை பேருமே பளீர் ஆடைகளுடன் யாரும் சந்தேகிக்க முடியாத வகையில் சாதாரண மனிதர்கள் போல் காட்சியளிக்கின்றனர்.
எனவே இன்றைய தேதியில் பேருந்துகளாகட்டும் ரயில்களாகட்டும் நகைகள், பணம், விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் பயணிப்பவர்கள் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
அதேநேரம் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.
- கே.சி.கந்தசாமி