
மதுரையை ‘சுற்றுலா’ம் வாங்க… விரைவில்… அரசு பேரூந்தில் ஜாலி டூர் திட்டம்
தமிழகத்தின் துாங்கா நகரமான மதுரையை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு அரசு பேரூந்தில் அழைத்துச்செல்லும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது.

மதுரையில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், பத்துதுாண் சந்து, தெப்பக்குளம், புதுமண்டபம், விட்டவாசல், அழகர்கோவில், திருப்பரங்குன்றம், சமணர் குகைகள் என பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் பல உள்ளன.

உலகம் முழுவதிலிருந்து மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தனியார் நிறுவனங்கள் ‘ஒரு நாள் சுற்றுலா’ என்ற பெயரில் அழைத்துச்சென்று நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர்.


இதுபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா துறையும் ‘உள்ளூர் சுற்றுலா’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை துவக்கியது.

ஆனால் சில மாதங்களிலேயே நிர்வாக காரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அத்திட்டத்தை சுற்றுலா துறை கையில் எடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் சபரி ஸ்ரீபாலமுருகன் கூறியதாவது:

அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச்செல்வது குறித்து போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மதுரை மட்டுமின்றி கொடைக்கானல், ராமேஸ்வரத்திற்கும் சுற்றுலா அழைத்துச்செல்லும் திட்டம் உள்ளது.

தவிர, திருமலை நாயக்கர் மகால் ரூ.3 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது.

இதன்காரணமாக அங்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ள உள்ளோம், என்றார்.



