
காதல் மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த தமிழக கணவன்!
ஆன்மீக பூமியான தமிழகத்தில் நடிகைகளுக்கு கோயில் கட்டியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக தாலி கட்டிய மனைவிக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்
சென்னை, தாம்பரம் அருகே எருமையூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. 56 வயதாகும் இவர் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பெயர் ரேணுகா.
ரேணுகா ரவி தம்பதியருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இவர்களுக்கு சதீஸ், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது மனைவி ரேணுகா கடந்த 2006-ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவி மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்த ரவியால், மனைவியின் மரணம் மிகவும் மன வேதனைக்குள்ளாகியது.
தன் மனைவியின் இறப்பை அவ்வளவு எளிதில் ரவியால் கடந்துசெல்ல முடியவில்லை. மனைவியின் நினைவாக தாம்பரத்தில் கோயில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தார்.
இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது,
என் மனைவியின் மறைவு சொல்லமுடியாத வேதனையை எனக்குத் தந்தது.
உலகமே அவள் தான் என்று நினைத்து வாழ்ந்துவந்தேன். ஆனால், இப்போது தனிமையிலிருந்து தவிக்கின்றேன்.
சண்டையிட்டாலும் ஒருமணி நேரத்துக்குள் சமாதானம் ஆகிவிடுவோம்.
அவள் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன், ஆனால் எனது இரண்டு மகன்களின் நலன் கருதி நான் உயிரோடு வாழ்கிறேன் என்று அவர் கண்ணீர் மல்க பேசினார்.
மனைவி உயிருடன் இருக்கும்போது அவர் ஆசைப்பட்டுக் கேட்ட சொந்த வீட்டை என்னால் கட்டித்தர முடியாமல் போனது.
எனவே அவளின் நினைவாகக் கோயில் ஒன்றைக் கட்ட முடிவு செய்தேன்.
தற்போது தாம்பரத்தில் 9-அடி அகலம், 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன்.
அதில் பளிங்குக் கல்லினால் என் மனைவியின் உருவத்தைப் பதித்துள்ளேன் என்றார்.
அந்த கோயிலுக்கு ரேணுகா அம்மன் திருக்கோயில் என்று பெயரிட்டு அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
நானும் என் இரண்டு மகன்களும் தினமும் வழிபட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.



