
நீட் தேர்வு விவகாரம், தேர்வு நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, நீட் தேர்வு மையத்துக்குள் தேர்வர்களை அனுப்புவதில் காட்டப் பட்ட கெடுபிடி, உடைகளைக் கத்திரிப்பது, மெட்டல் பொருள்களை பறிமுதல் செய்வது, காது தோடு ஜிமிக்கி என அனைத்தையும் பறிமுதல் செய்து பின்னர் அனுப்புவது என்பது குறித்தெல்லாம் செய்திகள் வெளியாகி வந்தன.
இப்போது நீட் தேர்வு முடிந்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், மீண்டும் நீட் தேர்வு பிரதான செய்திகளில் இடம் பிடித்துள்ளது. அதற்குக் காரணம், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்ற முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப் பட்டதுதான்!
தற்போது, மும்பையைக் கலக்கும் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மும்பையில் தேர்வு எழுதியவர், கவுன்சிலிங்கிலும் கலந்து கொண்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், சான்றிதழ் சரிபார்ப்பின்போது மும்பையில் தேர்வு எழுதிய மாணவரே கலந்துகொண்டார் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதே போல், நீட் தேர்வு மோசடியில் தமிழகத்தில் இருந்துதான் ஒரு பகீர் தகவலும் வெளியானது. தமிழ் காமெடி படமான வசூல் ராஜா MBBS படத்தில் கமலுக்கு பதிலாக வேறு ஒருவர் டாக்டர் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பின்னர் மருத்துவக் கல்லூரியில் மாணவனாக சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்ததைப்போல, சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (வயது 19) என்பவர் செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் இந்த வருட மருத்துவக் கல்லூரிக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறி, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதன் பேரில் மாணவர் உதித்சூர்யா மீது மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவக்கல்லூரி டீன் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கே படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தலைமறைவாகிவிட்டார்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உதித்சூர்யாவை கண்டுபிடித்து விசாரணை நடத்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தனிப்படையினர் மாணவரைப் பிடித்து விசாரிப்பதற்காக சென்னை விரைந்தனர். ஆனால் சென்னையில் மாணவர் தங்கியிருந்த வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இதனால், அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. மாணவரின் தந்தை வெங்கடேசன் டாக்டராக உள்ளார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்தது வெளியே தெரியவந்ததால் மாணவர் தனது பெற்றோருடன் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்க தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் மும்பையில் ஒரு தேர்வு மையத்தில் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்ல உள்ளனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தனிப்படையினரிடம் கேட்டபோது, ‘மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். அவர் சிக்கினால் தான் அவருக்காக தேர்வு எழுதியது யார்? என்பது தெரியவரும். தேர்வு எழுதியவர் மாணவரா? அல்லது டாக்டரா? என்பது எல்லாம் விசாரணைக்குப் பின்னர்தான் தெரியவரும். அதேநேரத்தில் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்தை வைத்தும், அவர் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. ஆள்மாறாட்டத்துக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதும் உதித்சூர்யாவை கைது செய்த பின்னரே தெரியவரும்’ என்றனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கெனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கெனவே 2 முறை தேர்வை அவர் தான் எழுதினாரா? அல்லது அதிலும் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர் கடந்த 2 ஆண்டுகளில் ‘நீட்’ தேர்வு எழுத பயன்படுத்திய ஹால்டிக்கெட், தேர்வு எழுதிய மையங்கள், அந்த மையங்களில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் போன்றவற்றை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தவும் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.
நீட் தேர்வு எழுதியதில், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா பாணியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.
மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படடுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்துள்ளதாகக் கூறப் படும் தகவல்களால், ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டு வருவதாகக் கூறப் படுகிறது. சான்றிதழ்கள், புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்த தகவல்களை உடனுக்குடன் மருத்துவக் கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.



