
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கேரள எல்லைப் பகுதியான குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது.
இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் மேற்கு மாவட்ட பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் சாலைகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த கேரள இளைஞர் சவுத் (வயது23) என்பவரை போதை பொருள் கடத்தல் தொடர்பாக போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர்.
பின்னா் சவுத் தங்கியிருந்து அவரது அறைக்கு சென்று போலீசார் சோதனை செய்தனா்.
.இதனையடுத்து சவுத் தங்கியிருந்த அறையில் கட்டுக்கட்டாக ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் உள்பட மொத்தம் ரூ.77 ஆயிரம் அளவுக்கு பணம் இருந்துள்ளது .
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டது .
அதனைத்தொடர்ந்து ரூ.77 ஆயிரம் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார் சவுத்தை கைது செய்தனர்.
அப்போது கள்ள நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்க பயன்படுத்திய இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .
மேலும் இந்த சம்பவத்தில் மணவாளக்குறிச்சியை சேர்ந்த சிபி சாமி (45), மருதங்கோட்டை சேர்ந்த மணியன் (51), திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜேக்கப் (40), மணலிக்கரையை சேர்ந்த ஜெஸ்டின் ஜெயசேகர் (39) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக இவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர் .



