
முக்கியமான இடத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவபடிப்பில் சேர்ந்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கும், தேனி மருத்துவக் கல்லூரிக்கும் இ.மெயில் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டடுபிடிக்கப்பட்டது.
இந்த மாணவர் உதித்சூர்யா சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர்.
இவரது தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்
தன்னை போலவே தனது மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று வெங்கடேசன் ஆசைப்பட்டார்.
இதற்காக உதித் சூர்யாவை 2 முறை நீட் தேர்வு எழுத வைத்தார்.
ஆனால் உதித் சூர்யாவால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால் மன உடைந்த டாக்டா் வெங்கடேசன் தனது மகனுக்கு பதில் ஆள்மாறாட்டம் மூலம் வேறு ஒரு மாணவரை தேர்வு எழுத செய்து தனது மகனை மருத்துவராக்கி விடவேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த ஆண்டு உதித்சூர்யா நீட் தேர்வை மும்பையில் எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆகவே, மும்பையில் உள்ள ஒரு மாணவரை தனது மகனுக்கு பதில் நீட் தேர்வை எழுத வைக்க முடிவு செய்தார்.
இதற்காக வெங்கடேசன் விசாரித்த போது அவருக்கு கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.
அவர் மூலம் மும்பையில் போலி மாணவர் ஏற்பாடு செய்யப்பட்டார்.
இதற்காக ரூ.20 லட்சம் பணம் வழங்கப்பட்டது . அதன்படி உதித்சூர்யாவுக்கு பதில் அந்த போலி மாணவர் நீட் தேர்வை எழுதி உள்ளார்.
நீட் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் அந்த போலி மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததால் சுலபமாக அவர் நீட் தேர்வை எழுதி முடித்து விட்டார்.
இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று தேனி மருத்துவ கல்லூரியை தேர்ந்தெடுத்தார் .
அந்த போலி மாணவர் தேனி மருத்துவக் கல்லூரிகளுக்கு சான்றிதழ்களுடன் சேர்ந்துள்ளார்.
வகுப்புகள் தொடங்கிய பிறகு அவர் பிற மாணவர்களுடன் சேர்ந்து முதலாம் ஆண்டு படிப்பை தொடங்கினார்.

கிட்டத்தக்க 20 நாட்களுக்கு அந்த போலி மாணவர் கல்லூரிக்கு வந்ததாக தெரிய வந்துள்ளது.
அதன் பிறகுதான் அவருக்கு பதில் உதித்சூர்யா வந்து மருத்துவ படிப்பை மிக சாதுரியமாக தொடர்ந்துள்ளார்.
மற்ற மாணவர்களை போல அவரும் மருத்துவ படிப்பை கடந்த 2 மாதங்களாக படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் உதித்சூர்யாவின் ஆள் மாறாட்டம் மோசடி குறித்து தெரிய வந்தது.
உதித்சூர்யாவின் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படமும், கல்லூரிக்கு அவர் விண்ணப்பித்திருந்த போது ஒட்டப்பட்ட புகைப்படமும் வெவ்வேறு விதமாக இருந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து மாணவர் உதித்சூர்யாவிடம் தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டது .
இதனை தொடா்ந்து அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார்.
கடந்த 18-ந் தேதி உதித்சூர்யா மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை கடந்த திங்கட்கிழமை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், தேனி போலீசாரும் மாணவரை தேடி சென்னை வந்தனர்.
அப்போது மருத்துவர் வெங்கடேசன், தனது மகன் உதித்சூர்யா, மனைவி கயல்விழியுடன் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
மேலும் திருப்பதியில் ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் வந்தது .
தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 3 பேரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
சென்னையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது .
பிறகு டாக்டர் வெங்கடேசன், மாணவர் உதித்சூர்யா இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து மாணவர் உதித்சூர்யா மீது இந்திய தண்டனை பிரிவு 120பி கிரிமினல் சதி , 419 ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் , 420 மோசடி செய்தல், முறைகேடாக நடந்து கொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கயல்விழி மீது எந்த புகாரும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு வெங்கடேசனும், உதித்சூர்யாவும் தேனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து கேரளா சென்ற சிபிசிஐடி போலீசார், ஜோசப் என்ற இடைத்தரகரை கைது செய்தனர்.
தொடர்ந்து உதித் சூர்யாவின் தந்தை அளித்த தகவலின் அடிப்படையில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



