
மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் திமுக உள்கட்சி நடவடிக்கைகளை கேலிசெய்து, பீதி ஏற்படுத்தி உள்ளது.
தமிழக திமுகவில் அதிகாரம் படைத்த தலைவராகவும் ஆளுமைமிக்கதொரு தலைராகவும், அஞ்சாநெஞ்சன் எனும் பட்டத்தோடு பவனி வந்தவா் முக.அழகிரி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கட்சியிலும் தென்மண்டல அமைப்புச்செயலாளராக கோலோச்சினார்.
இதனிடையே தனது தந்தையார் கருணாநிதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையே கலங்கவைத்ததன் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி முழுவதுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக பல முறை முயற்சி செய்தும் ஸ்டாலின் அதனை கண்டுகொள்ளவில்லை.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னைக்கு அழைத்து வந்திருந்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் கூட்டம் வரவில்லை.
இதனால் மனச்சோர்வு அடைந்த அவர், அதற்கு பிறகு திமுகவில் இணைவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இப்போது மதுரை சத்யசாய்நகரில் உள்ள அவரது வீட்டிலும், சென்னையில் உள்ள மகன் துரை தயாநிதி வீட்டிலும் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவ்வப்போது திமுக தலைமையை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையான ஒரு செயலாக செய்து வருகின்றனா். .
இந்நிலையில், செல்லூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி நாகூர் கனி என்பவர் அடித்துள்ள போஸ்டரில், ”அண்ணே! அண்ணே!! அழகிரி அண்ணே..நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுன்னே…” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
திமுக நல்ல கட்சி என்றும், மதுரையில் இருக்கக்கூடிய நிர்வாகிகளால், கட்சி கெட்டுப்போய்விட்டது எனவும் அர்த்தம் கொள்ளும் வகையில் அந்த வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
இது போன்ற வேடிக்கையான, விநோதமான போஸ்டர்கள் நமக்கு வேண்டுமானால் புதிதாக தெரியலாம்,
மதுரை மக்களுக்கு புதிதில்லை என்பதால் புன்னகையுடன் கடந்து செல்கின்றனர்.



