
ஜீவன் ஆனந்த், ஜீவன் உமங், ஜீவன் லக்ஷ்யா மற்றும் ஜீவன் லாப் உள்ளிட்ட சுமார் 40 காப்பீட்டுத் திட்டங்களை வாபஸ் பெற பிரபல ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) திட்டமிட்டுள்ளது.
வரும் 30ஆம் தேதியுடன் அந்தத் திட்டங்கள் தற்போதைக்கு மூடப்பட உள்ளன. இதையடுத்து, அவற்றை பொதுமக்களிடம் விற்பதற்கு எல்.ஐ.சி. முகவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அத்திட்டங்களில் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தி, அடுத்த சில மாதங்களில் அவற்றைப் புதுப்பிக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனாலும், புதுப்பிக்கப்படவுள்ள அந்தத் திட்டங்களில் குறைவான போனஸ் மட்டுமே கிடைக்குமாம்; மேலும், அவற்றின் பிரீமியம் தொகைகளும் அதிகமாக இருக்குமாம்.
எல்.ஐ.சி. தவிர மேலும் சுமார் 50 முக்கியக் காப்பீட்டுத் திட்டங்கள் இம்மாதம் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வரப் போவதாக காப்பீட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் புதுப்பிக்கப்படும் சில திட்டங்களில் பிரீமியம் தொகை குறைவதற்கும் வாய்ப்புள்ளதாம்.
இந்தப் புதிய அறிவிப்புகளால் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குழப்பமடைந்துள்ளனர். முன்னதாகவே தங்கள் பாலிசிகளை முடித்துக் கொள்ளலாமா, அப்படி முடித்தால் அபராதம் கட்டவேண்டி வருமே, புதுப்பிக்கப்படும் திட்டங்களில் பிரீமியம் தொகை கூடுமா அல்லது குறையுமா என்று பல்வேறு விதங்களில் யோசித்துக் குழம்பி வருகின்றனர்.