
அண்மையில் சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை கோவளம் விடுதியில் தங்கியிருந்த போது, கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்பட்ட ஏராளமான குப்பைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சேகரித்தது நினைவிருக்கலாம்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரு காரணங்கள் மிகவும் முக்கியமானவை!
முதலாவது, பல பத்தாண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வரும் மக்கள், அவற்றை தங்களின் வாழ்வில் ஒருங்கிணைந்த அம்சமாக கருதுகின்றனர். அவற்றுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கலும், வசதி குறைவும் உள்ளன.
இரண்டாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது சற்று செலவு பிடிக்கும் விஷயம். இந்த இரு தடைகளையும் தகர்த்து பிளாஸ்டிக் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டியது அனைவரின் கடமை.
உலகிலேயே மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் வீசும் நாடு பிலிப்பைன்ஸ். அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் குப்பைகள் வீசப்படுவது கணிசமாக குறைந்திருப்பதாக அந்நாட்டு அரசின் முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது.
அதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வெகு விரைவில் தடை செய்யப்பட உள்ளன. அதற்கு மக்களைத் தயார்ப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தின் முளுகு மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் நாராயணரெட்டி அறிவித்தார். அம்மாவட்டத்தின் 174 கிராமங்களில் 10 நாட்களுக்கு செயல்படுத்தப் பட்ட இத்திட்டத்தின் மூலம் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆந்திரத்தில் சில இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இது பயனுள்ள திட்டம் என்பது உலக அளவிலும், தேசிய அளவிலும் உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய வார இறுதி நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும்.
2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்! – என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.



